பதஞ்சலியின் அசுர வளர்ச்சிக்கு உதவிய இந்துத்துவ மோடி அரசு

பதஞ்சலியின் அசுர வளர்ச்சிக்கு உதவிய இந்துத்துவ மோடி அரசு

 ஆயுர்வேத பொருட்கள் என்றால் உடனடியாக நாம் நினைவில் தோன்றுவது பதஞ்சலி அங்காடிகள் தான். 2006-இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் அங்காடிகள் இந்தியா முழுவதும் சிறு நகரங்கள் வரை கிளை பரப்பி வளர்த்துள்ளன. 2014-இல் பாஜகவின் மோடி அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 7 ஆண்டுகளில் பதஞ்சலி நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு காரணமாக அமைந்தது, இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பாபா ராம்தேவ், பாஜக ஆட்சிக்கட்டிலில் அமருவதற்கு உதவியதும், பிரதிபலனாக மோடி, பாபா ராம்தேவ் வளர்ச்சிக்கு உதவியதுமேயாகும். மோடி அரசு சமீபத்தில் இதற்கு ஆராய்ச்சி நிறுவன அந்தஸ்து வழங்கி 5 ஆண்டுகள் வரி விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஹரியானா மாநிலம் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் கிராமத்தில் பிறந்த ராம கிருஷ்ணா என்ற சாமானியன் தான் பாபா ராம்தேவ். அலிப்பூர் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பின்பு சில குருகுலங்களில் இருந்த சன்னியாசிகளிடம் இந்திய இலக்கியம், யோகா, சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு, பதஞ்சலி என்ற பன்னாட்டு நிறுவனம் மூலம் போலியான தரமில்லாத பொருட்களை உற்பத்தி செய்து பலமுறை கையும் களவுமாக மாட்டிய பெருமைக்குரியவர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்படும் தர பரிசோதனையில் பதஞ்சலி பொருட்கள் தோல்வியடைந்து வருவதும், அச்செய்திகள் எல்லாம் ஊடகங்களில் வருவதும் தொடர்கதையாகவே உள்ளது. ஆனாலும் அதன் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை. பதஞ்சலி குறித்த விளம்பரங்களும் நின்றபாடில்லை.

இத்தகைய போலி பதஞ்சலி நிறுவனத்தை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயர்த்தியதோடு, அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கு சலுகைகளை போல பதஞ்சலி நிறுவனமும் ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு பெற்றுள்ளது என்றால், இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கு மோடி அரசை தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும்?

​முதன்முதலில் “ஆஸ்தா’ டிவியில் யோகா பயிற்சி மூலம் மக்களுக்கு அறிமுகமான பாபா ராம்தேவ், அதற்கு பிறகு படிப்படியாக வளர்ந்து இன்று அறிவியலை ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் என்றால் இதற்கு முழுமையான காரணம் மோடியும் இந்துத்துவ பாஜக கட்சியும் தான்.

பாபா ராம்தேவின் அரசியல் பிரவேசம்

எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு யோகா குருவால் ஒரு பன்னாட்டு நிறுவனம் தொடங்கி அதனை அறிவியல் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு முன்னேற்றுவது என்பது சாதாரண விடயம் இல்லை. அதற்கு கண்டிப்பாக அரசியல் பின்புலம் தேவை. இங்கு தான் பாபா ராம்தேவின் அரசியல் பிரவேசம் குறித்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ராம்தேவ் கருப்புப்ணம், ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடத்தியும், ஈடுபட்டதும் அறிந்த விடயமே. அவர் 2011ம் ஆண்டில் நடந்த ‘ஜன லோக்பால்’ போராட்டத்தில் கலந்து கொண்டதும், அதனை தொடர்ந்து 27 பிப்ரவரி 2011 அன்று ஊழலுக்கு எதிராக டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் திரண்ட பெரிய பேரணியை வழி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

சாகும் வரை ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து, அதன்படி மும்பை, பெங்களூரு, லக்னோ ஹைதராபாத், ஜம்மு ஆகிய நகரங்களில் போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார்.

அதேபோல், 2014 தேர்தலின் போது மோடிக்கு ஆதரவாக இருந்ததால் நிலம் கையகப்படுத்துதலில் பதஞ்சலிக்கு 46 மில்லியன் டாலர் (3,42,84,26,000 ரூபாய்) வரையில் சலுகை கிடைத்தது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இச்சலுகை கிடைத்ததாக 2017ஆம் ஆண்டில் ராய்டர்ஸ் நிறுவனம் கூறியிருந்தது.

ஊழலை காரணம் காட்டி ஆட்சியை பிடித்த பாஜக மோடி அரசு ஊழலை ஒழித்து விட்டதா, இல்லை கருப்பு பணத்தை தான் மீட்டு கொண்டு வந்து விட்டதா என்றால் எதுவும் இல்லை. ஆனால், முந்தைய ஆட்சியில் ஊழலுக்கும் கருப்பு பணத்திற்கு எதிராக கருப்பு கொடி தூக்கிய பாபா ராம்தேவ்க்கு, இந்த ஆட்சியில் நடக்கும் ஊழல் கண்ணுக்கு தெரியாததன் மர்மம் தான் அவரின் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு காரணம் என்றால் அது மிகையாகாது.

பாஜகவும் பதஞ்சலியின் வளர்ச்சியும்

பதஞ்சலி நிறுவனம் 2006ல்  இந்தியாவின் ஹரித்வாரில் பாபா ராம்தேவ் மற்றும் அவரது நண்பர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரால் நிறுவப்பட்டதாகும். அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் டெல்லியில் உள்ளது. ஹரித்வாரில் அதன் தலைமையகம் மற்றும் உற்பத்தி தொழில்துறை கூடங்கள் உள்ளன.

பதஞ்சலி நிறுவனம் 2010ம் ஆண்டு முதல் எத்தகைய வளர்ச்சி அடைந்து வருகின்றது என்று பார்ப்போம்.

நிதி ஆண்டு 2010-2011 2011-2012 2012-2013 2013-2014 2014-2015 2015-2016 2016-2017 2017-2018 2018-2019 2019-2020
வருமானம் (கோடிகள்) 100 300 841 1,184 2,006 8,000 10,526 9,500 8,330 9,022

 

மேலேயுள்ள தகவல்களை பார்க்கும் போது மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பதஞ்சலி நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

பதஞ்சலி நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியால் வரும் நிதியாண்டில் 2020-21ல் நாட்டின் முன்னணி மிகப்பெரும் அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் மிகப்பெரிய FMCG நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி பதஞ்சலி குழுமம் முதலிடத்துக்கு அதிவிரைவாக முன்னேறி வருகிறது என்று CLSA மற்றும் HSBC அறிக்கை கூறுகிறது.

காப்பாற்றப்படும் பாபா ராம்தேவ்

 பாபா ராம்தேவ் எவ்வாறு பொய்களுக்கு பெயர் போனவரோ, அதேபோல் பதஞ்சலி நிறுவனமும் போலியான தரமற்ற தயாரிப்புக்கு பெயர் போனது. அதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

 2017ம் ஆண்டில் நேபாளத்தைச் சேர்ந்த பரிசோதனை அமைப்பு ஒன்று பதஞ்சலியின் ஆம்லா சூரணம், திவ்ய கஸ்ஹர் சூரணம், திரிபலா சூரணம், அஷ்வகந்தா உள்ளிட்ட 6 மருத்துவ பொருட்களை தரமற்றவை என்று கூறியதால், அப்பொருட்களை திரும்பப் பெறுமாறு நேபாளம் அறிவித்து இருந்தது.

அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல், பதஞ்சலியின் 40 சதவீத பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப் படவில்லை என்றும், பொருட்களின் தரம் குறைவாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை என தெரியவந்ததால் ஏப்ரல் 2017ல் ராணுவ கேன்டீன்களில் அவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது.

மும்பையில் உள்ள பதஞ்சலி விற்பனை மையத்தில் ராய்டர்ஸ் நிறுவனம் ஆய்வு செய்த போது, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 81 பொருட்களில் 27 பொருட்களின் மீது வேறு உற்பத்தியாளர்களால் இப்பொருள் தயாரிக்கப்பட்டதாக லேபல் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கொரோனில் மருந்து மற்றும் ஆய்வறிக்கை வெளியீட்டின் போது

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு ‘கொரோனில்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்தாக அறிவித்து அது கொரோனாவை குணப்படுத்தும் என்று விளம்பரம் வேறு செய்தது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கொரோனில் ஏற்படுத்திய பெரும் சர்ச்சையை தொடர்ந்து, இந்த கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அதிகரிக்கக் கூடியது என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தானாக முன்வந்து விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இம்மருந்து கொரோனாவை குணமாக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த மருந்தை “கொரோனில் கிட்” என பெயர் மாற்றி கடந்த பிப்ரவரி 19 அன்று மீண்டும் அறிமுகம் செய்தனர். இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டதன் மூலம், இதன் பின்னணியில் பாஜக இருப்பதை உறுதி ஆகிறது.

பதஞ்சலியின் விதிமீறல்கள்

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2018ன் படி பிளாஸ்டிக் கழிவுகளை தயாரிப்பவர் என்ற முறையில் பதஞ்சலி நிறுவனம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பதிவு செய்யாததால், அந்நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அதற்கு முன்னதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

அதேபோலவே விதிகளை மீறியே கொரோனில் மருந்தும் மோடி அரசின் உதவியோடு தயாரிக்கப்பட்டுள்ளதும் புலனாகிறது. இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த ஒரு மருந்துக்கும் பரிசோதனை என்பது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

முதலில் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (DGCI) அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு சோதனை மேற்கொள்ளப்படும் அனைத்து அமைப்புகளின் நெறிமுறைகள் குழுவின் அனுமதி பெறவேண்டும். அதன் பிறகு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ICMR) மேற்பார்வையில் இயங்கும் இந்திய மருத்துவ சோதனை பதிவேடு CTRI என்ற இணைய தளத்தில், சோதனையுடன் தொடர்புடைய நடைமுறைகள், வளங்கள், பெயர், நிதி ஆதாரம் குறித்த அனைத்து விவரங்களை பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.

மேற்கூறியவாறு CTRI இணைய தளத்தில் மே 20, 2020 அன்று பதிவு செய்யப்பட்ட படிவத்தில், பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம், “கொரோனா வைரஸ் நோய் சிகிச்சையில் ஆயுர்வேத மருந்துகளின் விளைவு” குறித்து சோதனை செய்ய உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனைக்காக முதல் கொரோனா நோயாளி மே 29, 2020 அன்று பதிவு செய்யப்பட்டதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தின் படி மருத்துவப் பரிசோதனை தொடங்கிய 25  நாட்களுக்குப் பிறகு ஜூன் 23, 2020 அன்று பதஞ்சலி நிறுவனம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ‘கொரொனில் மாத்திரை’ மற்றும் ‘சுவாசாரி வடி’ எனும் இரண்டு மருந்துகளை உலகிற்கு அறிமுக படுத்தியதுடன், இந்த மருந்துகள் கொரோனாவை குணப்படுத்த கூடியவை என்றும், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதில் கொரோனா தொற்றுள்ளவர்கள் 100% குணம் அடைந்தாகவும் அறிவித்தது.

இத்தகைய ஒரு தரமற்ற விதிகளை மீறும் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஆராய்ச்சி நிறுவன அந்தஸ்து வழங்கி 5 ஆண்டுகள் வரி விலக்கு அளித்துள்ளது. பதஞ்சலி ஆய்வு நிறுவனத்துக்கு ஒன்றிய நேரடி வரிவிதிப்பு வாரியம் வரிவிலக்கு அளித்துள்ளது. பதஞ்சலி ஆய்வு நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்குபவர்களும் 5 ஆண்டுகள் வரி விலக்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவத்தை பிரதிபலிக்கும் பாபா ராம்தேவ்

 பாபா ராம்தேவ் இந்தியாவில் ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவிய போது, சுதேசி சிக்சா, சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் பரப்பியது அப்படியே இந்துத்துவ பிரச்சாரம் போன்றதே.

கார்பரேட் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பதஞ்சலி இல்லை என்ற புகாரும் கூறப்படுகிறது. ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆலையில் தொழிலாளர்கள் அனைவரும் காலையில் ‘ஓம் ஓம்’ என்று முழங்குவது, மூத்த மேலாளர்கள் வெள்ளை நிறத்தில் தான் உடை அணிய வேண்டும் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதஞ்சலி மீது உள்ளன.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்க்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம்

பாபா ராம்தேவ், யோகா மற்றும் ஆயுர்வேதம் என்ற டபுள் டோஸ் தனக்கு உள்ளதால் தனக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை எனவும் கொரோனா வைரஸின் எத்தனை வகைகள் வந்தாலும், அதன் தொற்று அவரை பாதிக்காது என கூறியிருந்தது எல்லாம் அப்படியே இந்துத்துவ மதவாதிகளின் பேச்சை ஒத்ததாக இருக்கிறது. மேலும், மாடு சிறுநீரை குடிப்பது கொரோனாவிலிருந்து காக்கும் போன்ற கருத்துக்களையும் கூறி மக்களை தவறாக வழிநடத்தினார்.

அதோடு, அலோபதி மருத்துவம் குறித்து கடும் விமர்சனங்களை கூறியிருந்த அவரிடம் 1,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி தும்மினால் கூட அதை தேசபக்தித் தும்மல் என பெருமை பேசித் திரியும் கோடிக்கணக்கான பக்தாள் கூட்டம்தான் பதஞ்சலியின் இலக்கே. அந்த கண்மூடித்தனமான மோடி பக்தி மற்றும் தேசபக்தியை அடிப்படையாக வைத்து, களம் இறங்கியதுதான் பதஞ்சலி நிறுவனம்.

மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபாரத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக புகழை  வியாபாரமாகமாக்கி பணம் சேர்க்கும் ஜக்கியை போன்றவரே பாபா ராம்தேவ்.

நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரே கொரோனில் போன்ற பொய்யான, அறிவியலற்ற தயாரிப்பை நாட்டு மக்களுக்கு பரிந்துரைப்பதற்கு காரணம் பாபா ராம்தேவ்க்கு அவரது நண்பர் மோடி காட்டும் விசுவாசமே அன்றி வேறில்லை.

மக்களிடம் மூடத்தனங்கள் நிரம்பி வழியும் வரை பதஞ்சலி போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி தடுக்க இயலாதது. ஆனால், குறுகிய காலத்தில் இந்நிறுவனத்தின் அசாதாரண வளர்ச்சி இயற்கையானதல்ல. இந்துத்துவத்தை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனம், இந்துத்துவத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட ஆளும் பாஜக அரசுடன் பரஸ்பர உதவிகள் செய்துகொண்டு இணக்கத்துடன் செல்வது, அதன் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமிடுகிறது.

இந்துத்துவம் தனக்கான தேசிய முதலாளிகளை தேர்ந்தெடுப்பதும், தனது பன்னாட்டு தரகு முதலாளித்துவத்தினால் தேசிய முதலாளிகள் பாதிக்காத வண்ணம் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதையும் பாஜக அரசு மேற்கொள்கிறது. அதேவேளை, தேசிய முதலாளிகளின் வணிகத்தின் மூலம் இந்துத்துவ கொள்கைகள் நாடு முழுவதும் பாமர மக்களை சென்றடைவதை உறுதி செய்கிறது. அதற்கான சிறந்த உதாரணமாக பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »