மீனவர்களை நசுக்கும் மீன்வள மசோதா

மீனவர்களை நசுக்கும் மீன்வள மசோதா

கார்ப்பரேட்டுகளிடத்தில் பெருங்கடலை ஒப்படைக்கும் மோடி அரசின் சதித்திட்டம்

நம் வீட்டின் வாசலில் கூடையில் மீன்களுடன் வந்து வியாபாரம் செய்யும் பெண்களிடத்தில் இனி என்றைக்குமே பேரம் பேசி மீன்கள் வாங்க முடியாது. சாமானிய மீனவனால் மீன் பிடிக்க முடியாது என சட்டம் வந்தால், எப்படி சாமானிய பெண்களால் மீனை நம் வீட்டிற்கே கொண்டுவந்து விற்க இயலும்? இப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது மோடி அரசு கொண்டு வர இருக்கும், ‘புதிய தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம் (Indian Marine Fisheries Bill, 2021)’. பாரம்பரியமாக கடல் தொழிலை மேற்கொண்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி தொழில் மீது பல கட்டுப்பாடுகளை கொண்டுவரும் இந்த புதிய மசோதா, தற்போது நடந்து கொண்டிருக்கும் மழைக்கால (ஆகஸ்டு) நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற காத்திருக்கிறது.

மே பதினேழு இயக்கம் கடந்த 2016ம் ஆண்டு அம்பலப்படுத்திய உலகவர்த்தகக் கழகத்தில் (WTO)  இந்திய அரசு ஏற்றுக்கொண்ட பல்வேறு சமரசங்களின் தொடர்ச்சியாக மீன்வள மசோதாவும் நிறைவேற இருக்கிறது. விவசாயிகளிடத்தில்  கொள்முதலை நிறுத்துவதிலிருந்து, ரேசன்கடைகளில் பொருட்களை விநியோகிப்பதை தனியாருக்கு தாரை வார்ப்பது வரையிலான தனியார்மயக் கொள்கையையே மீனவர்களின் மீன் பிடித்தல் மீதும் சுமத்துகிறது இந்திய மோடி அரசு. மீன்பிடித்தலை தனியார் மயப்படுத்தலை மே பதினேழு இயக்கம் 2017ம் ஆண்டிலேயே எச்சரித்தது.

மீனவர் தொடர்பான WTO-வின் பன்னாட்டு ஒப்பந்தம், ஓசன்ஸ் ஃபோரம் (Oceans Forum) எனும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. நிலைத்த வளர்ச்சி எனும் நோக்கத்தை கொண்ட இம்மாநாடு, அதீத மீன்பிடித்தலை குறைத்து, முறையற்ற மீன்பிடித்தலை தடுத்து கடல்வளத்தை காப்பது என்ற குறிக்கோளை முன்வைக்கிறது. கடலில் மீன்வளம் குறைவதற்கு இந்த மீன்பிடித்தலே காரணம் என்றும், இதை பெரும்பாலும் செய்பவர்களாக பாரம்பரிய மற்றும் சிறு-குறு மீனவர்கள் என்று பட்டியலிடுகிறார்கள். இவர்களை மீன்பிடித்தலில் இருந்து நீக்குவதன் மூலமாக கடலை காப்பாற்றமுடியுமென இம்மாநாட்டு தீர்மானங்கள் முன்மொழிந்தன. இந்த தீர்மானங்களை சட்டங்களாக அனைத்து நாடுகளும் 2020-ம் ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமெனும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னனியிலேயே மோடி அரசு மேற்குலகின் நெருக்கடிக்கு அடிபணிந்து இந்த மீனவர்களை மீன்பிடித்தலில் இருந்து அப்புறப்படுத்தும் வகையில் மீனவர்கள் விரோத மசோதவினை கொண்டு வருகிறது.

மோடி அரசு கொண்டு வரும் இந்த மீன்வள மசோதாவின் படி, அரசின் வரமுறைக்கும் வராத மீன்பிடித்தல் என்பது குற்றச்செயலாக கருதுகிறது. இது, பாரம்பரிய, சிறு-குறு மீனவர்கள் மீது கடும் விதிமுறைகளை விதித்து அவர்களின் அன்றாட மீன்பிடித்தலை கேள்விக்குள்ளாக்குகிறது. இம்மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட கடலில் பெருவணிக கார்ப்பரேட் நிறுவனங்கள் மீன்பிடி உரிமைகள் மூலம் மீன்பிடித்தலை நடத்தப்போவதையே இம்மசோதா நமக்கு சொல்கிறது. இதை சாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதாவின் விவரங்களை மீனவர்களும், சாமானிய வெகுமக்களும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

2009-ல் அன்றைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மீன்வள மசோதாவில் மாற்றங்கள் செய்து தான், தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம் , 2021 பிஜேபி அரசால் கொண்டுவரப்பட உள்ளது. இந்த மசோதா, கடலை நான்கு பகுதிகளாகப் பிரிக்க உள்ளது. அதாவது, கடற்கரையில் இருந்து 12 கடல் மைல் (22.2 கி.மீ) வரையிலான முதல் பகுதியை பிராந்திய கடல் (Territorial Sea) என்றும், அடுத்த 12 கடல் மைல்கள் வரையிலான இரண்டாம் பகுதியை தொடர்ச்சியான மண்டலம் (Contiguous Zone) என்றும், முதல் பகுதியிலிருந்து 200 கடல் மைல் தூர பகுதியில், பிராந்திய மண்டலத்தை தவிர்த்த, இரண்டாம் பகுதியை உள்ளடக்கிய மூன்றாம் பகுதியை பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone – EEZ) என்றும், அதைத்தாண்டிய மீதமுள்ள கடல் முழுவதுமான நான்காவது பகுதியை ஆழ்கடல் (High Sea) என்றும் மீன்பிடி பகுதிகள் பிரிக்கப்படவுள்ளது. இதில் நம் மீனவர்கள் 200 கடல் மைல் தாண்டி மீன்பிடிப்பதற்கு கட்டணமும், அதை மீறினால் அபராதமும் என விதிமுறைகளை கொண்டுவருகிறது. விசைப்படகுகள் 1960 வருடத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும், மீனவர்கள் 12 கடல் மைல் அளவிற்குள்ளேயே மீன்பிடித்தலை செய்யவேண்டுமென்று விதிமுறையும் விதிக்கிறது.

இம்மசோதாவின் மூலம், ஒன்றிய அரசால் கடலோர காவலரை கண்காணிப்பாளராக நியமித்து மீன்பிடித்தலை நெறிப்படுத்தப் போவதாக சொல்கிறது.  எவ்வகையான மீன்களை மீனவர்கள் பிடிக்கப் போகிறார்களோ அதற்கேற்ற மீன்வலையை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டுமெனும் கட்டுப்பாடுகளை இந்த கண்காணிப்பாளர் மூலமாக கணக்கில் எடுக்கிறது. இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது அபராதம் அல்லது கைது என இம்மசோதா வரையறை செய்கிறது. அதன்படி,

  1. மோட்டார் பொருத்தப்படாத பாரம்பரிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்கு ரூ ரூ.1000 முதல் ரூ.5000
  2. மோட்டார் பொருத்தப்பட்ட பாரம்பரிய சிறிய ரக படகுகளுக்கு ரூ.5000 முதல் ரூ.20,000
  3. மோட்டார் பொருத்தப்பட்ட பெரிய படகுகளுக்கு ரூ.20,000 முதல் 1,00,000
  4. ஆழ் கடல் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு ரூ. 1,00,000 முதல் 5,00,000 வரை

என்று அபராத கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 இதுமட்டுமின்றி 200 கடல் மைல்கள் வரை சென்று மீன்பிடி தொழிலைச் செய்யக்கூடியவர்கள் அதற்கான கட்டணம் தனியே செலுத்த வேண்டும். மேலும் சட்ட வரைவின் சரத்து 3 முதல் 8 வரையிலான பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் (EEZ) மற்றும் அதற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மீன்பிடித்தலுக்கு தனியே உரிமம் பெறுதல் தொடர்பாக விவரிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால்  கடலின் வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்தலுக்கு தனித் தனியே அதற்கான உரிமம் பெற வேண்டுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் பயணக்குறிப்பு புத்தகம், பயணத்திசை, கண்காணிப்புமானியை தவறவிடுதல் போன்ற  சிறு சிறு தவறுகளுக்குக் கூட கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் சரத்துகளை இந்திய அளவிலான மீனவர் சங்கம் எதிர்த்திருக்கிறது. மேலும், வலைகள் பயன்பாட்டிலிருந்து, பயணத்திசை வரையிலான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது இம்மசோதா.

பெருமளவு மீனவர்கள் விசைப்படகு தொழில் முறைக்கு மாறி கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இந்நிலையில் மோட்டர் பொறுத்தப்படாத படகுகளுக்கான வரிவிலக்கு என்பது கண் துடைப்பு. மேலும் சிறு மோட்டார் பயன்பாடுகள் (குறிப்பாக 110 குதிரைத்திறன்) ஏழை எளிய சாமானிய மீனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த விசைப்படகுகளின் மூலமாக அம்மீனவர்களால் பெரும் லாபத்தினை ஈட்டிவிட முடியாது போனாலும்,  மீனவர்களின் உடல் உழைப்பினை பெருமளவில் குறைத்து, நீண்டநாட்கள் அல்லது நெருக்கடி காலத்திலும் மீன்பிடிக்க உதவுகின்றன. இச்சட்டத்தினால் இது போன்ற சாமானிய வழிமுறைகளும் நெருக்கடிக்குள்ளாகின்றன.

இம்மசோதா கட்டுப்பாடுகளை விதிப்பதைப் பற்றி மட்டுமே விவாதிக்கிறது. மீனவர்களின் வளர்ச்சிக்கோ, உரிமைக்கோ எவ்வித சரத்துகளும் இணைக்கப்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. இம்மசோதாவின் உருவாக்கத்திற்காக எந்த ஒரு மீனவர் சங்கங்களும் கலந்தாலோசிக்கப்படவில்லை. மேலும், மாநிலங்களிடத்தில் இதுகுறித்த ஆலோசனைகளும் நடத்தப்படவில்லை. மாநில உரிமைகளை புறக்கணித்து ஒன்றிய அரசு இம்மசோதாவை கொண்டுவருகிறது. மீனவர்களின் ஆலோசனையின்றி மீனவர்களுக்காக மசோதாவை நிறைவேற்ற முனைகிறது. கடந்தகாலத்தில்  நீலப்புரட்சி, டாக்டர் மீனாகுமாரி அறிக்கை, கடற்கரை ஒழுங்குமுறை (மேலான்மை) மசோதா 2010,  மீன்பிடித்தல் ஒழுங்கு முறை சட்டம் என தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், ஒரிரு பெரும் முதலாளிகள் கட்டுப்பாட்டில் கடல்வளம் முழுவதும் கொண்டு செல்லப்படும்.  மீன் சந்தையில் வெகுமக்கள்  பேரம் பேசும் தன்மையை பிடிங்கி எறிந்து விட்டு ஒரு  கார்ப்பரேட் நிறுவனம் விலை நிர்ணயம் செய்யும் ஏகபோகத்தை உருவாக்கும்.

இம்மசோதாவினை நிறைவேற்றும் பாஜகவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள், கடல் வளம் இல்லாத வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் என பெரும்பாலான மீனவர்கள் வாழும் நீண்ட கடற்கரை மாநிலங்களில், சொல்லுமளவிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிராத பாஜக கட்சியினால் இம்மசோதா கொண்டு வரப்படுகிறது.  இத்தொழில் பற்றிய முழுமையான புரிதலோ, அக்கரையோ இல்லாத இந்த கட்சியின் உறுப்பினர்கள் முடிவு செய்யும் இம்மசோதாவிற்கான குழுவில் மீனவர்களுக்கு இதுவரை இடமில்லை.

உலக அளவில் கடல் வளம் என்பது மிக முக்கியமான பொருளாதாரமாக இருக்கிறது. அதோடு கடல் மீன்வளம் சார்ந்த வணிகம் உலக சந்தையில் பெரும் போட்டி சந்தைகளை உருவாக்க கூடியது. வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் கடல் பொருளாதாரத்தை சுரண்டும் நோக்கத்தோடு மீனவர்களுக்கு கொடுக்கும் மானியங்களை நிறுத்த கோரிவருகின்றன. அவர்களுக்கு ஏற்றார்போல் உலக வர்த்தக மையம் (WTO) இந்த வணிகத்தை ஒழுங்குபடுத்த உலக நாடுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. நிலையான வளர்ச்சிக்கான இலக்கு (Sustainable Development Goal 14 [SDG14]) என்ற தன் நோக்கத்தில் முக்கியமானது, மீன்பிடி கலன்களை வகைப்படுத்துவது மற்றும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசுகள் நிறுத்திக்கொள்வது. அதற்கென்று பிரத்யேகமாக Oceans Forum மூலம் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதில் 2030-ஆம் ஆண்டை இலக்காக வைத்து மீன்பிடித்தலில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை படுத்தல், முறைப்படுத்தப்படாத மீன்பிடித்தலை தடை செய்தல் பற்றி தொடர்ந்து அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. குறிப்பாக SDG-14 (Target 14.4 and Target 14.6) சட்ட விரோதமான, முறைப்படுத்தப்படாத மற்றும் அறிவிக்கப்படாத மீன்பிடித்தல் (illegal, unregulated and unreported [IUU]), மேலும் புதிதாக வழங்கும் மானியங்கள் நிறுத்தம் ஆகியவைகளை 2020-ஆம் ஆண்டில் செய்து முடிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் மீன் மற்றும் மீன் பொருட்கள் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18-ஆம் ஆண்டில் மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி ரூ.46,589.37 கோடி மதிப்பில், 13.93 இலட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10 விழுக்காடும்,  வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 விழுக்காடும் ஆகும். மீன்பிடி தொழில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.  தமிழ்நாட்டின் கடல் பொருள் ஏற்றுமதி  2018-19 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 5,591.49 கோடிக்கு அந்நியச் செலாவணி ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டின் கடல் மீன் உற்பத்தி 5.21 இலட்சம் டன். இம்மீன் உற்பத்தி 10.48 இலட்சம் கடல் சார் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ளது.

மீன் உணவு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான புரத உணவாக இருக்கிறது. இந்த மசோதா மீனவர்களை மட்டுமல்லாமல் மீன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள சராசரி சிறு வணிகர்களை, சாமானியர்களை மீன் விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்தும். தமிழ்நாடு ஒரு எல்லையோர மாநிலம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு இந்த கடல் தொடர்பாக எடுக்கும் எந்த முடிவும் தமிழ்நாட்டின் இறையாண்மையை பாதிக்கும். எல்லையோர மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி ஒன்றிய அரசு எதையும் செய்ய அனுமதிக்க கூடாது. தமிழ் நாட்டின் மீனவ கிராமங்களில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் கடலில் எங்கு மீன் இருக்கிறது என்பதை பல தலைமுறைகளாக ஆய்ந்து அறிந்து மீன்பிடித்து வருகிறார்கள்.  ஒவ்வொரு மீன்பிடி பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக அவர்களிடம் செவிவழிக் கதைகள் நிறைய உள்ளது. இந்த கடலின் மூலை முடுக்குகளை அறிந்தவர்கள் அவர்கள். அதன் மீதான உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிட முடியாது.

தமிழ் நாட்டின் இறையாண்மை என்பது கடலின் மீது மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய உரிமை பாதுகாக்கப்படுவதன் மூலம் தான் சாத்தியம். தமிழ்நாட்டின் 608 மீனவ கிராமங்களில் வாழும் 10.48 இலட்சம் கடல் சார் மக்களின் வேலை வாய்ப்பும் அவர்களின் வாழ்வாதாரமும் ஒரு சட்டத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது. இந்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ் நாட்டின் சமவெளி பகுதி மக்களும் மீனவ மக்களோடு சேர்ந்து நின்று போராட வேண்டியது அவசியமாகிறது.

மீனவர்களை குற்றப் பரம்பரையினராக்கி தொழிலைவிட்டும், நெய்தல் நிலத்தை விட்டும் வெளியேற்றிவிட்டு அம்பானி அதானிகளுக்கு கடலை திறந்து விடும் திட்டத்தை தடுக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, கடல்சார் மக்களை “கடல் பழங்குடிகள்” என்று வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.  யார் யார் நெய்தல் பழங்குடிகள் என்பதை அறிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இது அவர்களின் தொழிலசார் நிலையத்தையும், அவர்கள் தொழிலையும் உறுதி செய்யக்கூடியது. எல்லை மாநிலமான தமிழ்நாட்டின்  பிரத்யேக பொருளாதார மண்டலமாக இருக்கும் 1.9 இலட்சம் ச.கி.மீ கடற்பரப்பின் மீதான உரிமையையும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும்.

உழவர்கள் போராட்டத்துடன், மீனவர்கள் போராட்டமும் ஒன்றிணைய வேண்டிய தேவையை மோடி அரசு உருவாக்கி இருக்கிறது. சாமானிய மக்களின் உணவுப்பாதுகாப்பு மீதும் வாழ்வாதாரங்கள் மீதும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக ஏவப்பட்டுள்ள இச்சட்டப்பூர்வ நகர்வுகள் மக்கள் விரோதமானவை, மானுட குலத்திற்கு எதிரானவை. இச்சட்டங்கள் எனும் அடக்குமுறைக்கு எதிராக வெகுமக்கள் ஒன்றுதிரளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »