ஒரு நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் அனைத்துத்தர மக்களுக்கும் சம உரிமை மற்றும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், அதற்கேற்ற வகையில் திட்டங்களைத் வகுக்கவும், சட்டங்கள் இயற்றவும் சாதிவாரியான கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வழிவகுக்கும். ஆனால் பாஜக மோடி அரசு 2021 ஆண்டு கொரானா தொற்றுநோய் காரணம் காட்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. இதனை பல மாநில முதல்வர்கள் சட்டமன்றத்திலும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்திலும் கோரிக்கை வைக்கின்றனர்.
இது எதையும் ஒன்றிய அரசு கண்டு கொள்ளாமையால், தனது மாநில மக்கள் நலனுக்காக பீகார், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. மாநில அரசு கணக்கெடுப்பு எடுத்ததை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. தமிழ்நாடு மற்றும் மகாராட்டிரம் போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் என கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் அரசியல்/எதிர்க் கட்சிகள் வலியுறுத்துகின்றன?
முதலில் ’இட ஒதுக்கீடு அளிக்கச் சரியான தரவுகள் தேவை’. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதால் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார பின்னணிகள் குறித்து தெரியவரும். அடுத்ததாக, பல்வேறு சாதி குழுக்கள் பல கோரிக்கைகளை முன்வைக்கும் போது அதற்கான தரவுகள் இருந்தால் மட்டுமே அவர்களின் கோரிக்கைகள் சரிசெய்ய இயலும். அதற்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும். இதற்கு உதாரணம் தமிழ்நாட்டில் வன்னியர் சமூக மக்கள் இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கைகளை வைக்கின்றனர். அதேப்போல் மகாராட்டிராவில் மாரத்தா சமூகத்தினர் நீண்ட காலமாக போராட்டங்கள் செய்து அதை நிறைவேற்றாதக் காரணத்தினால் சில வன்முறை சம்பங்களும் நடந்தது. கர்நாடகாவில் லிங்காயத் மற்றும் ஒக்காலி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதனால் இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், பல எதிர்ப்புகள் தடைகள் எழுகின்றன.
சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?
பிரித்தானிய காலத்தில் 1865ஆம் ஆண்டு வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொண்டது, பிறகு 1931ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பிறகு பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆக அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக 2011ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஆனால், சாதிவாரி முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான அரசும் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடவில்லை. இந்தக் கணக்கெடுப்பு பல குறைபாடுகள் கொண்டது என்றும், நம்பகத்தன்மையற்றது என்றும், இட ஒதுக்கீடு மற்றும் கொள்கையின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாதது என்றும் பாஜக அரசு கூறியது.
இவ்வளவு விளக்கம்/குறைகளை பேசும் பாஜக அரசு, அதன் பின் கணக்கெடுப்பு இன்று வரை எடுக்கவில்லை. ஆனால் உயர்சாதி வகுப்பினருக்கு மட்டும் எந்த கோரிக்கையும் போராட்டமும் எழாமல், எவ்வித கணக்கெடுப்பு இல்லாமல் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் (ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக்கூடாது, 1,000 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்பு வைத்திருக்கக் கூடாது.) என கருதி 10% இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இங்கே தான் பாஜக அரசின் உண்மையான உயர்சாதிப்பற்று அப்பட்டமாக தெரிகிறது.
மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் என்ன சிக்கல்?
“அரசமைப்பு சட்டம் 246இன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில்” உள்ளது. அதில் சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், அது மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் மூலமே சட்டப்படியாக மேற்கொள்ள முடியும். மேலும் அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ளும் கணக்கெடுப்பு மூலம் புள்ளிவிவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றினால் நீதிமன்றங்களால் அது ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கு உதாரணம் ’பீகார் அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி. மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது’ குறிப்பிடத்தக்கது.
தனித்தனி நபர்களாக கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், ஒன்றிய அரசுக்கு மட்டுமேயான அதிகாரங்களை வழங்கும் பட்டியல் 1-இல் உள்ளது. மாநிலங்களும் கணக்கெடுப்பு நடத்தும் வகையில் அதிகாரம் அளிக்க, அதனை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசன சட்டத்தின் 105 வது திருத்தத்தின்படி பிரிவு 342– ஏ–3, மாநில அரசுகள் சாதிப் பட்டியல் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசிடமே உள்ளது. தற்போதே மாநில அரசுகளின் நிர்வாக உதவியுடன் தான் பத்து ஆண்டுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு ஆட்கள், கட்டமைப்பு இல்லை. எனவே மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவது நியாயமே என்ற கருத்தை திமுக பாராளுமன்ற உறுப்பினர் வில்சன் கூறுகிறார்.
2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு ஒன்றிய அரசு சமூக-பொருளாதார சாதிக்கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாக ரீதியாகக் கடினமானது மற்றும் சிக்கலானது எனக் கூறியது. ஏனெனில், ”சாதி குறித்துக் கேட்கும்போது மக்கள் தங்கள் குலம், கோத்ரம், துணை சாதி என ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் பயன்படுத்துவதால் கணக்கெடுப்பு தரவுகளில் குழப்பம் ஏற்படும்” என்றும் தெரிவித்து மக்களை ஏமாற்றுகிறது.
ஒரு சிறிய மாநிலம் பீகாரில் வெறும் 6 மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அம்மாநில மக்களுக்கு சமூக ரீதியாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது, அதேப்போல் மாநிலங்களின் உதவியுடன் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கலாம். ஆனால் ஒன்றிய பாஜக அரசுக்கு அந்த அக்கறையில்லை. ஏனெனில் கணக்கெடுப்பு நடத்தினால் குறிப்பாக கடந்த பத்தாண்டுகளாக மோடி ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூக மக்களுக்கு துரோகம் இழைத்தது தெரிய வந்துவிடும். இந்துக்களுக்கான கட்சி அவர்கள் நலனுக்கான கட்சி என சொல்லும் பாஜக அம்பலப்பட்டு போகும்.
மந்திரி சபையில் நீண்ட காலமாக உயர்சாதி பிரிவினர் ஆதிக்கம்:
நீண்ட காலமாக அமைச்சர் பதவிகளில் உயர்சாதியினரே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருவதை பகுப்பாய்வு செய்து இந்துஸ்தான் நாளிதழில் ஆகஸ்டு 24, 2024 அன்று வெளியிட்டது.
1. இது 1952-2024 ஆண்டுக்கு இடையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தரவுகளின் எண்ணிக்கை விகிதம் சாதி பின்னணி அடிப்படையில் விரிவாக விளக்குகிறது. அதில் அமைச்சர்கள் குழுவில் SC/ ST/ OBC அல்லாத அமைச்சர்களின் பங்கு 90% அதிகமாக இருந்ததுள்ளது. அதாவது உயர்சாதி பிரிவினரை விட மற்ற ( SC/ ST/ OBC) சாதி பிரிவினர் பின்தங்கியுள்ளன என்பதையே காட்டுகிறது.
2. பாராளுமன்ற மற்றும் மாநில அமைச்சரவை குழுக்கள் தரவுத்தொகுப்பில் 3,278 பெயர்களில் 67.3% உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். OBC- 19.8%, SC -8.6%, ST- 4.2% பங்கைக் கொண்டுள்ளனர், முஸ்லிம்கள்- 6.3%, கிறிஸ்தவர்கள்- 2.8% மற்றும் சீக்கியர்கள் 3.4% பங்குகளைக் கொண்டுள்ளனர். இது இந்தியாவின் நிர்வாகத்தில் ஆழமாக வேரூன்றிய சமூக சமத்துவமின்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
3. அமைச்சரவையில் மிக முக்கியமான இலாக்களான பிரதமர், உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் பதவிகள். இவை ஒரிரு முறை தவிர அனைத்திலும் முற்ப்பட்ட சாதி பிரிவினரே உள்ளன.
4. இலாகாக்களில் கிட்டத்தட்ட 14 சாதிப் சாதிக் குழுக்கள் மட்டும் 70% பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த அமைச்சரவை இலாகாக்களில் பிராமணர்கள் மட்டும் 22.23% உள்ளனர். இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் பிராமணர்கள் 5% உள்ளனர். ஆனால் அந்த பிரிவினர் அமைச்சரவை பதவிகளில் 22.3 % உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிட்டு ஓபிசி சமுகத்தினரான பிரதமர் பதவிகளில் எச்டி. தேவகவுடா, நரேந்திர மோடியும், நிதி துறையில் பா.சிதம்பரம், மற்றும் மிக குறைவான பதவிகளில் சிறுபான்மையினர் பட்டியலின பழங்குடி பிரிவினர் உள்ளனர். அதில் பாஜக ஆளும் காலங்களில் பாதுகாப்பு, உள்துறை, நிதி, வெளியுறவு கொள்கை உள்ள இலாக்களில் அனைத்தும் உயர்சாதி பிரிவினரே. அதனால் எந்த தொகுதியிலும் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடாமல், உயர்சாதியின் காரணமாக நிர்மலா சீதாராமனுக்கு நிதி துறையும், ஜெய்சங்கருக்கு வெளியுறவு துறையும் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிடைக்கிறது.
நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசின் துறைகளில் உயர்சாதி பிரிவினர் ஆதிக்கம்:
உயர் நீதிமன்ற நீதிபதிகளில் எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் 25%க்கும் குறைவானவர்களாக உள்ளனர். உயர் நீதிமன்றங்களில் 1,114 நீதிபதிகள் மொத்த எண்ணிக்கையாக உள்ளது, ஆனால் 790 பணியிடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன, 324 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் வெறும் 5% மக்கள் தொகை கொண்ட உயர்சாதி பிரிவினர் 75% மேல் நீதிபதிகள் பதிவியில் உள்ளனர். பெண்களுக்கு 33% இடத்தில் வெறும் 13.5% மட்டுமே நீதிபதிகள் உள்ளனர். ஆனால் சட்டப்படி SC-15%, ST-7.5% மற்றும் OBC-27% என்ற விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒன்றிய பாஜக அரசாங்கம் சட்டத்தை மதிப்பதில்லை. தமக்கு உகந்த (இந்துத்துவ) ஆட்களை எல்லா துறைகளிலும் நியமிக்கிறது.
ஒன்றிய அரசின் அமைச்சகங்கள்/துறைகளில் பணியாற்றும் கூடுதல் செயலர், இணைச் செயலர் மற்றும் இயக்குநர் நிலைகளிலும் SC/ST/OBC ஒதுக்கீடு மிக மோசமாக உள்ளது. உதாரணமாக, ஒன்றிய அரசின் அமைச்சகங்களில் உள்ள 93 கூடுதல் செயலாளர்களில், ஆறு பேர் எஸ்சி மற்றும் 5 பேர் எஸ்டி, அதே சமயம் இந்த தரவரிசையில் ஓபிசிகள் இல்லை. மேலும் 275 இணைச் செயலாளர்களில், 13 பேர் (4.73 சதவீதம்) எஸ்சி, ஒன்பது (3.27 சதவீதம்) எஸ்டி மற்றும் 19 ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
திரு.சந்தோஷ் கோயல் எழுதிய “இந்திய நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகளின் சமூகப் பின்னணி” என்ற தாளில், மாநிலங்கள் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 37.6% பிராமணர்கள், 9.56% க்ஷத்திரியர்கள், 13.33% காயஸ்தர்கள், 7.64% வைசியர்கள் ஐ.ஏ.எஸ்-ஆக உள்ளனர். கீழே இணைக்கப்பட்டுள்ள அட்டவணை 8, 3235 அதிகாரிகளின் சாதி வாரியாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
(ஆதாரம்: https://theedgeworld.com/ias/other_articles/Social%20background%20of%20IAS%20officers.pdf)
கல்வி நிலையங்களில் உயர்சாதி பிரிவினர் ஆதிக்கம்:
ஏற்கனவே ஐஐடி,ஐஏஎம் போன்ற ஒன்றிய கல்வி நிறுவனங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு ’இளைய தலைமுறை’ என்ற அமைப்பு விண்ணப்பித்து இருந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சென்னை ஐஐடி-ல் பணிபுரியும் பேராசிரியர்களில் 83 விழுக்காடு உயர்சாதியினர் இருப்பதாக தெரியவந்து இருக்கிறது.
நாடு முழுவதும் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, அறிவியல் சார்ந்த துறைகளில் கூட பட்டியல் சாதி பிரிவினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் (OBC) புறக்கணிக்கப்படுவதற்கும், அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கும் சாதிபடிநிலைகளே முக்கிய காரணமாக உள்ளன. இதையெல்லாம் நமக்கு ஞாபகம் படுத்துவது வருணாசிரம கோட்பாடு. இது 2000 ஆண்டு காலமாக இன்னார் இந்தந்த வேலையை தான் செய்யும் வேண்டும். சூத்திரர்கள் மற்றும் பெண்கள் கல்வியிலும், பதவியிலும், அதிகாரத்திலும் கொடுக்கக் கூடாது என்ற கோட்பாடு அடிப்படையில் கொண்டது மனுநீதி.
இந்த மனுநீதி பார்ப்பனர்களுக்காக உருவாக்கப்பட்டது. அந்த மனுநீதியில் கல்வி கற்கும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று இருக்கிறது. இந்தியா பார்ப்பனிய கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற நாடு. அதனால் தான் உள்துறை, நிதி, வெளியுறவு கொள்கை போன்ற பதவிகளிலும், மேல்மட்ட அதிகாரப் பதவிகளிலும் உயர்சாதியினரை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மூலம் ஊட்டி வளர்க்கப்பட்ட பாஜக, நான்கு வர்ணம்(மனுநீதி) அடிப்படையில் வேலை செய்கிறது. பிற்படுத்தப்பட்ட- பட்டியலின- பழங்குடியின மக்களை அடக்கி ஆள்வதற்குதான், கல்வியில் புதியகல்விக்கொள்கையை திணிக்கிறது. எனவே உயர்கல்வியில் சேர நீட், நெட், கியூட் போன்ற நுழைவுத்தேர்வுகளை திணிக்கிறது.
ஐஐடியில் பார்ப்பனர்களை தவிர மற்ற சமூகத்தினர் படிக்க அனுமதிப்பதில்லை என புள்ளிவிவரங்கள் ஆதாரத்தோடு கண்கூடாக பார்க்கிறோம். அது ஒரு கனவாக மாற்றியுள்ளது. அதேப்போல் தான் தற்போது நீட் போன்ற தேர்வுகளை வைத்து மருத்துவம் என்பது எழை எளிய மாணவர்களின் கனவாக மாற்றத்துடிக்கிறது இந்த பாஜக அரசு.
தற்போது கொஞ்சம் கிடைக்கும் இடஒதுக்கீடு ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொள்கிறது. அதன் படிநிலைகள் தான் தனியார்மய நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது. அதன் மூலம் பொது மக்களின் உழைப்பை உறிஞ்சுகிறது. அரசு வேலைவாய்ப்பில் அரசியல் சாசன இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பதில்லை. இந்தி தெரிந்தால் தான் வேலை எனவும் திணிக்கிறது. அதை அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறைகளில் நாம் தினமும் நடைமுறையில் காண்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசின் நடவடிக்கைகள் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது OBC சமூக மக்கள். ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்தால், ஒபிசி மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி அடைந்துவிடக் கூடாது, முன்னேறிவிடக் கூடாது என்பதையே காட்டுகிறது. அவர்களை எப்போதும் மக்களை சாதிகளாக பிரித்து அதே உணர்வோடும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜக-வின் திட்டம். அதனால் தான் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அஞ்சுகிறது.
இந்தியா என்கிற பார்ப்பனிய சித்தாந்தத்தை தவிடுபொடியாக்கக்கூடிய வேலையை நாம் முன்னெடுத்தால் ஒழிய இந்த ஆதிக்கத்தை நம்மால் வீழ்த்த முடியாது. இதை எதிர்த்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். அனைத்து மக்களுக்கான சமத்துவம் கிடைக்க, நமக்கான சம உரிமை கிடைக்க நாமே கேள்வி எழுப்பி போராட வேண்டும்.