லப்பர் பந்து – திரைப்பார்வை

விடுமுறை நாட்களில் மைதானங்களில் குவிந்திருக்கும் இளைஞர்கள் விளையாடுவது பெரும்பாலும் கிரிக்கெட்டாகவே இருக்கிறது. இதுவரை கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படங்கள் பொதுவாக இந்த விளையாட்டை சுற்றி நடக்கும் அரசியலாகவோ அல்லது குழுக்களுக்கு இடையேயான போட்டியாகவோ எடுக்கப்பட்டு வெற்றியை ஈட்டியவையாக இருக்கின்றன. அந்த வகையில் ஒன்றாக லப்பர் பந்து திரைப்படமும் இடம்பெற்று பலரின் மனதையும் வென்றிருக்கிறது. 

தமிழ் திரையுலகில் சமீப காலங்களில் சமூகப் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் புதுமுக இயக்குநர்களின் வரவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. அவர்கள் திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கு என்கிற நிலையில் இருந்து மாற்றி, சமூகச் சிக்கலை எளிய முறையில் கடத்தி விடும் திறனைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஒருவராக நம்பிக்கை தருகிறார் இப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து அவர்கள்.

அன்பு, பூமாலை இருவரும் கிரிக்கெட் பிரியர்கள். தனது வீடு முழுக்க மஞ்சள் நிறத்தையும், டோனியின் உருவத்தையும் வரைந்து வைத்திருக்கும் அளவிற்கு கிரிக்கெட்டை நேசிக்கிறான் அன்பு. பெயிண்டராக வேலை செய்யும் பூமாலை, மனைவியிடம் பொய் சொல்லி விட்டு போட்டிக்கு சென்று விடும் அளவிற்கு கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு உடையவனாக இருக்கிறான். பூமாலையின் அதிரடி ஆட்டத்தால் ஊர்க்காரர்களால் கெத்து என அழைக்கப்படுகிறான். அன்பு கதாபாத்திரத்தில் ஹரீஷ் கல்யாண், கெத்து கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார்கள்.

சொந்த ஊரில் இருக்கும் ‘ஜாலி ஃப்ரெண்ட்ஸ்’ அணியின் மீது ஈர்ப்புடன் இருக்கிறான் அன்பு. அந்த அணியில் ஒருவராக இருக்கும் ‘கருப்பையா’ அன்புவை, பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே விளையாட அழைக்கிறார். பட்டியலின இளைஞனாக இருப்பதால் அன்புவை தவிர்ப்பதற்கு அந்த அணியின் கேப்டன் வெங்கடேஷ் முயற்சிக்கிறான். கருப்பையா தனக்குப் பதிலாக விளையாடட்டும் என்று விட்டுக் கொடுக்கிறான். அந்த அணிக்கு எதிரான அணியில் கெத்து வந்து விளையாடுகிறான். விஜயகாந்த் பாடல் பின்னால் ஒலிக்க கெத்து பந்தை பறக்க விடுகிறான்.

கெத்துவை வீழ்த்த முடியாமல் ஜாலி பிரெண்ட்ஸ் அணி தவிக்க, அவனை வீழ்த்தும் பந்து வீச்சு முறையை தன் அணியிடம் சொல்கிறான் அன்பு. ஆனால் வெங்கடேஷ் ஏளனமாகப் பேசி உதாசீனப்படுத்தப்படுகிறான். அன்பு கோபத்துடன் பாதி விளையாட்டிலேயே செல்வதையும் பார்த்து வெங்கடேஷ் சாதிய ஏளனத்துடன் அணியினரிடம் பேசுகிறான். திறமை சார்ந்து விளையாடும் நபர்களுக்கு அதிக மதிப்பு தரப்படும் விளையாட்டாக  வெளியில் தெரிந்தாலும், அந்த நபரின் சாதியம் பார்க்கும் தன்மை இன்னும் எந்த விளையாட்டிலும் துருத்திக் கொண்டு இருப்பதை உணர்த்தும் காட்சியாக அது இருக்கிறது. 

இன்னொரு காட்சியில், இன்று டீமுக்குள் வருவான், நாளை வீட்டுக்கே வருவான் என்று கருப்பையாவிடம் வெங்கடேஷ் சொல்லும்படியாக ஒரு காட்சி. இடைநிலை ஆதிக்க சாதியினரின் உளவியல் அச்சத்தை ஒரே வரி வசனத்தில் எடுத்துக் காட்டி விடுகிறார் இயக்குனர்.         

பதினோரு வருடம் கழித்து, ஒரு விளையாட்டில் அன்புவும், கெத்துவும் எதிரெதிர் அணியில் மோதிக் கொள்ளும் வாய்ப்பு வருகிறது. எப்போதும் கெத்து ஆட வரும் போது போடப்படும் பாட்டு அந்த ஊரில் போடப்படாமல், அன்பு வரும் போது பாட்டு போடப்படுகிறது. அதிலிருந்தே கெத்துவின் அகங்காரம் (ஈகோ) தூண்டப்படுகிறது. அப்போதிருந்து மோதல் துவங்குகிறது. அன்புவும், அவன் நண்பனும் தனியாக நின்று பேசிக் கொள்வதை கெத்துவின் நண்பன் கேட்டு விடுகிறான். அதனை கெத்துவிடம் சொல்வதிலிருந்து இருவருக்கும் ஈகோ மோதல் முற்ற ஆரம்பிக்கிறது. அவர்கள் பார்வையிலேயே மோதிக் கொள்ளும் காட்சிகள் உயிரோட்டமானவை.  

கிரிக்கெட் மீது கொண்ட அலாதியான பிரியத்தினால், ஜெர்சி கடையே வைத்து விடுகிறான் அன்பு. ஜெர்சி கடைக்கு ஒருவர் மகனுடன் வருகிறார். மகனின் பெயருக்கு பின்னால் சாதி போட்டதனால் பிரச்சனையாகி விட்டது என்று சொல்கிறார். முன்பே அதைத்தான் சொன்னதாகக் கூறி, அன்பு அதை எடுத்து விடுவதாக சொல்கிறான். ஆனால் அந்த நபர், வெறும் சாதி என்று இருந்தால் மதிப்பு இல்லை, அதில் வீரம் என்பது விடுபட்டு விட்டது, பெயருக்கு முன்னால் வீர என்று சேர்க்கச் சொல்லும் காட்சி நகைச்சுவையாக இருந்தாலும், நிஜத்தில் ஆண்ட பரம்பரைகள் செய்யும் அலப்பறைகளை நினைக்க வைத்த நகைச்சுவையாக இருந்தது.  ஒரு கை இழந்த நபரை அதில் நடிக்க வைத்ததின் மூலமாக, அந்த கை சாதியக் கலவரத்தில் போயிருக்குமென்ற யூகத்தை நமக்குள் தோன்றச் செய்கிறார் இயக்குனர்.

ஜாலி பிரெண்ட்ஸ் அணியின் 20 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 20 அணிகள் கலந்து கொள்ளும் விளையாட்டிற்கு சுவரொட்டி ஒட்டுகிறான் கருப்பையா. அப்போது அங்கு வரும் அன்புவை சந்தித்து, அந்த விளையாட்டில் கலந்து கொள்ள அழைக்கிறான். அன்புவும் தயக்கத்துடன் சம்மதிக்கிறான். கருப்பையா பதாகையில் அன்பு படமும் போடுகிறான். அதற்கு வெங்கடேஷ், அன்பு படம் இருந்தால் எங்கள் படம் எல்லாவற்றையும் எடுத்து விடு என்பதாக ஒரு காட்சி. அதன் பின்னர், அன்பு தன் நண்பனிடம், வெங்கடேஷ் அண்ணனுக்கு தன் மேல் கோவம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்க, அதற்கு அவனுடைய  நண்பன், அந்த குழுவிற்குள் திறமை உள்ளவனாக நீ சென்றால், அவன் மதிப்பு அந்த அணியில் குறைந்து விடும் என்பதற்காகவே அந்தப் பயல், இந்தப் பயல் எனக் குறை கூறித் திரிகிறான் என்று பேசுவதாக ஒரு காட்சி. திறமையற்றவன் தன்மேல் போட்டுக் கொள்ளும் கவசமே சாதி என்பதை சுட்டிக் காட்டிய நேர்த்தியான வசனமாக அது இருந்தது. 

கெத்துவின் மகளையே காதலிக்கிறான் அன்பு. அது கெத்து, அன்பு இருவருக்கும் தெரியாது. அது தெரிய வரும் வேளையில் இருந்து கெத்துவிற்கு அன்பு மீது மேலும் மோதல் முற்றுகிறது. கெத்துவின் மனைவி யசோதாவாக சுவாசிகா நடித்திருக்கிறார். வேலைக்கு செல்லாமல் கிரிக்கெட்டிற்கு செல்லும் கணவன் மீது கோவம் கொண்டு, டிராக்டரில் வரும் அவர் மைதானத்தை வயலை உழுவது போல உழுது விட்டுச் செல்லும் அறிமுகக் காட்சியிலேயே அசத்தலான நடிப்பு. கெத்துவும், யசோதாவும் காதல் திருமணம் செய்தவர்கள். தன்னைப் போல தன் பெண்ணின் வாழ்க்கையும் அமைந்து விடக் கூடாது என நினைக்கும் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு  பொருந்திப் போகிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த காட்சிகள் நிறைந்திருக்கின்றன. கெத்துவின் மகளாக சஞ்சனா. அப்பாவின் சாயல் தெரிந்ததால் காதலித்ததாக அன்புவிடம் சொல்லி, அப்பாவே வந்து சொன்னால்தான் நம் திருமணம் என்று கறாராக கூறி விட்டு சென்று விடுகிறார். அப்பா, காதலன் இருவரின் ஈகோவையும் கரைக்கும் கதாபாத்திரம். காதல் தூது செல்லும் அன்புவின் தோழியாக மெளனிகாவின் நடிப்பும் அருமை.

கெத்துவின் அம்மா கதாபாத்திரம், மகனை விட்டுப் பிரிந்த சென்ற மருமகளின் வீட்டுக்கு மாடுகளை கூட்டிச் சென்று கட்டிப் போட்டு விட்டு, பாசத்தை எடுத்துச் சொல்லும் விதம் உணர்ச்சிப் பூர்வமான குடும்ப காட்சி.

முதல் முறையாக மருமகளின் வீட்டுக்கு வருகிறார். யசோதா பட்டியலினத்தை சார்ந்தவராக இருப்பதால் மருமகளின் வீட்டுக்கு சென்றதில்லை என்பது அவர்களுக்குள்ளான உரையாடலில் தெரிகிறது. தண்ணீர் குடிக்கிறீங்களான்னு கேட்க மாட்டியா என கெத்துவின் அம்மா கேட்கும் போது, நீங்கல்லாம் எங்க வீட்டுல தண்ணீர் குடிப்பீங்களான்னு தயக்கத்துல கேட்காம விட்டுட்டேன்னு சொல்லி விட்டு தண்ணீர் எடுத்து வருகிறார் யசோதாவின் அம்மா. இருவரும் நடிப்பில் நிறைகுடமாக ததும்புகிறார்கள்.   

திரைப்படத்தை நகைச்சுவையில் தூக்கி நிறுத்துகிறார்கள் அன்பு, கெத்து இருவருக்குமான நண்பர்கள் கதாபாத்திரங்கள். ஒவ்வொருவர் மனதிலும் ஒட்டிக் கிடக்கும் சாதி செயல்படும் விதத்தை போகிற போக்கில் சொல்லி விடுகிறார் அன்புவின் நண்பனான பால சரவணன். ஜெராக்ஸ் கடைக்கு வரும் கருப்பசாமியிடம், சாதி பார்க்காமல் இயல்பாகவே பழகுவதாகவே அவர் சொல்லும் காட்சியில், அவருக்குள்ளும் அவரே அறியாத நிலையில் சாதியம் இருப்பதை அவருக்கே உணர்த்தும் காட்சி சிறப்பு. அதைப் போல பால சரவணனே அறியாமல் அவருக்குள்ளும் ஆணாதிக்கம் இருப்பதை அன்பு உணர்த்தும் காட்சியும் சிறப்பு.

கெத்துவின் நண்பராக நக்கலைட்ஸ் திவாகர். கண்ணில் போதையை காட்டும் நடிப்பு. கெத்து விளையாடும் ஆட்டங்களில் எல்லாம் வந்து நண்பனை உயர்த்தி பேசுகிறார். நண்பனின் ஈகோவையும்  உசுப்பேற்றும் வகையான கதாபாத்திரம். படத்தில் கருப்பையாவாக காளி வெங்கட், வெங்கடேசாக சிஎஸ்கே நடித்திருக்கிறார்கள். சிறப்பான இசை, பின்னணியில் ஒலிக்கும் விஜயகாந்த் பாடல், கிரிக்கெட் ஆட்ட வர்ணனைகள், ஊர்களின் இயல்பான தோற்றத்துடன் காட்சி அமைப்புகள் என படக்குழுவினரின் ஒட்டுமொத்த திறமையும் இப்படத்தை தூக்கி நிறுத்திவிட்டது.

இப்படத்தில் வரும் கெத்து, அன்புவைப் போன்ற எத்தனையோ பேரின் திறமைகள் இன்னமும் இந்திய அணிக்குள் போக முடியாமல், அந்தந்த வட்டாரத்திற்குள் சுருங்கியே முடிந்து விடுகிறது. ஏற்கெனவே கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையாயான சாதிய முரண்களை கொண்டு ப்ளூ ஸ்டார் படமும் வெளிவந்து வெற்றி ஈட்டியது. அது போல, லப்பர் பந்து திரைப்படமும் சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரையிலும் நேசிக்கும் கிரிக்கெட் ஆட்டத்தின் ஊடாக சமூகத்தில் நிலவும் சாதிய சிக்கலையும் சேர்த்து தொய்வின்றி கொண்டு சொல்லும் படமாக இருக்கிறது. ஒரு சிலர் முன்னேறிச் சென்றாலும் இந்தியப் பார்ப்பனியம் கோலோச்சும் இந்திய அணியில் தமிழர்கள் கால் பதிக்க முடியாத சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அந்த சூழ்ச்சி அரசியலை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது ஜீவா என்கிற திரைப்படம்.

இந்தியப் பார்ப்பனிய அதிகார மட்டம் நுட்பமாக திறமையாளர்களை புறக்கணிக்கும் என்பதற்கு யாக்கர் நடராசனே சான்று. சாமானிய குடும்ப பின்னணி கொண்ட நடராசன் ஐபிஎல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். யாக்கர் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி பலரை வீழ்த்தினார். ஆனால் அவரை இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI, இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கவில்லை, தொடர்ந்து தவிர்த்து வருகிறது.

இப்படத்தில் கிரிக்கெட் என்னும் விளையாட்டில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் சாதி சார்ந்தே இயங்கி, ஒடுக்கப்படும் சாதியினரின் திறமையை மட்டுப்படுத்துபவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பக் கூடியதாக இறுதிக்காட்சி அமைந்திருக்கிறது. திரையரங்கினில் வெற்றி வாகை சூடிய இப்படம், Disney Hotstar OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »