இசுலாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம்

இசுலாமியர்கள் நன்கொடையாக வழங்கும் சொத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், வக்ஃபு வாரிய சட்டத்தில் திருத்தங்களைக் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தொடர்ந்து சிறுபான்மையின மக்களை ஒடுக்கும் நோக்கில் CAA, பொது சிவில் சட்டம் போன்றவற்றை கொண்டு வந்த மோடி அரசு, அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் வக்ஃபு வாரிய திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் பல்லாண்டுகாலமாக இயங்கி வரும் வக்ஃபின் வரலாற்றை தில்லி சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடங்கலாம். 13 ஆம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட முஹம்மது இப்னு-சாம், மியாசுதீன் சாம் கோர் போன்ற மன்னர்கள் முல்தானில் உள்ள ஜமா மசூதிக்கு நிலம் கொடுத்ததை வக்ஃபு சொத்துக்களின் தொடக்கமாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். தில்லி சுல்தான்களைப் போன்றே ஹைதராபாத் நிசாம்களும் வக்ஃபு சொத்துக்களை நன்கொடையாக அளித்திருக்கின்றனர். இந்த நிசாம்களில் குறிப்பிடத்தகுந்தவர் நிசாம் மிர் ஒஸ்மான் அலி கான். தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் வக்ஃபு வாரியத்திற்கு  தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் இவர். இவர் மதரீதியாக மட்டுமன்றி கல்விக்கூடங்கள் போன்ற சமூக தேவைகளுக்காக வக்ஃப் வாரியத்திற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கினார். இது மட்டுமன்றி மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக திருப்பதி கோவில், யாத்கிரிகுட்டா கோவில் மற்றும் பஞ்சாப் பொற்கோவிலுக்கு கூட இந்த நிசாம் நன்கொடை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு மன்னர்கள், மதத் தலைவர்கள் மற்றும் புரவலர்கள் பலர் வழங்கிய சொத்துக்களே வக்ஃபு சொத்துக்களாக அறியப்பட்டன. மசூதிகள், மதரசாக்கள் மட்டுமல்லாது ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் கட்டுவதற்காகவும் இந்த வக்ஃபு சொத்துக்கள் பயன்பட்டன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, வக்ஃபு சொத்துக்களை நிர்வகிக்க 1954இல் வக்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வக்ஃபு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டம் 1995, 2013 என இரண்டு முறை திருத்தப்பட்டது. இன்று வரை நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே வக்ஃபு நிர்வாகம் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகவும் விளங்கியது.

இப்போது இந்த சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டு வந்து வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயலுகிறது. சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான இந்த சட்டத்தில், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கிலேயே பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒன்றிய / மாநில வக்ஃபு கவுன்சிலில், 2 பேர் (பதவி வழி நீங்கலாக) முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பது, ஒன்றிய வக்ஃபு வாரியத்தில் ஒரு ஒன்றிய அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் இடம் பெறுவது, வக்ஃபு தீர்ப்பாயத்திற்கு பதிலாக அரசு அதிகாரி உரிமை கோரல்களை கவனிப்பது, வக்ஃபு வாரியம் தன்னிச்சையாக சொத்துக்களை அறிவிக்கும் பிரிவான ‘பிரிவு 40’ நீக்கப்படுவது என பல திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது பாஜக அரசு. மேலும் மாவட்ட ஆட்சியர் பதவியை விட அதிகாரமிக்க அரசு அதிகாரி ஒருவர் வக்ஃபு சொத்துக்களை ஆய்வு செய்வார் என்றும் ‘குறைந்தது ஐந்து ஆண்டுகள் இசுலாமியராய் இருப்பவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு சொத்துக்களை கொடையளிக்க முடியும்’ என்று கூறுவதன் மூலம் மாற்று மதத்தினர் சமூக நல்லிணக்கத்திற்காகக் கொடையளிப்பதையும் தடுக்கிறது பாஜக அரசு.

இந்தியாவில் தற்போது வரை 32 தன்னாட்சி பெற்ற மாநில வக்ஃபு வாரியங்கள் உள்ளன. வக்ஃபு சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வக்ஃபு வாரியங்கள் செயல்படுகின்றன. சொத்து சிக்கல்கள் வரும்போது அதற்கு தீர்ப்பாயம் மூலம் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இந்த வக்ஃபு வாரியங்களின் அதிகாரத்தை மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டம் பெருமளவில் குறைத்திருக்கிறது. தற்போது தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்த்து உரிமையியல் வழக்கு மன்றம் முதல் உயர் நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் வரை செல்லலாம் என புதிய சட்டம் சொல்கிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை போன்றே வக்ஃப் வாரியம் இன்று வரை மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். அதேவேளையில் வாரியத் தலைவராக இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பொறுப்பு வகிக்கின்றனர். ஆனால் புதிய சட்டத்தின் மூலம் (பதவி வழி நீங்கலாக) 2பேர் மாற்று சமயத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினராகிறார்கள். வாரிய உறுப்பினர்கள் நியமனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பாஜக அரசு ‘டிஜிட்டல் மயமாக்குதல் எனும் பேரில் சொத்து விவரப் பட்டியல், பதிவு ஆவணங்கள், தரவுகள் போன்றவற்றையும் நிர்வகிக்க இருக்கிறது. இவ்வாறு வக்பு வாரியங்களில் மாநில அரசின் அதிகாரத்தைக் குறைக்கிறது மோடி அரசு.

ஒன்றிய அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வக்ஃபு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரும் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு இசுலாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 21 லோக்சபா எம்.பி.க்களும் 10 ராஜ்யசபா எம்.பி.க்களும் இருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் பெரும்பான்மையாக பாஜக எம்பிக்களே இருந்தனர். ஜகதாம்பிகா பல், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அபராஜிதா சாரங்கி, சஞ்சய் ஜெய்ஸ்வால், திலீப் சைக்கியா போன்ற பாஜக எம்பிகளும் தெலுங்கு தேசம் போன்ற பாஜக ஆதரவு கட்சிகளின் எம்பிக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்தனர். இந்தக் குழுவே கடந்த பிப்ரவரி 27, 2025 அன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முன்மொழிந்த திருத்தங்களை நிராகரித்து விட்டு புதிய திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3, 2025 அன்று நள்ளிரவில் மக்களவையில் 288 ஆதரவு 232 எதிர்ப்பு என்றும், ஏப்ரல் 4 அன்று நள்ளிரவில் மாநிலங்களையில் 128 ஆதரவு 95 எதிர்ப்பு என்றும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று மசோதா நிறைவேறியது. லோக்சபாவில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), தெலுங்கு தேசம் மற்றும் சிவசேனா (ஷிண்டே) ஆகியவை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. INDIA கூட்டணியில் திமுக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன. ராஜ்ய சபாவில் ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் கட்சிகளும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன.

மக்களவையில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு எம்.பி.க்களும் சர்ச்சைக்குரிய வக்ஃப் மசோதாவை எதிர்த்தனர். மாநிலங்களவையில், திமுக, அதிமுக மற்றும் ம.தி.மு.க. உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்தனர். பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்காமல் இருந்து, தனது ஆதரவைக் காட்டினர், அதே நேரத்தில் த.மா.கா-வின் ஜி.கே. வாசன் மசோதாவை வெளிப்படையாக ஆதரித்தார்.

 விரிவாக வாசிக்க:

(https://may17kural.com/wp/bjp-government-should-withdraw-the-waqf-board-amendment-bill-may-17-statement/?utm_soure=webpushr)

இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகியிருக்கிறது. இசுலாமியர் தொடர்பான ஒரு சட்டத்தை இசுலாமியர் அல்லாத பாஜக கட்சியினரே திருத்தி, தாக்கல் செய்து, அதை சட்ட வடிவமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘சிறுபான்மையினர் நலன்’ என்ற பெயரில் அவர்கள் உரிமையை நசுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்ததோடு நாட்டில் மதரீதியான வெறுப்புணர்வைத் தூண்டி விட்டிருக்கிறார்கள். இந்து அறநிலையத்துறையில் இந்துக்களைத் தவிர யாரும் பணிபுரியக்கூடாது என்று கூறும் இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக தான் இஸ்லாமியர் அல்லாதவர்களும் வக்ஃபு நிர்வாகத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் சிறிய சதவிகிதத்திலேயே இருக்கும் ஒரு சிறுபான்மை சமூகத்தைத் துடைத்தெறிய பல்வேறு சட்டங்களைக் கொண்டு வரும் மோடி அரசின் மற்றுமொரு தாக்குதலே இந்த வக்பு வாரிய சட்டம். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் தேசிய சராசரியை விட பின்தங்கியுள்ள சிறுபான்மையினருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து அவர்களை அப்புறப்படுத்தும் வேலையைத் தொடர்கிறது ஒன்றிய பாஜக அரசு.

இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது நாடாளுமன்றத்திலும் இசுலாமிய வெறுப்பு பரவியதைக் காண முடிந்தது. இதுவரை வட மாநிலங்களில் பரவும் வெறுப்புப் பேச்சுக்களை நாடாளுமன்றத்திலும் உரத்துப் பேசினர் பாஜக எம்பிக்கள். தங்களுடைய வன்முறை வெறியாட்டத்திற்கு சட்டத்தை துணைக்கு எடுத்துக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்-சின் கோர முகமே வக்ஃபு வாரிய சட்ட விவாதத்திலும் வெளிப்பட்டது. மோடி அரசு மூன்றாவது முறை பதவி ஏற்றதும் மதவெறி நோக்கி மக்களை மடைமாற்றும் வேலையை இன்னும் தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் மத உரிமையும், அதன் வழிமுறைகளை பின்பற்றவும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த உரிமைகளைப் பறிக்கும் நோக்கோடு சட்டங்கள் கொண்டு வருவது பாஜகவின் வாடிக்கையாகி விட்டது. வக்ஃபு வாரியங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இசுலாமியரின் சொத்துக்களைக் குறி வைத்த பாஜகவின் இந்த நடவடிக்கை, அவர்களின் தனிநபர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் பொது சிவில் சட்டத்தின் முன்னோடியே. இவ்வாறு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவின் அடுத்த குறி தேசிய இனங்களின் உரிமைகளாகத் தான் இருக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல், மீனவர் படுகொலையைத் தடுக்காத பாஜக, வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் மூலம் மாநில உரிமைகளிலும் கைவைத்துள்ளது. இதற்கு அமைதி காப்பது என்பது வருங்காலத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகும் செயலாகவே மாறும்.

இஸ்லாமியர்களுக்கு இன்று நடக்கும் கொடுமைகளுக்கு வாய் மூடி மெளனமாக இருந்தோமானால் நாளை நம் மீதும் இந்த யதேச்சையதிகாரம் பரவும். ஜெர்மானிய தத்துவஞானி மார்டின் நீமொல்லர் எழுதிய உலகப் புகழ்பெற்ற ஒரு கவிதை ஒன்று…

“முதலில் அவர்கள்

கம்யூனிஸ்ட்டுகளைத் தேடி  வந்தார்கள்

நான் கம்யூனிட்டுகளுக்கு

ஆதரவுக் குரல் எழுப்பவில்லை

காரணம்

நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை

அடுத்து அவர்கள்

சோசலிஸ்ட்டுகளைத் தேடி வந்தார்கள்

நான் சோசலிஸ்ட்டுகளுக்கு

ஆதரவுக் குரல் எழுப்பவில்லை

காரணம்

நான் ஒரு சோசலிஸ்ட் இல்லை

அதற்கடுத்து அவர்கள்

தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்

நான் தொழிற்சங்கவாதிகளுக்கு

ஆதரவுக்குரல் எழுப்பவில்லை

காரணம் 

நான் ஒரு தொழிற்சங்கவாதி இல்லை

பிற்பாடு அவர்கள்

யூதர்களைத் தேடி வந்தார்கள்

நான் யூதர்களுக்கு 

ஆதரவுக்குரல் எழுப்பவில்லை

காரணம்

நான் ஒரு யூதன் இல்லை

அதன் பிற்பாடு அவர்கள்

என்னைத் தேடி வந்தார்கள்

அப்போது எனக்காகக் குரல் எழுப்ப

எவரும் இருக்கவில்லை”…

எனும் கவிதைக்கேற்ப  பாசிச பாஜகவின் செயல்பாடுகள் மக்கள் ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-பாஜக திட்டமிடும் வன்முறைக்கு எதிராக, ஒற்றை இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக மதச் சார்பின்மையை வலியுறுத்தும் மக்கள் இயக்கங்களே தற்போதும் முன் நிற்கின்றன. (தமிழின உரிமைகளைப் பறித்ததற்கும் வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை 6/4/2025 அன்று மதுரையில் மே பதினேழு இயக்கம் நடத்தியது.) வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, பாசிசத்திற்கு எதிரான பணியை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து முன்னெடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »