இந்திய ஒன்றியத்தின் வரலாற்றில் சனாதன கொடுங்கோலர்கள் அஞ்சும் ஒரு பெயர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயர். அறிவியல்ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் இந்துத்துவ சனாதன கும்பல்களுக்கு சவாலாக இருந்து அவர்களின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்திய பெருமை அண்ணல் அம்பேத்கரையே சாரும். அதன் காரணமாக இந்துமத வெறியர்களால் தொடர்ச்சியாக இழிவுபடுத்தக் கூடிய தாக்குதல்களை சந்தித்து போது, அவற்றை தமது அறிவாற்றலால் தோற்கடித்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அப்படி இழிவுபடுத்தும் சிறுமதியர் கூட்டத்தில் பாஜகவின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருபடி மேலே சென்றுள்ளார்.
வடஇந்தியாவில் சனாதன அமைப்புகளுக்கு எதிராக களமாடுவது எளிய காரியமல்ல. அதிலும் தலித் சமூகத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, இது பன்மடங்கு சவாலாக இருந்தது. பேராசிரியராக இருந்தாலும் தனிக் குடத்தில் தண்ணீர் குடிக்கும்படி சாதி இந்துக்களால் வற்புறுத்தப்பட்ட போது “உங்களுக்கு வேண்டுமானால் தனியாக வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொள்ளுங்கள்” என்று தம் சுயமரியாதையை நிலைநாட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.
அன்று தொடங்கி அவரது இறுதி காலம் வரை, பொதுவெளியில் அவரை அவமதிப்பதை ஒரு வேலைத்திட்டமாகவே பார்ப்பன தலைமைகளும், ஊடகங்களும் வைத்திருந்தன. அண்ணலின் பெரும் பணியாகிய இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு, தேர்தல் கூட்டணி, கோயில் நுழைவு போராட்டம், இந்து சட்ட வரைவு எனத்தொடங்கி இறுதியாக அவரது இந்து மத மறுப்புக்கான புத்தமத ஏற்பு வரை பார்ப்பன ஊடகங்கள் அவரை எள்ளி நகையாடின. ஆனாலும் அவரது சீரிய பார்வையும், மனஉறுதியும் இந்திய ஒன்றியத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டர்களுக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு வெளிச்சத்தையும், அதிகாரப் பகிர்வையும் தந்தது.
இதுவே இன்று வரையிலும் அமித்ஷா போன்ற பாசிசவாதிகளுக்கு அண்ணலின் மேலான வயிற்றெரிச்சலுக்கு காரணமாக இருந்து வருகிறது. இதனை தனது பொறுப்பான பதவிக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத வகையில், கடந்த 17ம் தேதி இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வெளிக்காட்டினார் பாஜகவின் இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய இந்த அமைச்சர் உறுப்பினர்களை பார்த்து “இப்பொழுதெல்லாம் அம்பேத்கர் , அம்பேத்கர், அம்பேத்கர்……என்பது ஒரு பேஷனாகி விட்டது” என்று தனது ஆதிக்க புத்தியை காட்டினார். அத்துடன் நில்லாமல் அண்ணலின் பெயரை கேலிசெய்யும் விதமான உடல் மொழியோடு “அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் “ என்று நான்கு முறை கூறிவிட்டு “இந்தனைமுறை அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு பதிலாக பகவான் பெயரை சொல்லியிருந்தால் 7 ஜென்மத்துக்கும் சொர்க்கம் கிடைத்திருக்கும்” என்றும் அண்ணலை இழிவுபடுத்தினார்.
இது குறித்த பலத்த கண்டனம் இந்தியா முழுவதும் பரவலாக எழவே, “AI மூலமாக தந்து கருத்தை திரிக்கிறார்கள்” என்று மழுப்பி திசை திருப்பப் பார்த்தார் அமித்ஷா. பின்னர் இந்த மொத்த நிகழ்வையும் மடைமாற்ற வழக்கம் போல் நேரு, காங்கிரஸ் என்று புலம்ப தொடங்கி இருக்கிறார்கள் பாஜக சங்கிகள்.
அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்தி தலித் வாக்கை அறுவடை செய்யப் பார்க்கும் பாஜகவின் மிக மூத்த அமைச்சர் அண்ணலைப் பற்றி திடீரென இப்படி சர்ச்சையை கிளப்ப காரணமாக “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதாவின் தோல்வியும், அதை திசை திருப்பவே அண்ணலை இழிவுபடுத்துவதாகவே தோன்றுகிறது. மாநில உரிமைகளை நூறு விழுக்காடு குழிதோண்டிப் புதைக்கும் இந்த மசோதா மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு என்ற அளவில் ஆதரவு இல்லாததால் தோல்வியுற்று தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது பாஜக-விற்கும், மோடிக்கும் பெரும் தோல்வியே.
ஆனால் இந்தத் தோல்வி ஒரு விவாதப் பொருளாக மாறிவிடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதற்காக மிகக் கேவலமாக சட்டமேதை அண்ணலை பகடைக்காயாக மாற்றியுள்ளது. இந்திய ஊடகங்களும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவைவிட அண்ணல் குறித்த அமித்ஷாவின் பேச்சு உணச்சிப்பூர்வமானது என்பதால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவைப் பற்றி எந்த விவாதத்தையும் உருவாக்கவில்லை.
அண்ணலை பற்றிய அமித்ஷாவின் பேச்சு எப்படி அம்பேத்கரை இழிவுபடுத்துகிறதோ அதேபோல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவும் அண்ணலின் பன்முகப்பார்வையை இழிவுபடுத்தும் செயலே என்பதை மக்கள் உணரவேண்டும். இது போன்ற இடையூறுகளை இந்துத்துவ ஆற்றல்கள் இந்திய ஒன்றியத்தில் உருவாகும் என்பதை உணர்ந்தே “இந்தியாவில் இந்துத்துவ பெரும்பான்மை ஆட்சி அமைந்து விடவே கூடாது” என்பதில் அண்ணல் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். இந்துமதத்தை துறக்கவும் செய்தார்.
இந்தியா முழுவதும் வரலாறு காணாத தலித் மற்றும் பழங்குடி மக்கள் விரோதத்தை பாஜக வளர்த்து வருகிறது. சில தினங்களுக்கு முன்புகூட உத்திரபிரதேசத்தில் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக ஐந்து சிறுவர்கள், சாதி இந்துவெறியன் ஒருவனால் கட்டிவைத்து பிரம்பால் அடித்து கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர். இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களிலும், இந்துத்துவ சங்கிக் கும்பல்கள் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களிலும் நடந்து வருகின்றன. எந்த அடித்தட்டு மக்களுக்காக அண்ணல் போராடினாரோ அந்த மக்களை தன் இந்துத்துவ ஆதிக்கத்தை வைத்து நசுக்கும் பாஜக இப்பொழுது அண்ணலையும் இழிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.
“தலித் அமைப்புகளின் சிறப்பியல்பாக இருப்பது பிளவுபடும் தன்மையாகும்.” என்று கூறுகிறார் அண்ணலின் பேரனான தோழர். ஆனந்த் டெல்டும்டே. இந்த காரணியையே பாஜக போன்ற தலித் விரோத கட்சிகள் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல்கள் ஒன்றுபடாமல் செய்து சனாதன சமூகத்தன்மையை காத்துவருகின்றன. இனியும் தலித் மக்களும், ஒருசில தலித் அமைப்புகளும் பாஜகவை ஆதரிப்பது அண்ணலுக்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகம்.
ஏனென்றால் பாஜகவின் உதடுகள் வேண்டுமானால் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கலாம். ஆனால் அவர்கள் மனதில் குடியிருப்பது சம்புகனின் தலையை வெட்டிய ராமனின் உடைவாளே.