1400 நாட்கள் நடைபெற்ற முதல் உலகப்போரைப் போல, 2000 நாட்களைக் கடந்த இரண்டாம் உலகப் போரைப் போல வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வெறியால் ரஷ்யா-உக்ரைன் போர் (19 நவம்பர் 2024 அன்று) 1000வது நாளைக் கடந்திருக்கிறது. இந்த 1000வது நாளில் உக்ரைன் ATACMS எனப்படும் தொலை தூர தாக்குதல் ஏவுகணை மூலம் ரஷ்யாவைத் தாக்கியதும், ரஷ்யா தனது அணுசக்தி கோட்பாட்டைத் திருத்தியதும் முக்கிய நிகழ்வுகளாக அறியப்படுகின்றன. மேலும் அமெரிக்கா கொடுத்த ஏவுகணைகள் மூலம் முதன்முறையாக ரஷ்யாவின் நிலப்பரப்பிற்குள் உக்ரைன் நடத்திய தாக்குதல் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்ற பதற்றத்தையும் உலக அரங்கில் ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரின் அண்மைய நிகழ்வாக நவம்பர் முதல் வாரத்தில் 10,000 வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவுடன் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் முகாமிட்டுள்ள வட கொரிய துருப்புகளுக்கு ரஷ்யா போர்ப்பயிற்சி அளிப்பதாக பென்டகன் ஊடகத் தொடர்பாளர் பாட் ரைடரும் அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.
வட கொரியா ரஷ்யாவிற்கு ஆதரவளித்ததற்கு பதிலடியாக அமெரிக்கா ரஷ்யாவை கடுமையாகத் தாக்க திட்டமிட்டது. தனது தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு உக்ரைனுக்கு உத்தரவிட்டு அதற்கேற்ற ஆயுதங்களையும் அனுப்பி இருக்கிறது அமெரிக்கா.
இதன் தொடர்ச்சியாகத்தான் போரின் 1000வது நாளான நவம்பர் 19, 2024 அன்று ரஷ்ய எல்லைப் பகுதியான பிரையன்ஸ்க் மீது அமெரிக்கா வழங்கிய ATACMS (Army Tactical Missile Systems) ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது உக்ரைன். 300 கிலோமீட்டர் தூரம் வரை வளிமண்டலத்தில் வேகமாகப் பறந்து ரஷ்யாவின் வான் பாதுகாப்பு கருவிகளைத் தாக்கும் செயல்திறன் கொண்டவை இந்த ATACMS ஏவுகணைகள். மேலும் ரஷ்யாவிற்குள் 110 கிமீ (70 மைல்) தொலைவில் உள்ள ஆயுதக் கிடங்கை ATACMS ஏவுகணை தாக்கி இருக்கிறது. இந்தச் செய்தியை உறுதி செய்ததோடு உக்ரைன் அனுப்பிய எட்டு ATACMS ஏவுகணைகளில் இரண்டை ரஷ்யா இடைமறித்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போர் தொடங்கிய நாளிலிருந்து பல முறை ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு உக்ரைன் அமெரிக்காவிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் வட கொரியா போருக்குள் நுழைந்த பின், போரின் தீவிரத்தை அறிந்து அமெரிக்கா உக்ரைனுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. உக்ரைனின் இந்த ATACMS ஏவுகணைத் தாக்குதலுக்கு ஐரோப்பிய நாடுகளும் அழுத்தம் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமெரிக்க சந்திப்பிற்குப் பிறகு ரஷ்யா மீதான தாக்குதலை அதிகப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் செயல்பட்டன. உக்ரைன் தங்கள் நாட்டின் ஆயுதங்களைப் பயன்படுத்த இந்த ATACMS தாக்குதல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதின.
உக்ரைனின் ATACMS தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா தனது அணுசக்தி கோட்பாட்டைத் திருத்தியது போரின் தீவிரத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு ரஷ்யாவின் அணு ஆயுத கொள்கை ‘தங்கள் நாட்டின் மீது அணு ஆயுதப் போர் தொடுக்கும் எந்த நாட்டின் மீதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம்’ என்பதாகவே இருந்து வந்திருக்கிறது. தற்பொழுது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாட்டிலிருந்து ஆயுதங்களை வாங்கி (அவை அணு ஆயுதங்களாக இல்லாவிட்டாலும்) தங்கள் நாட்டின் மீது தாக்கினால் தாக்குகின்ற தேசத்தை அணு ஆயுதத்தால் மீண்டும் தாக்க அனுமதிக்குமாறு சட்டத்தை ரஷ்யா மாற்றி உள்ளது.
உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு ரஷ்யா. அதே நேரத்தில் உலகின் மூன்றாவது பெரிய அணுசக்தி நாடாக இருந்து 1994 இல் தனது அணுசக்தி கொள்கையை கைவிட்ட நாடு உக்ரைன். ஆனால் தற்போது அமெரிக்கா உட்பட பல அணுசக்தி நாடுகளால் ஆதரிக்கப்படும் நாடாகவும் உக்ரைன் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி ரஷ்யா-உக்ரைன் போர் என்பது நேரடியாக ரஷ்யா-நேட்டோ போராக மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் “உக்ரைன் மற்றும் நேட்டோவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அணுஆயுதங்கள் பயன்படுத்துவது (ரஷ்யாவின்) உரிமை. இந்தப் போர் ஏற்கனவே மூன்றாம் உலகப் போராக உருவெடுத்து விட்டது” என்று எச்சரித்திருக்கிறார். இதன் அடுத்த கட்டமாக முதல்முறையாக 3000 கிலோ மீட்டர்கள் தாண்டி தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கொண்டு உக்ரைனை ரஷ்யா தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த கண்டம் விட்டு கண்டம்பாயும் ஏவுகணைகளின் நோக்கமே அணு ஆயுதங்களை ஏந்தி செல்வதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஏற்பட்ட அணு ஆயுதப் போட்டி இன்று மீண்டும் வீரியமடைந்திருக்கிறது. பல்வேறு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் வல்லாதிக்க நாடுகளின் போர் நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேற்குலகில் மக்களுக்கான போர்க்கால நெறிமுறைகளையும் அந்நாடுகள் வழங்கத் தொடங்கி விட்டன. ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நேட்டோ நாடுகள் போருக்குத் தயாராக இருக்கும்படியும் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை சேமித்து வைக்கும்படியும் தங்கள் குடிமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தி இருக்கின்றன.
கடந்த 2022இல் தொடங்கிய போர், அமைதி பேச்சுவார்த்தை எதுவும் எட்டாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. போர் பாதிப்புகள் குறித்து முறையான அறிக்கைகள் எதுவும் வெளிவராமல், வல்லாதிக்க நாடுகள் தங்கள் ஆயுத பலத்தை காட்சிப்படுத்தும் போராக மாறி வருகிறது. இதன் தாக்கங்கள் தெற்காசிய பகுதியில் தொடர்ந்து எதிரொலிக்கும். போரினால் இந்தியப் பெருங்கடல் சந்திக்கும் புவிசார் மாற்றங்கள் விரைவில் நம் கண்முன்னே புலப்படும்.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள கீழுள்ள கட்டுரைகளை வாசிக்கவும்: