இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கிய குஜராத் மாடல்

இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கிய குஜராத் மாடல்

ஒரு அரசானது அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதார வசதி, கல்வி, வேலை வாய்ப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு அனைத்து மக்களுக்காக செயல்படும் அரசு தான் “மாதிரி அரசு” என்று கருதப்படும்.ஆனால் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்காக செயல்பட்ட பாசக அரசு, “குஜராத் மாடல்” என்ற போலி பிம்பத்தை இணைய வசதி பயன்பாடு இல்லாத காலக்கட்டத்தில் செயற்கையாக கட்டமைத்து விளம்பரப்படுத்தியது. இந்துத்துவ மார்வாடி குஜராத் அரசின் நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை தற்போது சிஏஜி (CAG) சுட்டிக் காட்டியுள்ளது.

குஜராத் மாதிரி என்னும் போலி பிம்பம்:

“குஜராத் மாதிரி” என்னும் போலி பிம்பம் 2002 முதல் 2012 வரையிலான காலக்கட்டத்தில் இந்துத்துவ மார்வாடி சக்திகளால் செயற்கையாக கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைத்து இந்திய ஒன்றியத்தின் பிரதமராக மோடி அமர வைக்கப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் தான் குஜராத்தில் தாராளமையமாக்கல் கொள்கையின் மூலம் பெருநிறுவன முதலாளிகளின் முதலீடுகளை அதிகரிக்க அப்போதைய மோடி தலைமையிலான குஜராத் அரசு பல திட்டங்களை வகுத்து ஏழை எளிய மக்களை இன்னும் விளிம்பு நிலைக்கு தள்ளியது. கார்ப்பரேட் நிறுவனங்களை எல்லா வகையிலும் ஊக்குவித்தது.

பெருநிறுவனங்கள் அமைவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதிகள், மின்சார வசதி, விமான வழித்தடங்களை விரிவு படுத்துததல், ஆகிய அனைத்தும் தனியார் வளர்ச்சிக்காக விவசாய நிலங்கள், கால்நடைகள் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் “ஒரு ஏக்கர் ஒரு ரூபாய்” என கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்பட்டன. இரசாயனப் பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகள், ஆடை ஆபரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகிய பெருமுதலாளிகள் ஈடுபடும் தொழில்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. இதன் மூலம் ‘குஜராத் மாதிரி’ என்ற போலி பிம்பத்தை கட்டமைக்க துவங்கியது இந்துத்வ மார்வாடி அரசு.

அதற்கேற்றாற்போல் 2003-2010 காலக்கட்டத்தில் போதுமான மழை பொழிந்தது. இதனால் விவசாய உற்பத்தியில் 7.8% அதிகரித்தது. ஆனால் 2011-12 இல் ஏற்பட்ட வறட்சியில் 40% – 45% வரை குஜராத் மக்கள் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன் வளம், விவசாயம் என அனைத்து வகையிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். குஜராத் தொழில்துறை தயாரிப்புகள் எண்ணிக்கை அதிகரித்ததில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடி மக்கள் ‌தான். இதனை குஜராத் நீதிமன்றம், “பழங்குடியினர் குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையில் ஒரு பகுதி” என்பதை மறந்து விட வேண்டாம் என்று அறிவுரை வழங்கியது. குஜராத் வளார்ச்சி என்பது மார்வாடிகளுக்கான வள்ர்ச்சியே தவிர ஏழை எளிய மக்களுக்கானதல்ல என்பது உண்மை. அதனால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடி என்ற போலி பிம்பத்தை நம்பியபோது தமிழ் நாட்டு மக்கள் அவரை நிராகரித்தனர் என்பது வரலாறு.

மத்திய மாநில திட்டங்களில் வரம்பற்ற விதிமீறல் செய்துள்ள மோடி அரசு:

மத்திய மாநில திட்டங்களான பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்திற்கு 3133 கோடி, காந்தி நகர் – அகமதாபாத் மெட்ரோ இணைப்பு திட்டத்திற்கு 1667 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு 593 கோடி, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்திற்கு 182 கோடி, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவிற்கு 97 கோடி என பல்லாயிரக்கணக்கான கோடிகளை நேரடியாக ஒன்றிய அரசு பரிமாற்றம் செய்துள்ளது வரம்பற்ற விதிமீறல்களாகவே கருதப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மிகுந்த அத்தியாவசிய தேவையான வென்டிலேட்டர் தயாரிக்க குஜராத் நிறுவனமான JYOTI CNC AUTOMATION LTD-க்கு DGHS (Directorate General of Health Service) பரிந்துரை இல்லாமலேயே அனுமதி வழங்கியது என்ற செய்தி கசிந்ததும் அதனை பா.ஜ.க மறுத்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும் காப்புரிமையும் குஜராத் மார்வாடிகளுக்கே வழங்கியது ஒன்றிய அரசு.

JYOTI CNC ஐ பார்வையிடும் மோடி

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) குஜராத் அரசாங்கத்தின் நிதி நடைமுறைகளில் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன், “தேவைகளின் அடிப்படையில் தான் வரவு செலவுத் திட்டங்களை” அரசு உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. குஜராத் பட்ஜெட் கையேடு -1983-ன் படி, எந்தவொரு தலைப்பின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாமல் அல்லது துணை மானியம் இல்லாமல் செலவும் செய்ய முடியாது. பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாமல் செலவிடுவது விதிமுறைகளை வரம்பற்ற முறையில் மீறியுள்ளதை குறிக்கிறது என்று சிஏஜி தெரிவித்துள்ளது.

தேசிய கணக்காய்வாளர் அரசாங்கத்தின் கணக்குகள் 14,273 கிராம பஞ்சாயத்துகளின் நிதி ஓட்டத்தை பிரதிபலிக்கவில்லை, அதாவது நிலுவைத் தொகை, ரசீதுகள் மற்றும் வழங்கல்கள் ஆகியன முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் கிராம பஞ்சாயத்துகள் தங்கள் கணக்குகளை அட்டவணை வங்கிகளில் (அரசு கணக்குகளுக்கு Scheduled Banks வெளியே) பராமரித்து வருகின்றன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்துகளின் கணக்குகளில் பயன்படுத்தப்படாத நிதிகளை கண்டறிய அரசுக்கு எந்த வழிமுறையும் இல்லை என்று சிஏஜி தெரிவித்துள்ளது. உதவித்தொகைக்கான பயன்பாட்டு சான்றிதழ்கள் (Utilisation Certificate) சமர்ப்பிப்பதிலும் தாமதம் இருப்பதாக தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001-02, 2002-03 மற்றும் 2003-04 ஆகிய ஆண்டுகளில் மட்டும் நிலுவையில் உள்ள பயன்பாட்டு சான்றிதள் (Utilisation Certificate) 49 சதவிகிதம்.

இறையாண்மையை கேள்விக்குள்ளாகிய இந்துத்துவ மார்வாடி அரசு:

இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநில மக்களின் வரியினைக் கொண்டு செயல்படும் அரசு தனது இறையாண்மையை மறந்து குஜராத் மாநிலத்தின் தனியார் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு செயல்பட்டு வந்ததை அம்பலப்படுத்தியுள்ளது CAG 2020 அறிக்கை. இந்திய ஒன்றிய அரசானது மாநிலங்களில் இருந்து பெற்ற வரியை மீண்டும் மாநிலங்களுக்கு திட்டங்கள் செயல்படுத்துதல் வேண்டி மாநில அரசு வாயிலாக வழங்க வேண்டும். ஆனால் ஏழை எளிய மக்களை சுரண்டி பிழைக்கும் ஒன்றிய அரசு குஜராத் மார்வாடிகளுக்காகவே இந்திய இறையாண்மையை அடகு வைத்துள்ளது. குஜராத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர் என தனது வரம்பற்ற முறையில் நேரடியாக மக்கள் வரிப்பணத்தை தாரைவார்த்தது CAG அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2015 முதல் ஒன்றிய அரசு குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நிதி 350 சதவீதம் அதிகரிப்பட்டுள்ளது. 1 ஏப்ரல் 2014 முதல் ஒன்றிய அரசு மாநில அரசின் மூலமாக நிதி பகிரப்பட்டு வந்த நிலையில் குஜராத்திற்கு மட்டும் நேரடியாக வழங்கியுள்ளது.அதாவது குஜராத்தில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு 17 கோடி ரூபாய், தனியார் அறக்கட்டளைக்கு 79 கோடி ரூபாய்,அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 18.35 கோடி, தனிநபர்களுக்கு 1.56 கோடி என மக்கள் வரிப்பணத்தை குஜராத் மாநில மார்வாடி வளர்ச்சிக்கு நேரடியாக வழங்கியது ஒன்றிய அரசு.

குஜராத் மாதிரியை இந்திய ஒன்றியம் முழுவதற்கும் கட்டமைக்க முயலும் மோடி அரசு:

அனைத்து மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் போது தான் வளர்ச்சி என்பது சமநிலை அடையும். ஆனால் “குஜராத் மாதிரி” என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் மற்றும் மார்வாடிகள் நலன் சார்ந்தது மட்டுமே. அதானி அம்பானிகளுக்காக நாட்டு மக்களை பலி கொடுக்க தொடங்கியுள்ளது மோடி அரசு. இதன் தொடக்கமாக தான் ஸ்டெர்லைட் படுகொலை, நீட் படுகொலைகள், ஹைட்ரோகார்பன் திட்டம், சாகர் மாலா, துறைமுகம் அமைத்தலுக்காக சதுப்பு நிலங்களை அழித்தல், சுற்றுச்சூழல் திருத்தச் சட்டம், வேளாண்மை திருத்தச் சட்டம் என்று தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை பாசிச முறையில் தன்னிச்சையாக இதனை மறைக்கத் தான் “தேசபக்தி” மற்றும் “இந்து மதம்” என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தை மார்வாடிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

தமிழ் நாட்டில், போலி தேசபக்திக்கும் மதக் கலவரத்திற்கும் இடமில்லாததால் சாதி கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இந்துத்துவ அமைப்புகள். “குஜராத் மாதிரி” என்னும் போலி பிம்பத்தை ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே பொருத்த முயல்கிறது மோடி அரசு. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கிய மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள் வரிப்பணத்தை குஜராத் பெருமுதலாளிகள் வளர்ச்சிக்கு மட்டுமே வித்திட்டது CAG அறிக்கையின் மூலம் முகத்திரை கிழிக்கப்பட்டமைக்கு என்ன சொல்லப் போகிறது ஒன்றிய அரசு?

“மேட் இன்‌ இந்தியா” என்பது “மேட் பை மார்வாடி” என்பதே உண்மையான நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »