டெலிகிராம் நிறுவனர் கைது – மேற்குலகின் சூழ்ச்சியா?

பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய அரசை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்த டெலிகிராம் செயலியின் தலைமை நிறுவனர் பாவெல் துரோவ், பிரான்ஸ் காவல் துறையினால் சனிக்கிழமை ஆகஸ்ட் 24, 2024ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு அதிகளவில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாகவும், அதை தடையின்றி அனுமதித்ததால் இந்த கைது என்றும் பிரான்சினால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவம் செய்யும் படுகொலைகளை ஆயிரக்கணக்கான காணொளிகளை அங்கிருக்கும் செய்தியாளர்கள் மூலம் உடனுக்குடன் பெறப்பட்டு,  இந்த செயலின் மூலமாக பரப்பப்பட்டு வந்தது. இந்த தகவல்கள் நேரடியாக களத்தில் இருந்து பெறப்பட்டதால் பலரும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஆதாரமாகப் பரப்பினர். இதனால்தான் நூற்றுக்கணக்கான செய்தியாளர்களை இஸ்ரேல் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில்  பிறந்த பாவெல் துரோவ், ரஷ்யாவை விட்டு வெளியேறிய பின்னர் டெலிக்ராம் செயலியை நிறுவினார். ரசியாவில் இருந்தபோது VKontakte என்ற செயலியை அவர் நடத்தி கொண்டு இருந்தார். அங்கு உக்ரைனுக்கு உள்ளே ரசியாவிற்கு எதிரான தகவல் பரிமாற்றங்களை கேட்டதால், ரஷ்யாவை விட்டு வெளியேறி விட்டார். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பிரான்சில் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளார். தனியார் ஜெட் விமானத்தில் அஜர்பைஜானில் இருந்து பிரான்சில் உள்ள பாரிசின் Le Bourget விமான நிலையத்தை வந்தடைந்த போது பாவெல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டெலிகிராம் செயலி உலக அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முன்னணி சமூக வலைதள செயலி ஆகும். வாட்ஸ்அப்-செயலிக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக டெலிகிராம் இருக்கிறது. இது தணிக்கையாளர்கள் எவரும் இல்லாததால் இந்த செயலியில் குற்றச் செயல்கள் தடையின்றி தொடர்வதாக பிரான்சினால் குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் பிரான்சின் OFMIN என்னும் நிறுவனம், Telegram செயலியில், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், பண மோசடி, போதைப் பொருள்கள் கடத்தல், சைபர் கிரைம், சிறார்களுக்கு எதிரான வன்முறை போன்ற குற்றங்கள் பரப்பப்படுவதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறை செய்திகளில் முதல் 9 இடங்களில் முகநூல், ஸ்நாப் சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், டிக் டாக், டிவிட்டர் போன்ற செயலிகளே இடம் பிடித்துள்ளன. அதில் டெலிகிராம் செயலி இல்லை. ஆனால் டெலிகிராம் செயலியை குற்றம் சாட்டி, அதன் நிறுவனரை கைது செய்திருக்கிறார்கள். 

மற்றவை எல்லாம் மேற்குலக அரசுகளுக்கு ஆதரவான செயலிகள் என்றும், அவற்றில் இந்த குற்றச்சாட்டுகள் அதிகம் இருந்தாலும், டெலிகிராம் செயலி ஏன் குறிவைக்கப்பட்டது என்பதற்கு, மற்றைய செயலிகள் மறைத்த செய்திகளை, இது வெளிப்படுத்தியதே காரணமாக இருக்கிறது என்பதை X தள வாசிகள் அழுத்தி பதிவு செய்கிறார்கள். உண்மையில் மேற்குலக செய்தி நிறுவனங்களால் மறைக்கப்பட்ட இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் செய்திகள் டெலிகிராம் செயலிகள் மூலமே அறிந்து கொண்டதாக சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து டெலிகிராம் செயலியின் பொறுப்பாளர்கள், தங்களது அதிகாரப் பூர்வ அறிக்கையாக, ‘டெலிகிராம் தலைமை நிர்வாகியான பாவெல் துரோவ், அடிக்கடி ஐரோப்பாவிற்கு பயணம் செல்பவர். அதனால் அவரிடம் மறைக்கும் எதுவும் இல்லை. ஒரு பொது தளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு, அதன் உரிமையாளரே பொறுப்பு என்பது மிகவும் அபத்தமானது’ என்று கூறுகிறது.   

2022 இல் ரசியா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து, போரைச் சுற்றியுள்ள அரசியல் தொடர்பாக டெலிகிராமில் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறுகையில், டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலி தனது அதிகாரிகளுக்கு தகவல் தொடர்புக்கு மிக முக்கியமான வழிவகுத்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரசியா இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கைது செய்வதற்கு முன் அவர் பிரான்சில் அளித்த நேர்காணல் ஒன்றில்,  அமெரிக்காவிற்கு செல்லும் பொழுதெல்லாம் அவர் கண்காணிக்கப்பட்டதாக கூறினார்.  ஒரு முறை அவர் தங்கி இருந்த வீட்டிற்கு கூட, அமெரிக்காவின் உளவுத்துறையான FBI-ன் ஏஜென்ட் வந்ததாக குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி அவரது பொறியாளரிடம் என்ன மாதிரியான, ‘திறந்த மூல மென்பொருள் (Open source software) டெலிக்ராமில் உபயோகிக்கப்படுகிறது என்றும் கேட்டுள்ளனர். அவர்கள் சில மென்பொருளை பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அவர்கள் தங்கள் செயலியில் இணைத்துக்கொண்டால், அது நாளை அவர்கள் தங்களது செயலியை உளவுபார்க்க ஏதுவாக அமைந்து விடும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாவெல் துரோவின் கைதைத் தொடர்ந்து ரம்பிள் (RUMBLE ) என்னும் செயலியின் தலைமை நிர்வாகி கிறிஸ் பாவ்லோஸ்கியும் (Chris Pavlovski) தான் பிரான்சால் மிரட்டப்பட்டதாக கூறுகிறார். இந்த ரம்பிள் செயலி யு டியுப் செயலிக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவில் பிரபலமாகவில்லை. “ரம்பிள், உலகளாவிய கருத்துச் சுதந்திரத்திற்காகவும், மனித உரிமைக்காகவும் போராடுவதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தும். நாங்கள் தற்போது பிரான்ஸ் நீதிமன்றங்களில் போராடி வருகிறோம், பாவெல் துரோவிற்கு உடனடியாக விடுதலை கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். துரோவ் மற்றும் டெலிகிராம் மீதான விசாரணை தொடர்வதால், இந்த கைதானது, பேச்சு சுதந்திரம், தனியுரிமை மற்றும் உலகளாவிய அரசியலில் தொழில்நுட்ப தளங்களின் பங்கு பற்றிய ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது” என்று கூறுகிறார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற மேற்குலகம் கட்டமைக்கும் செய்திகளுக்கு மாறான உண்மையான செய்திகள் பரப்பப்படும் தளங்களை கட்டுப்படுத்த, மேற்குலகம் அனைத்து வகையிலும் நெருக்கடி கொடுக்கும் என்பதற்கு ஜூலியன் அசாஞ்சே கைது சான்றாக இருந்தது. இன்று பாவெல் துரோவ் கைது சான்றாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »