பக்ஸ்வாஹா வைரச் சுரங்கமும் புதிய வனச் சட்டமும்

பக்ஸ்வாஹா வைரச் சுரங்கமும் புதிய வனச் சட்டமும்

பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி கனிம வளங்களை அபகரிக்கும் மோடி அரசு

முதலாளித்துவ பொருளாதாரம் உலகம் முழுக்க இருக்கும் இயற்கை வளங்களை சுரண்டி எடுக்கும் வேலையை முன்னேபோதையும் விட பல மடங்கு வேகமாக செய்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று வேறுபாடு இல்லாது அமெரிக்க முதல் ஆஸ்திரேலியா வரை, இந்தியா முதல் பிரேசில் வரை கனிம வளங்களை எடுக்க சூழலியல் கேடுகளை மதிக்காமல் அரசுகள் பல செயல்பட்டு வருகின்றன.

கார்பரேட் முதாளிகளின் ஏவல் எந்திரமாய் செயல்படும் அரசுகளுக்கு இருக்கு பெரும் பிரச்சனை அங்கு பல நூறு ஆண்டுகளாக அந்த மண்ணுடன், மலையுடன், மரங்களுடன் உறவாடி ஒன்றாக வாழ்ந்துவரும் பூர்வகுடி பழங்குடி மக்களே.

4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் டகோட்டாவிலிருந்து இல்லினாய்ஸ் மாகாணத்திற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை குழாய்கள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதற்கு இரண்டு ஆறுகள் மற்றும் ஒரு ஏரி சேதப்படுத்தப்படுவது மட்டும் இல்லாமல், 1186 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய் செல்லும் பாதை முழுவதும் உள்ள 8,00,000 ஏக்கர் அளவு நிலங்கள் முழுவதும் சேதப்படுத்தப்படும் என்பதால், கிட்டத்தட்ட ஒரு வருடம் லட்சக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை அதானிக்கு ஏலம் கொடுத்ததற்கு பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இங்கிலாந்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக பாயில் வேதாந்தா (foil Vedanta) என்ற மக்கள் கூட்டமைப்பு செயல்படுகிறது. பிரேசில் நாட்டிலும் அங்கிருக்கு அமேசான் காடுகளை அளிக்கும் அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் நடைபெற்ற ஒரு போராட்டம்

இவ்வாறாக, உலகம் முழுக்கவே வளங்களை கொள்ளையடிக்கும் வேலைகளை அரசுகள் முன்னெடுக்க அதற்கு பூர்வகுடி, பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி இருக்கிறது. இந்தியாவிலும் இந்தக் கொள்ளை தொடர்ந்து நடந்தேறி வந்தாலும் பாஜக-வின் மோடி ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமெடுத்திருக்கிறது கார்பரேட் கனிமவளக் கொள்ளை.

இந்தியாவில் வைர படிமங்கள் அதிகமாக இருக்கும்  நான்கு  மாநிலங்கள் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் ஒடிசா. இவற்றில்  மத்தியப் பிரதேசத்தில்  மட்டும் சுமார் 90.18 சதவீதம் வைர படிமங்கள் உள்ளன.

மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தில் முன்மொழியப்பட்ட பண்டர் வைர சுரங்கத் திட்டத்தை தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் “எஸ்ஸெல் மைனிங் நிறுவனம் (Essel Mining & Industries Limited (EMIL))” ஏலம் எடுத்து உள்ளது. பிர்லா குழுமத்தின்  சுமார் ரூ.2500 கோடி வைர சுரங்கத் திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால்  ஆசியாவின் மிகப்பெரிய வைர சுரங்கங்களில் ஒன்றாக மாறும் சாத்தியம் இருக்கிறது.

முன்னர் சொன்னது போல் எந்த கார்ப்பரேட் நிறுவனமும், சுற்றுசூழலையும்  மக்களின் வாழ்வாதாரத்தையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதற்கு சான்றாக அங்குள்ள  பக்ஸ்வாஹா காடுகளில் (Buxwaha forest) பழங்குடியின மக்களின் நிலம் 364 ஹெக்டேர் வரை கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 17 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் 2,00,000 மரங்களும் வெட்டப்படவுள்ளன.

2017 இல் பின்வாங்கிய ஆஸ்திரேலிய நிறுவனம்

ரியோ டின்டோ நிறுவனத்தின் ஆலை

கடந்த 2006 இல், மத்தியப் பிரதேச அரசு, பக்ஸ்வாஹாவில் 954 ஹெக்டேர் பரப்பளவில் சுரங்கத் திட்டத்திற்கான உரிமையை ஆஸ்திரேலிய நிறுவனமான ரியோ டின்டோவுக்கு  வழங்கியது. ஆனால்  ஒரு வளமான வனப்பகுதியையும், பன்னா புலிகள்  சரணாலயத்தையும் பாதிக்கும் என்பதால் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. கிட்டதட்ட 600 கோடி ரூபாய் செலவழித்த பின்னர், 2017 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா நிறுவனம்.

ரியோ டின்டோ வெளியேறிய பிறகு, சற்று நிம்மதி அடைந்திருந்த மக்கள், பக்ஸ்வாஹா திட்டம் பண்டர் வைரச் சுரங்க திட்டத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் மறுபடியும் பேராபத்திற்குள்  தள்ளப்பட்டிருக்கிறார்கள். இத்திட்டத்தில், வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக அங்குள்ள சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கிட்டதட்ட 5,00,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும் என்பதை, நிலத்தடி நீர் குறையும் அபாயத்தையும் அரசு மறைக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். (வைர சுரங்கத்திற்கான  நீர் தேவை  ஒரு நாளைக்கு சுமார் 5.9 மில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.)

ஜூன் 5, 2021 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  பக்ஸ்வாஹாவில் மரங்களை கட்டிப் பிடித்து, ஒரு அடையாளப் போராட்டத்தை  ‘சிப்கோ இயக்கம்’ நடத்தியது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த #SaveBuxwahaForest போன்ற சமூக ஊடக பக்கங்களையும் உருவாக்கியுள்ளனர்.

இதே போன்று சத்தீஸ்கர் போன்ற நிலக்கரி வளங்கள் நிறைந்த மாநிலங்களில்   அதானி குழுமம், ஹிண்டால்கோ,  வேதாந்தா நிறுவனங்கள்  பல ஆண்டு கால ஒப்பந்தங்களை செய்துள்ளன.

இப்படி  இந்தியாவில் சுரங்கங்கள் தோண்டுவதற்காகவும் அணைகள் கட்டுவதற்காகவும் இதுவரை ஏறத்தாழ 85 லட்சம் பழங்குடியினர் காடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

இந்தியக் வனச்சட்டத்தின் 2019-ம் ஆண்டு சட்டத்திருத்தம்

பழங்குடிகளுக்கு எதிராக பா.ஜ.க தொடுத்துள்ள  இந்தப் போரின் தொடக்கம் மோடி அரசு கொண்டு வந்த “இந்தியக் வனச்சட்டம் (சட்டத்திருத்தம்), 2019” மூலம் ஆரம்பித்தது. பழங்குடி மக்களை அவர்களின் அனுமதியின்றியே கட்டாயமாக  வெளியெற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது இச்சட்டம். வெளியேற மறுக்கும் பட்சத்தில் பழங்குடியினரை சுட்டுத்தள்ளக்கூட வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது இந்தச் சட்டம்.  இந்திய வன மதிப்பாய்வு நிறுவனம் (Forest Survey of India) செயற்கைக்கோள் உதவியுடன் பழங்குடி மக்களின் குடியிருப்புகளை அடையாளம் காண்பதோடு,  அவை அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் காடுகளில் இருக்கும்  மரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் குறிப்பாக கனிமங்கள் அரசின் சொத்துக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்காக காடுகளில்  வாழ்கின்ற மக்களை முன்னெச்சரிக்கையாக பிணையில் வர முடியாத பிரிவில் கைது செய்ய இப்புதிய சட்டத்திருத்தம் அதிகாரம் வழங்குகிறது.

மேலும் பழங்குடிகளின் மரபு வழி கிராம சபைகளை அதிகாரமற்றதாகவும், காட்டை நம்பி தலைமுறை தலைமுறையாக வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துகிற பிரிவுகளைக்கொண்டதாகவும் இச்சட்டம் அமைந்துள்ளது.

காடுகளைக்  பாதுகாப்பதற்கென்றே காப்புக் காடுகள், கிராமக் காடுகள், விலங்குகள்  சரணாலயங்கள் எனப் பல இருக்கின்றன. ஆனால் தற்போது உற்பத்திக் காடுகள் என்று புதிய பிரிவு ஒன்றை உருவாக்கி, அக்காடுகளை நீண்ட கால குத்தகைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுவதற்கான வசதியை, இப்புதிய சட்டம் ஏற்படுத்தி உள்ளது.  இதன் மூலம்  சுரங்கங்கள், சாலைகள், குவாரிகள் என எதை வேண்டுமானாலும் காடுகளை அழித்து உருவாக்கிக் கொள்ளும்.

மாநிலங்கள் வாரியாக உள்ள பழங்குடியினர் எண்ணிக்கை

ஜார்கண்ட் தேர்தலில் தோல்வியடைந்த  பாஜக

ஜார்கண்ட்டில்  2014 இல்  நடந்த தேர்தலில் 37 இடங்களை வென்ற பாஜக, 2019 இல் 25 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியதற்கு, இந்த காடு மற்றும் நில உரிமைகள் சட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது.  பாஜக தனது வழக்கமான ‘ இந்துத்துவா’ மற்றும் ராமர் கோவில் பரப்புரையில் இருந்த போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹெமந்த் சோரன், வன உரிமைகள் சட்டம் மற்றும்  நில சீர்திருத்தங்கள் குறித்து பரப்புரை செய்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) மற்றும் சமூக தாக்க மதிப்பீடு (SIA) ஆகியவற்றை கிராம சபைகளுடன் இணைப்பது பற்றியும் பரப்புரை செய்து வெற்றி பெற்றார்.

ஒன்றிய அரசின் திட்டங்களை எதிர்த்து பேசுபவர்களை, போராடுபவர்களை எல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி ஒடுக்கிவரும் பாஜக-விற்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் சொல்லித் தந்திருக்கின்றனர்.

மரங்களை வெட்டப்படுவதை எதிர்த்து போராட்டம்

பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகளையும், மலைகளையும் நம்பித்தான் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.  காடுகளை விட்டு அவர்களை வெளியேற்றினால், தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் அவர்கள் இழப்பார்கள். பெருநகரங்களிலிருந்து மண்ணின் பூர்வகுடி மக்கள் ‘ஆக்கிரமிப்பாளர்கள்‘ எனக் கருதப்பட்டு பல கிலோமீட்டர் தூரத்தில் குடி வைக்கப்படுவது, கடற்கரையில் இருக்கும் மீனவ கிராமங்கள், வரைபடங்களிலிருந்து நீக்கப்படுவது போன்ற ஒடுக்குமுறைகளின் தொடர்ச்சியாக, தற்போது காடுகள், மலைகளையும் தனியார் மயமாக்க இந்த புதிய வனச்சட்டம் மூலம் முனைப்பு காட்டுகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்கும் பாதிப்புகளே உலகம் முழுவதும் காடுகள் அழிய காரணமாக இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியில் இயங்கும் தனியார் அமைப்புகளும், பாஜக போன்ற கட்சிகளும் பழங்குடி மக்கள் மீது இந்தப் போரைத் தொடுத்துள்ளன.

நாட்டின் எந்தவொரு வளர்ச்சித் திட்டமும், மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாகக் கூடாது. ஸ்டர்லைட் , கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற நாசகார திட்டங்களால், தமிழ் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிர்ப்பலிகளும் என்றும் நம் நினைவை விட்டு நீங்காதவை. வெளிநாட்டில் வாழும் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக, சொந்த மக்களை பலி கொடுக்கும் பாசிச போக்கை மோடி அரசு கைவிட வேண்டும். மேலும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் இந்த புதிய வனச்சட்டத்தினால் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »