தமிழ்நாட்டில் மக்கள் திரளாக பங்கேற்று போராட்டம் நடத்தி எதையும் வென்றுவிட கூடாது என்பதற்காகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை காவல்துறையை கொண்டு கலைத்தது அன்றைய அதிமுக அரசு. அதேபோலவே எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எதிராகவும் தமிழ்நாட்டில் எவ்விதமான போராட்டமும் உருவாகக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட அரச பயங்கரவாதம் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்களை சுட்டுக் கொன்றது. இந்த உண்மை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. ஆயினும் இதன் பின்னாலிருந்து இப்பாதக செயலைச் செய்ய தூண்டியவர்கள் பெயர்களும் அம்பலமாக வேண்டும்!
அனில் அகர்வால் எனும் மார்வாடிக்கு சொந்தமான வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி அம்மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததோடு அவர்களுக்கு தீராத பல கொடிய நோய்களையும் தந்தது. அதனால் இந்த ஆலையை மூடவலியுறுத்தி 20 ஆண்டுகளாக அம்மக்கள் போராடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவித்து அறவழியில் மக்களை ஒன்றிணைத்து போராடி வந்தது.
அப்போராட்டத்தின் 100-வது நாள் 2018, மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி வழியில் பேரணி செல்லப் போவதாக மக்கள் அறிவித்தனர். ஆனால், மக்களுக்கு தெரியப்படுத்தாமல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடையை மீறி பேரணி செல்கிறார்கள் என மக்களை, மறைந்திருந்து திட்டமிட்டு துப்பாக்கியால் காக்கை, குருவியை சுடுவது போன்று சுட்டு படுகொலை செய்தது தமிழ்நாடு காவல்துறை.
17 வயது மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 13 பேர்களை மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொன்றது காவல்துறை. மேலும் 2 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தனர். அதோடு நூற்றுக்கு மேற்பட்டோர் காவல்துறையால் விரட்டி விரட்டி கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என யாராலும் தூத்துக்குடியை நெருங்க முடியாதபடி கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
இவ்வளவு கடும் அடக்குமுறைக்கு பிறகும் தூத்துக்குடி மக்கள் சற்றும் மனம் தளராது வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம் என்று உறுதியாக நின்றதனாலேயே ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.
இந்த மாபாதக செயலை சொந்த மக்களுக்கு எதிராக செய்த அரச பயங்கரவாதம் குறித்தான விசாரணை நடத்த 2018-ம் ஆண்டு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுகால விசாரணைக்குப் பின், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கை 18.10.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
அருணா ஜெகதீசன் அறிக்கையில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளன.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் அலட்சியத்துடன் இருந்ததுள்ளனர். திருநெல்வேலி சரக டிஐஜி கபில் குமார் சரத்கர், தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், உளவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகிய முக்கிய காவல்துறை தலைமைகளும் பொறுப்பற்று நடந்து கொண்டது அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணி முன்பாக அறிவிக்கப்பட்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் மிகத் தாமதமாக தடை விதித்ததும், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்லாததும் தான் இச்சம்பவம் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாளான மே 21 முதல் மே 23 வரை பொதுக் கூட்டம் நடத்தவோ, 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடவும், ஊர்வலமாக செல்லவும் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் பிரகடனம் செய்தது முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாக உள்ளது, என்கிறது அறிக்கை.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை அங்கிருந்த பூங்காவில் மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்று உள்ளது என்கிறது அறிக்கை.
அதோடு துணை தாசில்தார்களிடம் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துப்பாக்கிச்சூடு உத்தரவையும் காவல்துறை திட்டமிட்டு பெற்றிருக்கிறது. மேலும் நெற்றியிலும் மார்பிலும் திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
சுடலைக்கண்ணு என்ற காவலரின் துப்பாக்கியிலிருந்து மட்டுமே 17 ரவுண்டுகள் சுடப்பட்டு உள்ளது. ஒருவேளை அவருடைய துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்து போகமல் இருந்திருந்தால் இன்னும் பலரின் உயிர்கள் பறிக்கப்பட்டு இருக்கும்.
அங்கு பதிவான வீடியோ காட்சிகளின் மூலம், கார்த்திக், ஸ்னோலின் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல் துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு விழுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு பிறகு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக் கணக்கானவர்களில் படித்த இளைஞர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்து, சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அதோடு இரவு நேரத்திலும் வீடுகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டிருக்கின்றனர்.
சீருடை அணிந்த மற்றும் அணியாத காவலர்கள், இரவு பகல் என்று பாராது வீட்டிற்குள் நுழைந்து கைது செய்து, கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்ற விளக்கத்தை தரக்கூட வாய்ப்பளிக்காமல் பல வகையில் தாக்கி இருக்கின்றனர்.
அன்றைய முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறியது ஒரு பச்சைப் பொய் என்றும், அவருக்கு அங்கு நடந்த விடயங்களை நொடிக்கு நொடி அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உளவுத்துரை ஐஜி.சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் தெரிவித்தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மே 22, 2018 அன்று, உயிரிழப்புகள், சொத்துகள் சூறையாடப்பட்டது போன்ற சம்பவங்கள் நடைபெறும் வரை உளவுத்துறையின் தகவல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மாவட்ட ஆட்சியர் தனது சாட்சியத்தில் கூறியிருப்பது முற்றிலும் வியப்பை ஏற்படுத்துகிறது.
இறந்த 12 பேர்களும் 108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் நல்லதம்பி தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும் கடும் காயங்களோடு மரணத்தின் பிடியில் இருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களும் தனியார் ஆம்புலன்ஸில் தான் கொண்டு வரப்பட்டார்களே தவிர, ‘108’ ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படவில்லை என்ற ஆணைய அறிக்கையின் தகவல் மிகவும் குறிப்பிடத்தக்கது.
சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று நடிகர் ரஜினிகாந்த கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அவர் விசாரணையின் போது கூறியுள்ளார். ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பல முக்கிய முடிவுகளை எட்டியுள்ளதையும் அதனடிப்படையில் பரிந்துரைகள் வழங்கியுள்ளதையும் விளக்கியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறி செயல்பட்டுள்ளது. அதன் நடைமுறையில் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் செய்யத் தகாதவற்றைச் செய்திருக்கிறது என்று ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது.
திருநெல்வேலி சரக டிஐஜி, தென்மண்டல ஐஜி, தூத்துக்குடி எஸ்பி, வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் என 17 பேர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
விசாரணை ஆணையம் இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது சட்டபூர்வ வாரிசுகளுக்கு 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும், காயமடைந்தவருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்துள்ளது.
உயிரிழந்த ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாகப் கருதி அவர் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்கவும், அவரது அம்மாவிற்கு பணி வழங்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பலத்த காயம் அடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஆனாலும், ஆணையத்தின அறிக்கையில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், அவர்கள் அவ்வாறு உத்தரவிடுவதற்கு என்ன நோக்கம், சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு வந்தது ஏன் போன்ற கேள்விகளுக்கான பதில் இல்லாதது ஏமாற்றமே!.
இதிலிருந்து தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு என்பது மோடியின் நெருங்கிய நண்பரான அனில் அகர்வாலின் வேதாந்த நிறுவனத்தை காப்பாற்ற மோடி அரசு, அதிமுக அரசை ஏவி அன்றைய தலைமை செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு பச்சைப் படுகொலையாக ஏன் இருக்கக் கூடாது என்கிற ஐயம் மேலோங்குகிறது.
அதோடு அந்தப் போராட்டத்தை உருவாக்கியதும் அந்தப் போராட்டத்தில் குழப்பத்தை விளைவித்ததும் ஸ்டெர்லைட் வேதாந்தாவும் அன்றைய அதிகாரவர்க்கமும் தானே தவிர போராட்டக்காரர்கள் அல்ல.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை குறிப்பிட்டுள்ள 17 பேர் தவிர, துப்பாக்கி சூட்டின் மறைமுக குற்றவாளிகளான சூத்திரதாரிகளை கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வந்து அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
அதுதான் கொடிய ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்து மாபெரும் வரலாற்றைப் படைத்து ஈகியரான அனைவருக்குமான நீதி!