வயநாட்டின் பேரிடரிலும் குன்றாத தாய்மை

இந்த உலகில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் கூட கொடையாக கிடைக்கக்கூடும். ஆனால் அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைப்பது அரிது. ஏனெனில் குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே தனது இரத்தத்தை பாலாக மாற்றும் உன்னதம் இருக்கிறது. இன்று வயநாட்டில் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளுக்கு, தாய்ப்பாலோடு மனித நேயத்தையும் ஊட்டுகின்றார்கள் சில பெண்கள்

கேரளாவின் வயநாடு பேரழிவு என்றும்  மறக்க முடியாத சோகத்தை கொடுத்துச் சென்றுள்ளது. வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் என அனைத்துமே கண்ணிமைக்கும் நொடிக்குள் மண்ணில் புதைந்து போயுள்ளன. இன்றுவரை மண்ணில் புதைந்து போனவர்கள் எண்ணிக்கையை கூட அறியமுடியவில்லை. அவர்கள் நிலை என்ன? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? என்பதே நம் கண்முன்னே நிற்கும் துயரம் மிக்க கேள்வியாக இருக்கிறது.

பாறைகள் நடுவே புதைந்து கிடக்கும் மனித உடல்களை பிடுங்கி எடுப்பதை பார்க்க மனம் பதைபதைக்கிறது. உயிருடன் இருப்பவர்கள் சமிக்ஞை செய்தால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற மீட்பு குழுவினர் அறிவிப்பை கேட்கும் போது, ‘அவ்வளவுதானா மனிதர் வாழ்க்கை‘ என மனது வேதனையில் தவிக்கிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறார்கள், வளர்ப்புப் பிராணிகள் என குடும்பம் குடும்பமாக பலி வாங்கியுள்ளது இயற்கை. இதில் பெற்றோரை இழந்த குழந்தைகளும், உறவுகளை இழந்த குடும்பத்தினரும் சிந்தும் கண்ணீரும் கதறலும் நெஞ்சை பிசைகிறது.

வயநாடு பேரழிவில் மிகப்பெரிய துயரம் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் நிலைமை. தனது பசியைக்கூட சொல்ல தெரியாமல் அழுகையின் மூலமாக அனைவரையும் கரையச்செய்யும் குழந்தைகளை ஆற்றுப்படுத்த உடனடி தேவை அரவணைப்புடன் கொடுக்கும் தாய்ப்பால். பெற்ற தாயை பறி கொடுத்த இளம் தளிர்களின் அத்தியாவசிய தேவை தங்கத்திரவம் எனும் இந்த உன்னத தாய்பாலே. 

பிறந்த குழந்தைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.  தாய்ப்பாலில் தான் குழந்தை வளர்ச்சிக்கு இன்றியமையாத அனைத்து உயிர்ச்சத்துக்களும் இருக்கின்றன என மருத்துவம் சொல்கிறது. தாய்ப்பால்தான் குழந்தையின் அறிவுகூர்மை, மூளை செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றிக்கு மூலகாரணம்.  குழந்தையின் அழுகை, சிரிப்பு, தொடு உணர்வு இவையனைத்தும் தாய்ப்பால் புகட்டும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படும் உணர்வு பரிமாற்றம் என்றே கூறலாம். 

தாய்ப்பால்தான் குழந்தைகளின் உணவும், மருந்தும் ஆகும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், நோயை அழிப்பதும், நோய் வராமல் கவசமாக பாதுகாப்பதும் தாய்ப்பால்தான். குழந்தை பிறந்தவுடன் கொடுக்கும் தாய்ப்பால்தான் அந்த குழந்தையின் உயிர்வாழும் காலம்வரை ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதனால்தான் ”தாய்மையை கொண்டாடும் விதமாக ஆகஸ்டு முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக” அனுசரித்து வருகின்றனர்.

இவ்வளவு உன்னத தாய்பாலை வயநாட்டில் தாயை இழந்த குழந்தைகளுக்குக்  கொடையாகக் கொடுத்து காப்பாற்ற சில தாய்மார்கள் முன்வந்துள்ளனர். “வயநாடு நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் இருந்தால் எனது மனைவி தாய்ப்பால் கொடுக்கவும், பராமரிக்கவும் தயாராக இருப்பதாகவும், தேவையிருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” எனவும் தனது கைபேசி எண்ணுடன் தகவல் கொடுத்து இருக்கிறார் திரு.சஜின். இடுக்கியைச் சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், “தான் டிரைவராக பணிபுரிவதால் என்னால் பணம் மற்றும் பொருளுதவி ஏதும் செய்ய இயலாது எனவும், தாயை இழந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனது மனைவி பாவனா தயாராக இருப்பதாகவும், தேவையிருப்பின் அழையுங்கள்” எனவும் பதிவு செய்தது அனைவரின் நெஞ்சத்திலும் ஈரம் கசிய வைத்தது.  

மற்றொரு இஸ்லாமிய தம்பதியரான ஷானிப்பா, அஸீஸ் என்பவர்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்க முன்வந்தனர். மற்றொரு உருக்கமான நிகழ்வாக வயநாட்டில் உள்ள தம்பதியரான சஜித் மற்றும் அவரது மனைவி நபீசா தம்பதியர், நிலச்சரிவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வந்துள்ளனர். (இவர்களுக்கு ஏற்கெனவே குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

மனிதநேயத்தை வெளிப்படுத்துவதற்கு மதம் ஒரு தடையல்ல என்பதையே வயநாட்டில் இசுலாமிய தாய்மார்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஏழ்மை நிலையில் இருந்தாலும் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தத் தாய்மார்கள் உதவ முன்வந்துள்ளது தாயுள்ளத்தின் ஈரத்தை காட்டுகிறது. மேலும் “நம்மால் இந்த கடின நேரத்தில் எதையாவது செய்ய வேண்டும்” என்ற எளிய மனிதர்களின் அக்கறையும் பாராட்டுதலுக்குரியது.   உயிர்த்திரவமான விலைமதிப்பற்ற தாய்ப்பாலை, கொடுக்க முன்வந்த இவர்கள் அனைவரும் மானுட நேசிப்பில் நிறைந்த கொடையாளிகளே.

வயநாடு பேரிடரில் ஒரு தாய் தன் மார்பிற்கும், கையிடுக்கிற்கும் இடையே விழுந்து இடிபாடுகளை தன் மீது தாங்கி குழந்தையை அணைத்த வண்ணம்   இறந்திருக்கிறார், அந்த கையணைப்பிலேயே அக்குழந்தையும் இறந்து இருக்கிறது. உயிர் போகும் கடைசி நொடிவரை அந்த தாய் தன் குழந்தையை கையணைப்பிலேயே வைத்திருக்கிறார். இந்த அளவிற்கு ஒரு தாய்தான் தனது குழந்தையை நேசிக்கமுடியும். ஆனால் தாய்ப்பால் பருகும் குழந்தைகள், தனக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அனைவரையுமே அவர்களின் தாயாகவே நினைக்கும். அதனால்தான் கண்களை மூடிக்கொடண்டே பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் பருகும்.

வயநாட்டில் பச்சிளம் குழந்தைகள் இயற்கை பேரிடரால் தாயின்றி, தாய்மடியின் வாசம் தேடி, தாய்ப்பாலுக்கு அழுகின்றன. ஆனால் பாலஸ்தீனத்தில் செயற்கையான போரினால் தாய்க்கு உணவின்றி, நீரின்றி, அதனால் சத்துக்களின்றி, தாய்பால் சுரக்காத மார்பில் மன்றாடும் தன் குழந்தையின் பசியை போக்க வழியில்லாமல் தவிக்கிறாள் பாலஸ்தீனத்தின் தாய்.

2009 தமிழீழ இனப்படுகொலையின் போது சிங்கள பௌத்த பேரிவாதத்தின் கோரப்பிடியில் மடிந்த மக்களின் பிணக்குவியலின் இடையே தாய் இறந்ததை அறியாத பிஞ்சு குழந்தை ரத்தம் தோய்ந்த தன் தாயின் மார்பில் தாய்ப்பாலை தேடிய கொடுமையை என்றும் மறக்கவே இயலாது. அன்றைய கால கட்டத்தில் சமூகவலைதளங்கள் இருந்திருந்தால் பச்சிளம் குழந்தையின் பசியை போக்க சிங்கள பெண்கள் கூட, எம் தமிழீழ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்திருப்பார்களோ? ஈழத்தில் எத்தனை குழந்தைகள் இப்படி தாயின் மடிதேடி மடிந்ததோ! என்று கலங்க வைக்கும் இருண்ட காலத்தை எப்படி மறப்போம்?

இயற்கை பேரிடர், செயற்கையான போர், இனவழிப்பு போர் என எதுவாகினும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அதில் பெருமளவு பெண்களும் குழந்தைகளும் அடங்கும். இதில் பச்சிளம் குழந்தைகளை மீட்பதும், பாராமரிப்பதும் மிகப்பெரிய சவால். இந்த கொடுமையான நேரத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட முன்வரும் இந்தத் தாய்களின் மானுட அன்பிற்கு ஈடு இணையேது? எத்தனை துயர்கள் வந்தாலும் அத்தனையும் இவர்களைப் போன்று தாயுள்ளம் கொண்டவர்களால் தவிடுபொடியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தக் கடுமையான நிலச்சரிவு பேரிடர் ஏற்பட என்ன காரணம்? இயற்கையை செயற்கையாக மாற்றி பணம் கொழிக்க நினைக்கும் முதலாளிகளையும், அதற்குத் துணைபோன அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரையும் விசாரணை செய்து தண்டிக்கவேண்டும். மேலும் இவ்வளவு மோசமான நிலச்சரிவு ஏற்படும் என முன்னெச்சரிக்கை அறிவிக்க தவறியது ஏன்? யார் தவறு? என்பதையும் ஆராயவேண்டும். மீண்டும் இதுபோன்ற பேரிடர் வராமல் மக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »