ஆர்.எஸ்.எஸ் மயமான ஒன்றிய தேர்வாணையங்கள்

இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்கள் அனைத்தும் பாஜகவின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் மயமாகியிருப்பதன் வெளிப்பாடே நீட் மோசடியாக அம்பலமாயிருக்கிறது. வினாத்தாள் கசிவிலிருந்து லஞ்சம் வாங்கப்பட்டு மருத்துவ இடங்களை ஒதுக்கும் வரை இதில் இமாலய ஊழல் நடந்திருக்கிறது. தீவிர ஆர்.எஸ்.எஸ். விசுவாசியான பிரதீப் குமார் ஜோசி என்பவரே இந்திய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியராக இருந்தவரே ஜோசி. இவர் 2006-ல் மத்திய பிரதேச அரசு வேலைவாய்ப்புக்கான ஆணையத் தலைவராக (MPPSC) மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த சிவராச் சிங் சௌகானிடம், ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரான வினோத் ஜி என்பவர் செய்த பரிந்துரையின்படி சேர்க்கப்பட்டவர் என்பதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலமாக அஜய் துபய் என்பவர் அம்பலமாக்கினார். நீட்டைப் போலவே மற்ற உயர்கல்விக்கான (JEE, IIT, IIM, CUET…)  சுமார் 15 நுழைவுத் தேர்வும் NTA-ன் கீழ் தான் வருகிறது. அவையாவது நேர்மையாக நடக்கிறதா? என்கிற கேள்வியும் மாணவர்களிடையிலும், கல்வியாளர்களிலும் எழுந்திருக்கிறது.

பிரதீப் குமார் ஜோசி MPPSC தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2006 காலகட்டத்தில் வியாபம் என்னும் மிகப்பெரிய ஊழல் நடந்தது. 2011 வரை அந்தப் பதவியில் இருந்தவரே ஜோசி. 2007-லிருந்து நடந்த இந்த வியாபம் ஊழல் 2013-ல்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அரசு பணியிடங்களை நிரப்புவதில் மற்றும் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகளில், நடந்த முறைகேடான இந்த ஊழலில், அரசு பணியிடங்கள் நிரப்பும் தேர்வாணைய தலைமைப் பொறுப்பில் இவர் இருந்தும், இவரின் பெயர் வியாபம் குற்ற வழக்குகளில் ஏன் சிக்கவே இல்லை! என்பதே நீட் முறைகேடு குறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில், இப்பொழுது கேள்விக் குறியாக எழுந்துள்ளது. 

இந்தியா முழுவதும் 2013-ல் பரபரப்பாக பேசப்பட்டதே இந்த வியாபம் ஊழல். மத்தியப் பிரதேச அரசு வேலையில் நுழைவுத் தேர்வு எழுதாதவர்களைக் கூட இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெறப்பட்டு அரசு வேலையில் நியமிப்பது, தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைப்பது, கல்லூரியில் அரசின் ஒதுக்கீட்டு இடங்களை மோசடி செய்து கல்லூரி நிர்வாகத்திற்கான இடங்களாக மாற்றி பல லட்சங்களை கொள்ளையடித்தது, கணிணி மூலமாக மதிப்பெண் சான்றிதழை மாற்றியது என இப்போதைய நீட் தேர்வில் என்னென்ன முறைகேடுகள் கண்டறியப்பட்டதோ, அவையெல்லாம் மத்தியப் பிரதேசத்தின் முதல்வரான சௌகானின் ஆட்சியில் நடந்தது. வியாபம் ஊழலில் முக்கியமாக பல மர்ம மரணங்கள் தொடர்ந்தது.

வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50 பேர் மர்மமான முறையில் இறந்த பின்னரே, இந்த ஊழல் வெளியே தெரிந்தது. கல்லூரி முதல்வர்கள், செய்தியாளர்கள், மாணவர்கள் எனப் பலர் அகால மரணங்கள் அடைந்தனர். சில மர்ம மரணங்களை தற்கொலைகள் செய்து கொண்டதாக அதிகாரிகள் வழக்கை முடித்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலர் சாலை விபத்துகளில் இறந்ததும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது. திரைப்படத்தில் காணும் திகில் காட்சிகளைப் போல ஒவ்வொரு மரண சம்பவங்களும் நடந்தன.

இந்த வியாபம் ஊழல் காலகட்டங்களில் மத்தியப் பிரதேச அரசு வேலைவாய்ப்பு தேர்வு ஆணையம் (MPPSC) தலைவராக இருந்தவரே ஜோசி. அந்த சமயத்தில் ஜோசி, ஆர்.எஸ்.எஸ்-சின் தலைமை பரப்புரையாளராக இருந்திருக்கிறார். பாஜக மூத்த தலைவர்களான வாஜ்பாய் மற்றும் முரளி மனோகர் ஜோசியுடன் நெருக்கமானவராகவும் இருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்-சினால் பிரதீப் ஜோசி நியமனம் செய்யப்பட, அவர் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக 2007-ல் எஸ்.கே.சர்மா என்பவரை தேர்ந்தெடுக்கிறார். இந்த சர்மா பதவிக்காலம் முடிந்தும்கூட பணியில் நீட்டிக்கப்பட்டார். ஆயுர்வேத மருத்துவ அலுவலர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வில் வினாத்தாள் கசியச் செய்தததற்கான குற்றச்சாட்டு எழுந்த பின்பே 2014-ம் ஆண்டு சர்மா பதவி விலக்கப்பட்டார். ஜோசிக்கு 2011-ம் ஆண்டு MPPSC-ன் பதவிக்காலம் முடிந்தது.

ஜோசியும், சர்மாவும் 2007-லிருந்து 2011- வரையான நான்கு  வருடங்களில், சர்மாவின் 2013 வரையான இரண்டு வருடங்களில் என ஆறு வருடங்களில் மத்தியப் பிரதேசத்தின் மாணவர்களின் கல்லூரி சேர்க்கை மற்றும் அரசுப் பணியிட சேர்க்கைக்கான 12-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளில் நடத்திய பெரும் சதி வலைகள் திறக்கப்படாமலே இருப்பதாக RTI செயல்பாட்டாளர் அஜய் துபய் கூறுகிறார்.

இந்த ஆர்.எஸ்.எஸ் விசுவாசியான பிரதீப் குமார் ஜோசி, மத்தியப் பிரதேச அரசு வேலைவாய்ப்பு தேர்வாணைய (MPPSC) பதவிக்காலத்திற்கு பின்னர், சட்டீஸ்கர் அரசு வேலை வாய்ப்பு ஆணையராக 2011-ல் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2015-ல் ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையாளராகவும் (UPSC) நியமிக்கப்பட்டார். அதன் பதவிக்காலம் 2020-ல் முடிந்தது. இப்போது இந்தியத் தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருக்கிறார். இவரின் பணி நியமனம் குறித்தான இந்த தகவல்களை RTI செயல்பாட்டாளரான அஜய் துபய் என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்றிருக்கும் நீட் நுழைவுத் தேர்வின் முறைகேடுகளுக்கு நுழைவாயிலைத் தேட நினைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்-சின் இந்த இரகசிய முடிச்சுகளை பின்தொடர்ந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்கிற அளவுக்கு இதன் வலைப்பின்னல்கள் இறுக்கமானதாக இருக்கிறது.

வியாபம் ஊழலில் இருந்து நீட் முறைகேடுகள் வரை ஜோசி வகித்த பதவியின் பின்னணியை இணைத்துப் பார்க்கும் போது, ஒன்றிய அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் நபர்களை நியமிக்க, ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உயர்சாதிக் கும்பலை பெரும்பான்மையான இடத்தில் நிரப்பவே நியமிக்கப்பட்டாரா என்கிற சந்தேகமே எழுகிறது. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் பார்ப்பனியத்தின் கோட்டைகளாகவே இருப்பதும் இந்த சந்தேகத்திற்கு வலு கூட்டுகிறது. 

நீட் முறைகேடுகளையும் துருவி ஆராய்ந்தால் வியாபம் ஊழலைப் போல விரியும் சாத்தியங்களே அதிகமிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்கள் நடத்திய வியாபம் ஊழலில் மர்மமான முறையில் பலர் இறந்தார்கள். நீட் ஊழலில் நம் மாணவச் செல்வங்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள்.

நீட் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த பின்பு, மாணவர்கள் நடத்தும் போராட்டம் அளித்த நெருக்கடிகளால் ஒன்றிய தேர்வு முகமையின் இயக்குநரை பதவி நீக்கம் செய்து வேறு ஒருவரை அமர்த்தியிருக்கிறார்கள். ஒன்றிய தேர்வாணைய நிர்வாக இயக்குனரை பதவி நீக்கம் செய்தாலும் இன்னமும் ஒன்றிய தேர்வு முகமையின் தலைவராகவே பிரதீப் குமார் ஜோசியே நீடிக்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனர் தரும் அறிக்கையும் இவரிடமே தரப்பட வேண்டும். குற்றம் செய்தவர்களின் சிலரை தண்டிப்பதாக நம்ப வைத்து முதன்மை குற்றவாளிகளை தப்ப வைக்கும் வழக்கமான ஆர்.எஸ்.எஸ், பாஜக-வின் வியூகமே இதிலும் செயல்படுத்தப் படுவதாகவே இதனை பார்க்க முடியும். 

தகுதி, தரம் என்ற பெயரை சொல்லி உண்மையில் திறமை வாய்ந்தவர்களை நிராகரித்து விட்டு, ஒரு தகுதியும் இல்லாத நபர்களை தலைமைப் பொறுப்புகளில் அமரச் செய்து தங்களுக்குரிய மேலாதிக்கப் பதவிகள் நிலை பெறுவதற்கான காய்களை நகர்த்துகிறது இந்தியப் பார்ப்பனியம். பார்ப்பனியத்தின் வஞ்சக எண்ணத்திற்கு சேவை செய்யவே இந்துத்துவ வெறியைத் தூண்டி விட்டு இந்தியாவை அரிக்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்த இரண்டிற்கும் பாலமாக செயல்படுவதற்கே ஆட்சியை நடத்துகிறது பாஜக. பிரதீப் குமார் ஜோசியின் பதவி நியமனங்களே இந்த வலைப்பின்னலுக்கு சான்றாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »