ஐயப்ப பக்தியின் பெயரால் பெண்களின் மீது நடக்கும் தீண்டாமை

கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக்கொண்டு இருப்பதும், கோவில்களில் சரண கோஷங்கள் கேட்பதும் வாடிக்கையான ஒன்று. பக்தி பரவசத்தில் விரதம் இருந்து மாலை அணிந்த சபரிமலை ஐயப்பன் பக்தர்களை காணும் நமக்கு, இந்த விரதங்கள் பின்னால் பெண்களுக்கு ஏற்படும் உடல்/உளவியல் சிக்கல்களை விவாதிப்பதற்கு கூட இன்றைய சூழல் அனுமதிப்பதில்லை.

சபரிமலை தேவசம்போர்டு விதிகளின்படி பெண்கள் அந்தக் கோவிலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். ஆண்களுக்கு மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. சிறு வயது பெண் குழந்தைகள் அதாவது 10வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் செல்லலாம். அல்லது வயது முதிர்ந்து அதாவது மாதவிடாய் நின்ற பிறகே பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்பது ஆலயக் கட்டுப்பாடு. ஆனால் முதிர்ந்த வயதில் பக்தி இருந்தாலும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் சிக்கல்களால் மலைக்கு போகவே முடியவில்லையே என வருந்தும் பெண்களும் இருக்கிறார்கள். 

பக்தியால் மாலையிடும் ஆண்களை விட, கணவருக்கு புகை,மது போன்ற தீய பழக்கம் இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ள பெண்களே வற்புறுத்தி மாலை போட வைப்பதையும் நாம் காண முடியும். மாலை அணிந்து கொண்டால் அந்த தீயபழக்கத்திலிருந்து 48நாட்களாவது விலகியிருப்பார், அதனால் நமக்கும் நிம்மதி என்றே அப்பெண்கள் நினைக்கின்றனர். மாலை அணிந்த பிறகாவது தனது கணவர் திருந்தி வாழ்மாட்டார்களா என்ற ஏக்க பெருமூச்சுடனே பெண்கள் வாழ்கிறார்கள். ஒரு சில குடும்பத்தை தவிர 95% குடும்பங்களில் இந்த காரணமே ஆன்மீகப் பழக்கங்களை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இப்படி பழகிய ஒரு சிலர் கோவிலில் தரிசனம் முடிந்தவுடனேயே (திரும்பி வரும் வழியிலேயே) மது குடித்துவிடுவதாக புலம்பும் பெண்களும் உண்டு.

மாலை போட்டுகொண்டு மலைக்கு சென்று திரும்பவந்து சேரும் வரை குடும்பத்து பெண்களின் மனநிலை, உடல்நிலையில் பல வகை பிரச்சனைகள் எழுவதை யாரும் உணருவதில்லை. கணவரோ, மகனோ, மாமனாரோ மாலை போடப்போவதாக இருந்தால் முதல்வாரத்திலேயே வீட்டை ஒட்டடை அடித்து சுத்தப்படுத்த வேண்டும், அடுத்து அனைத்து போர்வைகள், படுக்கை விரிப்புகள் என அனைத்தையும் துவைத்து வைத்தாக வேண்டும். அசைவம் செய்த பாத்திரங்களை ஓரம்கட்டி சைவ உணவுக்கென தனியான பாத்திரங்களை எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வேலைகளில் பெண்களின் பங்குதான் 95% இருப்பதை பார்க்க முடியும்.

கார்த்திகை பிறக்கும் முன்தினம் முதற்கொண்டு சபரிமலைக்கு சென்று வரும் நாள் வரை பெண்கள் தினமும் தலைக்கு குளித்துவிட்டு தான் சமைக்க தொடங்க வேண்டும். தினமும் தண்ணீர் கொண்டு வீட்டை சுத்தம் செய்து, காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி பூசை வேலைகள் முடித்துவிட்டு பின்னர் சமையல் தொடங்க வேண்டும். மாலை போட்டவர்கள் பழைய சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டார்கள் என்பதால் எந்தவித அனுசரனையும் இல்லாது மூன்று வேளையும் சமைக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு உண்டு. அதுவும் ஒரு சில வீட்டில் மாலை போட்டவர்கள் முதலில் சாப்பிட்ட பின்னரே மற்றவர்கள் சாப்பிடும் பழக்கம்கூட இருக்கிறது என அறியமுடிகிறது.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உள்ள வீட்டில் இது போன்ற நேரங்களில் பெண்களின் வேலைபளு இன்னும் அதிகமாக இருக்கிறது. மாலை அணிந்த ஆண் துடப்பத்தை தொட மாட்டார்கள். காலை எழுந்து குளித்து கோவில் செல்வது பிறகு மீண்டும் மாலை குளித்து கோயில் சென்று வந்து உணவு உண்டு உறங்கி மீண்டும் மறுநாள் என இந்த விரதமானது 48நாட்கள் தொடர்கிறது. 

விரத நாட்கள் 48 நாட்கள் என்பதால் கட்டாயம் இடையில் பெண்களுக்கு மாத விலக்கு  (இயற்கையை ’தீட்டு’ என்று சொல்லும் மூடநம்பிக்கை) நேரத்தில் உறவினர் வீடுகளுக்கு சென்று 5 நாட்கள் தங்கவேண்டும் அல்லது தனியறையில் சிறை கைதிப்போல தங்க வேண்டும், அவர்களுக்கு தேவையானதை செய்யும் உரிமையும் தடைப்படும்/மறுக்கப்படுகிறது. மேலும் ஐயப்பனுக்கும் மாலை போட்ட கணவரை பார்க்கக்கூடாது, அவர் எதிரில் வரவேக்கூடாது, ஒருவேளை உறவினர் வீடுகளிலும் மாலை போட்டவர் இருந்தால் தெரிந்தவர்கள் வீட்டில் போய் தங்க வேண்டும். இவ்வாறு தெரிந்தவர்கள்/ உறவினர்கள் வீட்டில் பெண்கள் தங்குவது அவர்களுக்கு ஒரு வித சங்கடத்தைக் கொடுக்கும்.

மறுபுறம் தனக்கு என்ன வேண்டும் என்பதை கூச்ச உணர்வுடனேயே அவர்களிடம் கேட்கும் சூழ்நிலைதான் இருக்கும். தான் எவ்வளவு சாப்பிட விரும்பினாலும் அது மற்றவர்கள் வீடு என வரும்போது ஒரு வித கூச்சமும் அச்சமும் சேர்ந்து, மாதவிலக்காகும் அந்த 5 நாட்களை நரகம் போல் கடத்தவேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பது போல் உறவினர் வீட்டில் / பக்கத்து வீட்டில் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்? மாதவிலக்காகும் நாட்களில் பெண்களுக்கான தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் முக்கியமானது. ஆனால் வேறொருவர் வீட்டில் இதை பெண்கள் எதிர்பார்க்க முடியாது.

அடுத்து தனது மனைவியையோ, மகளையோ, தாயையோ மற்றவர் வீடுகளில் போய் அந்த ஆணே தங்க சொல்வது என்பது பெண்களுக்கு அவமானமாகவும், மிகுந்த மன உளைச்சலையும் தரக்கூடிய செயலாகும். பள்ளி செல்லும் குழந்தைகள் தனது தாய் வீட்டில் இல்லாததால் சரிவர பள்ளிக்கு செல்ல முடியாமல், சரியாக உணவு உண்ணாமல் அலைகழிக்கப்படுவதும் அவர்களின் மனதையும் கல்வியையும் பாதிக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனது குழந்தைகளையும் மனைவியையும் சிரமத்தில் தள்ளிவிட்டு கடவுளை வேண்டி விரதம் இருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? குடும்ப நபர்களை சங்கடப்படுத்தி அவர்களது சுய மரியாதையை குலைத்து வரும் பக்தி யாருக்காக எனும் கேள்வி எழுகிறது.

உடல் உழைப்பை கூட தர தயாராக இருக்கும் பெண்கள் இது போன்ற தர்மசங்கடமான நிலையை ஏற்கச்சொல்வதை தவிர்க்கவே நினைக்கிறார்கள்.

இந்த ஐயப்பனுக்கு மாலை போடும் நாட்கள் என்பது குளிர்காலம், மழையும் சேர்ந்து கொள்ளும். பெண்கள் தினமும் தலைகுளித்துவிட்டு ஈரமாக முடியை முடிந்து கொண்டே வேலைகளை மேற்கொண்டு, அதிலேயே முழு கவனத்துடன் இருப்பதால் தனது உடல்நிலையை கவனிக்க முடிவதில்லை, இதனால் இவர்கள் பெரும்பாலும் சளி,காய்ச்சல் முதல் ENT பிரச்சினைகள் வரை பல உடல் நலக்கோளாறுகளை சந்திக்க வேண்டி உள்ளது.

நிதானமாக சிந்தித்தால் மாலை மட்டும் ஆண்கள் போட வேண்டும், ஆனால் அவர்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்ய வேண்டும், இதுதான் நடைமுறையாக இருப்பது புலப்படும். அன்றாட வேலைகளுடன் இந்த வேலைகளும் சேர்ந்து கொள்வதால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. 

அடுத்து மலைக்கு புறப்படும் நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெண்கள் அதிகாலை எழுந்து மலைக்கு கிளம்பும் கணவருக்கு கட்டு சோறு, சப்பாத்தி, மற்றும் பலவகை உணவுடன் சாப்பாடு தயாரித்து அக்கம் பக்கத்தினரை அழைத்து உணவு அருந்தச்சொல்லி உபசரித்து அனுப்புவார்கள். “இந்த வேலைப்பளு குறைந்து, இனி ஒரு  வருடம் கழித்து தான் இது போல் வேலைகள் செய்ய வேண்டும்” என்ற எண்ணம்தான் காரணம்.

பண்டிகைகளும் பூசை புனஸ்காரங்களும் எளிய குடும்பத்திற்கு பணவிரயம் தான். இருப்பினும் பெண்கள் தன் பணிச்சுமையை அதிகமாக விரும்பியே ஏற்றுக்கொள்ளவதற்கு முக்கிய காரணம் ஒன்றுதான். அந்த காலத்திலாவது தனது குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும் என்ற ஏக்கத்தினால் தான் பெண்கள் இதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கு முழுக்காரணம் ஆண்களின் மது போதையும், புகைப்பழக்கமுமே. 

இது ஒருபுறம் இருந்தாலும் பொதுவாகவே ‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்’ என்றார் தந்தை பெரியார்.  உண்மைதானே! தான் மாலைபோட்டுக்கொண்டு சாமியார் போலவும் தனது மனைவியிடம் அனைத்து வேலைகளையும் வாங்கிக்கொண்டு, பெண்களை தொட்டால் தீட்டு என நினைக்க வைத்து, பெண்ணை தன்னைத் தானே தீட்டாக பார்க்கசொல்லுவது பிற்போக்கு சனாதன மனநிலையையே உருவாக்குகிறது. மேலும், மிகவும் முக்கியமாக பெண்களின் மாதவிலக்கு நேரங்களில், அவர்களின் சுரப்பிகளின் (ஹார்மோன்கள்) செயல்பாட்டினால் உடலளவில் வலி, சோர்வு ஏற்படுவதோடு மனதளவில் அவர்களின் கோவ உணர்வும் அதிகமாக இருக்கும் என்பது மருத்துவ ரீதியான உண்மை. ஆனால் அந்த நேரத்தில் தான் அவர்கள் சொந்த வீட்டில் கூட இருக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவார்கள்.

பெண்களை தொட்டால் தீட்டு என நினைக்கும் போது அவர்கள் செய்யும் உணவை உண்பதையோ, துணி துவைப்பதையோ, பூஜை சாமான்களை தொட்டு துலக்குவதையோ தீட்டாக பார்ப்பதில்லை. இத்தகைய பிற்போக்குத்தனத்தைத் தான் தந்தை பெரியார் எதிர்த்தார். பெண்களை அடிமை போலவும் ஆண்தான் உயர்ந்தவனைப் போலவும் நினைக்க செய்வது பக்தி போர்வையில் நுழையும் சனாதனம் என்கிறார். மனிதனை மனிதன் வெறுப்பதும் ஒதுக்குவதும் நடக்கும் இடம் கோவில் என்றால் அதை தவிர்த்துவிடுங்கள் என்றார்.

பார்ப்பனர்கள் கோவிலில் செய்யும் பிற்போக்கு செயல்களை ஆண்கள் வீட்டில் செய்கிறார்கள். இது பல சந்தர்ப்பங்களில் பெண்களின் மனதை காயப்படுத்துவது போலாகும். ஆனாலும் பெண்கள் பொறுமையாக இருந்து அனைத்து குடும்பக் கடமைகளையும் நிறைவேற்றுகிறார்கள். இது காலப்போக்கில் கணவர் மீது வெறுப்புணர்ச்சி வர காரணமாக கூட இருக்கலாம். 

அதனுடன் மகனோ குழந்தையோ மாலை போட்டுவிட்டால் பெற்றவர்களே பிள்ளைகளென்றும் பாராமல் அவர்கள் காலில் விழுந்து வணங்குவதை பார்க்க நேரிடுகிறது.  ஒரு சாதாரண மனிதன் மாலை அணிந்துகொண்டால் எப்படி சாமியாக முடியும் என்ற பகுத்தறிவுக் கேள்வியை எவரும் எழுப்புவதில்லை.

குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்கும் சரிபங்கு வகிக்க, வேலைக்கு செல்கிறார்கள் பெண்கள். குடும்ப வேலைகளை சம பங்காக பிரித்து செய்யாமல் இன்னமும் பெரும்பாலான ஆண்கள், அவர்களின் வேலைக்காகக் கூட பெண்களை ஏவல் செய்யும் நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் ஆண்கள் மாலை போட்டு விட்டால்  ஒட்டுமொத்த சுமையும் சுமப்பவர்களாகி விடுகிறார்கள் பெண்கள். இந்நிலை மாற வேண்டும். ’ஐயப்பனுக்கு மாலை போட விருப்பப்படும் ஒரு ஆணின் பக்தியின் பின்னால், சுரண்டப்படும் தங்களின் உடலியல், உளவியல் சிக்கல்களை பெண்கள் உணர வேண்டும்’.

இயற்கையாக உடலில் ஏற்படும் உயிரியல் மாற்றத்தை வைத்து ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்காததை உச்ச நீதிமன்றமும் கண்டித்து விட்டது. மாதவிலக்கு முன் வைத்து பெண் அடிமைத்தனம் வளர்க்கும் வழியாக ஐயப்பனுக்கான மாலை போடும் சடங்கு இருக்கிறது. ’மாதவிலக்கு என்பது செழிப்பின் அடையாளம். தலைமுறையை விருத்தி செய்யும் பெண்மைக்கு ஆதாரம். தமிழினம் பெண்களின் மாதவிலக்கை தீட்டாக கருதியதில்லை’. ஆனால் பார்ப்பனிய சடங்கு, சம்பிரதாயங்கள் புனிதத்திற்கு மதிப்பை கூட்டுவதற்காக, பெண்களை தீட்டாக மாற்றும் வேலையை செய்திருக்கின்றன. பெண்கள் முதலில் தங்களிடம் உருவாக்கிய மூளைச்சலவையில் இருந்து வெளிவர வேண்டும். மூட நம்பிக்கையை வழிவழியாகக் கடத்தும் பழமைத்துவ பழக்க வழக்கங்களிலிருந்து மீள வேண்டும்.

அறிவுடைய மனிதன் தனது நேரத்தையும், அறிவையும் ஆற்றலுக்கு பயன்படுத்தி முன்னேற வேண்டும். தனது குழந்தைகளுக்கு ஆசானாக, நல்வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெற்றோர்கள் பகுத்தறிவை போதிக்காமல், சுயமரியாதையை விதைக்காமல் இது போன்ற பிற்போக்குத்தனங்களில் தனது குடும்பத்தை தள்ளக்கூடாது என்பதை சமூகக் கடமையாக முன்வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »