செம்மொழி தமிழாய்வு மையத்திலும் மையம் கொள்ளும் சனாதனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Central Institute of Classical Tamil) தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு  வலதுசாரி சிந்தனையாளரான மருத்துவர். சுதா சேஷையன் அவர்களை ஒன்றிய அரசு தற்போது நியமித்துள்ளது. இதனால் தமிழறிஞர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பினரும் கண்டனமும் தெரித்துள்ளனர்.

தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டுவதற்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2006இல் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் ஒன்றிய நிறுவனத்தில் செயல்பட்டு வந்த இந்நிறுவனம் 2008ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்படத் தொடங்கியது. பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு, மொழிபெயர்த்தல், தமிழின் தொன்மை குறித்த பன்முக ஆய்வு போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனமாகவும் இந்நிறுவனம் செயல்படுகிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழ்நாட்டின் முதலமைச்சரே இருப்பார்.

ஆனால் இந்நிறுவனத்தில் ஒன்றிய அரசு நியமிக்கும் துணைத்தலைவர்கள் குறித்து சர்ச்சைகள் பல எழுந்துள்ளன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிறிதும் தொடர்பில்லாத, வலதுசாரி சிந்தைனையாளர்களே தொடர்ந்து ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தற்போது இந்நிறுவனத்தின் துணைத் தலைவராக ’சுதா சேஷையன்’ என்பவரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர். பல்கலைக்கழகத்தில் இவரது பதவிக்காலம் 2021 இல் முடிந்த நிலையில், இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி 2022 வரை ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு வருட பணி நீட்டிப்பு காலம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனத்தின் துணைத் தலைவராக பாஜக அரசு இவரை நியமித்திருக்கிறது.

இவர் மருத்துவத் துறையை சேர்ந்த போதிலும், ஆன்மீக சொற்பொழிவாளராகவே ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காலத்தில் மருத்துவ துறைக்கு செய்த சேவையை விட பக்தி இலக்கியங்கள், மத சார்பு பிரச்சாரங்களுக்கு நேரம் செலவிட்டதே அதிகமாக உள்ளது.

இவரது தொகுப்பாளர் பயணம் 1988ல் குடியரசு தின நிகழ்வுகளை தொகுப்பதில் ஆரம்பித்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவராகக் காட்டிக் கொண்டதால் செம்மொழி மாநாடு போன்ற பல அரசு விழாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. இவரது பத்தி சொற்பொழிவுகள் காரணமாக காஞ்சிபுரம் சாமியார் மற்றும் பல ஆன்மிகவாதிகள் போர்வையில் இருக்கும் சனாதனவாதிகளுக்கு நன்கு அறிமுகமானவர் சுதா சேஷய்யன்.

சங்கராச்சாரியார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் சிறைப்பட்ட போது அவருக்காக பிரார்த்தனை கூட்டம் நடத்தியுள்ளார் சுதா சேஷய்யன். மேலும் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்ற சுதா சேஷய்யன் முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதன் நிறைவு விழாவில் இந்தி உரைகளை மொழிபெயர்த்தார். ’அரசு மருத்துவ கல்லூரியின் துணைவேந்தராக இருந்து கொண்டு ஒரு மத சார்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது’ அப்போது சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாது அலுவலக நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் சங்கர மடத்தில் நடைபெற்ற ‘மகா பெரியவா ஆராதனை’ நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் ஆன்மீக சொற்பொழிவாற்றியதும் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

ஒரு மருத்துவராக இருந்த போதும் சனாதனவாதியாய் ‘சாத்விக உணவு’ என்ற பெயரில் சைவ உணவுகள் உட்கொள்வதை பரப்புரை செய்தவர் சுதா சேஷய்யன். ’அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை உண்ண மக்களுக்கு வலியுறுத்தாமல் சைவ உணவை சாத்விக உணவென்றும் மாமிசத்தை ராஜஸீக உணவென்றும் வேறுபடுத்தி பார்ப்பனிய கருத்துக்களை பரப்பியவர்’. தமிழறிஞர் மணவை முஸ்தாபா பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியக் குழுவில் இருந்து வெளியேற காரணமாக இருந்தவர் என்றும் சுதா சேஷய்யன் குறித்த சர்ச்சை செய்திகள் எழுந்திருக்கின்றன. இவர் மருத்துவராகப் பணியாற்றிய போது மருத்துவ நூல்களை தமிழில் மொழி பெயர்த்திருந்தால், அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும். ஆனால் சுதா சேஷய்யன் மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்க்க போதுமான அக்கறை காட்டவில்லை என்றும் தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்தான் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் துணை தலைவராக அவர் நியமிக்கப்பட்டதற்கு பல தமிழ் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். அவரது நியமனம் குறித்து தமிழறிஞர் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் கூறுகையில், “சுதா சேஷய்யன் அவர்களின் நியமனம் செம்மொழி தமிழாய்வு மையத்தின் நோக்கங்களுக்கு எதிரானது. இலக்கியங்கள், இலக்கணங்கள் ஆய்வு செய்யும் நிறுவனத்தில் தமிழில் இருக்கக்கூடிய பக்தி பாடல்களோ அல்லது பின்னர் வந்த இலக்கியங்களோ இவைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இந்த நிறுவனம் உருவாக்கப்படவில்லை. அவர் ஒரு மருத்துவர் என்ற நிலையில் பக்தி சொற்பொழிவு செய்கிறார் என்பதனாலும் பட்டிமன்றத்தில் பேசுவதாலும் இவருக்கு தமிழோடு நேரடி தொடர்புள்ளதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பல தமிழறிஞர்களும் சுதா சேஷையன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான திட்டமே என்று கண்டித்துள்ளனர்.

தமிழ் மாநிலத்தின் பண்பாடு, மொழி மற்றும் இந்த மாநிலம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தான் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு மொழி ஆய்வு இல்லாத ஒருவரை நியமிக்குமானால் அது மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு புறம்பான ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் கல்வி திட்டத்தை, திராவிட கொள்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஆளுநரின் சிபாரிசு கொண்ட ஒருவர், பக்தி கதைகளும் ஆன்மீக வரலாறும் பேசும் ஒருவர், சனாதனத்தை  தூக்கி பிடிக்கும் ஒருவர் எவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்? தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியையும் குறைத்து, அதற்கான துணை தலைவரையும் ஒன்றிய அரசின் சார்பாக நியமிப்பது என்பது தமிழின் வளர்ச்சிக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை முடக்குவதற்கே எனும் அச்சமே எழுகிறது. தமிழ்மொழி மீதுள்ள காழ்ப்புணர்வின் காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது.

பொருத்தமில்லாத நபரை பொருத்தமில்லாத பதவிகளில் அமர்த்துவது என்பது இந்த ஒன்றிய பாசிச அரசுக்கு புதிதல்ல. ’சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்களுக்கே ஒன்றிய அரசு உயர்பதவிகளில் முன்னுரிமை’ வழங்குவது தொடர்கிறது. அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், SEBI தலைவர் மதாபி பூரி பூச், முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் என பல நடைமுறை உதாரணங்கள் உண்டு. இதே வழியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு சுதா சேஷையன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை உடனடியாக ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களில் ஒருவரை அந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும். இதுவே தமிழாசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், செம்மொழியை கொண்டாடும் அறிஞர்கள் அனைவருடைய விருப்பமும் கோரிக்கையுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »