“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மே 17 இயக்கம் தொடங்கிய பரப்புரையில் 14/4/2024 அன்று, திருச்சியில் மூன்றாம் கட்டமாக பரப்புரை நடந்தது. திருச்சி வேட்பாளராக நிற்கும் மதிமுக-வின் தோழர். துரை வைகோ அவர்களை ஆதரித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் திருச்சி மையத் தொகுதி, ஜீயபுரம், முத்தரச நல்லூர் ஆகிய பகுதிகளில் உரையாற்றினார். மே 17 இயக்கத் தோழர்கள் துண்டறிக்கைகளையும், பாஜக எதிர்ப்பு புத்தகத்தையும் விநியோகித்தனர்.
அம்பேத்கர் பிறந்தநாளான அன்று திருச்சி ஜீயபுரம் பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு தோழர். திருமுருகன் காந்தியும், மே 17 இயக்கத் தோழர்களும் முழக்கங்களுடன் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
இந்தப் பகுதிகளில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் :
மோடி ஆட்சியின் பத்தாண்டுகளே போதும். இனியும் தேர்ந்தெடுத்தால் வாழ்வாதாரமே பறிபோய்விடும். ஏனென்றால் காவிரி உரிமைக்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என எடப்பாடி ஆட்சியில் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், ஒருபுறம் மோடியின் ஆட்சி காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து வாங்கித் தருவதில்லை என்று உறுதியாக இருந்தது. மறுபுறம் எடப்பாடியார் தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக காவிரி உரிமையை அடகு வைத்தது. போராடியவர்களை எல்லாம் அடக்குமுறை ஏவிக்கொண்டிருந்தார் எடப்பாடி.
காவிரி ஆற்றங்கரையில் உள்ள இந்த முத்தரச நல்லூரில் இருந்து சொல்கின்றேன், பாஜகவோ அல்லது பாஜகவுக்கு ஆதரவாக இருக்கின்ற எடப்பாடியோ மீண்டும் வந்தால் இந்த காவிரியில் தண்ணீர் வராது. இதை சொல்லும் முழு தகுதியும் எனக்கு இருக்கிறது.
எடப்பாடி அரசே, தமிழர் உரிமையை பறிக்காதே என்று மே 17 இயக்கம் போராடிக் கொண்டிருந்த போது, என் மீது இரண்டு தேச துரோக வழக்கை போட்டார் எடப்பாடி. காவிரி உரிமைக்காக போராடியதற்காக நான் தேசத் துரோகியானேன். நான் காவிரிக்கரையைச் சார்ந்தவன் அல்ல, கோவை நகரைச் சார்ந்தவன், ‘காவிரி என் தமிழனின் உரிமை’ என்பதற்காக போராடினோம். அதற்காக மே 17 இயக்கம் மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டது, எடப்பாடி மோடி அரசுக்கு எதிராகப் போராடியது. 2017-ல் நான்கு மாதம் என்னை சிறையில் அடைத்தார்கள். அதற்குப் பிறகு 2018-ல் மறுபடியும் வேலூர் சிறையில் அடைத்தார்கள். இதற்கெல்லாம் காரணம் தமிழர் உரிமைக்காக நான் போராடியதே. ஒன்றல்ல, இரண்டல்ல 47 வழக்குகளை என் மீது ஏவியது எடப்பாடி அரசு. இன்று தமிழன் உரிமைக்காக டெல்லியில் பேசுவோம் என்று எடப்பாடியார் சொல்கிறார். அவரை எப்படி மானத் தமிழர்கள் நம்பி ஆதரிக்க முடியும்?
என் அன்பான மனைவியை, மகளை, தந்தையை சந்திக்கக் கூடாது என்று கொடுஞ்சிறையில் என்னை அடைத்த போது எனக்காக பேசியவரே வைகோ அவர்கள். குற்றுயிரும், கொலையுயிருமாக நான் நீதிமன்றத்திற்கு வந்தபோது நீதிமன்றத்தில் காத்திருந்து என்னை சந்தித்து, எனக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, என்னை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் முன்வந்து நின்றவர் ஐயா. வைகோ அவர்கள். தன்னலம் பாராமல் வீதியில் வந்து போராடக்கூடிய இப்படிப்பட்ட இளைஞர்களை ஆதரிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் வைகோ. தமிழர் உரிமைகளை அடகு வைக்காமல் போராடக் கூடிய இளைஞர்களையே வைகோ அவர்கள் தேர்ந்தெடுப்பார் என்பதற்கேற்ப, தகுதி வாய்ந்த தனது மகனான துரை. வைகோவை இப்பகுதி வேட்பாளராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
மோடி அரசு டெல்டா விவசாயிகளை வஞ்சிப்பதற்காக கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை கொரோனா காலத்தில் நாமெல்லாம் முடங்கி இருந்தபோது ஆதரித்தவர் எடப்பாடி. 2017-ல் ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடிய தமிழர்கள் மீது அடக்குமுறை ஏவிய, 2018-ல் ஸ்டெர்லைட்டுக்காக போராடிய தமிழர்களை சுட்டுக்கொன்ற எடப்பாடி மோடி கூட்டணியை பார்த்தோம். பாஜக கூட்டணியும் அதனுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவும் வெற்றி பெறக் கூடாது. இப்படிப்பட்ட எடப்பாடியாரின் வேட்பாளரை எந்த நிலையிலும் ஆதரித்து விடாதீர்கள். அதிமுக-வை மூன்றாக உடைத்த காரியத்தை செய்தவர் மோடி. அப்போது பாஜகவினால் சித்திரவதைக்கு ஆளானவர் டிடிவி தினகரன் அவர்கள். அதே டிடிவி தினகரன் இன்று பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கிறார். தமிழர் உரிமையை அடகு வைத்த எடப்பாடியின் வேட்பாளரும், சுயநலத்திற்காக பாஜக கூட்டணி இணைந்த டிடிவி தினகரனும் களம் காண்கின்றனர். இரு பெரும் அடிமைகளுக்கு எதிராக ஒரு பெரும் வீரனாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துரை. வைகோ அவர்கள் போட்டியிடுகிறார். நமது உரிமைக்காக டெல்லியில் போராடக்கூடிய பெருவீரனே தேவை.
துரை. வைகோ அவர்கள் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தீப்பெட்டிக்கு கூட 12% வரியை போட்டது மோடி அரசு. தீப்பெட்டி என்பது குடிசைத் தொழில். அந்த குடிசைத் தொழிலில் கூட வரியை போட்ட மோடி அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அதையே கையிலெடுத்து தீப்பெட்டி சின்னத்துடன் தோழர்கள் வருகிறார்கள். இந்த தீப்பெட்டி சின்னத்தை ஆதரித்து தாமரையுடன் கூட்டணி வைத்திருக்கும் குக்கரையும், தாமரையுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் இரட்டை இலையையும் தோற்கடியுங்கள் என உங்களை கேட்டுக் கொள்கிறேன்” என திருமுருகன் காந்தி உரையாற்றினார்.
மேலும் திருச்சியில் களமாவூர், கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், சித்தன்னவாசல் போன்ற பகுதிகளில் தோழர்களின் துண்டறிக்கை பரப்புரையும் நடந்தது.
சென்னை பரப்புரை:
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, மே 17 இயக்கத் தோழர்கள் கோயம்பேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முழக்கங்களுடன் பேரணியாக சென்று, மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி முதல் நாள் தவறாமல் தோழர்களின் துண்டறிக்கைப் பரப்புரை தென்சென்னையில் தொடர்கிறது. அதன்படி, 14/4/2024 அன்று காலையில் கோயம்பேடு பகுதியைச் சுற்றிலும் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டது. அன்று மாலை வில்லிவாக்கம் பகுதி சுற்றிலும் பரப்புரை நடத்தப்பட்டது.
தொடர்ந்து மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.
தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.