
அதிமுகவிலிருந்த அன்வர் ராஜா வெளியேற்றம் குறித்தும், பாஜக குடுமிகளின் உள் அரசியலை அம்பலப்படுத்தாமல் நடக்கும் விஷம் தோய்ந்த, உள்நோக்கம் கொண்ட அரசியல் விவாதங்கள் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூலில் ஜூலை 21, 2025 அன்று பதிவு செய்தவை.
இசுலாமிய மக்களின் ஆதரவை அதிமுக இழக்கிறதென்பதை அன்வர் ராஜா அவர்களின் வெளியேற்றம் காட்டுகிறது.
இதுகுறித்து துக்ளக் பத்திரிக்கை நபர் ஊடகத்தில் பேசும்பொழுது சொன்னது,”.. அதிமுகவிற்கு என்றைக்குமே சிறுபான்மை மக்களின் ஆதரவு இருந்ததில்லை, அவர்கள் திமுகவுடனே இருக்கிறார்கள்…” என்கிறார். இது மிகவும் நயவஞ்சகமான உள்நோக்கமுள்ள கருத்துப் பரப்பல், சனாதன-சங்கிகளின் சதிகார அரசியல்.
பாஜக கட்சி தன்னோடு கூட்டணி வைக்கக்கூடிய கட்சிகளை பலமிழக்கச் செய்துள்ளது. பீகாரின் நிதிஷ்குமார், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரின் கட்சிகள், கர்நாடகத்தில் தேவகெளடாவின் ஜனதாதளம் ஆகியன பாஜகவோடு கூட்டணி வைத்ததால் இசுலாமிய மக்களின் ஆதரவை இழந்தன. இதனால் இக்கட்சிகளின் வாக்கு சதவீதம் குறைந்தது. ஆளுமையான, ஆட்சி அமைக்கும் நிலையிலிருந்து சரிந்தன. இதன்பின்னர் இவை பாஜகவை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையை உருவாக்கியது பாஜக.
இழந்த இசுலாமியரின் வாக்குகளை உயர்சாதி மற்றும் பார்ப்பனர்களின் வாக்குகளைக் கொண்டு நிரப்பிவிட முடியுமென்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டது. இதன்பின்னர் இக்கட்சிகளில் உடைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. நிதீஷ்குமார் இசுலாமியரை மட்டுமல்ல, தலித்துகளின் ஆதரவையும் இழந்தார். அவரிடமிருந்த தலித்திய தலைவர் ’மான்ஜி’ தனிக்கட்சி தொடங்கினார். பார்ப்பனர்-உயர்சாதி வாக்குகள் ஜனதாவின் வாக்குகளாக மாறாமல் போனது. மண்டல் கமிசனை ஆதரித்த ஜனதாதளத்திற்கு பார்ப்பனர்-உயர்சாதி ஆதரவு கிடைக்காது. இவ்வாறாக இக்கட்சிகள் நிலைகுலைந்து தனது வலிமையை இழந்து நிற்கின்றன. இவ்விடங்களில் பாஜகவின் ‘குடுமி’கள் பரப்பிய கருத்து, “இசுலாமிய-சிறுபான்மை வாக்குகளை நம்பி நீங்கள் இருந்ததில்லை..” என்பதுவே.

இந்தியாவிற்குள்ளாக சிறுபான்மை சமூகங்கள், சிறுபான்மை சாதிகள் ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டே ஆளும் கட்சிகளாக உருப்பெருகின்றன. பெரும்பான்மை சாதிகளின் ஆதரவை ‘இந்துக்களின் ஆதரவு’ என்று பாஜகவின் சங்கிகள் கதை கட்டுவார்கள். இப்படியெல்லாம் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு பாஜகவால் இந்தியாவின் மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடிந்ததில்லை. இசுலாமிய மக்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், சிறுபான்மை சாதிகள், தலித்துகள் என அனைவரின் ஆதரவை பெற இயன்றவர்கள் பலமான கட்சிகளாக உருப்பெறுகிறார்கள்.
இவ்வாறான கூட்டு ஆதரவிலேயே அதிமுக மிகப்பலம் வாய்ந்த கட்சியாக ஆட்சி செய்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக பொதுவெளியில் ஜெயலலிதா அம்மையார் வருத்தத்தை பதிவு செய்ததும் கடந்த காலத்தில் நடந்ததற்கான காரணம் என்ன? இவ்வாறாகவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக திமுகவினால் பெரும்பான்மை ஆட்சி அமைக்க இயலாத நிலையை அதன் தலைவர் காலத்திலேயே சந்தித்தது.
இசுலாமிய மக்களின் ஆதரவு தளத்தை அதிமுக படிப்படியாக இழக்குமெனில் பாஜக லாபமடையும். இசுலாமியர்களை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யும் அரசியலில் பாஜக வெற்றியடைகிறது. ஏற்கனவே அதிமுகவை சாதி அடிப்படையில் மூன்று பிரிவுகளாக உடைத்தது. இருந்தபோதிலும் 2024 தேர்தலில் 1கோடி ஓட்டுகளை பெற்றதற்கான காரணம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதும், இசுலாமியர் ஆதரவு வாக்குகளை SDPI உள்ளிட்ட இயக்கங்களின் வாயிலாக பெற முடிந்ததும் காரணம். இசுலாமிய மக்கள் நிரந்தரமாக ஒரே கட்சியின் பின்னால் அணி வகுத்ததில்லை. அரசியல் சூழலை அறிந்தே வாக்களித்திருக்கிறார்கள். பலவேறு தமிழக கட்சிகளிலும் பல மட்டங்களில் இசுலாமியர்கள் பங்களிக்கிறார்கள். இவற்றையெல்லாம் மறைத்து ‘துக்ளக்’ ஆசாமி கருத்து சொல்கிறார்.
அதாவது இசுலாமியரின் ஆதரவை இழப்பதால் அதிமுகவிற்கு நட்டமில்லை என்கிறது ‘குடுமிகள்’ தரப்பு. இதுபோன்ற கருத்துத் திணிப்பை ஊடகங்கள் வாயிலாக சங்கிகள் செய்கின்றனர். ஊடகங்களும் ‘பத்திரிக்கையாளர்கள்’ என்பர்களிடம் மட்டுமே கருத்துகேட்கும் ‘ஊடகங்களாக’ இயங்குகின்றன. அதாவது ஊடகங்கள், ஊடகத்தவரிடம் கருத்து கேட்டு அதுவே கட்சி சாராதவர் கருத்து என மக்களை நம்பவைக்க படாதபாடு படுகின்றன. இந்த சோ-கால்டு ஊடகவியலாளர்களும் மக்களை சந்திக்காமலேயே ‘மக்கள் பற்றிய’ கருத்துகளை சதா பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்த மக்கள் திரள் கூட்டங்களிலும் நாங்கள் கண்டதில்லை.
தமிழ்நாட்டில் அரசியல் ஆய்வுக்களம் என்பது திட்டமிட்டு தரம்-தாழ்ந்ததாக, சங்கி-சார்ந்ததாக, பெரியகட்சி சார்ந்ததாக மாற்றப்படுகிறதோ எனும் அய்யம் எழுகிறது.
தமிழ்நாட்டு அரசியலை இவ்வளவு மேலோட்டமாக கடந்துவிட இயலாது. அதிமுக-திமுக கட்சிகள் மட்டத்தில் நடக்கும் நகர்வுகள் சுயநல அரசியல் சார்ந்ததாக இருந்தாலும், இவை இரண்டும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான வாக்களர்களின் ஆதரவை பெற்றவை. இதில் நடக்கும் அசைவுகள் கவனத்திற்குரியவை. குறிப்பாக, பாஜக ‘குடுமிகளின்’ உள்அரசியலை அம்பலப்படுத்தாமல் நடக்கும் விவாதங்கள் விஷம் தோய்ந்தவை. உள்நோக்கமுடையவை. அதிமுகவை அதன் தொண்டர்கள் நினைத்தால் மட்டுமே காக்க இயலும்.