அண்டை நாடுகளிலும் அதானி ஏற்படுத்தும் சீர்கேடு

அதானி எனும் குஜராத்தி தொழிலதிபருக்காக மோடி கடல் கடந்து வெளிநாடுகளில் செய்த ஒப்பந்தங்கள் இன்று அந்த நாடுகளில் கடும் பொருளாதார சீர்கேடுகளோடு சூழலியல் சீர்கேடுகளையும் உருவாக்கியிருக்கின்றன. இலங்கையில் அதானி காற்றாலைத் திட்டமும் வங்கதேசத்தில் அதானி மின்சாரத் திட்டமும் சர்ச்சைக்குரிய வகையில் அந்த நாடுகளின் அரசியலிலே குழப்பம் ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்தியாவில் துறைமுகம், விமான நிலைய மேலாண்மை, பெட்ரோல் இராசயனங்கள், மின் உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் என பல துறைகளிலும் ஏகபோக (Monopoly) நிலையை எட்டிய அதானி இப்போது வங்காளதேசம், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, இலங்கை என இந்தியாவின் எல்லைகளைத் தாண்டி தன் வணிகத்தைப் பெருக்குகிறார்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்தார் அதானி. தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் கொழும்பில் ஒரு துறைமுக முனையத்தைக் கொண்டுவர திட்டமிட்டன. 2021-இல் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம் அதானிக்கு வழங்கப்பட்டதும் இந்த துறைமுக முனையத்திற்காக அமெரிக்கா 553 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியதும் அப்போதே சர்சையைக் கிளப்பின.

 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது அதன் வெளிநாட்டு நாணய இருப்பு சரிந்தது. இலங்கை அரசாங்கத்தால் அதன் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கொழும்பில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 10 மணி நேரம்  வரை மின்தடை ஏற்பட்டது. அப்போதிருந்து இலங்கை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எனப்படும் Renewable energies திட்டங்களிலும் அந்நிய முதலீடு திட்டங்களிலும் கவனம் செலுத்தி வந்தது.

இலங்கையின் வடமேற்கில் உள்ள மன்னார் தீவு இயற்கை எழில் கொஞ்சும் அழகான இடம். 28 கிலோமீட்டர் நீளமான மணற்பாங்கான நிலப்பகுதியும் வரிசையான தென்னை மரங்கள் சூழ்ந்த நீண்ட கடற்கரைகளும் சூழ்ந்துள்ள இடம் மன்னார். கடலின் குறுக்காக 3 கிலோமீட்டருக்கு செல்லும் சாலை வழியாகவே இங்கிருந்து இலங்கையின் தெற்கு பகுதிக்கு செல்ல முடியும். சுமார் 75,000 மக்கள் வாழும் மன்னார் தீவில் பெரும்பான்மை மக்கள் மீனவர்களாகவோ, சிறு வியாபாரிகளாகவோ அல்லது அரசாங்க வேலை செய்யும் நடுத்தர மக்களாகவோ இருக்கின்றனர். இவர்களின் எளிமையான அமைதியான வாழ்க்கை இத்தீவின் இயற்கையோடு பின்னிப்பிணைந்ததாக இருக்கிறது.

இந்தியாவிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மன்னார் தீவின் வடக்கு முனை இருக்கிறது. கடல் சூழ்ந்த நிலப்பரப்பினால் இங்கு எப்போதும் வலுவான காற்று வீசுகிறது. இந்த காற்றிலிருந்து லாபம் ஈட்டுவதற்காகத்தான் குஜராத்தி தொழிலதிபர் அதானி, மன்னாரில் சுமார் 50 காற்றாலைகளை உருவாக்க திட்டம் தீட்டியிருக்கிறார்.

மன்னாருக்கு வடக்கே பூநகரி கிராமம் வரை கட்டப்படும் அதானி காற்றாலை திட்டம் 442 மில்லியன் டாலர் மதிப்பிலானது. இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க 2023இல் அதானி பசுமை ஆற்றல் (green energy) காற்றாலை ஒப்பந்தத்தை உறுதி செய்தார். ஆனால் மன்னார் தீவில் அதானியின் காற்றாலைத் திட்டம் கையெழுத்தானவுடன் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் காற்றாலை திட்டத்தை எதிர்த்து அங்கு மீனவர்கள் போராடத் துவங்கினர். மன்னாரைச் சேர்ந்த மீனவர்கள், காற்றாலைத் திட்டங்கள் விளைவிக்கும் இன்னல்களைத் தாங்களே நேரில் கண்டுள்ளதாகக் கூறுகிறார்கள். “மன்னார் தீவின் தெற்கு கரையோரத்தில், இலங்கை அரசுக்குச் சொந்தமான மின்சார வாரியத்தினால் ஏற்கனவே 30 காற்றாலை விசையாழிகள் (Wind turbines) அமைக்கப்பட்டுள்ளன. இந்த விசையாழிகளின் அடிப்பகுதியைச் சுற்றி சாலை உயர்த்தப்படுவது அங்கு நீரோட்டத்தைத் தடுக்கும் அணை போல செயல்படுகிறது. இதனால் இப்பகுதி தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்குகிறது” என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.

தங்களின் வாழ்விடத்தை பாதிக்கும் அதானி திட்டத்திற்கு மன்னார் தீவின் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் சூழலியல் அக்கறையினால்தான் என்பதை அவர்களின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

“மழை நீர் கடலுக்கு செல்லும் வழியை இந்த சாலை தடுக்கிறது. தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் பெருகுகின்றன, இதனால் டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கடந்த ஆண்டு நானூறு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர், மேலும் இங்கு டெங்குவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு முன்பு இத்தனை பேர் டெங்குவால் பாதிக்கப்படவில்லை” என்றும் மன்னார் தீவில் வாழும் மீனவர்கள் கூறுகிறார்கள்.

மீனவர்களோடு இணைந்து அங்கு தேசிய மீன்வள ஒருங்கிணைப்பு இயக்கமும் அதானி காற்றாலைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. “எங்களுக்கும் பசுமை ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் காற்றாலைகளை எங்கு நிறுவுவது என்பதுதான் பிரச்சினை” என்று அதானி திட்டத்தை எதிர்க்கும் தேசிய மீன்வள ஒற்றுமை அமைப்பு(NAFSO) இயக்கத்தின் தலைவர் ‘பெனடிக்ட் க்ரூஸ்’ கூறுகிறார்.

கடந்த மே மாதம், மன்னார் பகுதியின் ’கத்தோலிக்க ஆயர் பிடெலிஸ் பெர்னாண்டோ’ உட்பட பல ஆர்வலர்கள் அதானி திட்டத்தை எதிர்த்து இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இந்த திட்டத்திற்கான தாக்க ஆய்வு தவறானது, ஒருபக்கச் சார்பாக இருக்கிறது என்று கூறும் அம்மக்கள், இந்த ஆய்வின் மூலம் அதானி குழுமம் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலியல் சீர்கேடுகளுக்கு ஆதாரமாக இதற்கு முன்னர் நிறுவப்பட்ட விசையாழிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை இங்குள்ள மக்கள் முன்வைக்கிறார்கள். இலங்கை மின்சார வாரியம் காற்றாலை விசையாழிகளுக்கான அடித்தளங்களை அமைப்பதற்காக நிலத்தில் 30 மீட்டர் ஆழத்தில் இரண்டு நீர்த்தேக்கங்களை அமைத்தது. ஒரு நீர்த்தேக்கத்தை நன்னீராலும் மற்றொன்றை கடல் நீராலும் நிரப்பியது. ஆனால் நீரின் அடர்த்தி மற்றும் வேறுபட்ட தன்மைகளால் இப்போது இரண்டு நீர்த்தேக்கங்களிலும் உப்பு நீர் மட்டுமே உள்ளது.

இதுவரை கிணற்றில் ஊறி வந்த நன்னீரைக் குடித்து வந்த மக்கள், இப்போது பணம் செலுத்தி குழாய் மூலம் நீரைப்பெரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் உள்நாட்டு விவசாய பகுதியிலிருந்து வருவதால் அந்தத் தண்ணீரும் நச்சு இரசாயனங்களால் மாசடைந்திருக்கிறது. இதனால்தான் “நாங்கள் பசுமை திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.

இலங்கை மின்சார வாரியம் தெற்கு கடற்கரையில் காற்றாலை விசையாழிகளை கட்டிய பின் அங்கு பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது. “முன்பு கரையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் மீன் பிடிக்கும் சூழல் இருந்தது. ஆனால் இப்போது கடலுக்குள் 15 – 20 கி.மீ சென்றால்தான் மீன்கள் கிடைக்கிறது” என்ற மீனவர்களின் கூற்று அவர்களின் வாழ்வாதார சிக்கல்களை எடுத்துரைக்கிறது.

படம்: கடல் அட்டைகள்

காற்றாலை விசையாழிகள் கடலில் விழும் சூரிய ஒளியைத் தடுப்பதும், அவை வெளியிடும் ஒலி அதிர்வுகளும் கடல்வாழ் உயிரினங்களை பெரிதும் பாதிக்கின்றன. கடலட்டைகள் எடுப்பதற்காக முக்குளிக்கும் போது மீனவர்கள் காற்றாலையின் ஒலி அதிர்வுகளை உணர்வதாகக் கூறுகின்றனர். சீனாவிற்கு ஏற்றுமதியாகும் கடலட்டைகளை தங்கள் பொருளாதாரத்திற்கு பெரிதும் நம்பும் மீனவர்கள் இப்போது கடலட்டைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் “அதானி இங்கு காற்றாலை டர்பைன்களை உருவாக்கினால், நாங்கள் வாழ்வாதாரத்திற்காக எங்கு செல்வோம்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும் மன்னார் தீவு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றரை கோடி பறவைகள் வலசை செல்கின்றன. “பறவைகளின் வலசைப் பாதையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சுழலும் 52 காற்றாலை விசையாழிகளை அதானி நிறுவனம் கட்டுகிறது” என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் நிபுணர் சம்பத் எஸ்.செனவிரத்ன கூறுகிறார். இதுவும் சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றபோது அதானி குழுமம் அதனை கண்டுகொள்ளவில்லை. செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட ரேடார் மூலம் பறவைகளைக் கண்டறிவது, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்று வழக்கம்போல் சப்பைக்கட்டு கட்டுகிறது அதானி நிறுவனம். செயற்கை நுண்ணறிவு மூலம் பறவைகளைக் கண்டறியலாம். ஆனால் அவற்றின் வலசைப் பாதையையோ வாழ்விடங்களையோ எந்த கணினி தொழில்நுட்பமும் பாதுகாக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

அதானிக்கு இந்த காற்றாலை திட்டம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதும் அங்கு சர்ச்சையானது. “எந்தவிதமான டெண்டர் அறிவிப்பும் கொடுக்கப்படாமல் இலங்கை அரசு தன்னிச்சையாக அதானிக்கு காற்றாலை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இது வழக்கமான நடைமுறை அல்ல” என்று சர்வதேச வரலாற்றாசிரியரான ஜார்ஜ் ஐ.எச்.குக் தெரிவித்துள்ளார். இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அதானிக்கெதிரான வழக்கை நடத்தும் வழக்கறிஞர் ரவீந்திரநாத் தபாரேவும், “அதானி மீது எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு அதானியின் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. எனவே  இந்த திட்டத்தை வேறு விதமாக செயல்படுத்த வேண்டும்” என்று கூறுகின்றார்.

காற்றாலைத் திட்டத்தை தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தில் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்யவும் அதானி திட்டமிட்டுள்ளார். ஆனால் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை, அதானி திட்டத்தால் அதிக சிக்கல்களை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய ஒன்றிய அரசு அதானி நிறுவனத்திடமிருந்து இரண்டு மடங்கு விலையில் மின்சாரத்தை வாங்குவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மோடிக்கு மிகவும் நெருக்கமான அதானி இலங்கையில் நுழைந்தது தற்செயல் நிகழ்வு அல்ல. இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது இந்தியா 4 பில்லியன் டாலர் கடன் கொடுத்தது. இந்தக் கடனைத் திருப்பி செலுத்துவதற்குப் பதில் அதானி திட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. “இந்த (அதானி) விவகாரத்தில் டெல்லியிலிருந்து அழுத்தம் வந்திருக்க வேண்டும்” என்று இலங்கை தேசிய சமாதான கவுன்சிலின் இயக்குனர் ஜெஹான் பெரேரா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் எரிசக்தி திட்டங்களை தனது நண்பர் அதானிக்கு வழங்குமாறு ராஜபக்ச அரசாங்கத்திற்கு மோடி அழுத்தம் கொடுத்ததாக ஜூன் 2022இல், இலங்கை மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவரான எம்.சி.பெர்டினாண்டோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததே இதற்கு சான்று. இந்தக் கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கையில் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி பெர்டினாண்டோ தன் கருத்தை திரும்பப் பெறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும் அவர் பதவியும் பறிக்கப்பட்டது. 

இவ்வாறு மோடியின் நண்பர் அதானிக்காக இலங்கையின் அரசியல், பொருளாதாரம், சூழலியல் என பல துறைகளில் சமரச நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. ’ஹிண்டன்பர்க்’ ஊழல் போன்ற மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அதானிக்காக கடல் கடந்து வெளிநாட்டில் ஒப்பந்தங்களை பெற்றுத் தர மோடி ஒரு விற்பனையாளரைப் போல் செயல்படுகிறார் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

(2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து குஜராத்தி மார்வாடி தொழிலதிபரான அதானியின் வளர்ச்சி குறித்து மே17 இயக்கக் குரலில் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் அதானிக்கு கிடைக்கும் சலுகைகளும் மின்சார இறக்குமதியில் அதானியின் ஊழலும் மே17 இயக்க கட்டுரைகளில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.)

இலங்கையைப் போன்றே வங்கதேசத்திலும் நடந்ததுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. 2017 ஆம் ஆண்டில், மோடி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட பின் அதானிக்கு மேலும் ஒரு ஒப்பந்தம் கிடைத்தது. ஜார்க்கண்ட் நிலக்கரி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வங்கதேசத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அதானிக்கே கிடைக்குமாறு மோடி வழிவகை செய்தார். அப்போது இலங்கையைப் போலவே வங்கதேசத்திலும் அதானிக்கு கொடுக்கப்பட்ட தொகை அதிகமாக இருந்ததாக சில நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இது குறித்து “வங்கதேசத்தின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதானி மற்றும் மோடியை திருப்திப்படுத்துவதற்காகவே கையெழுத்தாகியுள்ளது” என்று வங்கதேச ஆர்வலரும் பொருளாதார பேராசிரியருமான அனு முகமது கூறினார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் மிக முக்கியமான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர் மோடி. இலங்கையில் எழுந்த போராட்டங்களைப் போலவே மக்கள் கிளர்ச்சியால் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார் ஷேக் ஹசினா.

தற்போது மின்சாரத்திற்காக வங்கதேச அரசாங்கம் செலுத்த வேண்டிய 800 மில்லியன் டாலர் தொகையைத் தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார் அதானி. ஆனால் அதானியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட புதிய வங்கதேச அரசாங்கம், அதானி ஒப்பந்தத்தின் விவரங்களை ஆராய்வதாக அண்மையில் செய்தி வெளியாகி உள்ளது.

நைரோபி விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம்

இலங்கை, வங்கதேசத்தைத் தொடர்ந்து கென்யாவிலும் நைரோபி விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவிலும் அதானி கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திற்கெதிராக மக்கள் போராடுகிறார்கள். உலகம் முழுவதும் அதானி-மோடிக்கெதிரான போராட்டங்கள் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையே சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »