பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் பின்புலம்

கடந்த (2022) ஜூலை மாதம், பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியைத் துறந்த பிறகு, பதவியேற்றவர் லிஸ் ட்ரஸ். தனது சொந்த கட்சிக்குள் (கன்சர்வேட்டிவ் கட்சி) கிளம்பிய அதிருப்தி மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த அக்டோபர் 20 அன்று, அதாவது பதவியேற்ற ஆறு வாரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் ட்ரஸ். பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோர் விலகியதால், தற்போது ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலை சந்திக்காமலே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் 4-வது பிரதமர் ரிஷி சுனக். பிரிட்டனின் அடுத்த பொதுத் தேர்தல் 2025-இல் தான் நடைபெறும். ரிஷி சுனக் கடந்த செப்டம்பர் மாதம் லிஸ் ட்ரஸ் உடன் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் 1980-இல் பிறந்தவர். இவரது தாத்தா குடும்பம் 1930-களில் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் குஜ்ரன்வாலா பகுதிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு குடியேறியது. தந்தை கென்யாவில் பிறந்தவர். தாய் தான்சானியா நாட்டில் பிறந்தவர். இவர்கள் 1960-களில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு குடியேறினர்.

2020 முதல் 2022 வரை இங்கிலாந்தின் நிதி அமைச்சராக இருந்தவர் ரிஷி சுனக். இவரது அரசியல் பின்புலம் இவரின் செல்வ செழிப்பை மூலதனமாகக் கொண்டே உருவானது. இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்து இங்கிலாந்தின் செல்வந்தர்கள் பட்டியலில் நுழைந்த முக்கிய அரசியல்வாதி ரிஷி சுனக். இவரின் சொத்து மதிப்பு தற்போது 6850 கோடி ரூபாய் (730 மில்லியன் பவுண்டுகள்) என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினார்களிலேயே அதிக செல்வம் உடையவராக உள்ளார். பிரித்தானிய பேரரசின் (UK) அரசரான சார்லசின் ஆபரணங்கள் தவிர்த்த சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு சொத்து மதிப்பு இவருடையது.

இந்தியாவைப் போலவே இங்கிலாந்தில் அமைச்சர்கள் தேர்தலுக்கு முன் தங்கள் குடும்பத்தின் நிதி நிலையை அறிவிக்க வேண்டும். ஆனால் ரிஷி சுனக் தனது முழுமையான சொத்துக்களை அறிக்கையிடாமல், தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை மறைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது எழுகின்றன. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இத்தகைய வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு நாம் அதிகம் கவனிக்க வேண்டியது அரசியலில் இவர் கொண்டுள்ள வலதுசாரி கண்ணோட்டமே.

2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்துதான் ரிஷி சுனக், இங்கிலாந்து அரசியலில் அதிகம் பேசப்படும் அரசியல்வாதி ஆனார். ஆனால் இதன் பின்னணியில் இங்கிலாந்தில் வாழும் இந்துத்துவ வலதுசாரிகளின் திட்டமிட்ட ஒரு பரப்புரை இருக்கக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றும் அரசிற்கு சாதகமாகவே தங்கள் நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று. கடந்த 2015-இல் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்தும் அதிகரித்து வரும் சகிப்புத்தன்மை குறித்தும் பேசினார். “பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதே அரசின் முதல் முன்னுரிமை” என்றெல்லாம் கூறினார். சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் இருப்பதாகக் கூறிய அவர், மோதல்கள் அதிகம் உள்ள நாடுகள் விரைவாக முன்னேறாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், ரிஷி சுனக் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் நாராயணமூர்த்தி. இந்தியப் பொருளாதாரம் தடுமாறுகின்ற போது அதை முதல்தரமாக இருக்கிறது என்று கூறினார் நாராயணமூர்த்தி. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை பாராட்டவும் செய்தார். இவ்வாறு இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தின் கார்பரேட் நிறுவனம் மூலம் இங்கிலாந்தில் உள்ள இந்துத்துவ வலதுசாரிகளின் ஆதரவைப் பெற்றார் ரிஷி சுனக்.

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த போது, ரிஷி சுனக்கின் செல்வாக்கு வளர்வதற்கு போரிஸ் ஜான்சன் உதவியுள்ளார். ஆனால், தான் சுயமாக வளர்ந்தவர் என்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், போரிஸ் ஜான்சன் தனது பதவியை இழப்பதற்கு ரிஷி சுனக் காரணமாக அமைந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நெருக்கடியின் போது ரிஷி சுனக் தனது நிதியமைச்சர் பதவியை முதலில் ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் வெளியேறினர். இறுதியில் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் ரிஷி சுனக் மீது போரிஸ் ஜான்சன் மிகக் கோபமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு, தன்னை வளர்த்துவிட்டவரையே முதுகில் குத்தியவர் தான் ரிஷி சுனக்.

பழைமைவாதக் கட்சியியை சேர்ந்த ஒரு வலதுசாரி நபராக ரிஷி சுனக் உள்ளார். ஆகையால் கட்சிக்குள் லிஸ் ட்ரஸ்ஸை காட்டிலும் இவருக்கு அதிகமாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழையபடி கொண்டு செல்ல கடுமையான முடிவுகள் எடுப்பேன் என்கிறார் ரிஷி சுனக். தாராளவாத கொள்கைகளை லிஸ் ட்ரஸ் நடைமுறைப்படுத்த முயன்று தோல்வியுற்றதால், ரிஷி சுனக் கருத்தின் மீது அரசியல்வாதிகளும், பொருளாதார வல்லுனர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜெரமி கோர்பைன் உட்பட பலர், இது 1% செல்வந்தர்களை காப்பாற்ற 99% மக்கள் பொருளாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்கின்றனர். ரிஷி சுனக்கின் கடந்தகால செயல்பாடுகளும் மக்கள் நலனை நோக்கியதாக இருக்காது என்பதையே காட்டுகிறது.

இங்கிலாந்து நாட்டில் தற்போது வேகமாகப் பரவி வரும் இசுலாமிய வெறுப்பு மற்றும் சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கை போன்ற முக்கிய விடயங்களில் ரிஷி சுனக் சார்ந்த ஆளும் கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) மிக மெத்தனமாகவே நடந்து வந்திருக்கிறது. சீக்கியர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் பிரீத்தி படேல். இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பதவியில் இருந்த பிரீத்தி படேல் ஆர்.எஸ்.எஸ்.-ன் வெளிப்படையான ஆதரவாளர் என்று தெரிந்தும் அவரை ஆதரித்தவர் ரிஷி சுனக். ரிஷி சுனக்கின் முந்தைய தலைமுறையினர் பஞ்சாபை சேர்ந்தவர்களாக இருந்தாலும், சீக்கியர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட பிரீத்தி படேலை அவர் விமர்சிக்கவில்லை. இதன் மூலம் தன்னை இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றே முன்னிலைப்படுத்தி வருகிறார் ரிஷி சுனக்.

உள்நாட்டு அரசியலை விடுத்து ஏன் வெளிநாட்டு அரசியலைப் பற்றி ரிஷி சுனக் கவலைப்பட வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் நடந்த கலவரம் பதில் கூறும். விளையாட்டைத் தாண்டி மத உணர்வுகளைத் தூண்டும் கிரிக்கெட் போட்டிகளால் இங்கிலாந்திலும் சிக்கல் எழ ஆரம்பித்துள்ளது. துபாயில் ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் கலவரம் வெடித்தது. இதில் இசுலாமியர்கள் மீது இந்துக்கள் தாக்குதல் நடத்தினர். அமைதிப்பூங்காவாக இருந்த லீசெஸ்டர் நகரம் முதன்முறையாக ஒரு மதக்கலவரத்தை காண்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளிநாட்டுக் கிளையான ஹெச்.எஸ்.எஸ். (Hindu Swayamsevak Sangh – HSS) போன்ற அமைப்புகளின் தாக்கத்தால் தான் இந்தக் கலவர செயல்கள் நடந்தேறின.

இப்படி பல்வேறு நாடுகளில் ஆர்.எஸ்.எஸ். பரப்பும் இந்துத்தவ வெறியை தடுக்கும் ஆட்சியாளர்கள் பதவியில் இல்லாமல் போனால், இனி வரும் காலங்களில் உலகம் முழுவதும் இது போன்ற கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படும். சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் போன்றும் இங்கிலாந்தில் ரிஷி சுனக் போன்றும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ஊடகங்கள் காட்சிப்படுத்தும் அரசியல்வாதிகளை அடையாளம் காண்பதும் நம் கடமையாகிறது.

One thought on “பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் பின்புலம்

  1. I couldn’t understand how British people accept Rishi Sunak as Prime Minister who , in my , view overthrew Liz Truss government because Rishi has NOT handled financial crisis properly as Finace Minister under the leadership of Liz ; thus paved the way for her government’s fall .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »