பாலஸ்தீனம் மீதான தாக்குதல்: அம்பலமான இந்தியாவின் கோரமுகம்
இஸ்ரேலுக்கு எதிரான விசாரணை கமிஷன் அமைப்பதற்கான ஐநாவின் தீர்மான வாக்கெடுப்பில், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக “தாமரை இலை” நீராய் விலகி நின்ற இந்திய அரசின் கோரமுகம்.
கடந்த மே மாதம் 27-ம் தேதி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அமர்வில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 24 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானமானது, மே மாதம் 10ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனத்தின் மீது நடந்த இஸ்ரேலின் கண்மூடித்தனமான மக்கள் குடியிருப்புகளின் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் பதிலடியாக நடத்திய தாக்குதல்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ள நிரந்தர சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்க வழிவகை செய்கிறது.
இந்த தீர்மானமானது, கடந்த மே 10-21 காலகட்டத்தில் கிழக்கு ஜெருசலேம், காசா, மேற்குக் கரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள கோருகிறது. மேலும், வரலாற்று ரீதியிலான பாலஸ்தீன சிக்கலை ஆராய்வது, உள்ளார்ந்த பாலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வு குறித்து முழுமையான விசாரணை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வது, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான, குறிப்பாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் அரசாங்கம் நடத்திய இன, மொழி, மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை விசாரிப்பதற்கு வழிவகை செய்கிறது. மேலும், பிற நாடுகள் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்பதை தடுப்பதற்கும் வழிவகை செய்கிறது. நீண்டகால சிக்கலுக்கு ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிரந்தர சர்வதேச விசாரணை ஆணையம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
46 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் 24 நாடுகள் ஆதரவுடன் இந்த விசாரணை ஆணையத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, பிரான்ஸ், ஜப்பான், நேபாளம், பிரேசில் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. மேற்கத்திய நாடுகளான ஐக்கிய ராஜ்ஜியம் (UK), ஜெர்மனி, பல்கேரியா மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட 9 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது, ஐநாவிற்கான ஐக்கிய ராஜ்ஜியத்தின் நிரந்தர பிரதிநிதி சைமன் மேன்லி (Simon Manley) தனது அறிக்கையில், “ஐக்கிய ராஜ்யத்தின் வெளியுறவுச் செயலாளர் டோமினிக் ராப் (Dominic Raab) அவர்கள் இந்த வாரத்தில் இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் சென்று போர் நிறுத்த உடன்படிக்கையை நிலை செய்வதற்கான முயற்சியை எடுத்து வருவதாகவும், அதுவே இந்த தொடர்ச்சியான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழிமுறை” என்று கூறினார்.
இஸ்ரேல் அரசாங்கம் தன்னை தற்காத்து கொள்வதற்கான முழு உரிமை உள்ளது எனவும், ஹமாஸ் உள்ளிட்ட போராட்டக் குழுக்களின் இஸ்ரேல் தாக்குதலுக்கு தமது கண்டனத்தையும் பதிவு செய்தார்.
சைமன் மேன்லி தனது உரையில் எந்த ஒரு இடத்திலும் இஸ்ரேலின் நடத்திய பாலஸ்தீனத்தின் காசா பகுதி குடியிருப்புகளின் மீதான தாக்குதலையோ, ஆயுதம் இல்லாமல் போராடிய மக்களின் மீதான தாக்குதலையோ கண்டிக்கவில்லை.
ஐநா மனித உரிமை உயரிய அவையின் உறுப்பு நாடாக அமெரிக்கா இல்லை என்றாலும் பல்வேறு ராஜதந்திர ரீதியிலான நெருக்கடிகளை கொடுத்து இந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்த முனைந்தது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் பிரான்ஸ், சீனா உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வெளியிடவிருந்த அறிக்கை மூன்று முறை போர் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு உள்ளாக அமெரிக்கா தடுத்து நிறுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர், ஐநா பாதுகாப்பு சபையின் ஒருமித்த குரலை அமெரிக்கா எனும் ஒரு நாடு தடுத்து நிறுத்துவதாக குற்றம் சாட்டினார்.
கடந்த 50 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் அறிக்கைகள் குறைந்தபட்சம் 53 முறை அமெரிக்காவால் வீட்டோ (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
இறுதியாக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பிரான்ஸ், சீனா, துனிசியா, நார்வே ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட அறிக்கை சண்டை நிறுத்தத்ததை உறுதியாக பேண வேண்டும் என்றும், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கான மனித உரிமை உதவிகள் உடனடியாக கொண்டுசெல்வதற்கான தேவையையும் வலியுறுத்தியது.
ஐநா மன்றத்தில் இஸ்ரேலை பாதுகாப்பதில் அமெரிக்கா மிக முக்கிய பங்கு வகித்தது. தனது மிக முக்கிய கூட்டாளியான ஐக்கிய ராஜ்ஜியத்தின் மூலம் இந்த ஐநாவின் மனித உரிமைகள் ஆணைய அவையின் தீர்மானத்தை தடுத்து நிறுத்துவதற்காக அமெரிக்கா ராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை செய்தது. சில அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு காங்கிரஸ் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தொடர்ச்சியாக இஸ்ரேலை பாதுகாப்பதையே வழக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது தற்காப்பை உறுதிசெய்து கொள்வதற்கான உரிமை இஸ்ரேல் அரசாங்கத்திற்கு உள்ளது என்று இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாக விளக்கமளித்தார். இதே நிலைப்பாட்டில் தான் ஐக்கிய ராஜ்ஜியம் இருக்கிறது என்பதை ஐநாவுக்கான ஐக்கிய ராஜ்ஜியத்தின் தூதர் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதே வேளையில், மே மாதம் 26 ஆம் தேதி அயர்லாந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய இடதுசாரிக் கட்சியான சின் பெயின் (Sinn Féin), இஸ்ரேலுக்கு எதிராக அயர்லாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த தீர்மானமானது வரலாற்று சிறப்புமிக்கது. இதுவரை எந்த ஐரோப்பிய நாடும் கொண்டு வந்திராத ஒரு மிக முக்கியமான தீர்மானமாக கருதப்படுகிறது.
அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், பாலஸ்தீனம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக அறிவிக்கிறது. மேலும் இஸ்ரேலை ஒரு இனவெறி அரசாக இத்தீர்மானம் அங்கீகரிக்கிறது. ஆட்சியில் இருக்கும் வலதுசாரி கட்சியின் எதிர்ப்பினால் ஹாமாஸின் தாக்குதலையும் இத்தீர்மானம் கண்டிக்கிறது. இஸ்ரேலின் இனவெறி அரசைக் கண்டிப்பதுடன், இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவைகளில் பன்னெடுங்காலமாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வந்த இந்தியா படிப்படியாக தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. தி வயர்(TheWire) இணையதள செய்தி ஊடகத்திற்கு விளக்கமளித்த ஐநாவிற்கான முன்னாள் தூதுவர் தல்மிஸ் அக்மத் (Talmiz Ahmad) இந்தியாவின் நிலைப்பாடு இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவாக இருப்பதாக கூறினார். மேலும், தற்போதைய வன்முறை கவலையை தருகிறது என்று இந்தியா பொத்தாம் பொதுவாக கூறினாலும், குறிப்பாக ஹமாஸின் தாக்குதலுக்கு தான் கண்டனத்தை பதிவு செய்கிறது. பாலஸ்தீன நாட்டைப் பற்றி பேசுகிறது, ஆனால் கடந்த காலங்களில் இந்தியாவின் மிக முக்கியமான நிலைப்பாடாக இருந்து வந்த கிழக்கு ஜெருசலம் பாலஸ்தீனத்தின் தலைநகர் என்பதை பதிவுசெய்ய மறுக்கிறது” என்கிறார்.
இந்த சூழலில்தான் நிரந்தர சர்வதேச விசாரணை ஆணையம் அமைப்பதற்கான ஐநா தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்தியா நடுநிலை வகித்து தனது இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளது. இதற்கு முன்பாக நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எந்த ஒரு நிலைப்பாட்டையும் இந்தியா எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நடைபெற்ற விவாதத்தில் கூட இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் காணொளி வாயிலாக கலந்துகொண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கு அளிப்பதற்கான அறிக்கையை பற்றி பேசினார். ஆனால், பாலஸ்தீன சிக்கலை பற்றி இந்தியா அக்கறை காட்டவில்லை.
அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக மத்திய கிழக்கு பிரதேச பகுதியில் இஸ்ரேல் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக அமெரிக்காவின் அடியாளாக செயல்படுவதுதான் இஸ்ரேல்.
2020ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்த உதவித்தொகை 3.8 பில்லியன் டாலர்கள் அதேவேளை பாலஸ்தீனத்திற்கு அமெரிக்க கொடுத்த நிதி உதவி வெறும் 19 மில்லியன் டாலர்கள். கிட்டத்தட்ட இருநூறு மடங்கு அதிகமாக இஸ்ரேலுக்கு நிதி உதவியை அமெரிக்கா கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகை முழுவதையும் இஸ்ரேல் அரசாங்கம் தனது ராணுவ பலத்தை அதிகப்படுத்துவதற்காக செலவிடுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் இஸ்ரேல் மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதில் 12வது இடத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேவேளை இஸ்ரேல் அரசாங்கம் உலகத்திலேயே மிக அதிக அளவாக $2,508/Capita ராணுவத்திற்காக நிதியை ஒதுக்கிறது. இது அமெரிக்கா தனிநபர் அடிப்படையில் ஒதுக்கும் நிதியை விட அதிகம்.
இஸ்ரேல் உற்பத்தி செய்யும் ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பெரும்பகுதி இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இஸ்ரேல் உற்பத்தி செய்த 26% ஆளில்லா விமானம் உள்ளிட்ட ஆயுதங்களை இந்தியா வாங்கியுள்ளது.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எப்பொழுது இந்தியா அணிசேரா நாடுகளில் இருந்து விலகி ஆதிக்க அமெரிக்க மேற்கத்திய நாடுகளுடன் சார்பு நிலையை மேற்கொள்ள ஆரம்பித்ததோ அன்றிலிருந்து படிப்படியாக இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்கு நகர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தனது கட்சியின் கொள்கையான இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக இஸ்ரேல் சார்பாக இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில்தான் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமராக மோடி அவர்கள் உள்ளார்.
இஸ்ரேல் உற்பத்தி செய்யும் ஆயுதங்கள் அப்பாவி பாலஸ்தீன மக்களின் மீது பரிசோதிக்கப்படுகிறது. இவையெல்லாம் தெரிந்தும் இந்தியா நம் மக்களின் வரிப்பணத்தில் இஸ்ரேலின் ஆயுதங்களை வாங்குவதன் மூலம் ஒரு இனப்படுகொலைக்கு துணை போகிறது. இதே போன்றுதான் இந்தியா தனது தமிழின விரோத மரபை தமிழினப்படுகொலைக்கு வித்திட்டு சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு ஆதரவாக நின்று எடுத்தது என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்று. அதே நிலைப்பாட்டை தான் இன்று பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் இந்தியா எடுத்துள்ளது. எனவே இந்தியாவின் நிலைப்பாடு இந்திய மக்களின் மனநிலைக்கு எதிராகவும், ஒரு இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் இனப்படுகொலைக்கு துணை போவதாகவும் இருக்கிறது. தனது இஸ்லாமிய வெறுப்பு அரசியலை இந்திய வெளியுறவு கொள்கைகளில் திணித்து வருகிறது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் கோரமுகம் அம்பலமாகியிருக்கிறது.