கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ்

கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று குறையாமல் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 24 வயதுள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் ஜூன் மாத இறுதியில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட முதல் பெண் என்பதும், தற்போது சீராக இருப்பதாகவும், இந்த பெண்ணுக்கு  ஜூன் 7 ஆம் தேதி குழந்தை பிறந்தது.

மேலும் இந்த பெண்ணின் தாயார் உட்பட 19 பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க பூனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகி உள்ளது. கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 15.07.2021 வரை ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரசின் காலவரிசை

  • 1947ம் ஆண்டு உகாண்டா நாட்டில் குரங்குகளுக்கு முதல் முறையாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1950களில் இருந்தே ஜிகா வைரஸ் இந்தியாவில் இருந்தேஇருக்கிறது.
  • 2013-14ஆம் ஆண்டிலும், ஃப்ரெஞ்ச் போலினீசியாவில் முதல் முதலாக கண்டறியப்பட்டது.
  • 2015-16லும் தென்னமெரிக்காவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
  • 2016 – 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் ஜிகா தொற்று பரவத் தொடங்கியது.
  • 2017ல் குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
  • இந்நிலையில், தமிழ்நாட்டில் தேன்கனிக்கோட்டையில் முதலில் 2017ஆம் ஆண்டு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

ஜிகா வைரஸ் எப்படி பரவும்?

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களின் மூலம் பரவும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இந்த வகையான வைரஸ் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் பகலில் கடிக்கும். இந்த கொசு தான் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்றவற்றையும் பரப்புகிறது. இந்த வைரஸ் வெறும் கொசுக்கடியினால் மட்டுமல்ல, ரத்தம் மாற்றம் மற்றும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலமும் மற்றொருவருக்கு பரவலாம் என்று தொற்று நோயியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக கர்ப்பமான பெண்களுக்கு எந்த நோய் தொற்று தாக்கினாலும் நஞ்சுக்கொடி, தன்னைத்தாண்டி கர்ப்பத்தில் இருக்கும் பிஞ்சுக் குழந்தையை நோய் அணுகுவதற்கு அனுமதிக்காது. ஆனால் ஒரு சில (ஜிகா போல்) வைரஸ்கள் வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதித்து அதற்கும் குறை உண்டாகின்றன. கருச்சிதைவு, குறைப்பிரசவம், வயிற்றுக்குள்ளேயே குழந்தை உயிர் இழத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் உண்டாக்கலாம்.

கனடா, சிலி தவிர அமெரிக்க கண்டம் முழுவதிலும், ஆசியா முழுவதிலும் இந்த கொசுக்கள் காணப்படுகின்றன. ஏனெனில் கனடா, சிலி ஆகிய இரு நாடுகளும், இந்தக் கொசுக்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியானவை. மலேரியாவை பரப்பும் கொசுக்களைப் போல அல்லாமல் இவை பகல் பொழுதில் செயல்படுகிறவை. எனவே தான் ஜிகாவை 2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன?

கொசுக் கடித்த பிறகு, ஜிகா வைரஸ் அறிகுறிகள் தோன்ற சுமார் ஒருவாரம் ஆகும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அறிகுறிகள் டெங்குவைப் போலவே இருக்கும். குறிப்பாக, காய்ச்சல், உடற்சோர்வு, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, தோல் சிதைவு/நமிச்சல், கண்கள் சிவந்து போதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். குறிப்பாக “சில பெரியவர்களுக்கு நரம்பியல் கோளாறுகள் தோன்றும். இது ‘கீலன் பா சின்ட்ரோம்’ என்று அழைக்கப்படும் ‘தன் தடுப்பாற்று நோய்’ ஆகும். இதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தனது சொந்த நரம்பு மண்டலத்தை தவறாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். இதனால், பக்கவாதம் ஏற்பட்டு முழங்கால், முழங்கை அசைவில்லாமல் போகும். இந்த வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படுவது அரிது.

தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

ஜிகா வைரஸ் தொற்றுக்கு காரணமான கொசுக்கள் பகலில் கடிக்கும். பாத்திரங்களில், பழைய டயர்களில், வீட்டின் மூலைகளில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். முட்டை இருக்கும்போதே இதன் தொடர்ச்சியை துண்டிக்க வேண்டும். வடிகால்கள் சுத்தம் செய்யப்படவேண்டும், முடிந்த வரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர, வீட்டிற்கு பகல் நேரத்தில் கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. பிறப்பு குறைபாடுகள் மற்றும் ஜிகா வைரஸ் மேலும் பரவும் அபாயத்தைக் குறைக்க, இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஜிகா வைரஸ் இதுவரை தமிழ்நாட்டில் எப்போதும் பெரிதாக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அதை நாம் அஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ள இயலாது. ஏற்கெனவே கேரளாவின் எல்லையோர பகுதிகளில் தமிழ்நாடு அரசு இ-பாஸ் போன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளது,  இன்னும் துரிதமாக இந்த வைரஸை ஒழிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொசுக்களால் பரப்பப்படும் இந்த நோய்களை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள், சுகாதார துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி தேவையில்லாமல் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். நீர்நிலைகளில் மருந்து தெளிக்க வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும், கொசு மருந்து தெளிப்பு, புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் போதுமான மருந்துகளும் மற்றும் ரத்த வங்கிகளில் ரத்த கட்டமைப்பை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

கேரளாவில் ஜிகா வைரஸ் பரவியுள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட மத்திய குழு அம்மாநிலம் சென்றது. ஆனால் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வாலோ அல்லது அந்த குழுவினரோ இதுவரை அறிக்கை ஏதும் சமர்ப்பிக்கவில்லை. தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 1.41 லட்சம் கோடி, ஆனால் இத்திட்டம் தமிழ்நாட்டுக்கு செலவு செய்யாமல் இருக்கிறது. இந்த நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகளுக்காக 2.23 லட்சம் கோடி ரூபாய் செலவிட மோடியரசு திட்டமிட்டது, மேலும் கொரோனா காலத்தில் தடுப்பூசி மற்றும் சுகாதார பணிகளுக்கு பல லட்சம் கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் எல்லாம் லாபம் அடைபவர்கள் மார்வாடி கூட்டமே தவிர எளிய மக்கள் அல்ல.

மேலும் இந்த ஜிகா வைரஸால்  பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஓய்வு எடுத்துக் கொண்டு நிறைய திரவமாக அருந்தவேண்டும். இப்போது ஜிகாவைத் தடுக்க தடுப்பூசி எதுவும் இல்லை. இருப்பினும், பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை தயாரிக்க முயற்சித்து வருகின்றனர். தற்போது அதற்கான சோதனைகளும் நடந்து வருகின்றன.

இந்தியாவில் புதிய வைரஸ்களின் நுழைவுவாயிலாக கேரளா மாநிலம் உள்ளது. இதற்கு, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடல்கடந்து பல்வேறு நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருவது காரணமாக உள்ளது.  அப்படியாக கடந்த 2018 ம் ஆண்டு நிப்பா வைரஸ் கேரளாவில் பரவிய போது, கேரளா அரசு அதனை திறமையாக கையாண்டது. அதனை கையாண்ட அனுபவமே கொரானா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்க உதவியது. இந்தியாவெங்கும் கொரானா மிகத் தீவிரமாக பரவிய நிலையில், கேரளாவில் அது கட்டுப்படுத்தப்பட்ட பரவல் என்ற நிலையிலேயே இருந்தது.

இந்த நிலையில், தற்போது பரவி வரும் ஜிகா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய அனுபவமும், கட்டமைப்பும், மக்கள் அதற்கு வழங்கும் ஒத்துழைப்பும் நோய் பரவலை தடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒருவேளை கேரளா தாண்டி பரவுமானால், தமிழ்நாடு உட்பட அதன் அண்டை மாநிலங்கள் கொரானா நெருக்கடிக்கிடையில் ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது கடும் சவாலாகவே இருக்கும். மக்கள் விழிப்புணர்வோடு இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தால், ஜிகா வைரஸ் பரவல் நிச்சயம் தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »