நேட்டோ உறுப்பு நாடாக இருக்கும் துருக்கி கடந்த செப்டம்பர் 2 அன்று, பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறது. நேட்டோவில் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி, தற்போதைய போர் சூழலில் எடுத்துள்ள இந்த முக்கியமான முடிவுக்குப் பின்னால் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் துருக்கியில் ஏற்படுத்திய அரசியல் குழப்பங்களே காரணமாக இருக்கின்றன.
ஐரோப்பா – ஆசியாவை இணைக்கும் முக்கியமான நிலப்பரப்பு துருக்கி. இந்த புவிசார் இட அமைவை மனதில் கொண்டே 72 ஆண்டுகளுக்கு முன் துருக்கியை NATO பக்கம் கொண்டு சென்றன அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள். (NATO என்பது அமெரிக்காவின் கைப்பாவையாகக் கருதப்படும் 32 உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பு.)
ஆனால் 1987முதல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து விட வேண்டும் என துருக்கி முயன்று வருகிறது. இதுவே பெரும்பாலான துருக்கி மக்கள் மேற்குலக வாழ்க்கை முறையை வாழ காரணமாக இருந்தது. ஆனால் கடும் முயற்சிகள் எடுத்தாலும் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது தற்போது வரையிலும் நடக்கவில்லை.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பொருளாதார கொள்கைகளைக் கொண்ட நாடு துருக்கி. ஆனால் இராணுவ ரீதியில் துருக்கியும் அமெரிக்காவும் நெடுங்காலமாக நெருக்கமான நாடுகளாக இருக்கின்றன.
ஆங்கில திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் ‘Cuban Missile Crisis’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருப்பீர்கள். 1962-ல் கியூபா தலைநகர் ஹவானாவில் அணு ஆயுத கப்பலை நிறுத்தி அமெரிக்காவை அச்சுறுத்தியது ரஷ்யா. பின்னர் ஜான்.F.கென்னடி திறமையாக பேச்சுவார்த்தை நடத்தி ரஷ்யாவை அங்கிருந்து வெளியேறச் செய்தார் என்பது தான் அந்த ‘Cuban Missile Crisis’ கதை. இதைத்தான் உலகம் முழுவதும் திரும்ப திரும்ப இன்று வரை பரப்பிக்கொண்டே இருக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்த நிகழ்வில் பாதிதான் உண்மை. சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்த இதே போன்ற அணு ஆயுதங்களை NATO பெயரில் துருக்கியில் கொண்டு சென்று நிறுத்தியது அமெரிக்கா.
துருக்கி-ஜார்ஜியா இரண்டும் தரை வழி இணைப்பு கொண்ட நாடுகள். அன்றைய காலகட்டத்தில் (1962) ஜார்ஜியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்தது. (அதுதான் ஜோசப் ஸ்டாலின் பிறந்த நாடும் கூட!). அந்த ஒன்றியத்தின் அருகில் அணு ஆயுதங்களை நிறுத்தினால் தனக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தே (அமெரிக்கா+NATO என்ற இரு வார்த்தைகளுக்காகவே) ரஷ்யாவை பகைத்துக் கொள்ளத் தயாரானது துருக்கி.
இத்தனைக்கும் இரண்டாம் உலகப்போரில் எந்த பக்கமும் போகாமல் யாருக்கும் உதவாமல் தனது எல்லைகளை அடைத்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட நாடுதான் துருக்கி. ஆனால் NATOவில் இணைந்த பிறகு அனைத்துமே அவர்களுக்கு மேற்குலகமும் அமெரிக்காவும் தான் என்று நகமும் சதையுமாக மாறினார்கள். எந்த அளவுக்கு என்றால் அமெரிக்க நலனுக்காகவே சிரியா மீது போர் தொடுத்தல், குர்திஸ்தான் விடுதலையை நசுக்குதல் என துவங்கி உள்ளூர் கம்யூனிஸ்ட்களை வருட கணக்கில் சிறையில் அடைப்பது என்று அமெரிக்கர்களின் மகிழ்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தார் துருக்கி அதிபர் எர்டோகன்.
2016 வரையில் எல்லாமே இணக்கமாக சென்று கொண்டிருந்தது. 2016 ஜூலை 15 இரவு தான் எல்லாமே தலைகீழாக மாறத் துவங்கியது.
ஜூலை 15, 2016 அன்று மாலை 4 மணிக்கு துருக்கி அரச உயர் மட்ட அதிகாரிகளுக்கு ஓர் செய்தி வந்தது. 3 ஹெலிகாப்டர்களுடன் தலைநகர் அங்காரா மீது அதிகாலை 3 மணிக்கு ஓர் தாக்குதல் நடக்கும் என்றும் துருக்கி உளவுத்துறையால் தெரிவிக்கப்பட்டது. அரசு உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் சென்ற விடயம் எதிர் தரப்புக்கு வந்தபோது அவர்கள் தங்களின் திட்டத்தை மாற்றினார்கள்.
துருக்கி நாட்டின் ராணுவத்தில் இருக்கும் ஒரு பிரிவினர் தான் அந்த எதிர் தரப்பு. இரவு 9 மணிக்கே தாக்குதலை தொடங்குகிறார்கள். தலைநகர் அங்காராவில் தாக்குதலை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இரவு 10 மணிக்கு ஐரோப்பா – ஆசியாவை இணைக்கும் போஸ்பரஸ் பாலத்தை 10-க்கும் மேற்பட்ட பீரங்கிகளோடு 50 இராணுவ வீரர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்ற முதல் செய்தி காட்டுத் தீயாக மக்களிடம் பரவியது. சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகன ஓட்டிகள் தங்களின் அலைபேசியில் நடப்பவற்றை காணொளியாக பதிவு செய்து ராணுவத்தினர் தங்களை மிரட்டுவதை சமூக வலைதளங்களில் பதிவிட துவங்கினார்கள்.
அதே நேரம் போஸ்பரஸ் பாலத்திற்கு மேல் சக்தி வாய்ந்த போர் விமானமான F16 பறக்க துவங்கியது. அடுத்த ஒரு மணிநேரத்தில் துருக்கி நாட்டின் முக்கிய நகர வீதிகளில் எல்லாம் பீரங்கிகள் மின்னல் வேகத்தில் சுற்றி வரத் துவங்கின. அத்துடன் தனது சொந்த நாட்டின் குடி மக்கள் மீதே துப்பாக்கி சூட்டை தொடங்கியது இராணுவம்.
இரவு 11 மணிக்கு அப்போதைய பிரதமர் பினாலி யில்டிர்ம் “ஆட்சி கவிழ்ப்பு செய்ய சிலர் இராணுவத்தின் உள்ளேயே இருந்து செய்த வேலை இது” என கூறினார். அதிபர் எர்டோகன் ஒரு தொலைக்காட்சி நெறியாளருக்கு காணொளி அழைப்பு செய்து அதன் மூலம் நாட்டு மக்களை தெருவில் இறங்கி போராடுமாறு அழைத்தார். அதன் பிறகு மக்கள் பீரங்கிகளை மறித்து நின்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். எதிர்த்து நிற்பவர்களை சுடுவது, பீரங்கி மூலம் ஏற்றி கொலை செய்வது என துருக்கி நாட்டில் பதற்றம் அதிகரித்தது.
மக்கள் இராணுவ வாகனங்களை நெருங்கி படையினரிடம் பேசத் தொடங்கினார்கள். “இது உங்கள் நாடு..! நாங்கள் உங்கள் மக்கள் !! உங்களின் அம்மா,அப்பா,தங்கையை போலத்தான் நாங்களும்! எங்களின் மீது தாக்குதல் நடத்தலாமா?” என்று கூறி அவர்களை சரணடைய கூறினார்கள்.
அதே வேளையில் அட்டதுர்க் விமான நிலையத்தை கைப்பற்றி விமானப் போக்குவரத்தை தடுத்து நிறுத்துகிறார்கள். அதுதான் உலகிற்கு ‘Turkey in the Trouble’ என்ற செய்தியை வெளியே அதிவேகமாக கொண்டு சென்றது. இரவு 12 மணிக்கு தலைநகர் அங்காராவில் உள்ள தலைமை உளவுத்துறை அலுவலகத்தில் (MIT) ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீச ஆரம்பித்தார்கள். இரவு 1 மணிக்குள்ளாகவே மெட்ரோ நிலையங்கள், விமான நிலையங்கள், நகராட்சி தலைமையகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் என அனைத்திலும் ‘ஆட்சி கவிழ்ப்பு இராணுவ குழு’ நுழைந்து தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தொடங்கியது. வான்படை, தரைப்படை, கடல்படை என தங்களுக்கு ஒத்துழைக்காத அனைத்து அதிகாரிகளும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.
மக்களுக்கும் இராணுவத்திற்கும் நேரடியாக மோதல் ஏற்பட்டது. இதில் 252 பேர் உயிரிழந்தனர். 2,000 பேர் வரை படுகாயம் அடைந்தனர். இது நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் அமெரிக்க முன்னாள் இராணுவ தளபதி, நடப்பு செனட் சபை உறுப்பினர் என ஒவ்வொருவராக “துருக்கியில் தற்போது நடப்பது ‘புரட்சி’, அது தொடர்ந்து நடக்க வேண்டும்” என பேசினார்கள். தொடர்ந்து ஆட்சிக்கவிழ்ப்பு போராட்டம் நடக்கும், விடியும் போது இராணுவம் துருக்கி நாட்டைக் கைப்பற்றி விடும், எர்டோகனை விட ஒரு இணக்கமான நபரை தாங்கள் விரும்பும் படி ஆட்சியில் அமர்த்திக் கொள்ளலாம் என நினைத்தது அமெரிக்கா. ஆனால் விடயம் தலை கீழாக மாறி விட்டது.
விடியும் போது இஸ்தான்புல் பாலம் மக்கள் கட்டுபாட்டில் வந்து விட்டது. இராணுவத்தினர் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். ஒரு வாரத்திற்கு பிறகு உளவுத்துறை அளித்த தகவல்கள் படி ஆட்சிக் கவிழ்ப்பை திட்டமிட்ட முதன்மை நபர்கள் அனைவரும் அமெரிக்க CIA-வுடன் மிக நெருக்கமாக இருந்ததையும் அவர்களில் ஓர் பேராசிரியர் இரண்டு ஆண்டுகளில் 15 முறை அமெரிக்கா சென்று வந்ததையும் கண்டுபிடித்தது துருக்கி.
அன்றிலிருந்து அமெரிக்க – துருக்கி இடையில் விரிசல் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக துருக்கியை முடக்க 100 வருடங்களுக்கு பிறகு 2018-ல் ஆர்மேனிய இனப்படுகொலையை ஐ.நா பொதுச்சபையில் அங்கீகாரம் செய்தது மேற்குலகம்.
1915-ல் VAN நகரின் ஆர்மேனியன் இனப்படுகொலையை செய்தது உதுமானியப் பேரரசு (Ottoman Empire)தான். மேலும் அந்த நிலத்திற்கு துருக்கியை பொறுப்பு ஆக்கியது. இது பெரிய அளவில் துருக்கி என்ற நாட்டையே சர்வதேச சமூகத்தின் முன் குற்றவாளியாக நிற்க வைத்தது. இதனால் ஏற்கனவே எதிரிகளாக இருந்த துருக்கி – அர்மீனியா இடையில் விரிசல் மேலும் பெரிதானது.
2020-ல் ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணையை துருக்கி வாங்கியதை காரணமாகக் கூறி எர்டோகன் அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இந்தத் தடை துருக்கி நாட்டின் நாணய (Lira) மதிப்பை வீழ்ச்சியடையச் செய்தது.
இந்த நிகழ்வுகள் நடக்கும் போதும் இதே துருக்கி NATO-வில் அமெரிக்கா இணைக்க விரும்பிய இடங்களில் எல்லாம் போர் புரிந்து கொண்டிருந்தது. இத்தனை நிகழ்வுகளின் பின்னணியில் NATO-வுடன் இணைவதா வேண்டாமா என இரட்டை மனநிலையில் எர்டோகன் இருந்த போது தான் 2022 பிப்ரவரியில் உக்ரைன் – ரஷ்யா போர் துவங்கியது.
உக்ரைன் – ரஷ்யா இடையில் சமாதான பேச்சுவார்த்தையை நடத்த முன் வந்தது துருக்கி. இஸ்தான்புல் சந்திப்பு வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த போது, உக்ரைன் – ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு இரண்டு நாட்கள் முன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை அனுப்பி ஒட்டுமொத்த சமாதான முயற்சிகளையும் உடைத்து விட்டது அமெரிக்கா. (இது குறித்த விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/a-prolonged-war-for-the-us-arms-market/ )
அதன் பிறகு போர் வேகமெடுக்கும் போது, சிரியாவில் இருந்து பெருமளவில் வாடகை இராணுவத்தை இஸ்தான்புல் கொண்டு வந்து அங்கிருந்து ரஷ்யாவுக்கு அனுப்ப நேரடியாகவே உதவியது துருக்கி. அதே நேரம் சிரியாவில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட்டு கொண்டிருந்தது துருக்கி.
இப்படி பல முரண்பாடுகளின் மூட்டையாக துருக்கி தத்தளிக்கும் போது தான் BRICS-ன் வளர்ச்சி உலக கவனம் பெற்றது. (BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு.)
பாலஸ்தீன போர் துவங்கியதும் BRICS-ன் முக்கியத்துவம் பரவலாக பேசப்படுகிறது. பாலஸ்தீனம் இந்த முறை BRICS உடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில் துருக்கி மக்களிடையே எர்டோகன் பாலஸ்தீனத்திற்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை என்ற கோபமும் உள்ளது. இதற்குச் சான்றாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது அதிபர் எர்டோகன் கட்சி. இதற்கு எர்டோகன் – அமெரிக்க நட்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சென்ற வருடம் துருக்கி BRICS கூட்டமைப்பில் இணைவது குறித்து ஆர்வம் காட்டி இருந்தாலும், தற்போது BRICS-ல் இணைவதற்கு நேரடியாக விண்ணப்பம் செய்து விட்டது. இது ஒருவகையில் ஆசிய நாடுகளுக்கு ஓர் வெற்றி வியூகம் (Strategy Victory) எனப்படுகிறது.
பொருளாதார ரீதியாக BRICS நாடுகளுடன் தடையின்றி வர்த்தகம் நடைபெறும் என்று உறுதியாவதால் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி போன்ற நாடுகளுடன் அமெரிக்க தலையீடு இல்லாமல் துருக்கி பரிவர்த்தனை செய்யலாம். ஏற்கனவே அமெரிக்காவின் ஆசைக்காக சிரியாவுடன் சண்டையிட்டிருந்த துருக்கி BRICS-ல் இணைவதன் மூலம் சிரியாவுடன் உறவை சுமூகமாக மாற்றக் கூடும். (சிரியா உடனான உறவை புதுப்பித்த பிறகு தான் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி போன்ற நாடுகள் BRICS கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
NATO-வில் இருப்பதால் கிடைக்கும் பயன்கள், BRICS-ல் கிடைக்கும் பயன்கள் என இரு பக்கமும் துருக்கி ஆதாயம் பார்க்கலாம் என்ற சில கருத்துக்களும் பரவுகின்றன. அதே நேரத்தில் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே மேற்குலகம் துருக்கியை NATO உள்ளே வைத்திருக்காது என்று துருக்கி நாட்டின் பத்திரிகையாளர் செர்ஹத் லைஃபோக்லு கூறுகிறார்.
வரும் அக்டோபர் மூன்றாம் வாரத்தில் (Oct-22) ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற உள்ள BRICS மாநாட்டில் நேரில் பங்கேற்கிறார் எர்டோகன். இந்த மாநாட்டில் பாலஸ்தீனம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சிறப்பு அழைப்பார்களாக இணைய உள்ளனர். ரஷியா-உக்ரைன் போர் நடக்கும் வேளையில் நடக்கும் இந்த BRICS மாநாடு இந்த முறை வெறும் ஒரு வார செய்தியாக இல்லாமல் உலக ஒழுங்கு மாற்றத்தில் (World Order Change) முக்கிய புள்ளியாக மாறப்போகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்தப் போவது துருக்கிதான் என்பது முற்றிலும் உண்மை.