தலித்துகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையும் அதிகார நிலைநிறுத்தலும்:
தலித்துகளுக்கு எதிரான பாலியல் வன்முறையானது உரிமையாக நினைத்து செய்யப்படுவதோடு, அது சாதிய கட்டமைப்பை உறுதிசெய்யும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மிகச் சிறிய அளவிலான அதிகாரம் தலித்துகளிடம் சேருகிறது என்பது உயர்சாதியினரால் உணரப்பட்டாலும், அது உடனடியாக வன்முறைகளின் மூலம் குறிப்பாக பாலியல் வன்கொடுமையின் மூலம் சமன் செய்யப்படுகிறது. இந்த ‘சமன் படுத்தல்’களின் மூலமாக சாதிய மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படுகிறது.
“நெருக்கடி நிலை காலத்துக்குப் பின்பு நடைபெற்ற மறுபங்கீடு நடவடிக்கைகளின் மூலம் நிலங்களைப் பெற்ற பயனாளிகளுக்கு எதிரான வன்முறை இதற்கான ஒரு சோகமான உதாரணம்” என்று ரொனால்டு ஜே ஹெர்ரிங் கேரளாவில் 1970களில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தங்களைப் பற்றி குறிப்பிடும்போது சொல்கிறார். (Land to the Tiller: The Political Economy of Agrarian Reform in South Asia. pg. 137 & 286). குறிப்பாக, வர்க்க/சாதி அடக்குமுறை சம்பவங்கள்-கொலை, பாலியல் வன்முறை, எரித்தல், நிலம் மற்றும் வீடுகளை இடிப்பது போன்ற சம்பவங்களாக அடிக்கடி நடைபெற்று இருக்கிறது.
ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆஷாவின் சகோதரர் “அவர்களது (தாக்கூர் சாதியினர்) வீடுகளை எங்களது முன்னோர்கள் சுத்தம் செய்தார்கள். தற்போது நாங்கள் அவர்களது வீடுகளை சுத்தம் செய்வதில்லை. எனவே, அவர்களுக்கான மரியாதை குறைந்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
கயர்லாஞ்சி வன்கொடுமைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணான ப்ரியங்காவின் கல்வி ரீதியான வெற்றி உயர்சாதியினரை பெரிய அளவில் கோவப்படுத்தியிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட போத்மாங்கே குடும்பம் அந்த ஊரில் நிலம் வைத்திருந்திருக்கிறார்கள். இதுவும் உயர்சாதியினைச் சேர்ந்தவர்களுக்கு பெருமளவில் எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.
சாதிய ரீதியான சவால்களைத் தாண்டி தொடர்ந்து தலித் மக்களுடைய வளர்ச்சி நடைபெற்று வருவது உயர்சாதியைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் கோவத்தையும் எரிச்சலையும் ஊட்டுகிறது. கல்வி, அரசியல் உரிமை, மற்றும் தலித் இயக்கங்களின் எழுச்சி ஆகியவற்றால் தலித் மக்கள் சாதிய படிநிலைகளை கேள்வி எழுப்புகிறார்கள். ‘தீண்டாமை’ நடைமுறைகளை மீறி தனது உரிமைகளுக்கான குரலினை எழுப்புகிறார்கள். இது உயர்சாதியின் வெறுப்பினை இன்னும் தூண்டுகிறது.
தலித்துகள் மீதான கட்டமைக்கப்பட்ட அவமானம், சாதி அடிப்படையிலான பிரிவினை, தலித்துகள் பொது பகுதிகளுக்குள் நுழைய தடை ஆகியவற்றை கேள்வி எழுப்பும் போது, ‘பாடம்’ கற்பிக்கப்படுவதாக தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. “**** சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கு எதோ ராணியைப் போல பெயரா?”, “**** சாதியைச் சேர்ந்த பெண் எல்லாம் செருப்பு அணிந்திருக்கிறாளா?” (பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்களைப் பற்றி பேசப்பட்டவை) ஆகிய வார்த்தைகள் இந்த எரிச்சல்களின் வெளிப்பாடுதான். நீதிமன்றங்களில் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்த வழக்குகளில், “உயர்சாதி ஆண்கள் ஏன் தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும்? அவள் ஒரு தீண்டத்தகாதவள். எனவே அவள்தான் அவர்களை பாலியல் உறவுக்கு அழைத்திருக்க வேண்டும்” என்று சிலர் வாதிடுவதும் இத்தகைய காணோட்டத்தினால்தான்.
ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மீதே வெறுப்பை உமிழும் வார்த்தைகள் அதிகார வர்க்கத்திலிருந்துதான் முதலில் வெளிப்பட்டிருக்கிறது. “அவள இங்க இருந்து அழைச்சிட்டு போங்க. அவ சும்மா நாடகம் நடிக்கிற, எங்கள பிரச்சனையில மாட்டி விட பாக்குறீங்களா?” இது ஹாத்ராசில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, நாக்கு அறுப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் வழக்குப்பதிவு செய்ய வந்த பதின் வயது தலித் பெண், அவரது தாய் மற்றும் சகோதரரை நோக்கி காவல்துறை அதிகாரிகள் பேசிய வார்த்தைகள்.
வட இந்தியாவில், தலித் பெண்களை குறித்து வசை சொற்கள் மிகவும் இயல்பாக பயன்படுத்தப்படுகின்றன. நிலம், உணவு என்று பண்டங்களோடு தலித் பெண்களுடைய உடல் சொலவடைகளாக ஒப்பிட்டுப் பேசப்படுகின்றன. இது வேறூன்றிப்போன ஆணாதிக்க-சாதிய திமிரின் வெளிப்பாடு.
இக்கட்டுரையின் முந்தைய பாகம்: https://may17kural.com/wp/sexual-violence-against-dalit-women-part-2/
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் உயர்சாதியைச் சேர்ந்த பெண்களின் பங்கு:
சாதிய வன்முறைகளில் பெண்களே மிக முக்கிய கருவிகளாக இருக்கின்றனர். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளில் உயர்சாதி பெண்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
கயர்லாஞ்சி வன்கொடுமை சம்பவத்தில், போத்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும்போதும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போதும் ’குன்பி’ மற்றும் ’கல்வார்’ சாதியினைச் சேர்ந்த பெண்கள் கைத்தட்டி உற்சாகப்படுதியிருக்கிறார்கள் என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியானது இதற்கு எடுத்துக்காட்டு.
டெல்டா மேக்வால் வன்கொடுமைச் சம்பவத்தில், டெல்டாவை உயர்சாதியினைச் சார்ந்த ஆண் ஆசிரியரின் அறைக்குச் சென்று சுத்தம் செய்யச் சொன்னது ஒரு பார்ப்பனப் பெண் விடுதி காப்பாளர்தான். ஆனால், இப்படியான வன்முறைகளில் பெண்களின் பங்கு பற்றியான விவாதம் இங்கு நடைபெறுவதே இல்லை.
‘பெண்களாகப் பிறப்பதே பாவம்’ என்ற மிகவும் பிற்போக்கான எண்ணமுடைய உத்தரபிரதேச கிராமத்தில் பிறந்த பூலான் தேவியை தாக்கூர் இன ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தபோது தாக்கூர் பெண்கள் அமைதி காத்தனர்.
2014- 2019ம் ஆண்டுகளில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குகள் 50% அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெரும்பாலான சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய ஒன்றியத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறிப்பாக தலித் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை என்பது ஒட்டு மொத்த மனித இனத்தின் அவமானம். இந்த வன்முறைகளின் அடிப்படைப்புள்ளி என்பது சாதியோடு இணைந்த ஆணாதிக்கம்தான். மேலும், மனு சாஸ்திரத்தின்படி ஆளும் ஆர்.எஸ்.எஸ் பாஜக தலித்துகளுக்கு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து கட்டமைத்து நடத்திவருகிறது.
(இக்கட்டுரையின் இறுதி பாகம் தொடரும்…)