அம்பானிக்கு மொய் வைத்த அரசு எந்திரம், பாழாய் போன மக்கள் பணம்

மோடியின் நண்பரான அம்பானி எனும் தனிமனிதனின் குடும்ப திருமண விழாவிற்காக மும்பையின் சட்ட ஒழுங்கை மாற்றி அமைத்துள்ளது மும்பை காவல்துறை. இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் ‘திருமண முன்னோட்டம்’ (Pre Wedding) எனும் விழாவை அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடத்துவதற்காக அங்கு அமைந்துள்ள சிறிய உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியது மோடி அரசு.

இவ்வாறு அம்பானியின் இளைய மகன் திருமணம் இந்தியாவில் நிலவிவரும் சமத்துவமின்மை பற்றிய விவாதத்தைத் தூண்டும் விதமாக இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பல குடும்பங்கள் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாது வறுமையில் வாடும் நிலையில், ஒரு திருமணத்திற்கு இத்தகைய அதீத செலவு செய்வதென்பது “அருவருக்கத்தக்கது”.

மோடியின் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் பெருநிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உழைப்பை சுரண்டியதன் விளைவாக இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சியில் உலக பணக்காரர் வரிசையில் ”ஃபோர்ப்ஸ் (Forbes’s) 2024” பட்டியலின் படி, ஒன்பதாவது இடத்திலும் மற்றும் ஆசியாவின் பணக்காரர் வரிசையில் முன்னிலையும் பெற்ற முகேஷ் அம்பானி, தன் இளையமகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வை மும்பையில் வெகு விமரிசையாக உலக பிரபலங்கள் பலரையும் வரவழைத்து இந்திய மதிப்பில் சுமார் 5000 கோடி ரூபாயை வாரி இறைத்து அவரது செல்வச் செழிப்பை உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.

மும்பையில், ’பாந்த்ரா குர்லா’ வளாகத்தில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் (Jio World Convention Centre) கடந்த ஜூலை 5 மற்றும் ஜூலை 12 முதல் 15ம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள், திருமண கொண்டாட்டங்கள், திருமணத்துக்கு பிந்தைய கொண்டாட்டங்கள் என இதுவரை யாருமே செய்யாத வகையில் மிகவும் தடபுடலாக இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு மாநில முதல்வர்களும், உலக தலைவர்களும், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்காக மும்பை போக்குவரத்து காவல்துறை தனது அதிகாரபூர்வ ’எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ஜூலை 5 மற்றும் ஜூலை 12 முதல் 15 வரை பாந்த்ரா குர்லா வளாகத்திலுள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் “பொது நிகழ்வின்” காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” எனவும், மேலும் அதில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளின் தகவல்களையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதனால் மும்பையில் பல சாலைகள் மூடப்பட்டன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் மும்பை நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், திருமணம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சாலைகளில் திருமணத்திற்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும், மேலும் அதற்கான விரிவான ஆலோசனையும் மும்பையின் போக்குவரத்து மூலம் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக, ஒரு தனிமனிதனின் குடும்ப விழாவை பொது நிகழ்வு என்று கூறி மும்பை காவல்துறை இத்தகைய துரித நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கையாக பல ஏற்பாடுகளை செய்ததற்கு காரணம் அவர் மோடியின் நண்பர் என்பது மட்டுமேயாகும்.

ஒரு தனிமனித குடும்ப நிகழ்வுக்காக பொதுமக்களை அலைக்கழித்துள்ளது மும்பை காவல்துறை. அன்றாட கூலி வேலை செய்யும் மக்களும், வாடகை ஆட்டோ வாங்கி ஓட்டி பிழைக்கும் மக்களும் இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போக்குவரத்து கட்டுபாடு “எங்கள் வருவாயை பாதித்தது என்று வாடகை ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்த திருமணம் நடந்த மிகவும் பரபரப்பான பாலத்தின் மறுபுறத்தில், LBS சாலை என்று அழைக்கப்படும் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளனைத்தும் திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தில் மூழ்கின. சரியான பராமரிப்பற்ற வடிகால் அமைப்பு மற்றும் நகராட்சியின் அலட்சியம் ஆகியவற்றால் அந்த பகுதி மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு அதிகாரிகள் அம்பானி மகனின் திருமண விழாவிற்கு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல இந்த மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்காக எடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு மக்களுக்கான அரசே ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்டது பெரும் சர்ச்சையும் விவாதத்தையும் துவக்கியுள்ளது.

அதேபோல குஜராத் ஜாம்நகரில் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த “திருமண முன்னோட்டம்” (Pre wedding) எனும் புதிய நிகழ்வை (இதுவரை நடைமுறையில் எங்குமில்லாத) நடத்துவதற்காக ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும், 3,000 ஏக்கரில் புதிய காட்டையும் அம்பானி நிறுவனம் உருவாக்கி சாதனை படைத்தது. மூன்று நாள் நடைபெற்ற அந்த நிகழ்விற்கும் பல ஹாலிவுட் திரை பிரபலங்கள், இந்திய பிரபலங்கள், பல உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், உலக முன்னணி பிரபலங்கள் என 1,200 பேர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதற்காக மோடி அரசு தனது நண்பருக்காக, மிகச்சிறிய நகரமான ஜாம்நகரில் அமைந்திருந்த சிறிய அளவிலான உள்நாட்டு விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியது. மேலும் அந்த விமான நிலையத்தை விரிவுபடுத்தி, பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதற்காக இந்திய விமானப்படை கூடுதல் ராணுவ வீரர்களை மோடி அரசு நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மோடியின் அரசின் உதவியால் இந்த திருமணமானது அதன் அளவு, ஆடம்பரம் மற்றும் பிரபல நட்சத்திர பட்டாளங்களின் பட்டியல் ஆகியவற்றால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள போதும், இந்த ஆடம்பர திருமணம் முகம் சுழிக்க வைக்கும் நிலையையே உருவாக்கியுள்ளது. மேலும் இந்த திருமணம் உலகளவில், இந்தியாவின் ஏழை எளிய மக்களின் அவலநிலையை பற்றி கவலை கொள்ளாத மோடி அரசின் அலட்சியத்தை ஒப்பிட்டு சர்ச்சையையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்த ஆடம்பர திருமண மூலம் வரைபடத்தில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளதாகவும், உள்ளூர் பொருளாதாரம் மற்றும் நாட்டின் சக்தியும் உயர்ந்து உள்ளதாகவும் மோடி-அம்பானி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில், பெரும்பாலான மக்கள் இந்த திருமண நிகழ்வை அம்பானி நிறுவனங்களுக்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு என்று கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானி பல நட்சத்திர பிரபலங்களை வரவழைத்து ஒரு, கண்கவரும் வகையான அருவருக்கத்தக்க திருமணத்தை நடத்தியுள்ளார் என ‘வாஷிங்டன் போஸ்ட்‘ பத்திரிக்கை எழுதியுள்ளது. மேலும் அதில் மிகவும் பரபரப்பான இந்த திருமணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது, இது ஒரு பிரபல மற்றும் வணிக நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்றும், இதைப்பற்றி இந்திய பத்திரிகைகளில் பிரம்மாண்டமானது என்று பாராட்டியும், அருவருக்கத்தக்கது என்று விமர்சித்தும் எழுதி உள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இத்துறையில் அம்பானி 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய 5ஜி அலைக்கற்றை ஏலத்தை குறைந்த விலைக்கு அம்பானிக்கு கொடுத்து ஊழல் செய்ததும், அதனை தொடர்ந்து ஜியோ மாதாந்திர கட்டணத்தை உயர்த்தியதும், அவர்களை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் நிறுவனமும் தங்கள் மாதாந்திர கட்டணத்தை உயர்த்தியதும் அனைவரும் அறிந்ததே.

5ஜி ஊழல் குறித்து ஏற்கனவே மே 17 இயக்கக் குரலில் வெளிவந்த கட்டுரை https://may17kural.com/wp/bjp-govt-corruption-in-5g-spectrum/

மேலும், அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தற்போது வெகு விமரிசையாக திருமணம் நடத்திய பாந்த்ரா குர்லா வளாகம் அமைந்துள்ள (BKC-Bandra Kurla Complex) நிலத்திற்கு 4381 கோடி ரூபாயை மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்திற்கு (Mumbai Metropolitan Region Development Authority) குத்தகை தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அனில் கல்காலி அம்பலப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 12, 2017 அன்று இந்த கடனை செலுத்தாததற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு நிற்கிறது MMRDAன் நடவடிக்கை.

MMRDAலிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து நான்கு ஆண்டுகளுக்குள் உத்தேசித்த நோக்கத்தின்படி கட்டுமானம் முடிக்கப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டவிதி. இதனை சிபிஐ மற்றும் வருமான வரித்துறை கவனத்தில் கொள்கிறது. ஆனால் MMRDA கடனைத் திருப்பிச் செலுத்தாத இவர்களிடம் மிக மென்மையாக நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து குத்தகை சான்றிதழைத் திரும்பப் பெறுவதற்கான அதிகாரம் இருந்தும் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அவர்களுக்கு சாதகமாக நடந்து வருவதைதான் தற்போது அனில் கல்காலி அம்பலப்படுத்தி உள்ளார்.

இதுவே எளிய மக்கள் எனில் அவர்கள் வாங்கிய சில ஆயிரம் கடன் தொகையை கட்டவில்லை எனில் அவர்களை மிரட்டி அச்சுறுத்தி அவர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது இந்த அரசு எந்திரம். ஆனால் அம்பானி அதானி போன்ற குஜராத் பனியா கும்பலுக்கு இவ்வளவு கோடிகளை கொடுத்து அவர்களை ஆடம்பரமாக செலவு செய்து வாழ வழி செய்கிறது மோடியின் பாஜக அரசு.

2014 முதல் 2023 வரை அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடனில் வாராக் கடன் ரூபாய் 66 லட்சத்து 50 ஆயிரம் கோடி. இதில் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடியை மோடி அரசு தள்ளுபடி செய்தது. விவசாயிகள் வாங்கிய சில ஆயிரம் ரூபாய் வேளாண் கடன்களை திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, விவசாயிகளை அவமானப் படுத்துவது என்று கடுமையாக நடக்கும் ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் வாங்கிய பல லட்சம் ரூபாய் கடன்களை மட்டும் இப்படி சத்தமில்லாமல் தள்ளுபடி செய்கிறார்கள்.

சாமானிய, நடுத்தர மக்கள் பற்றி மோடிக்கு எந்த கவலையும், அக்கறையும் இல்லை. அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் நலன்தான் மோடிக்கு முக்கியம். அதனால்தான் ‘ஆக்ஸ்பாம்‘ நிறுவனம் வெளியிட்ட உலக சமத்துவமின்மை 2022 அறிக்கை, இந்தியாவில் 10 சதவீத பணக்காரர்கள் மொத்த சொத்தில் 72 சதவீதத்தையும், மற்ற 5 சதவீதத்தினர் 62 சதவீத சொத்துகளையும், மேலும் 1 சதவீதத்தினர் மொத்த சொத்தில் 40.6 சதவீதத்தையும் வைத்துள்ளதாக தெரிவிக்கிறது.

இந்தியாவில் குஜராத்தியான அம்பானிகளும் அதானிகளும் தங்களிடமுள்ள பெரும் செல்வத்தை ஆடம்பரமாக செலவழித்து கொண்டாடி வரும் இவ்வேளையில், உலகளவில் பசி குறியீட்டு அறிக்கையில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. அதோடு ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் 15-24 வயது நிரம்பிய பெண்களுக்கு இரத்த சோகை பாதிப்பு ஆகியவற்றிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலே இந்தியா உள்ளது. இவைகள் இந்தியாவின் நிலவி வரும் கடும் வறுமையைக் காட்டும் சில குறியீடுகள். தற்போது வெளிவந்த அறிக்கையில் 50% க்கும் அதிகமான இந்தியர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறார்கள் என்றும், அதில் குஜராத்தில் உள்ள ஏழைகளில் 32 சதவீத மக்கள் மட்டுமே மூன்று வேளை உணவு சாப்பிடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

ஆனால் பாசிச மோடி அரசு அம்பானி, அதானி போன்ற குஜராத் பனியா கும்பல்களின் அபரிதமான வளர்ச்சியைத்தான் நாட்டின் வளர்ச்சியென உலக அரங்கில் மார்தட்டி பெருமைப் பேசிக் கொண்டிருக்கிறது. இந்த ஆடம்பர திருமணம் இந்தியாவிலுள்ள 100 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள், மற்றும் ஏழை எளிய மக்களின் அவலநிலையைப்பற்றி கவலை கொள்ளாத மோடி அரசின் அலட்சியத்தை அப்பட்டமாக படம்பிடித்து காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »