மீனவர்களின் துயரங்களை சுமந்து செல்லும் மற்றொரு மீனவர் நாள்

தமிழர்களின் ஐந்திணை நிலப்பரப்பில் காடுகளைத் தொடர்ந்து நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மீனவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக அறியப்பட்டனர். கடல் போன்ற ஒரு வேட்டைக் களத்தில் இயற்கைப் பேரிடர்களை விட இன்று அரசியல் சார்ந்த இடர்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது மீனவச் சமூகம். சிங்கள ராணுவம் தாக்கியதில் தொடங்கிய இந்த இடர், தற்போது இந்திய கடற்படை தாக்குதல், கடற்கொள்ளையர் தாக்குதல் என பல்வேறு பரிணாமங்களை எடுத்திருக்கிறது.

சுனாமி, கஜா புயல், ஒக்கி புயல் போன்ற பேரிடர் நேரங்களில் மட்டுமே உற்றுநோக்கப்பட்டார்கள் மீனவர்கள். சிங்கள கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கி, கைது செய்தபோது செய்திகளாக்கப்பட்டார்கள். தொடர்ந்து சிங்கள இனவெறித் தாக்குதல் அதிகமானபோது மீனவர்களை பற்றிய செய்திகளும் அதிகரித்திருக்க வேண்டும். மாறாக இதைப்பற்றிய செய்திகள் குறைந்து போயிருப்பதுதான் வேதனை.

நவம்பர் 21, உலக மீனவர் நாளாக கடைபிடிக்கப்படும் இந்நாளில், மீனவர்களின் துயரத்தை நாம் நினைவுகூர வேண்டும். ஆண்டுதோறும் உலகின் பரந்து விரிந்த கடற்கரையை கொண்டுள்ள நாடுகள் அனைத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய வணிகமாகவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் மீனவர்களின் பங்கு முக்கியமானதாகவும் உள்ளது. இதனை பறைசாற்றுவதற்கு இந்த நாள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உலகமயமாக்கல் தீவிரமடைந்த 90-களில் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக கடலும், மீன்பிடி தொழிலும் செல்ல, பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்படைந்தது. இதனை எதிர்த்தும், மீனவர்களின் உலகளாவிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விதமாக, 40 நாடுகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் நவம்பர் 21, 1997-இல் டில்லியில் ஒன்றுகூடி உலக மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த நாளே உலக மீனவர்கள் தினமாக உலகம் முழுவதும் மீனவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அதே வேளை, இந்நாளுக்கான ஐநாவின் அங்கீகாரத்தை பெற மீனவர்கள் இன்றளவும் போராடி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.

மற்றொரு புறம், உலக மீனவர்கள் தினமானது மீன்வள தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலாபத்தை அள்ளிகொடுக்கும் மீன்களின் வளத்தை கொண்டாடும் தினமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழித்து, கடல் மற்றும் கடற்சார் பகுதியிலிருந்து மீனவர்களை வெளியேற்றி, கடல்வளத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையளிக்கும் திட்டத்தை உலக வர்த்தகக் கழகம் (WTO) முன்மொழிவதை 2017-ம் ஆண்டிலேயே மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தி, தொடர்ந்து இன்றுவரை அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்பிடி தொழிலை நலிவடையச் செய்ய சிங்கள கடற்படையோடு போட்டிபோட்டுக் கொண்டு செயலாற்றுவது இந்திய வெளியுறவுக் கொள்கையே. இதைத்தான் மே பதினேழு இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக பொதுச்சமூகத்திற்கு சொல்லி வருகிறது. அதேபோல் மீன்பிடி தொழில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1.10 லட்சம் டன் கடல் பொருள் ஏற்றுமதி மூலம் 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சுமார் ரூ. 5,565.46 கோடிக்கு அந்நியச் செலாவணி ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 7.23 இலட்சம் டன். இம்மீன் உற்பத்தி 10.48 இலட்சம் கடல் சார் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ளது. ஆனால், இதனை மீனவர்களிடமிருந்து பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் மீன் மற்றும் மீன் பொருட்கள் பங்கு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2019-20-ஆம் ஆண்டில் சுமார் 12.90 லட்சம் டன்கள் மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி மூலம் ரூ.46,662.85 கோடி மதிப்பில் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10%, வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 விழுக்காடும் ஆகும். அதேபோல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஆகும். ஆனால் இது வரை ஒன்றிய அரசில் மீனவர் நலனிற்காக தனி அமைச்சரவை இல்லை. மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைத்திட வேண்டுமென தொடர்ந்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த 2021ல் புதிய தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை முன்மொழிந்தது பாஜக. மே பதினேழு இயக்கம் கடந்த 2016ம் ஆண்டு அம்பலப்படுத்திய உலகவர்த்தகக் கழகத்தில் (WTO) இந்திய அரசு ஏற்றுக்கொண்ட பல்வேறு சமரசங்களின் தொடர்ச்சியாகத்தான் மீன்வள மசோதாவும் இருந்தது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். (விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/modi-governments-new-fisheries-bill-to-crush-fishermen-a-plan-to-handover-ocean-to-corporates/)

மேலும் குறிப்பிட்ட மீன் மட்டும் தான் பிடிக்க வேண்டும், அதிகளவு பிடிக்கக்கூடாது, அதிலும் ஒரே ஒரு மீன்வலை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட இந்த மசோதாவை மே பதினேழு இயக்கமும் கடுமையாக எதிர்த்து.

உலக வர்த்தக கழக்கத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவின் பாஜக அரசு, அதனை நடைமுறைப்படுத்தும் விதமாகவே இயற்கை பேரழிவில் அதிகம் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. ஒக்கி புயலின் போது கன்னியாகுமரி மீனவர்களை காக்க ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்காதது மீனவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. அப்போது, குளச்சல் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் நேரடியாக மக்களுடன் பங்கேற்று அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தியது.

தொடர்ந்து நடைபெற்ற Oceans Forum மாநாட்டில் WTO ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டு, அதீத மீன்பிடித்தலை குறைத்து, முறையற்ற மீன்பிடித்தலை தடுத்து கடல்வளத்தை காப்பது என்ற குறிக்கோளை முன்வைத்தது. அதாவது, கடலில் மீன்வளம் குறைவதற்கு மீன்பிடித்தலே காரணம் என்றும், இதை பெரும்பாலும் பாரம்பரிய மற்றும் சிறு-குறு மீனவர்களே செய்கிறார்கள் என்றும், இவர்களை மீன்பிடித்தலில் இருந்து நீக்குவதன் மூலமாக கடலை காப்பாற்றமுடியுமென கூறின. இதனடிப்படையிலேயே தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை 2021-ல் மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்தது.

மீனவர் அமைப்புக்களோடு கலந்து ஆலோசிக்காமல் மீனவள் மசோதாவினை நிறைவேற்றிய பாஜகவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள், கடல் வளம் இல்லாத வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் என பெரும்பாலான மீனவர்கள் வாழும் நீண்ட கடற்கரை மாநிலங்களில், சொல்லுமளவிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிராத பாஜக கட்சியினால் இம்மசோதா கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை / கடற்கொள்ளையர்கள் தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும் ஒன்றிய பாஜக அரசு அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல மீனவ மக்கள் இதை எதிர்த்து போராடினாலும் அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவுகிறது ஒன்றிய அரசு.

மீனவர்களை மீன்பிடித் தொழிலை விட்டு அப்புறப்படுத்தும் விதமாகவே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும், கைது செய்தாலும் இந்தியா ஒன்றிய அரசு அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. கடந்தாண்டு புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினத்தின் மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு மே பதினேழு இயக்கம் போராடி மறு உடற்கூராய்வு மேற்கொள்ள வைத்தது. இதற்காக போராடிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது வழக்கு பதிந்தது காவல்துறை. இதன் பிறகு இலங்கையின் தாக்குதல் குறைந்த நிலையில், சில வாரங்களில் இந்திய கடற்படையினரே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

அண்மையில் ஒன்றிய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள வரைபடத்தில் தமிழ்நாட்டில் 512 மீனவ கிராமங்களில் பெயர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்தது மே 17 இயக்கம். தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் ஊடகச் சந்திப்பு ஒன்றிய பாஜகவின் சதிச்செயலை அம்பலப்படுத்தியது.

இவ்வாறு மீனவர்களின் துயரம் சொல்லிமாளாது. இத்தகைய நாசகார திட்டங்களின் மூலம் கடல்சார் பழங்குடிகளான மீனவர்களை பொதுச்சமூகத்திடம் இருந்து விலக்கியே வைத்திருக்க வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் முடிவாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பறைசாற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒன்று மட்டுமே போதும். எனவே தமிழ்நாடு அரசு தனது மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் நம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

குறிப்பாக நெடுங்காலமாக மீனவ மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பிற பழங்குடிகளை போல் அங்கீகரித்து, அவர்களது வாழ்விடத்தையும், வாழ்வாதாராத்தையும் வெளிப்புற சக்திகளிடமிருந்து காக்க அரசு முன்வர வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியது அரசின் கடமை. மீனவர்கள் கடல்சார் பழங்குடிகள். அவர்களை பிற பழங்குடிகளை போல் அங்கீகரித்து, அவர்களது வாழ்விடத்தையும், வாழ்வாதாராத்தையும் வெளிப்புற சக்திகளிடமிருந்து காக்க அரசு முன்வர வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியது அரசின் கடமை. இதற்கு மீனவர் சமுதாயத்தை பழங்குடி சமூகமென அரசு அறிவிக்க வேண்டும்.

இந்தியா WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதே மக்களுக்கு அனைத்து வகையிலும் நன்மைபயக்கக் கூடியதாக இருக்கும். காலங்காலமாக செய்யப்படும் மீன்பிடித் தொழில் காக்கப்படுவதன் மூலமே மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். எனவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீன்பிடித்து வரும் பகுதியில் தொடர்ந்து மீன்பிடிப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். மேலும், சிறுகுறு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மீனவ சமுதாயம் பயன்பெறும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மீன்வளம் குறித்த உயர் படிப்புகளையும் உருவாக்கிட வேண்டும். மீனவ கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்திட வழிவகை செய்திட வேண்டும்.

அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் கடற்கொள்ளையர்களைப் பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மட்டுமன்றி மீனவர்களைத் தாக்கிய இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதுவரை மீனவர்களின் கோரிக்கைகள் பொதுசமூகத்தின் ஆதரவுக்காக காத்திருக்கின்றன. எனவே மீனவப் பழங்குடிகளுக்கான ஆதரவை நாம் வெளிப்படுத்துவோம். தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் காத்திட தமிழர்கள் அனைவரும் இந்த மீனவர் நாளில் (நவம்பர் 21) உறுதியேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »