தமிழ்த்தேசிய அரசியலில் தன்னிகரில்லா படைப்பாளி ஓவியர் வீர சந்தானம் அவர்கள்.
“ஏற்றத்தாழ்வு அல்லாத, சாதிகள் அல்லாத ஒரு தமிழ்த்தேசியம் இங்கு உருவாகத்தான் போகிறது. அதை நான் என் வாழ்நாளில் பார்க்கத்தான் போகிறேன்”. இத்தகைய நம்பிக்கையை உறுதியோடு கொண்டிருந்த மாபெரும் படைப்பாளிதான் ஓவியர் ஐயா. வீர சந்தானம் அவர்கள். தமிழ்த்தேசிய அரசியலாளரும், தமிழீழ ஆதரவாளரும், மிகச் சிறந்த ஓவியருமான ஐயா. வீர சந்தானம் அவர்கள் மறைந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. அவரது மறைவின் போது “ஐயோ” என்று தமிழ்ச் சமூகத்தின் கலையுலகும், அரசியல் உலகும் பதறியதைக் காணும் போது எத்தகைய வெற்றிடம் அம்மறைவால் உருவாகி இருந்தது என்பதை உணர முடிகிறது.
ஐயா. வீர சந்தானம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழாசிரியராக உருவாகிவிட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த அவர், ஓவியராக உருவெடுத்து இருந்தார். கோயில் சிற்பங்களையும், அதனுள் புதைந்திருக்கும் நுணுக்கமான கலைநயத்தையும் இயல்பாகக் கண்டு கொள்ளும் திறமை படைத்தவராக இருந்ததால் பல்வேறு கோயில் வடிவங்களை தனது ஓவியத்தின் வழியே வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ச்சியாக கோயில் சார்ந்த ஓவியங்களை வரையும் பொழுதுதான் அதே கோயில்களில் யாருமே கண்டிராத அல்லது கவனத்தில் எடுத்துக் கொள்ளாத பல வியப்பூட்டும் ஓவியங்கள் இருப்பதைக் கண்டு, அவற்றை மறுபதிப்பு எடுத்து, அவ்வாறு மறுபதிவிட்ட ஓவியங்களை விற்று தனது கல்லூரி படிப்பை முடித்து வந்தார்.
இந்திய ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கிருக்கும் கலை நுணுக்க ஓவியங்களையும், கட்டமைப்புகளையும் கண்டு வந்து அவற்றையும் தன் ஓவியங்களின் வழியாக காட்டத் தொடங்கினார். அது மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து அம்மண்ணின் கலைகளைக் கூர்ந்து கவனித்து அவற்றையும் தனது தூரிகை மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
ஐயா. வீர சந்தானம் அவர்களின் ஓவியம் குறித்த பேச்சுக்கு இடையே ‘கோடு’ என்ற சொல்தான் அதிகம் ஒலித்திருக்கும். ஓவியத்திற்கு கோடு எவ்வளவு முகாமையானது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியது மட்டுமல்லாமல், தனது ஓவியங்களிலும் காட்டிவந்தவர். குறிப்பாக கோயில் சிற்பங்கள் சார்ந்த ஓவியங்களை மீட்டுருவாக்கம் செய்யும்பொழுதும் சரி, அச்சிற்பங்கள் குறித்த தன்னுடைய கற்பனை கலைப்படைப்புகளை உருவாக்கும் போதும் சரி, அவர் கோடுகளையே அதிகமாக பயன்படுத்தியிருந்தார். தனக்கு பிடித்த பல ஓவிய ஆளுமைகளை குறித்து பேசும் பொழுது கூட அவர்கள் கோடுகளை எவ்வளவு நளினமாக திறம்பட பயன்படுத்தி இருந்தனர் என்று பேசுவதை நம்மால் காண முடிகிறது.
குறிப்பாக ஐயா. வீர சந்தானம் அவர்கள் வரைந்த யாழ், காமதேனு போன்ற ஓவியங்களில் வண்ணங்களை விட கோடுகள் மிர்வதையே காண முடியும். நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளையும், பல்வேறு மரங்களில் இலைகளையும், காய்கனிகளையும் ஒரே மரத்தில் இருப்பது போல் அவர் வரைந்திருந்த ஓர் ஓவியம் அவரது கற்பனைக்கும் சிந்தனைக்கும் மிகப்பெரும் எடுத்துக்காட்டாய் இருக்கிறது.
திரைப்படங்கள் ஒரு சிலவற்றிலும் நடித்த அனுபவம் கொண்டவராக விளங்கிய ஐயா. வீர சந்தானம் அவர்கள், தோல்பாவை கூத்து என்னும் கலையை பற்றி சிலாகித்து பேசக்கூடியவராகவே இருந்திருக்கிறார். தோல்பாவை கூத்துகளில் பயன்படுத்தப்படும் உருவங்களை தனது படைப்புகள் வழியாகவும், தன்னிடம் ஓவியங்கள் வரைந்து கொடுக்கச் சொல்பவர்களின் பொருட்கள் வழியாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார். பழங்குடி சமூகத்தினரின் மரபையும் வாழ்வியலையும் அடையாளப்படுத்தி எண்ணற்ற ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்.
தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவராகவும், எதை சரி என்று நினைக்கிறாரோ அதை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் செய்து காட்டக் கூடியவராகவும் விளங்கியவர் ஐயா. வீர சந்தானம் அவர்கள். கலைக்கும் சமூகத்திற்குமான உறவு பற்றி கூறும்பொழுது கலை சமூகத்தின் ஒரு அங்கம் என்றும், கலைஞன் ஒரு சமூகத்தை மாற்றக்கூடிய கருவி என்றும் கூறியிருந்தார். “கலைஞன் என்பவன் ஒரு இயக்கம். அவன் ஒருவன் இயங்கினால் ஒரு ஆயிரம் பேர், ஒரு கோடி பேர் இயங்கியது போல இருக்கும்” என்று தெளிவுபட கூறியவர் ஐயா. வீர சந்தானம் அவர்கள்.
ஒரு கலைஞன் அடிப்படையில் போராளியாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லாமல் வாழ்ந்து காட்டியவர் ஐயா. வீர சந்தானம் அவர்கள். அப்படிப்பட்ட வாழ்வே சுயமரியாதை வாழ்வென்று சுட்டிக்காட்டி “எழுத்தாக இருந்தாலும், கவிதையாக இருந்தாலும், ஓவியமாக இருந்தாலும் நாம் ஒரு மூர்க்கமான போராளியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நாம் மானத்தோடு வாழ்வோம்” என்று கூறினார். இதனை தனது ஓவியங்களின் வழியாகவும் வெளிப்படுத்தினார். அவர் வரைந்த பல்வேறு கூட்டு ஓவியங்களின் ஊடே ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வலியை காண முடிகிறது. அதனூடே நம்முடன் பிணைந்திருக்கிறார் ஐயா. வீர சந்தானம் அவர்கள்.
தோழர் வீர சந்தானம் அவர்கள் ஓவியர் மட்டுமல்ல, அவர் ஓர் தமிழ்த்தேசிய போராளி. தமிழ் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று நினைத்த காரணமோ என்னவோ தன் இறுதி மூச்சு வரை தமிழ்த்தேசிய இனத்திற்காக உழைத்து தன்னை ஓர் தமிழ் தேசியவாதியாக முன்னிறுத்தினார். குறிப்பாக தமிழீழ இனப்படுகொலையை கலை வழியே அடையாளப்படுத்தியதில் ஐயா. வீர சந்தானம் அவர்களின் பங்கு அளப்பரியது.
1984-லேயே ‘இனப்படுகொலை’ என்ற ஓவியக் கண்காட்சியை நடத்தியவராக திகழ்கிறார். தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களின் மரபு உரிமையான தமிழீழத்தையும், அதற்காக மாபெரும் ஈகங்களை செய்திட்ட தமிழீழ விடுதலைப் புலிகளையும் இறுதி நாள் வரை ஆதரித்து “இலங்கை இரண்டாய் உடையும், எங்கள் நிலம் எங்களுக்கு கிடைக்கும். இன்றுவரை என் வாழ்க்கை அதற்காகத்தான் இருக்கிறது” என்று முழங்கியவர்.
ஐயா வீர சந்தானம் அவர்களின் அளப்பரிய படைப்பாக விளங்குவது தஞ்சாவூர் பகுதியில் அவர் கைப்பட உருவாக்கிய முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற கலை படைப்பு. இது 2009 ஆம் ஆண்டு தமிழீழ இறுதிப் போரில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை மையமாகக் கொண்டும், அதுவரை தமிழீழத்தில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகளையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் மீதான சிங்கள இனவெறி தாக்குதல்களையும் நினைவுபடுத்தும் வண்ணமும் அமைந்துள்ளது.
தமிழீழ உரிமை குறித்து மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்காகவும் களம் கண்ட கலைப்போராளிதான் ஐயா வீர சந்தானம் அவர்கள். அது ஏழு தமிழர் குறித்த விடுதலை கோரிக்கையாக இருந்தாலும் சரி, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி அங்கு ஐயா வீர சந்தானம் அவர்களின் நேரடி பங்களிப்பும் கலைப் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் என்று சொல்லலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட ஓவியர்கள் கூடங்குளம் குறித்த ஓவிய கண்காட்சியை படைத்த பொழுது அதில் ஐயா வீர சந்தானம் அவர்களும் பங்கேற்று தன் கோடுகள் வழியே மக்களின் வலியை பிரதிபலித்திருந்தார்.
“நேர்மையான கலைப் படைப்பு மக்கள் மனதில் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது” என்று கூறினார் புரட்சியாளர் லெனின். இந்த வரிகளுக்கு எந்த வகையிலும் குறைந்து விடாமல் வாழ்ந்து காட்டியவர் தமிழ்த்தேசிய போராளியும் ஓவியருமான ஐயா வீர சந்தானம் அவர்கள். அவர்களது இழப்பு தமிழ் சமூகத்திற்கும், தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பேரிழப்பு. அந்த வெற்றிடம் காலத்தால் நிரப்பப்படும் வரை அவரது கோடுகள் தமிழர் உரிமையையும், தமிழீழ உரிமையையும் பேசிக்கொண்டே இருக்கும்.