வாச்சாத்தி மக்களின் மீது பயங்கரவாத்தை ஏவிய அரச வர்க்கத்தை அம்பலப்படுத்திய இத்தீர்ப்பு, 30 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்ததை நீதியென்று சொல்லிவிட முடியுமா? என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாச்சத்தி மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு கிடைத்ததை நீதியென்று சொல்லிவிட முடியுமா? அரச வர்க்கத்தின் பயங்கரவாத்தை அம்பலப்படுத்திய இத்தீர்ப்பு உரிய காலத்தில் கிடைத்திருந்தால் அரசு அதிகாரிகள் மக்கள் மீதான பயங்கரவாதத்தை செய்ய தயங்கி இருப்பார்கள். தாமிரபரணி கொலைகளும், கோவை இசுலாமியர் கொலைகளும், பரமக்குடி கொலைகளும், ஸ்டெர்லைட் கொலைகளும் ஒருவேளை நடக்காமல் போயிருக்கலாம். வன்முறையை அரசு அதிகாரிகள் செய்தால் உடனே தண்டனை கிடைக்குமெனில் எண்ணற்ற அரச வர்க்க குற்றங்கள் நின்று போயிருக்கும். ஸ்டெர்லைட் வரையான வன்முறைகளுக்கான நீதியை பெற்று தருவதற்கான உற்சாகத்தை, உத்வேகத்தை வாச்சாத்தி தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
இந்த தீர்ப்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள். இதை வெளியில் கொண்டுவருவதற்காக போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மலைவாழ் மக்கள் இயக்கத்தின் தோழர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும், இன்றைய மாநில செயலாளராக இருக்கும் தோழர் சண்முகம், அன்றைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை, டில்லிபாபு ஆகிய மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களின் இடைவிடாத போராட்டமே, இத்தீர்ப்பினை வென்றெடுப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கறிஞர்கள் வானமாமலை, என்.ஜி.ஆர் பிரசாத் மற்றும் சம்கிராஜ், சுப்புராம், கே.இளங்கோ போன்ற மூத்த தோழமைகள், வழக்கறிஞர்கள் தன்னலமின்றி போராடி இவ்வழக்கை முன்னகர்த்தியுள்ளார்கள்.
இது போல எண்ணற்ற கம்யூனிஸ்ட் தோழர்களின் அயராத உழைப்பை நன்றியுடன் நினைவுகூறுவோம். விடாப்பிடியாக மக்களுக்காக போராடும் பொழுது இமயமலைகூட மண்டியிட நேரிடும் என்பதை இப்போராட்டம் நமக்கு காட்டியுள்ளது. சுயமரியாதை உணர்வுடன் இவ்வழக்கை முன்னகர்த்திய வாச்சாத்தி கிராமத்தின் ஊர்த்தலைவர் மறைந்த ஐயா.பெருமாள் மற்றும் கிராம மக்களின் போராட்ட வரலாற்றிற்கு புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிப்போம். போராடினால் தீர்வு நிச்சயம் என்பதை வாச்சாத்தி நிரூபித்துள்ளது.