விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவிய திமுக அரசு

எதிர்க்கட்சியாக ஆதரவு! ஆளுங்கட்சியாக குண்டர் சட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைக்க மக்களின் விவசாய நிலங்கள் அத்துமீறி பறிக்கப்படுகின்றன. இதனைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியது காவல்துறை. பெரும் குற்றவாளிகள் மீது ஏவப்படும் இந்த சட்டம் விவசாயிகள் மீது ஏவப்பட்டதை எதிர்த்து பலரும் கண்டனக் குரல் எழுப்பிய நிலையில் 6 பேர் மீதுள்ள குண்டர் சட்டத்தை அரசு நீக்கியிருக்கிறது. ஆனால் வாழ்வாதாரம் பறிபோகும் கவலையில் போராடிய மக்களை, ஜனநாயகம் அளித்திருக்கும் உரிமைக்கு மாறாக இனி அரசுத் திட்டங்களை எதிர்த்து போராட மாட்டோம் என்னும் வாசகங்களை எழுதி கையொப்பம் வாங்கியிருக்கிறார்கள். அரசு கொண்டு வரும் எதையும், இனி மக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று ஜனநாயகக் குரலை நெரித்திருக்கிறார்கள்.

செய்யாறு பகுதியில் ஏற்கெனவே 3000 ஏக்கரில் இரண்டு சிப்காட் தொழிற்பேட்டைகள் உள்ளன. இந்நிலையில் 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் பொழுது திருவண்ணாமலையில் சிப்காட் திட்டம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2022-ல் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேல்மா – சிப்காட் திட்டம் என்ற பெயரில் சிப்காட்டின் மூன்றாவது அலகு விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் மேல்மா, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, இளநீர் குன்றம், குறும்பூர், அத்தி, வீரப்பாக்கம், வட ஆளப்பிறந்தான் போன்ற 11 கிராமத்தைச் சுற்றியுள்ள 3174 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதில் 2800 ஏக்கர் நிலங்கள் முப்போகமும் விளையக்கூடிய விளைநிலங்களாக இருக்கின்றன. இந்த விளைநிலங்கள் ஏறத்தாழ 3000 குடும்பங்களின் வாழ்வாதாரங்களாக இருக்கின்றன. மற்றபடி அரசின் புறம்போக்கு நிலங்களாக 361 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

ஆண்டு முழுதும் பசுமையை போர்த்தி இருக்கும் வயல்கள் நிறைந்த செழிப்பான விளைச்சல் பகுதியாக செய்யாறு இருக்கிறது. இங்கு பெரும்பாலும் 2 அல்லது 3 ஏக்கர் விளைநிலங்கள் வைத்திருக்கும் சிறுகுறு விவசாயிகளே உள்ளனர். முதல் இரண்டு சிப்காட்டில்கூட இன்னும் 1000 ஏக்கர் பயன்படுத்தப்படாமலே இருக்கும் போது, தங்களின் விளைநிலங்களை அரசு ஏன் மூர்க்கமாக குறி வைக்கிறது என்னும் கேள்வியை அவர்கள் எழுப்புகின்றனர். முதல் இரண்டு சிப்காட்டுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னமும் அரசின் தரப்பில் அளிக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு, வேலை வாய்ப்பு, மறு குடியிருப்பு இடங்கள் போன்றவை செய்து கொடுக்கப்படவில்லை. ஏற்கெனவே நிலம் இழந்தவர்கள் சிப்காட்டுகளில் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் குறைந்த கூலிக்கு பெரும்பான்மையாக வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி விட்டு அம்மக்களை துரத்தி விடும் நிலையும் நீடிக்கிறது. இந்த நிலையில் 90% விவசாய விளைநிலங்களை நம்பியிருக்கும் தங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிப்பது எந்த வகையில் நியாயம் என அவ்விவசாயிகள் கேட்கின்றனர்.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விவசாயிகள் பல வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஜூலை 2-ந் தேதி முதல் இந்தத் திட்டத்தைக் கண்டித்து ‘மேல்மா – சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் சங்கம்’ சார்பாக 125 நாட்களாக தங்களின் வேளாண் நிலங்களில் பந்தலிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் தீர்வு எட்டப்படாத நிலையில், நவம்பர் 4 ந் தேதி மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தது.

இதற்காக, 20 விவசாய சங்கத்தினர் மற்றும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த சமூக செயற்பாட்டாளர்கள் மீது அனுமதியின்றி கூடியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருமால், அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், மாசிலாமணி, சோழன், பாக்கியராஜ் ஆகிய 7 பேர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. விவசாயிகள் அமைத்திருந்த போராட்டப் பந்தலை அடாவடியாக காவலர்கள் கலைத்துள்ளனர். பந்தலில் கூடி போராட்டம் செய்த 500க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர். ஐந்திற்கும் மேற்பட்ட டிரோன்களை வைத்து மக்களைக் கண்காணித்து மனித உரிமையை மீறியுள்ளனர். இன்னமும் 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் கிராமங்களை முற்றுகையிட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தினால் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரிடம், மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு கொடுத்து இருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்தும் நிலங்கள் விளைநிலங்களா என ஆராய குழு அமைப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளை மீறி வட்டாட்சியர் நில அளவைகளை எடுக்க ஆணையிட்டுள்ளார். விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை அமைதியான வழியில் நடத்தி அரசிடம் கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். ஆனால் காவல்துறை அவர்களை ஒவ்வொரு முறையும் அச்சுறுத்தி வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர்.

ஜூலை மாதம் பதியப்பட்ட வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளுக்காக (FIR) நவம்பர் மாதம் கைது செய்து 7 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தனர். மேலும் ஒவ்வொருவரையும் திருச்சி, மதுரை பாளையங்கோட்டை, கோவை என ஒவ்வொரு ஊரின் சிறைகளில் அடைத்துள்ளனர். உளவியல்ரீதியாக அவரவரின் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்து இனி அரசு திட்டங்களை எதிர்த்துப் போராட மாட்டோம் என எழுதி வாங்கியுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எதிர்ப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்னும் போது, அரசே அரசியல் சாசனத்தை மீறி இந்த செயலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

விவசாயிகள் மீது ஏவப்பட்ட குண்டர் சட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்ப, 6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் எ.வ வேலு, பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர், மேல்மா பகுதி விவசாயிகள் வெளியாரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்துவதாகவும், சிப்காட் அமைக்க நிலம் எடுக்கவில்லை என்றால் எங்கே தொழிற்சாலைகளைக் கட்ட முடியும் என்றும் பேசியிருக்கிறார்.

விவசாயம் சார்ந்த போராட்டத்திற்கு மற்ற ஊரில் உள்ள விவசாய அமைப்புகளோ அல்லது தமிழ்நாட்டின் நலனுக்காகவே இயங்கும் அமைப்புகளோ ஆதரவு கொடுப்பது என்பது இயல்பானது. அர்ஜென்டினாவில் பிறந்த சேகுவேரா பொலிவிய காடுகளில் வாழ்ந்த பொலிவிய மக்களுக்காக போராடினார். கியூபா விடுதலைக்காக கியூபாவில் போராடினார். எங்கெல்லாம் ஒடுக்குமுறையும், அடக்கு முறையும் இருக்கிறதோ அதைக் கண்டு அதற்காக போராடுகிறவன் தான் தோழன் என்று சொன்ன வரலாறு தான் உலக வரலாறு எனும் பொழுது அந்தந்த ஊர் பிரச்சனைக்கு அந்தந்த ஊர் மக்கள் தான் பேச வேண்டும் என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு வெளியூரை சேர்ந்தவர்கள் போராட்டக்கூடாது எந்த ஒரு சட்டமும் சொல்லவில்லை. போராடும் உரிமையை மறுப்பது ஜனநாயக உரிமையை மறுப்பதாகும். இதனை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் ஆட்சியின் அமைச்சர் பேசுவது அப்பட்டமான முதலாளித்துவ மனநிலை கொண்டது. பல ஊர்களிலும் இருந்து திரண்டு நின்ற மக்கள் போராட்டங்களால் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த திராவிடக் கொள்கையின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைப்பதாக இருக்கிறது.

நிலம் கையகப்படுத்தல் சட்டம் என்பது 1894-ல் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2013-ல் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது என்கிற சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நிலம் கையப்படுத்தினால் அதற்குரிய இழப்பீடு, மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு போன்ற பல காரணிகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கூறியது. இந்த சட்டம் 2019-ல் அதிமுக ஆட்சியின் போது, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலும் தொழிற்சாலைகள் நிறுவ நிலங்களைக் கையகப்படுத்தலாம் என திருத்தத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் 2021-ல் இந்த சட்டத்திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு தொழில் பூங்காங்கள் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள 28 தொழிற்பூங்காங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலவங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக மேலும் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலவங்கிகள் உருவாக்கப்படும் என அரசு கூறியது. தொழிற்சாலைகளுக்கான நிலவங்கிகளுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களை அடகு வைக்கப் போகிறார்களா என்கிற கேள்வியே எழுகிறது.

திருவண்ணாமலையில் பாலியப்பட்டு கிராமத்தில் இந்த சிப்காட் அமைக்கப்படப் போவதாக கடந்த 2022-ம் வருடமே பேச்சுவார்த்தைகள் எழுந்த நிலையில், அந்தக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து 100 நாட்களுக்கும் மேல் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினர். கிழக்கு தொடர்ச்சி மலைகள் அற்புதமான நீர் வளத்தைக் கொண்டிருப்பவை. கவுந்தி மலை, வேடியப்பன் மலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை போன்றவை இங்குள்ள நிலங்களை செழிக்க வைக்கும் மழைப் பொழிவை உருவாக்கக் கூடியவை. இம்மலைகளில் கொட்டிக் கிடக்கும் இரும்புத் தாது முதற்கொண்ட கனிம வளங்களை அள்ளிச் செல்ல குசராத்தி பனியா நிறுவனங்கள் குறிப்பாக ஜிண்டால் நிறுவனம் குறிவைத்து இருக்கிறது. தங்களின் செழிப்பான நிலங்களை அழிக்க சிப்காட் இங்கு வரவேக் கூடாது என்று அமைதியான வழியில் பாலியப்பட்டு மக்கள் நடத்திய போராட்டத்திற்கும் மே 17 இயக்கம் சென்று ஆதரவளித்தது. மக்களின் உறுதியானப் போராட்டங்களுக்குப் பிறகே இந்த முடிவுகள் நிறுத்தப்பட்டது

வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும், தொழில்துறை வளர வேண்டும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொழிற்சாலைகள் அமைப்பதற்கு மானாவாரி தரிசு நிலங்கள் தமிழகம் முழுவதும் நிறைய இருக்கிறது. அதற்கான முயற்சியை அரசு எடுத்தால் அது பாராட்டுக்குரியது. ஆனால் அதை விடுத்து பரந்தூர் போன்ற நீர்நிலைகள் நிறைந்த நிலங்களில் மட்டும் தான் விமான நிலையம் கட்டுவோம், செய்யாறு முப்போகம் விளையக்கூடிய விளைநிலங்களில் மட்டுமே சிப்காட் அமைப்போம் என்றால் அது சரியான வளர்ச்சியா என்று தான் கேட்கிறோம். வளர்ச்சி என்கிற பெயரில் விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவது ஏற்புடையதல்ல.தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் தான். ஆனால் பொறுப்பற்ற சூழலியல் சீரழிவுகளை கட்டுப்படுத்தாத அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலாளர் உரிமையை காற்றில் பறக்கவிடும் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரவர்க்கம் என பொறுப்பற்ற, விதிமீறிய செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலாளிகளின் பெரும் லாபவேட்டைக்கு துணை போன காரணத்தினாலேயே உழவர்கள் தங்கள் நிலத்தை தர மறுக்கிறார்கள்.

தொழில் வளர்ச்சி என்றும், வேலை உத்தரவாதம் என்றும் அரசு அளித்த உறுதியினால் சிப்காட்டுக்கு நிலங்களை வழங்கியப் பின்னர், தங்கள் வாழ்விடங்களில் உருவான சூழலியல் சீர்கேடு குறைவான ஊதியம், அதிகமான வேலைகள், அவமரியாதைகள் எனப் பலத் துயரங்களையும் அனுபவித்த பின்னரே இனியும் விளைநிலங்களை வழங்கக் கூடாது என்ற முடிவுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். சிப்காட் முதலாளிகளின் பொறுப்பற்ற சூழலியல் சீர்கேடுகள் தாமிர பரணியை சீரழித்தது, பெருந்துறை நிலத்தடி நீரை சாயமாக மாற்றியது, கடலூரை இந்தியாவிலேயே மோசமான மாசுபட்ட பகுதியாக்கியது, ஸ்டெர்லைட்டாக அழிக்கிறது, செம்பரம்பாக்கம் ஏரியில் மாசுபாட்டை கொண்டு வந்தது. இப்படி இந்த பட்டியல் மிக நீள்கின்றன.

7 பேர் குண்டர் சட்டத்தை பாய்ச்சியா திமுக அரசு, கடும் எதிர்ப்பு காரணமாக மறுநாளே அருள் ஆறுமுகம் என்பவரை தவிர்த்து மற்ற 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. அருள் ஆறுமுகம் என்பவரை மட்டும் விடுவிக்காமல் இருப்பதற்கு அரசு கூறும் காரணம், அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த வெளியூர்காரர் என்பதும், செய்யாறு போராட்டத்தை தூண்டுகிறார் என்பதும் ஆகும். அதாவது, செய்யாறு மக்கள் தன்னிச்சையாக போராடவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு பின்புலத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது நிலத்திற்காக வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை கொச்சப்படுத்தும் செயலாகும். இது போன்று தான் கூடங்குளம், மீத்தேன், ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களின் போது முந்தைய அதிமுக-பாஜக அரசு மக்களை குற்றஞ்சாட்டியது. அதே குரலை இன்று திமுக அரசும் ஒலிக்கிறது.

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் அருள் ஆறுமுகம் 8 வழிச்சாலை போராட்டத்தில் பங்கேற்று போராடியவர். அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் அன்று அருள் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தது. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு எட்டு வழிச்சாலை குறித்து எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பேசியதற்கு முரணாக இப்போது பேசி வருகிறது. அதுவும் இந்த அமைச்சர் எ.வ வேலு தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்னும் பொழுது மீண்டும் 8 வழிச்சாலைக்கு இவரால் ஆபத்து வரும் என்பதற்காக தான் இவரை மட்டும் சிறையில் அடைத்திருக்கிறதா திமுக அரசு என்கிற கேள்வியும் எழுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் துவங்க குடிநீர், மின்சாரம், இட வசதி, வரி குறைப்பு என பல்வேறு சலுகைகளை வாரி வழங்கும் அரசு, அதற்கு பலிகடாவாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் தாரை வார்ப்பது தமிழ்நாட்டின் இறையாண்மையை அடகு வைப்பதற்கு சமமாகும். இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது விவசாயிகளின் விருப்பம் இன்றி ஒரு அடி கூட எடுக்க மாட்டோம், தேவையில்லாத திட்டங்களை அவர்கள் விளைநிலங்களுக்கு இடையூறாக கொண்டு வர மாட்டோம் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு அவரே மீறுகிறார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஜனநாயக தன்மையற்ற பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. போராடியவர்களை இழிவுபடுத்தியதாலேயே அதிமுக அரசு தனிமைப்பட்டது. மக்கள் போராட்டங்களே அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டியது. இதை அறியாமலோ, புரிந்துகொள்ள இயலாமலோ திமுகவின் அமைச்சர்கள் இதே அதிமுக வழியை பின்பற்றுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பற்ற, இயக்க உணர்வுடைய இளைஞர்கள் போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறார்கள். பதவியை எதிர்பார்க்காத இளைஞர்களின் எழுச்சியை தமிழகம் கொண்டிருக்கிறது. சுமார் 20,000 அளவிலான மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டது. திமுக காலத்தில் நடக்கும் போராட்டங்கள் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடுபவர்களை பார்த்து, இந்துத்துவ மோடி ஆதரவாளர்கள் வெளிநாட்டு கைக்கூலிகள் என்று சொல்வதைப் போல திமுகவின் அமைச்சரும் சொல்வார் என்றால் இரண்டு கட்சிக்கும் என்ன வித்தியாசம்? கடந்த காலங்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு வெளி ஆட்களின் அழுத்தத்தினால் போராட்டம் நடக்கிறது என்று சொன்ன எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கும், தற்போதைய திமுகவிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

மே 17 இயக்கம் கடந்த 25 மாதங்களில் பல போராட்டங்களில் இயங்கி இருக்கிறது, பங்கெடுத்து இருக்கிறது. களத்தில் நடக்கும் நிலவரம் தெரியாமல் பெரிய கட்சிகளின் தலைவர்கள் இயங்குகிறார்கள். இவர்கள் வெகுகாலத்திற்கு முன்பே மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள் அல்லது மக்கள் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள் என்பதே நிதர்சனமாக இருக்கிறது. மக்களின் எதிர்ப்பை மனநிலையை தேர்தலின் மூலம் உணருவதற்கு முன்பே திமுக அரசு விழித்துக்கொள்ளட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »