“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் தோழமை கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரையை முன்னெடுப்பதாக மே பதினேழு இயக்கம் அறிவித்ததையடுத்து, தோழர் திருமுருகன் காந்தியின் பரப்புரை தோழமை கட்சியான மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் திருச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக களமிறங்கும் தோழர் துரை. வைகோவை ஆதரித்து ஏப்ரல் 5, 2024 அன்று கந்தர்வக் கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்தது.
இந்தப் பகுதிகளில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:
“பாராளுமன்றத்தில் தமிழின உரிமைக்காக குரல் கொடுத்த ஐயா. வைகோ அவர்களின் அரசியல் குரலாக, இனி பாராளுமன்றத்தில் ஒலிக்க இருப்பவர் தோழர் துரை வைகோ அவர்கள். இந்த பத்தாண்டுகளில் மோடியின் சோதனைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் வேதனைகளாக மாறிவிட்டன. வரலாறு காணாத அளவிற்கு அரிசி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணம் பாஜக. இட்லிக்கும் வரி, சட்னிக்கு வரி, அதைப் பரிமாறும் இலைக்கும் வரி என்று வரிகளால் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார் மோடி. எனவே இந்தத் தேர்தல் யார் இந்தியாவின் பிரதமர் ஆகக்கூடாது என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்க வேண்டும்.
பாஜக தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறது. இதுவரை அக்கட்சி தமிழ்நாட்டிற்கு செய்த ஏதாவது ஒரு நல்ல விடயம் உண்டா? அல்லது தமிழ்நாட்டிற்கு நல்லது செய்த பாஜக தலைவர் என்ற யாரையும் நாம் சுட்டிக்காட்ட முடியுமா? அவ்வாறு யாரும் இல்லாததால் தான், கச்சத்தீவு பிரச்சனையைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். கச்சத்தீவுப் போராட்டம் 50 ஆண்டுகளாக தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம். பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக கட்சி கச்சத்தீவிற்காக இதுவரை என்ன செய்திருக்கிறது? இலங்கைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் தூக்கி கொடுத்தாரே மோடி, அதானிக்காக திருகோணமலையில் சூரிய ஒளித்திட்டம் வாங்கிக் கொடுத்தாரே மோடி, அப்பொழுதெல்லாம் கச்சத்தீவு குறித்து ஏன் பேசவில்லை?
நாம் சாதிப் பார்த்து வாக்கு செலுத்தினால் இத்தகைய தமிழின விரோத பாஜக கட்சியை தூக்கி எறிய முடியாது. ஏனெனில் இங்கு அதிமுகவும், பாஜகவும் இணைந்து நடத்திய காட்டாட்சியின் போது, என் மீது 47 வழக்குகள் பதியப்பட்டன. காவிரி உரிமை, ஸ்டெர்லைட் பிரச்சனை போன்ற தமிழின விடயங்களுக்காக பேசியதற்காக வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் சிறையில் எனக்குக் கொடுத்த உணவில் என்ன கலந்தார்களோ தெரியவில்லை, என் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதே போன்று ஜெயலலிதா அம்மையாருக்கும் பெங்களூரு சிறையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை வேண்டும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கூறினோம்.
அதிமுகவை மூன்றாக உடைத்து, அக்கட்சியின் சின்னத்தைப் பறித்தவர் மோடி. இதை டி.டி.வி. தினகரன் அவர்கள் மறந்து விட்டார்களா? முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை எந்த இடத்தில் நிற்க வேண்டும், எந்த சின்னத்தில் நிற்க வேண்டுமென்று நாட்டாமை செய்கிறது பாஜக. இவ்வாறு ஒரு மாநிலக் கட்சி உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்த முடியுமா?
பாஜக போன்ற வடநாட்டு கட்சி இங்கு தமிழ்நாட்டில் மாநில கட்சிகளை ஒடுக்குகிறது. வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த மாவட்டங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்திய நிறுவனம் என்எல்சி. இது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இந்த விளைநிலங்களில் புல்டோசரை இறக்கினார்கள்.
இதுவரை 700 மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது இலங்கை அரசு. இதில் கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்திய பின்பு, தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்வதை நிறுத்தியது இலங்கை அரசு. இதற்காக பிணையில் வர முடியாத வழக்குப்பதிவு செய்தது பாஜக. இதற்கு இரு நாட்கள் கழித்து, அதானிக்கு சூரியஒளி மின் திட்டத்தைப் பெற்று தருவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கைக்கு அனுப்பினார் மோடி. இத்தகைய தமிழின விரோத செயல்களுக்காகவே மோடி அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைக் குரலான ஐயா வைகோ அவர்கள், சிவகாசியில் போட்டியிடாமல் போனதற்கு பின்பு, சிவகாசி நிலைமை என்ன? ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்பட்ட சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்திருந்தன. இங்கு சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்தார் மோடி.
‘சிவகாசி தீக்குச்சி’ என்று அழைக்கப்படும் ஐயா. வைகோ அவர்களிடமிருந்து ஒரு தீப்பெட்டியாக கொளுந்து விட்டு தோழர் துரை. வைகோ அவர்கள் போட்டியிடுகிறார். ’ஸ்டெர்லைட் படுகொலை’ குறித்து ஐநாவில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்து, என்னை தனிமை சிறையில் அடைத்தது பாஜக, எடப்பாடி அரசு. சிறையில் என் குடும்பத்தினரை சந்திக்க விடாமல் தனிமை சிறையில் அடைத்தது. சிறை உணவில் என்ன கலந்தார்களோ? அதை உட்கொண்டதால் மயங்கி விழுந்தேன். சக கைதி பார்த்து கூறியதும், அவசர அவசரமாக நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்தினார்கள். அப்பொழுது நான்கு மணி நேரத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் காத்திருந்து என் உடல்நிலை பற்றி ஊடகத்திற்கு சொன்னவர் வைகோ அவர்கள். இதன்பிறகுதான் வேலூர் பொது மருத்துவமனையின் ஐசியூவில் என்னை சேர்த்தார்கள்.
காவிரி, ஸ்டெர்லைட் போன்ற தமிழின உரிமை விவகாரங்களில் வேடிக்கை பார்த்தவர் டி.டி.வி. தினகரன் அவர்கள். இப்போது பாஜகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளார்.
வெள்ளைக்காரன் விதித்த வரியை போல, மோடி அரசு பிறந்தால் வரி, இறந்தால் வரி என்று வரி விதித்து கொண்டே இருக்கிறது மோடி அரசு. தமிழ்நாட்டின் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் நிவாரணத் தொகையாக நாம் ஒன்றரை லட்சம் கோடி கேட்டால், இதுவரை 5600 கோடி மட்டுமே கொடுத்திருக்கிறது. இவ்வாறு நிவாரணத் தொகையை தடுத்து வைத்ததும், சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியதும், பெட்ரோல் விலை உயர்த்தியதும்தான் இன்று அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமாக தமிழ்நாட்டில் நம்மை வருத்திக் கொண்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்தும் மோடி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.
மேலும் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் ஆர்ச், தேரடி சாலை, அம்மா உணவகம், ஐந்து விளக்கு சந்திப்பு, சைதை மேற்கு பேருந்து நிலையம் மற்றும் கங்கையம்மன் கோவில் தேரு என ஆறு பகுதிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்களால் பாஜவுக்கு எதிரான பரப்புரை மேற்க்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 9884864010 எண்ணை அணுகவும்.