தனியாருக்கு விற்கப்பட்ட ஏர் இந்தியாவின் ‘மகாராஜா’
மக்களின் சேவையை முதன்மையாகக் கொண்டதே மக்கள் நல அரசு. ஆனால் மக்களுக்கான சேவைத் துறைகளை தனியார் வசம் ஒப்படைப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்தியாவில் பொதுத் துறைகளே இல்லாத நிலை உருவாக மோடி உதிர்த்த வாக்கியமே “தொழில் செய்வது அரசின் வேலையல்ல” என்பது. நிர்வாகத் திறனற்றத் தன்மையை மறைக்க வார்த்தை வித்தைகளை சாதகமாக கட்டமைப்பதில் கைதேர்ந்த மோடி அரசு ஏர் இந்தியா விமானத்தையும் டாடாவின் கைகளில் தாரை வார்த்து விட்டது.
ஜே.ஆர்.டி. டாடாவினால் 1932 ஆம் ஆண்டு “டாடா ஏர்லைன்ஸ்” என்ற பெயரில் தொடங்கிய இந்த விமான நிறுவனம், கடன் சுமையை காரணம் காட்டி, தற்போது மீண்டும் டாடா நிறுவனத்திற்கே விற்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ‘ஏர் இந்தியா’ என பெயர் மாற்றம் பெற்ற இந்நிறுவனத்தில், இந்திய அரசு முதலில் 49 சதவிகித பங்குகளை வைத்திருந்தது. பின் 1953-ஆம் ஆண்டில் விமான நிறுவன சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, பெரும்பான்மையான பங்குகளை டாடாவிடமிருந்து வாங்கியது இந்திய அரசு. பல ஆண்டுகளாக, ‘ஏர் இந்தியா’ இந்திய அரசின் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.
தனியாருக்கு விற்பதற்கான முதல் முயற்சி 2000-01 இல், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதி திரட்டுவதற்காக ஏர் இந்தியாவில் 60 சதவீத பங்குகளை விற்க முயன்றது. அப்போது ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அத்திட்டதிலிருந்து பின் வாங்கியதால், ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் அரசின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இரண்டாம் முயற்சியாக, மோடி அரசு புதியதாக பதவியேற்ற பிறகு, 2017-18 இல் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளை விற்க அரசாங்கம் முடிவு செய்தது. தனியாரிடம் விற்பதன் மூலம் அப்போதிருந்த ரூ.33,392 கோடி கடனை அடைக்கலாம் என்றும் எண்ணியது. ஆனால் ஒரு ஏலத்தை கூட பெறாததால், இரண்டாவது முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
மூன்றாவது முறையாக கடந்த சனவரி 2020-இல், மீண்டும் ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க பாஜக அரசு முடிவு செய்தது. அப்போது பல கோடி ரூபாய் நட்டம் இருப்பதால் தனியார்மயமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. ஏர் இந்தியா மற்றும் அதன் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் 100 சதவிகித பங்குகளையும் விற்க அரசாங்கம் முடிவு செய்தது.
செப்டம்பர் மாதம் நடந்த ஏலத்தில் 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் 62,000 கோடி ரூபாய் கடனில், 18,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே டாடா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. கிட்டதட்ட 44,000 கோடி ரூபாய் கடன்சுமை இன்னும் அரசிடமே இருக்கிறது. ஆனால், இந்த தனியார்மயமாக்கலின் மூலம் டாடா நிறுவனம் 50,000 கோடி மதிப்புள்ள ஏர் இந்தியா சொத்துக்களைப் பெற்றுள்ளது. ஏனெனில், ஏர் இந்தியாவிற்கு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யும் இடங்கள், 4,400 உள்நாட்டு மற்றும் 1800 சர்வதேச மற்றும் உள்நாட்டு பார்க்கிங் இடங்கள், மற்றும் 130 விமானங்கள் என 50,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் (assets) உள்ளன.
மேலும், இந்தியாவில் தற்போது 8,084 நிரந்தர ஊழியர்கள் உட்பட 12,085 ஊழியர்கள் ஏர் இந்தியாவில் பணி புரிகின்றனர். இவர்களின் பணி நிரந்தரம், சம்பள உயர்வு போன்ற சிக்கல்கள் இந்த தனியார்மயமாக்கலின் மூலம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏர் இந்தியாவை மோடி அரசாங்கம் தனியாருக்கு விற்றது போலவே, பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், BSNL, MTNL, LIC போன்றவை ஏலத்திற்கு தயாராக உள்ளன. குடிநீர் முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரை இது போன்ற ஏகபோக உரிமையை (Monopoly) மோடி அரசு தொடர்ந்து உருவாக்குகிறது.
மேலும், தனியார் உரிமையாளர்கள், அந்நிறுவனங்களின் மீது வரம்பற்ற உரிமை கொண்டிருப்பதால், மக்களுக்கு “இதைத் தவிர வேறு வழியில்லை” என்பது போன்ற நிலையை உருவாக்கி, குறைந்த விலையில் கிடைக்க வேண்டிய சேவைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
மோடி அரசு குத்தகைக்கு விட்ட பொதுத் துறையிலிருந்து விற்றுவிட்ட பொதுத் துறைகள் வரை தனியார் மயம் துவங்கப்பட்ட ஆண்டுகள் முன்பிருந்து வெகுவாக லாபம் ஈட்டிக் கொண்டிருந்தவை. பெரு நிறுவனங்கள் அவைகளை ஆக்கிரமிக்க நயவஞ்சகத்தன்மையுடன் ஆளும் அரசுடன் கைக்கோர்க்கிறது. பெரு நிறுவனங்களிடமிருந்து நிதியீட்டி கட்சியை வளர்க்கும் ஆளும் தரப்பு, சிறிது சிறிதாக பொதுத் துறைகளை சிதைத்து தனியார் வசம் ஒப்படைப்பதற்காக நட்டத்தில் இயங்குவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. இவ்வாறு பலிகடாவாக்கப்படுபவையே மக்களின் வரிப்பணத்தினால் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்.
மேலும், பார்ப்பனீய ஆதிக்கம் எப்பொழுதும் தழைத்திருப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்ட, சமூக நீதியான இடஒதுக்கீட்டினை பொதுத்துறையிலிருந்து ஒழிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக ஏற்ற ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த பின்புலத்திலிருந்து வந்த மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸின் கைப்பாவையாகவே மாறி, பொதுத்துறைகளை ஒழித்துக் கொண்டிருக்கிறது.
அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே நட்டத்தில் தள்ளப்படுகிறது. ஏர் இந்தியா முதல் இரயில்வே வரை இந்த யுக்தியை பாஜக-மோடி செயல்படுத்துகிறது. இந்தியாவின் மக்கள் சொத்துகளை தனியார் கையில் ஒப்படைக்கவே மோடி பிரதமர் ஆக்கப்பட்டார்.
மதவெறியை வளர்த்து மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் மக்கள் சொத்துகள் தனியார்வசம் செல்வதை யாரும் கேள்வி கேட்காமலாக்குகிறது ஆர்.எஸ்.எஸ். மதமாக பிளவுண்ட மக்களால் ஊர் கொள்ளையை தடுக்க இயலாது. தமிழகத்தில் மதவெறிக்கு மாற்றாக சாதிவெறி வளர்க்க இந்துத்துவ கருத்துகள் விதைக்கப்படுகின்றன.
கனிம வளங்கள் போன்ற மூல வளங்கள், மின்சாரம்-பெட்ரோலியம் போன்ற ஆற்றல் துறைகள், ரயில்வே, விமானம், துறைமுகம்-விமானநிலையம் போன்ற நிறுவன கட்டுமானங்கள், உழவு, தானிய சேமிப்பு, விநியோகக்கடை, மீன் வளம், காடு உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை தனியாருக்கும், அதிக வரி, மொழி உரிமை-குடியுரிமை மறுப்பு, மாநில உரிமை அழிப்பு மற்றும் அடக்குமுறை சட்டங்கள், மதஉணர்வு கொண்ட ஒன்றிய காவல்துறை-அதிகார துறை, மிரட்டப்படும் ஊடகம், நீதித்துறைகள், சிதைக்கப்படும் கல்வி-மருத்துவம்-இடஒதுக்கீடு மற்றும் இசுலாமியர்-பெண்கள்-தலித்துகள்-ஆதிவாசிகள் மீதான கொடூர கொலை தாக்குதல் என முழுஅளவில் மிருகநிலைக்கு நாட்டை மாற்றியிருக்கிறது பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டம்.
கட்சி கடந்த அரசியல் உணர்வுநிலை பெறாமல் இந்த மிருகத்தினை வெல்ல இயலாது. இந்த வலை பின்னலை எதிர்கொள்ளவே பெரியாரிய-அம்பேத்கரிய-மார்க்சிய சிந்தனைகள் தேவைப்படுகின்றன. தேர்தல்-அரசியல் அதிகாரத்தின் எல்லையை மீறி வளர்ந்து நிற்கும் இக்கட்டமைப்பை வீழ்த்துவது நம் கடமை.
அதானி, அம்பானி போன்றோரின் பனியா நிறுவனங்கள் நட்டக்கணக்கு காட்டினால் பல லட்சம் கோடிகள் தள்ளுபடியும், மக்களின் சொத்தான பொதுத்துறைகள் நட்டத்தில் இயங்கினால் தார்மீக உரிமையற்ற சொத்துக்களை விற்றுவிடவும் செய்கிற ஒரு மோசடி அரசு மோடி அரசு. மக்களின் விழிப்பும், எதிர்ப்புக் குரலும் ஓங்கினால் மட்டுமே இந்த சூழ்ச்சி வலைப்பின்னல்களிலிருந்து தப்பித்தல் சாத்தியம். விழிப்போம்.