உலகில் பேரழிவை கொண்டு வரும் பருவநிலை மாற்றம்

உலகில் பேரழிவை கொண்டு வரும் பருவநிலை மாற்றம்

கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு பலியாக்கப்படும்  பூமி

அண்மையில் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக வடஅமெரிக்காவில் ஏற்பட்ட தீ, அட்லாண்டிக் பகுதி முழுவதும் புகை மூட்டத்தை ஏற்படுத்தியது. மத்திய தரைக்கடலில் நீடித்த வெப்ப அலைகளினால் மத்திய துருக்கி மற்றும் கிரீசில் பேரழிவு தரும் தீ பரவியது. சைபீரியாவில் ஆர்க்டிக் கடல் பனி குறைந்தது. பிறகு, மீண்டும் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், ஜெர்மனியில் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித்தீர்த்தது. அதே நேரத்தில் மத்திய சீன மாகாணமான ஹுனானின் சில பகுதிகள் ஆண்டு சராசரியைவிட அதிக மழைப் பொழிவை நான்கே நாட்களில் கண்டன.

பருவநிலை மாற்றத்தால் கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது உலகம் மிக வேகமாக வெப்பமாகி வருகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் வறட்சி, காட்டுத்தீ, மழை வெள்ளம் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பல்வேறு அழிவுகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் ஐ.நா.வின் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசுகளுக்கு இடையேயான குழுவின் (IPCC – Intergovernmental Panel on Climate Change) அறிக்கை கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று வெளியானது. 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் தொகுக்கப்பட்ட இந்த அறிக்கையை உலகின் 195 நாடுகள் அங்கீகரித்துள்ளன. தற்போதைய கார்பன் உமிழ்வு (Carbon Emission) விகிதம் நீடித்தால் நிலைமை இன்னும் வேகமாக மோசமடையும் என்றும்; மனித இனம் இன்று தேர்வு செய்யும் வழிமுறைகளைப் பொருத்தே இவ்வுலகின் எதிர்காலம் அமையும் என்றும் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.

 உலக வெப்பநிலை

 1850 முதல் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் உலகின் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. ஐபிசிசி அறிக்கையில் உலகின் சராசரி வெப்பநிலை இனி 2.1°C இல் இருந்து 3.5 °C வரை உயரும் என்று தெரிவித்துள்ளது. இது 2015 பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C – 2°C வரம்பை விட அதிகம். சர்வதேச நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வை தீவிரமாக கட்டுப்படுத்திடும் பட்சத்தில் கூட வரவிருக்கும் ஆண்டுகளில் உலக வெப்பநிலை 1.5°C வரம்பைவிட அதிகமாக உயரும் என்று அறிக்கை கூறுகிறது.

உருகும் பனிப்பாறை, உயரும் கடல் மட்டம்

1990களில் இருந்து ஆர்க்டிக் கடலில் உள்ள பனிப்பாறைகளின் உருகுதலுக்கு கார்பன் உமிழ்வு மிகப்பெரும் காரணியாய் உள்ளது. 1,000 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த பத்தாண்டுகளில் ஆர்க்டிக்கடல் பனி மிக வேகமாக உருகி உள்ளது. இந்த நூற்றாண்டில் இமயமலையில் பனி மூடிய பகுதிகள் மற்றும் பனிப் பாறைகளின் அளவுகள் குறையும் என்றும் திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலையில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கின்றது.

உலக வெப்பநிலை உயர்வு 1.5°Cல் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள கடல் மட்டம் அடுத்த சில ஆண்டுகளில் 2-3மீட்டர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11,000 ஆண்டுகளில் பார்த்திடாத வேகத்தில் கடல் வெப்பமடைந்துள்ளது.

1901-1971 இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில் சமீபத்திய கடல் மட்ட உயர்வு விகிதம் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடலோரப் பகுதிகள் இந்த நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்து கடல் மட்ட உயரும் என்றும், இது தாழ்வான பகுதிகளில் அடிக்கடி கடுமையான வெள்ளம் மற்றும் கடலோர அரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வந்த தீவிர கடல் மட்ட மாற்றங்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடும். இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கடற்கரை வாழ்விடங்கள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும்.

ஆசியாவின் நிலவரம்

  • 1850-1900 உடன் ஒப்பிடுகையில் குளிரின் தீவிரம் குறைந்து, வெப்பத்தின் தீவிரம் அதிகரிக்கும் போக்கு அடுத்து வரும் ஆண்டுகளில் தொடரும்.
  • கடல் வெப்ப அலைகள் தொடர்ந்து அதிகரிக்கும்.
  • ஆசியாவின் பெரும்பகுதிகளில் சராசரி மழைப்பொழிவு அதிகரிக்கும்.
  • ஆசியாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில், மேற்பரப்பு காற்றின் சராசரி வேகம் தொடர்ந்து குறையும்.
  • இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் பனிப்பாறைகள் மற்றும் பருவகால பனிகாலம் மேலும் குறையும்.
  • ஆசியாவின் உயர் மலைகளில் பனிப்பாறை உருகி மழைநீருடன் கலந்து ஓடுவது (Glacier runoff) இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அதிகரிக்கும். பின்னர் பனிப்பாறைகளின் இழப்பின் காரணமாக ஓட்டம் குறையலாம்.
  • ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டம் உலக சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளது. இந்த “சராசரி கடல் மட்டம்” தொடர்ந்து உயரும் .
  • இந்த நூற்றாண்டில் வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதமான வெப்ப அழுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும்.
  • கோடை மழை மற்றும் பருவ மழை மாறுபட்ட இடைவெளியுடன் பெய்யும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பருவகால மாற்றங்கள், கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

குறிப்பாக, இந்தியாவின் தெற்கு பகுதிகளில் மழை அதிகரிப்பு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு கடற்கரையில், மழைப்பொழிவு சுமார் 20 சதவீதம் அதிகரிக்கலாம். வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், இந்தியாவில் ஆண்டுதோறும் மழைப்பொழிவு சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும். சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இந்திய துறைமுக நகரங்களில் கடல் மட்டம் 50 செமீ உயர்ந்தால், கிட்டத்தட்ட 2.86 கோடி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவார்கள். எனவே வெப்ப அலைகள், புயல்கள், சீரற்ற பருவ மழை, குடிநீர் பற்றாக்குறை, வெள்ளம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று அனைத்து வகையான பேரிடர்களுக்கும் அரசு தகுந்த முன்னேற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இன்று நாம் அனுபவித்து வரும் வெப்பமயமாதலில் 25 சதவிகிதத்திற்கும் மேலான வெப்பத்தின் காரணம் மீத்தேன். இது, வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட 20 ஆண்டுகளில் கார்பன் டை-ஆக்சைடை விட 80 மடங்கு அதிக புவி வெப்பமடைதலை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிசிசி கடந்த 30 ஆண்டுகளாக புவி வெப்பமடைதலின் ஆபத்துகளை பற்றி எச்சரித்து வந்தாலும், மாற்று எரிசக்தி வழிமுறைகளுக்கும் கார்பன் உமிழ்வை நிறுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் இன்னும் எடுக்கவில்லை. இதன் விளைவாகவே பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் பல்லாயிரம் கோடி பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கையை “மனித இனத்திற்கான சிவப்பு குறியீடு” என்று ஐ.நா தலைவர் கூறி உள்ளார்.

கார்ப்பரேட்டுகளின் தீராத பசி

பூமி பந்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளை கார்போரேட்டுகளின் லாப பசிக்காக தொடர்ந்து அழிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகின் முதல் இடத்தில உள்ள பிரேசில் அமேசான் காடுகளை அழித்து மாட்டு தீவினத்திற்காக சோயா பயிர் செய்து வருகிறது. சுமார் 20% காடுகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. 25%க்கு மேல் அழிக்கப்பட்டால் அமேசான் காடுகளை மீட்டெடுப்பது கடினம் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். பிரேசிலின் அதிபர் பொல்சோனரோ தங்கள் நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக அமேசானை அழித்திட தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்று பேசி வருகிறார்.

தொழில் புரட்சியின் வெற்றி சின்னமாக கொண்டாடப்படும், உலகின் மிக பெரிய தொழில் துறையான, ஆட்டோமொபைல் துறை மட்டுமே புவி வெப்பமயமாவதற்கு பெரும் பங்களிக்கிறது. பன்னாட்டு ஆட்டோமொபைல் கார்போரேட்டுகள் தங்கள் எல்லையில்லா லாப குவியலுக்காக உலகம் முழுவதும் தனி நபர் போக்குவரத்து வழக்கத்தை தொடர்ந்து கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் வளர்த்து வருகின்றனர். ஒப்பீட்டளவில் குறைவான மாசு வெளியிடும் பொது போக்குவரத்து முறையை மக்களின் சிந்தனையில் இருந்து அகற்றிவிட்டனர். இதன்மூலம், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாகன விற்பனை செய்து லாபம் கொழுக்கின்றனர்.

வாகன உற்பத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படுவது இரும்பு மற்றும் அலுமினியம். உலகம் முழுவதும் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க இயற்கை நிலைகள் அழிக்கப்படுகின்றன. அடுத்தபடியாக, நெகிழி மற்றும் ரப்பர் பயன்படுத்தப்படுகிறது. இந்த துறைக்கான ரப்பர் உற்பத்திக்காக அழிக்கப்படும் காடுகள் ஏராளம். பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து கழியும் நெகிழிகளின் குவியல் ஒரு புறம் வளர்ந்து கொண்டே உள்ளது.

இதை தாண்டி, இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்காக அழிக்கப்படும் இயற்கை ஒருபுறமிருக்க அவை கக்கும் மாசு மறுபுறம். மலிவு கடன்கள் மூலம் நுகர்வோர்களிடம் விற்கப்படும் வாகனங்களை இயக்கிட சாலைகள் போதுவதில்லை. இதற்காக, சாலை விரிவாக்கம் செய்திட அழிக்கப்படும் மலை பாறைகள். இப்படியாக ஒரு துறையால் ஏற்படும் இயற்கை பாதிப்புகளே ஏராளம்.

மற்றொரு உதாரணமாக, கைபேசி உற்பத்தி துறையை கூறலாம். ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று கைப்பேசிகளை மாற்றும் நுகர்வு கலாச்சாரத்திற்கு கார்பொரேட் நிறுவனங்கள் மலிவான கடன்கள் மூலம் உருவாக்கி உள்ளன. கைபேசி உற்பத்தியில் கோபால்ட், சிங்கு, கேட்மியம், தாமிரம், லித்தியம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இதில் பல அரிய வகை கனிமங்கள். கோபால்ட் உற்பத்திக்காக ஆப்பிரிக்க காங்கோ நாட்டு காடுகள் அழிக்கப்படுகின்றன. கார்ப்பரேட்களால் உள்நாட்டு போர்களும் தூண்டப்படுகின்றன.

இப்படி இயற்கையை அழித்து உருவாக்கப்படும் ஒரு கைபேசியை அல்லது வாகனத்தை உடனுக்குடன் மாற்றக்கூடிய நுகர்வு கலாச்சாரத்தை தங்கள் தொடர் லாப வளர்ச்சிக்காக கார்ப்பரேட்கள் வளர்த்து வருகின்றன. கார்ப்பரேட்களின் லாப குவியலே பருவநிலை மாற்றத்திற்கான அடிப்படை காரணி. அந்த கார்ப்பரேட் முதலாளிகளின் லாப பசியை மையப்படுத்திடாமல் இயற்கை அழிவை பேசுவது ஏமாற்று வேலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »