
விழுப்புரம் மருதம் அமைப்பினர் ஒருங்கிணைத்த 19ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சனவரி 16, 2026 அன்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை:
அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் விழா என்பது வேறு எந்த சமூகத்தையும் விட, சாதி மதம் கடந்து கொண்டாடப்படுகின்ற ஒரு சமூக நிகழ்வாக பொங்கல் விழா இருக்கிறது. இந்த தமிழ் சமூகத்தை ஒரு பண்பட்ட சமூகமாக நாம் புரிந்து கொள்வதற்கான ஒரு மாபெரும் நிகழ்வாக பொங்கல் நிகழ்வை பார்க்க முடியும் என்று தந்தை பெரியார் சொல்லி இருக்கின்றார். தந்தை பெரியாரை பேச வேண்டிய தேவை அன்றாடம் உருவாகிக் கொண்டே இருக்கிறது.
என்ன காரணம் என்றால், இயற்கையின் வழியாக இயங்கிய ஒரு இனம் ’தமிழினம்’. அந்த இயற்கை வழிபட்ட தமிழ் சமூகத்தை, மூட நம்பிக்கையின்பால் ஏற்ற தாழ்வினை உருவாக்கிய இந்து மத கோட்பாடுகள் எனப்படுகின்ற வேத மரபுகளுக்குள்ளாக, நம்மை ஒடுக்கிய ஈராயிரம் ஆண்டு கால வரலாறை மாற்றி எழுதிய ஒரு மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்கள். அதனால்தான் தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. தந்தை பெரியாரை தொடர்ச்சியாக நாம் பேச வேண்டிய காலம் அமைந்திருக்கின்றது.
தைமாதத்தினுடைய முதல் திங்களை, நாம் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதற்கு எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது!! தமிழர்கள் சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடக்கூடியவர்கள். தமிழர்கள் முழு நிலவைத்தான் ஒரு மாதத்தினுடைய தொடக்கமாக எடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டவர்கள். ஆக ஒரு நிலவினுடைய பயணத்தைத்தான் நம்முடைய காலக்கணக்காக வைக்கிறோம். திங்கள் என்பது சந்திரனுக்குரியது . திங்களைப் போற்றுவோம் என்று ஆரம்பிப்பதும் அந்த அடிப்படையில்தான்.
ஐயா தொ.ப அவர்கள் “தமிழர்களுடைய திருவிழாக்கள் காலத்தோடு மிகவும் பொருத்தப்பட்டவை. அதை கவனமாக புரிந்து கொண்டால் தமிழன் எவ்வளவு இயற்கையோடு இணைந்தவன் என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்று சொல்வார்.
தைமாதத்தை ஏன் நாம் புத்தாண்டாக எடுக்கின்றோம்? என்றால் விவசாய காலம் அறுவடை காலம் எல்லாம் முடிந்து இனி வரக்கூடிய காலகட்டம் என்பது ஒரு வெப்பமண்டல காலமாக இருக்கும். ஆகவே இனிவரும் காலத்தில் விவசாயம் என்பதும் தொழில் என்பதும் மட்டுப்பட்டிருக்கும் என்கின்ற காரணத்தால்தான் திருவிழாக்களை தைமாதத்தில் தொடங்கினர். தையில் தொடங்கி தொடர்ச்சியாக ஆடிவரை இந்த திருவிழா கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு ஒரு சமூகத்தினுடைய அசைவாக இந்த விழாக்களை நாம் பார்க்க வேண்டும். அப்படித்தான் நாம் அறிவியல் பூர்வமாக இயங்குகின்ற ஒரு இனமாக இருந்து வருகிறோம். அந்த அடிப்படையில்தான் நாம் தை தமிழ்ப்புத்தாண்டு என்று கணக்கெடுக்கிறோம். ஆனால் இதையெல்லாம் மாற்றி அவர்கள் (ஆரிய கூட்டம்) தமிழ்ப்புத்தாண்டை சித்திரைக்கு கொண்டு செல்லக்கூடிய வேலையை செய்கிறார்கள். அதாவது சூரியனை அடிப்படையாக கொண்ட காலக்கணக்கை கொண்டிருக்கக்கூடிய ஆரியர் வகைப்பட்ட அந்த வழிபாட்டு முறை, அந்த கணக்கியல் முறை, அந்த நாட்காட்டி முறை மற்றும் சந்திரனை அளவுகோலாக வைத்திருக்கும் தமிழர் முறை – இந்த இரண்டு முறைகளிடைய உள்ள குழப்பத்தில்தான் இன்றைக்கு ’சித்திரையா அல்லது தையா’ என்கின்ற பிரச்சனை வந்திருக்கிறது.
தமிழர் முறைப்படி பார்த்தால் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு, தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டாக இருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால் இது அறிவியல் பூர்வமானது.
ஒரு ஆண்டு தொடக்கம் என்பதை எதை வைத்து சொல்வார்கள் என்றால், அந்த சமூகத்தினுடைய உற்பத்தி கால அளவு எந்த காலகட்டத்தில் முடிகிறது? எந்த காலகட்டம் தொடங்குகிறது? என்பதை அடிப்படையாக வைத்து கால அளவை சொல்வார்கள். எகிப்து மக்களுக்கு புத்தாண்டு என்பது அவர்கள் நைல் நதியில் எப்பொழுது அறுவடை முடிகிறதோ, அந்த டெல்டாவிலே எப்பொழுது அறுவடை முடிகிறதோ, அதை வைத்துதான் சொல்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் இயற்கையைத்தான் முதலில் கொண்டாடுகிறார்கள். அதற்கு பிறகுதான் கடவுள் எல்லாம் வருகிறது.
தந்தை பெரியாரை வெறும் நாத்திகராக நாம் பார்த்தோம் என்றால், அவருடைய சிந்தனைகளை நாம் நிராகரித்து விடுகின்றோம் என்று பொருள். அவர் ஏன் நாத்திகராக /கடவுள் மறுப்பாளராக மாறவேண்டிய ஒரு தேவை எழுந்தது என்பதுதான் இன்றைக்கு நமக்கான அரசியல். இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்று விரும்பினார். ஆண்-பெண் பேதம் பார்க்கக் கூடாது என்று விரும்பினார். இந்த இரண்டு பேதங்கள், இன்னும் மேலதிகமான பேதங்களுக்கு எல்லாம் எது காரணம் என்று கேட்கின்றார். சாதி என்கின்ற பேதம், ஆண்-பெண் என்கின்ற பேதம் இருப்பதற்கு அடிப்படை காரணம் வேதம் என்று சொல்கிறார்.
ஆக சாதியை மறுக்க வேண்டும் என்றால் நாம் வேதத்தை மறுக்க வேண்டும் என்கின்ற நிலை வருகிறது. ஆகவே நான் சாதியை மறுக்கின்றவன் என்கின்ற காரணத்தால் நான் வேதத்தை மறுக்கின்றேன் என்று அவர் முடிவுக்கு வருகிறார். வேதத்தை மறுப்பது என்றால், வேதத்தை படைத்த ஆண்டவனைத்தான் நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் நான் ஆண்டவனை மறுக்கின்றேன் என்று முடிவெடுக்கிறார் தந்தை பெரியார். அவருக்கு ஆண்டவரோடு எந்த சண்டையும் இல்லை. கடவுளோடு எந்த சச்சரவும் இல்லை. வாய்க்கால் வரப்பு சண்டை இல்லை.
அவருக்கு சண்டை எங்கே என்றால் மனிதர்கள் சமமாக வாழ்வதற்கு வழிவகை என்ன? மனிதன் சமமற்றவனாக ஏற்றத்தாழ்வு மிக்கவனாக சொல்லப்படுவதை நீக்குவதற்கான வழி என்ன என்று பார்க்கிறார். அந்த இடத்தில் தான் கடவுளை நிராகரிக்கக் கூடியவராக மாறுகிறார்.
ஆனால் இன்றைக்கு தந்தை பெரியாரை தமிழினத்தினுடைய மிகப்பெரிய எதிரியாக கட்டமைக்கக்கூடிய வேலையை வடநாட்டில் இருந்து வந்திருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி கும்பலும், தமிழ்நாட்டிற்குள்ளாக எழுந்திருக்கக்கூடிய போலி தமிழ் தேசியவாதிகளான சீமான் கும்பலும் செய்து வருகின்றார்கள்.
இன்றைக்கு வெளிப்படையாக பல உண்மைகளை நாம் பேசியாக வேண்டிய தேவை இருக்கிறது. தந்தை பெரியார் ஆரிய கசடுகளை அகற்ற வேண்டும் என்று சொல்கிறார். எதற்கெடுத்தாலும் பெரியாரை பற்றி பேசும் பொழுதெல்லாம் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று திரும்ப திரும்ப குற்றம் சாட்டி கொண்டிருப்பார்கள். நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தந்தை பெரியார் 65 ஆண்டு காலம் இந்த மக்களிடத்திலே உரையாற்றி இருக்கின்றார், எழுதி இருக்கின்றார், புத்தகங்களை படைத்திருக்கின்றார். அவற்றை எல்லாம் ஒரு நூலாக ஒளிப்பேழையாக கேட்டால் கூட இரண்டு ஆண்டு காலமாக நாம் கேட்க வேண்டி இருக்கும். அந்த அளவில் சமூகத்தோடு மக்களோடு பேசி இருக்கிறார். அவ்வளவு பேசிய தந்தை பெரியாரினுடைய வார்த்தைகளில் இரண்டு வார்த்தைகளை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, இன்றைக்கு அதை வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், இந்த மேடை போட்டு அல்லது மக்களிடத்தில் பொது விசயத்தைப் பற்றி பேசுகின்ற மரபு என்றைக்கு வந்தது? நாம் கூத்தைப் பார்க்கிறோம், நாடகங்களைப் பார்க்கிறோம், பாடலைப் பார்க்கிறோம், நடனங்களைப் பார்க்கிறோம், ஆனால் மேடை போட்டு பேசுவது என்பது எப்பொழுது வந்தது?
காலம் காலமாக நமக்கு புராணங்களை சொல்வார்கள். கடவுளை பற்றி கதைகளை கேட்பதற்காக சொல்வார்கள். ஆனால் பொது விசயத்தைப் பற்றி, சமூகத்தைப் பற்றி, நம்முடைய பிரச்சனைகளைப் பற்றி பேசுகின்ற மரபு என்பது நூறு ஆண்டுகளாகத்தான் வந்தது. அதற்கு முன்பு கிடையாது. அதற்கு முன்பு பொதுமக்களை கூட்டி அரசைப் பற்றிய பிரச்சனைகளோ, சமூகத்தைப் பற்றிய பிரச்சனைகளோ பேசுவது என்பது கிடையாது. ’பிரசங்கம்’ என்பது தனித்த சிறு கூட்ட அளவில் நடந்து கொண்டிருக்கும்.
இங்கே சாமிக்காக சங்கங்கள் வைத்திருப்பார்கள், மதத்திற்காக சங்கங்கள் வைத்திருப்பார்கள், மடங்கள் வைத்திருப்பார்கள். அதில் மக்கள் திரள்வார்கள், கதா காலசேபங்கள் நடக்கும், ராமாயணமோ மகாபாரதமோ பேசுவார்கள். அவ்வளவுதான் நடக்கும். அத்தகைய காலகட்டத்தில் பெரியார் நம்மிடத்தில் இருக்கக்கூடிய மூட பழக்க வழக்கங்களை பற்றிப் பேசுகிறார். அன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரி ஒரு பொது கூட்டத்தில் பேசினால் கேட்க கூடியவர்கள் எத்தனை பேர் படித்தவர்களாக இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 100 சதவீதம் பேர் படித்தவர்களாக இருக்கிறீர்கள். பெரும் பகுதியினர் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள். ஆக உங்களிடத்தில் உரையாடுவது என்பது வேறு. உங்களுக்கு இந்த உலகத்தை பற்றியான குறைந்தபட்ச அறிவியல் அல்லது அது குறித்தான சமூகவியல் தகவல்கள் தெரியும். ஆக நான் பேசுவதை நீங்கள் வியாக்கியானப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கக்கூடிய சாமானிய மக்களுக்கு எது தெரியும்? அன்று அவர்கள் கல்வி கற்காதவர்களாகத்தான் பெரும்பகுதி இருப்பார்கள். 99% கல்வி கற்காத மக்களிடத்தில் தான் தந்தை பெரியார் பேசினார். அவர் அப்போது என்ன பார்வையில் பேசினாரோ, அதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, 100 ஆண்டுகள் கழித்து அவர் பேசிய இரண்டு வரிகளை எடுத்து வைத்துக் கொண்டு அரசியலை பார்க்கக்கூடாது. அப்படி அணுக முடியாது.
அவர் இன்றைக்கு நம்மிடத்தில் பேசவில்லை. ஆனால் அவர் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அன்றைய கூட்டத்தில் அவரது கருத்தை கேட்பதற்காக திரண்ட மக்களுக்கு எப்படி ஒரு கருத்தை சொன்னால் சென்று சேருமோ அப்படி சொன்னார். இந்த கூட்டத்தில் பேசுகின்ற முறையை இதே முறையை நான் ஒரு கல்லூரி மாணவரிடத்தில் கடந்த வாரம் பேச முடியாது. அப்படி பேசினால் எழுந்து சென்றுவிடுவார்கள். மாணவரிடத்தில் பேசுகின்ற முறை வேறு, குழந்தைகளிடத்தில் பேசுகின்ற முறை வேறு. நகரத்தில் பேசுகின்ற முறை வேறு. கிராமத்தில் பேசுகின்ற முறை வேறு. தொழிலாளர் பேசுகின்ற முறை வேறு. கட்சி பேசுகின்ற முறை வேறு. தேர்தலிலே பேசுகின்ற முறை வேறு. விழாக்களிலே பேசுகின்ற முறை வேறு. விழிப்புணர்வு ஏற்படுத்த பேசுகின்ற முறை என்பது வேறு. விழிப்புணர்வை கொடுப்பதற்கு கொட்டித்தான் (தலையில் கொட்டு) கொடுக்க வேண்டும் என்றால், கொட்டித்தான் கொடுப்பார். அதுதான் தந்தை பெரியாருடைய அணுகுமுறை. அந்த அணுகுமுறையை இன்றைக்கு விமர்சித்துப் பேசுகிறார்கள்.
அன்பானவர்களே! தந்தை பெரியார் இந்த சமூகத்தில் நம்முடைய சுய மரியாதை குறித்து எதை பார்க்க வேண்டும் என்று சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சி என்ன கேட்டது? சமதர்மம் வேண்டும் என்று கேட்டது. ஆனால் தந்தை பெரியார் சமதர்மம் நிற்க வேண்டும் என்றால், சுயராஜ்ஜியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், சுய மரியாதை உறுதி செய்யப்பட வேண்டும் என்று சொன்னார். அவர்தான் சுயமரியாதை பற்றி பேசினார்.
சுயமரியாதை இல்லாத சமூகம் தனக்கான ராஜ்ஜியத்தையும் காப்பாற்றிக் கொள்ளாது, தனக்கு கொடுக்கப்படுகின்ற சமதர்மத்தையும் பாதுகாத்துவிடாது, ஆக சுயமரியாதை உணர்வுதான் முதன்மை அரசியல் உணர்வாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், சுயமரியாதை உணர்வைப் பற்றி பேசினார்.
ஏன் பெரியாரிய தோழர்கள் கருப்பு சட்டை போடுகிறார்கள்? இந்த நாடு விடுதலை அடைந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் ”இந்த விடுதலை என்பது தற்காலிகமானது. அது ஆங்கிலேயரிடமிருந்து பார்ப்பனியத்திற்கு சென்றுவிட்டது. ஆகவே எங்களுடைய மரியாதை என்பதை நாம் பார்ப்பனியத்திடம் போராடி பெறவேண்டிய, அடுத்த ஒரு போராட்டம் காத்திருக்கிறது. ஆகவே இந்த நாள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான நாள் அல்ல, துக்க நாள்” என்றுதான் தந்தை பெரியார் சொன்னார். அதனால்தான் கருப்பு சட்டை போட்டார்.
பெரியாரினுடைய இந்த அரசியலை நாம் இந்த காலகட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு திருப்பரங்குன்றம் பிரச்சனையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பத்து பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டுக்குள்ளாக கலவரத்தை கொண்டுவர விரும்புகிறது. இந்த சமயத்தில் தமிழர்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்கின்ற சிந்தனை இல்லாமல், தமிழர்களுக்குள்ளாக பிளவு கொண்டு வருகின்ற வகையிலே, நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் சீமான் “பிராமண கடப்பாரை எடுத்து கொண்டு வந்து திராவிட கோட்டையை இடிக்கிறேன்” என்று சொல்கிறார்.

முதலில் இந்த ’பிராமணன்’ என்கின்ற வார்த்தையை தந்தை பெரியார் கடுமையாக எதிர்ப்பார். நான் பல இடங்களில் சொல்லி வருகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்: ’பிராமணன்’ என்கின்ற வார்த்தை சாதியா? வர்ணமா? ’பிராமணன்’ என்கின்ற வார்த்தை சாதி அல்ல, அது ஒரு வர்ணம். இப்போது நீங்கள் வன்னியர், கவுண்டர், பறையர், கோனார், பள்ளர், நாடார், ரெட்டியார், நாயக்கர், முதலியார், பிள்ளையார், பிள்ளைமார், ஐயர், ஐயங்கார் என சொன்னால், இதெல்லாம் சாதியின் பெயர். ஆனால் பிராமணன் என்பது வர்ணத்தின் பெயர். ஐயர் என்றால் அவருடைய நம்பிக்கை சார்ந்த விடயம். அவர் சிவனை கும்பிடக்கூடியவராக இருப்பார். சைவ வழிபாட்டு முறையை சார்ந்தவராக இருப்பார். ஐயங்கார் என்றால் வைணவ முறையை சார்ந்தவராக இருப்பார். அது வடகலை முறையோ, தென்கலை முறையோ, அது அவர் நம்பிக்கை சார்ந்த விடயமாக இருக்கும். இதே போன்ற ஒரு நம்பிக்கை சார்ந்து, இடம் சார்ந்து, தொழில் சார்ந்து, பண்பாடு சார்ந்து, சாதிகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பிராமணன் என்றால் எப்படி ஐயர் ஐயங்கார் இரண்டும் சேர்ந்து பிராமணன் என்று சொல்ல முடியும்? சைவத்தையும் வைணவத்தையும் சேர்த்து ஒரு அடையாளத்துக்குள்ளாக எப்படி கொண்டுவர முடியும்? ‘ஐயங்கார் பேக்கரி’ அல்லது ’தேவர் ஓட்டல்’ என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ‘பிராமணாள் கபே’ அல்லது ’பிராமண ஓட்டல்’ என்று சொன்னால் ஏன் எதிர்க்க வேண்டும்? அதற்கு எதிராக தந்தை பெரியார் இரண்டு ஆண்டுகள் போராட்டம் நடத்துகிறார். என்னவெனில் பிராமணன் என்கின்ற வார்த்தை வர்ணத்தை சொல்கிறது.
நான்கு வர்ணத்தை இந்து மதம் சொல்கிறது. அந்த நான்கு வர்ணத்தை பிரம்மாதான் அனைத்தையும் உருவாக்குகிறார். பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், அவன் ஒரு மூத்த வர்ணத்தை சார்ந்தவன், அவன்தான் முதன்மை வர்ணன். அவனுக்கு அடுத்து பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த சத்திரியன், அவன் இரண்டாம் வர்ணத்தை சார்ந்தவன். மூன்றாவது வர்ணம் வைசியன், அவன் பிரம்மாவின் தொடையிலிருந்து பிறந்தான். நான்காவது வர்ணம் என்பது இந்த மூன்று வர்ணத்திற்கும் சேவை செய்யக்கூடிய வர்ணம், அந்த வர்ணம் சூத்திர வர்ணம். இதைத்தான் பிராமணன் என்கின்ற வார்த்தை மூலம் சொல்கிறான்.
இதில் பிராமணன் என்கின்ற அந்த வர்ணத்திலே பூநூலை போடக்கூடிய ஆரிய மரபுக்கு சொந்தக்காரர்கள் மட்டும்தான், இந்த உயர் மரபுக்கு சொந்தக்காரர்கள் என்று, அந்த நான்கு வர்ண கோட்பாட்டை வரையறை செய்துள்ளான். பிராமணன், சத்திரியன், வைசியன்…(நம் சாதியில் கூட நானும் சத்திரியன் நானும் வைசியன் என சொல்லிக் கொள்வார்கள்.) ஆனால் வர்ணாசிரம கோட்பாட்டுப்படி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஐயர் ஐயங்காரை தவிர அனைத்து சாதிகளும் சூத்திரர்கள் என்றுதான் மனுஸ்மிரிதியிலே சொல்லி இருக்கிறார்கள். அப்படித்தான் இந்து மத கோட்பாட்டை வரையறு செய்திருக்கிறார்கள்.
ஒருவரிடம் சாதி கேட்கக்கூடிய சூழல் வருகிறது. அப்போது நீங்கள் ஒரு சாதி பெயரை சொல்ல, பதிலுக்கு அவரும் சாதி பெயரை சொன்னால் பரவாயில்லை. ஆனால் அவர் சாதியை சொல்லாமல் அவர் வர்ணத்தை (நான் பிராமணன் என்று) சொன்னால், பதிலுக்கு நீங்களும் வர்ணத்தை சொல்ல வேண்டியதாக வருகிறது. உங்கள் வர்ணம் சூத்திரன் என்று சொல்லக்கூடிய நிலைக்கு வருகிறீர்கள். அந்த வர்ணத்திற்கு என்று விதிகள் வைத்திருக்கிறார்கள். அந்த விதிகள் மனுஸ்மிரிதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். சூத்திரர்களுக்கான வேலை என்பது மேலே இருக்கக்கூடிய மூன்று வர்ணத்திற்கும் வேலை பார்ப்பதுதான், சூத்திரனுடைய தர்மம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
சூத்திரனுக்கு நீதி கொடுக்கக்கூடாது, சூத்திரனுக்கு சொத்து சேர்க்க அனுமதிக்கக் கூடாது, சூத்திரனுக்கு கல்வி கொடுக்கக்கூடாது, சூத்திரனுக்கு அதிகாரம் கொடுக்கக்கூடாது என்று மனுஸ்மிருதி எழுதி வைத்திருக்கிறது. இதன் மூலம் எவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். இந்த வருணப் பாகுபாட்டால்தான் தந்தை பெரியார் மனுஸ்மிருதியை குறித்து எழுதியிருக்கிறார்கள், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மனுஸ்மிருதியை குறித்து எழுதியிருக்கிறார்கள். இரண்டு பெரும் அறிஞர்களும் மனுஸ்மிருதியை வியாக்கியானப்படுத்தி இருக்கிறார்கள்.
மனுஸ்மிருதி அடிப்படையில் தான் இந்த சமூகத்தின் நிலத்தில் இருக்கக்கூடிய மக்களை எல்லாம் அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். உதாரணமாக சூத்திரனுக்கு நீதி வழங்குவதற்கு மனுஸ்மிரிதியில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. என்னவென்றால் இந்த நான்கு வர்ணத்திற்கு நீதி வழங்குவதற்கு என ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். நீங்கள் கேட்கலாம் இன்னும் மனுஸ்மிருதி நடைமுறையில் இருக்கிறதா? என்று. அதற்கு குருமூர்த்தி மனுஸ்மிருதி அடிப்படையில் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.
காலனிய ஆட்சி காலம் வரை மனுஸ்மிருதி நடைமுறையில் இருந்தது. சிப்பாய் கலகம் என்று சொல்கிறோம் அல்லவா…வட இந்தியாவில் அந்தப் போராட்டம் நடந்தது. 1857-ல் சிப்பாய் கலகத்திற்கு பிறகு நேரடியாக இங்கிலாந்து ராணியின் கீழ் ஆட்சி வருகிறது. அதற்குப் பிறகுதான் சட்டதிட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு முன்பு கிழக்கு இந்திய கம்பெனிதான் இந்த நாட்டை ஆண்டது. இந்திய நாட்டை ஆண்டது கிழக்கு இந்திய கம்பெனி என்கின்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம்தான். கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சியில் நூறு ஆண்டு காலம் இந்த நாடு இருந்தது. அந்த கிழக்கு இந்திய கம்பெனி மனுஸ்மிருதியைத்தான் சட்டமாக/ கோட்பாடாக வரையறை செய்து வைத்து கொண்டார்கள்.
அது எப்பொழுது மாறுகிறது என்றால், சிப்பாய் கலகம் வட இந்தியாவில் எழுந்து மிகப்பெரும் சண்டை நடந்த பிறகு நேரடியாக ராணியின் ஆட்சியின் கீழாக இந்தியா வருகிறது. அதற்குப் பிறகுதான் இங்கு சட்டங்கள் கொண்டுவரக்கூடிய சூழல் உருவாகிறது. அப்பொழுது மனுஸ்மிருதியை தூக்கி எறிந்துவிட்டு, புது சட்டங்களை கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசு வேலைகள் எடுக்க ஆரம்பிக்கிறது. அப்போதுதான் இங்கு இருக்கக்கூடிய உயர்சாதி கூட்டம் /பார்ப்பன கூட்டம் வெள்ளையர்களுக்கு எதிராக விடுதலை போராட்டம் என்கின்ற கோரிக்கையை ஆரம்பிக்கிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் விடுதலை போராட்டத்திற்கு முன்வரவில்லை.
இங்கே வேலுநாச்சியாரை குறித்து சிறுமி பேசினார் அல்லவா! வேலுநாச்சியார் காலத்திலிருந்து சிப்பாய் கலகத்தின் காலம் வரை எந்த உயர்சாதி கூட்டமும் இந்தியாவில் விடுதலைப் போராட்டத்திற்காக வீதியில் இறங்கவில்லை என்பதுதான் வரலாறு.

அப்போது மனுஸ்மிருதியினுடைய சட்டம் தான் இங்கே நிலை பெற்றிருந்தது. அதில் நீதி பற்றி என்ன சொல்கிறான் என்றால், ஒரு பிராமணன் நீதி வழங்குகின்ற இடத்திற்கு வந்து, நான் சொல்லுவது உண்மை என்று சொன்னால் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராமணன் சொல்வதை வேத வாக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. அடுத்து சத்திரியன் தான் தேசத்தின் மீது ஆணையாக சொன்னான் என்றால், அதை நீங்கள் உண்மை/ சத்தியம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு வைசியன் தன் சொத்துக்களின் மீது ஆணையாக என்று சொன்னால், அதை நீங்கள் உண்மை/ சத்தியம் என்று எடுத்துக்கொள்ளலாம். சூத்திரன் என்று வரும்பொழுது நன்கு பழுக்க காய்ச்சிய ஒரு இரும்பு கம்பியை அவன் கையிலே கொடுத்து அவனை பிடிக்க சொல்லி அதன் பிறகு, அவன் கையை விரித்துப் பார்த்தால் அவன் உள்ளங்கையில் காயம் இல்லை என்றால் மட்டும்தான் அவன் சொல்வது உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனுஸ்மிருதியில் எழுதி வைத்திருக்கிறது.
நன்கு பழுக்க இரும்பை காய்ச்சி கையிலே கொடுத்து அதன் பிறகு அவன் கையில் காயம் இல்லை என்றால் மட்டும்தான், அவன் சொல்லுவது உண்மை என்றால் சூத்திரர்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள், ஆகவே அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி சொல்கிறது. அவர்களுக்கு நீதி தேவையில்லை என்று சொல்கிறது. சூத்திரனுக்கு நீதி தருவது ஒரு நீதிபதியின் வேலை இல்லை என்று மனுஸ்மிருதி சொன்னதைத்தான் மதுரையினுடைய உயர் நீதிமன்றத்தினுடைய நீதிபதியும் சொல்லி இருக்கிறார். அவர்கள் மனுஸ்மிருதியைத்தான் கடைபிடித்திருக்கிறார்கள்.
ஒரு பார்ப்பனன் ஒரு சூத்திரனை கொலை செய்துவிட்டால் ஒரு தவளையை கொன்றதற்கு என்ன தண்டனையோ, அந்த தண்டனை தரவேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். மனுஸ்மிருதியில் இருக்கிறது…எடுத்துப் படித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட இந்த சமூகத்தில் ‘பிராமணன்’ என்று சொல்லப்படுகின்ற வர்ணத்தினுடைய ஆதிக்கத்தை எதிர்த்து சண்டையிட்டு அதை வென்றவர் தந்தை பெரியார். பிராமணன் என்கின்ற வார்த்தை என்பது வர்ணத்தின் அடிப்படையில் நம்மை இழிவாக கருதப்படுவது. சாதிக்குள்ளாக ஏற்ற தாழ்வை நிர்ணயம் செய்வது வர்ணக் கோட்பாடு. அந்த வர்ணக் கோட்பாட்டை வைத்துதான் ”ஐ எம் எ பிராமின்” என பேசுகிறான். அப்படியெனில் நாம் ”ஐ எம் எ சூத்திரன்” என்று சொல்ல முடியுமா? அப்படி என்றால் நான்கு வர்ண கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தம். சீமான் அந்த கோட்பாட்டை ஏற்று கொண்டுவிட்டார். அவரை பொருத்தவரை பிராமண சேவை செய்ய வந்த அடிமை அவர். சீமான் அடிமையாக இருப்பதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.
இந்து மத வேத கோட்பாடு என்ன சொல்லுகிறது? நீங்கள் இந்து மதம் என்று எடுத்துக்கொண்டால், நாம் கும்பிடுகின்ற அம்மனும், ஐயனாரும், நாட்டார் தெய்வங்களும், குலதெய்வங்கள் எல்லாம் இந்து மதம் என்று நம்புகிறீர்கள். அது இல்லை.
நம்முடைய அம்மன் கோவிலோ, ஐயனார் கோவிலோ, நம் குலதெய்வ கோட்பாடு வழிபாட்டு முறையோ நாட்டார் வழிபாட்டு முறையோ இந்து மதம் அல்ல, இந்து மத கோட்பாட்டுக்கு நேர் எதிரான மரபு கொண்டது.
இந்து மதம் என்பது வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான். உதாரணத்திற்கு இஸ்லாம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு குர்ஆன் இருக்கிறது. கிறிஸ்துவர்களுக்கு பைபிள் இருக்கிறது. இந்து மதத்திற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டால் பகவத்கீதை என்று சொல்வார்கள், இன்னும் சில பேர் வேதம் என்று சொல்வார்கள். வேத மரபை ஏற்று கொண்டவர்கள் இந்து மதக் கடவுளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சங்கராச்சாரியார் எந்த கோவிலுக்கும் போய் சாமி கும்பிட மாட்டார். ஏனென்றால் சங்கராச்சாரியார் வேதத்தை மட்டும்தான் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளக் கூடியவர்.
நமக்கு இதெல்லாம் புரியாது…எத்தனை பிரிவுகள் இருக்கிறது என்று தெரியாது. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு நம்பிக்கையை போல, ஒவ்வொரு பிரிவுக்கும் நடுவில் சண்டைகள் இருக்கிறது. ஒரு பிரிவு இன்னொரு பிரிவுக்கு எதிராக இருக்கிறது. இது ஒரு மதத்தினுடைய உட்பிரிவுகள் என்று பிஜேபி சொல்கிறார்கள். இல்லவே இல்லை! ஒவ்வொன்றும் வேறு வேறு நம்பிக்கை கொண்டவை. முருக வழிபாடு என்பது முற்றிலும் வேறானது. முருக வழிபாட்டு முறைக்கும் இவன்(ஆரியன்) பேசுகின்ற இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
காஞ்சியில் இருக்கக்கூடிய சங்கராச்சாரியர் உண்மையில் கும்பகோணத்தில் இருந்தவர். அவர் காஞ்சிக்கு வந்தவர் அல்ல, காஞ்சிக்கு 150 வருடத்துக்கு முன்புதான் கொண்டுவந்து உட்கார வைக்கிறான் வெள்ளைக்காரன். அதற்கு முன்பு அவர் கும்பகோணத்தில் இருந்தவர். காஞ்சி சங்கராச்சாரியார் கோவிலுக்குள் சென்று பூஜை செய்தால் கோவிலுக்கு தீட்டு கழிக்கப்பட வேண்டும் என்று ஆகமம் இருக்கிறது.
திருநெல்வேலியில் இருக்கக்கூடிய நெல்லையப்பர் கோவிலுக்குள் சங்கராச்சாரியார் சென்றதற்காக, அந்த கோவிலில் தீட்டு கழித்தார்கள். ஏன்? சங்கராச்சாரியார் இங்கு இருக்கக்கூடிய சைவ மரபுக்கு நேர் எதிரானவர். அந்த மடத்திலிருந்து வரக்கூடியவர் யாரும் கோவிலினுடைய கொடி மரத்தை தாண்டி வரக்கூடாது. சங்கராச்சாரியார்கள் சிலையை கும்பிட மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், பூஜிக்க மாட்டார்கள். அவர்கள் வேதத்தை மட்டும் ஏற்று கொண்டவர்கள். அவர்கள் ஸ்மார்த்த மதத்தை சார்ந்தவர்கள். அவரை கூட்டிட்டு வந்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். அவருக்கும் குடமுழுக்குக்கும் என்ன சம்பந்தம்?
நாம் கும்பாபிஷேகம் என்று சொல்ல மாட்டோம், ”குடமுழுக்கு” என்றுதான் சொல்வோம். தமிழர் வணங்குகின்ற முறையிலே தண்ணீர் என்பதுதான் நமக்கு மிக முக்கியமானது. அது குளிர்ச்சி தரும். நாம் (தமிழர்கள்) நீரைத்தான் படையலாக வைப்பது வழக்கம். அவன் (ஆரியர்கள்) நெருப்பை படையலாக வைப்பான். அவனுக்கு ஓமம் வளர்ப்பான். இந்த ஓமம் கதையே ஒரு பெரிய கதை. ஒரு அறிவியல் கதை சொல்கிறேன் கேளுங்கள்.
நமக்கு இந்த பனியை தாங்கி கொள்ள முடிவதில்லை. இந்த ஆரியர்கள் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனர்கள், ஈரானுக்கு மேலிருந்து வரக்கூடியவர்கள். ஆசியாவிலிருந்து வரக்கூடியவர்கள். அங்கு குளிர்தான் பிரதானம். அந்த குளிரில் அவன் விறகு போட்டு அந்த நெருப்பை சுற்றி உட்கார்ந்து பேசுவதுதான் அவன் வழக்கம். அந்த மரபுதான் இன்றைக்கு நம் கல்யாண மண்டபத்தில் (நாம் அழைத்ததால்) உட்கார்ந்து ஓமம் என்கின்ற நெருப்பு மூட்டத்தை வளர்க்கிறான். ஏற்கனவே ஊரில் வெயில் இருக்கின்ற பொழுது வீட்டுக்குள் யாராவது ஓமத்தை வளர்த்துவானா? சற்று யோசித்துப் பாருங்கள்.
ஓமகுண்டத்திற்கும் தமிழர் மரபுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? வேத வேள்வி மரபு என்று சொல்லக்கூடிய அந்த முறைக்கும், இங்கு இருக்கும் அம்மன் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்த வேள்வி முறை என்று சொல்லக்கூடிய ஓமகுண்ட முறைக்கும், ஐயனார் கோவிலுக்கும் முருகன் கோவிலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இது எதற்கும் தொடர்பு கிடையாது. இந்த வேத மரபு என்று சொல்கிறார்களே, இந்த வேத மரபை தமிழுக்குள்ளாக கொண்டுவந்து திரிக்கின்ற வேலையை ஆர்எஸ்எஸ்காரனும் பிஜேபிகாரனும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது திருப்பரங்குன்றத்திலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுகிறார்கள் மற்றும் பிரியாணி கொண்டு போகிறார்கள், அதனால் முருகனுக்கு தீட்டாகி விடும்/ அசுத்தமாகிவிடும் என்று (ஆர்எஸ்எஸ்காரன்) கூறுகின்றான். முருக வழிபாட்டு முறை என்பது தமிழர் வழிபாட்டு முறை. முருகன் குறிஞ்சி நிலத்திடைய கடவுள் என்று நம் எல்லாருக்கும் தெரியும். நாம் பாடத்தில் கூட படித்துள்ளோம். முருகனின் இணையர் வள்ளி. அவர் ஒரு குறத்தி பெண். அதாவது மலையும் மலை சார்ந்த இடம் என்று சொல்லுகின்ற குறிஞ்சியிலே விவசாயம் செய்து பிழைக்க முடியாது, வேட்டையாடித்தான் பிழைக்க முடியும். ஆக முருகனுக்கு படையலிடுவது என்பது பலியிட்டுதான் படையலிடுவார்கள். தமிழ் முறைப்படி வணங்க வேண்டும் என்றால், சங்க கால முறைப்படி வணங்க வேண்டும் என்றால், குறிஞ்சி திணைப்படி வணங்க வேண்டும் என்றால், முருகனுக்கு அசைவ உணவை படைத்து தான் வணங்க வேண்டும். இதை நான் (திருமுருகன்) சொல்லவில்லை. திருமுருகாற்றுப்படையில் சொல்லி இருக்கிறது.
திருமுருகாற்றுப்படை முருகனை எப்படி வழிபட வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறது. அதாவது சாமி வந்து ஆடக்கூடிய வெறியாட்டத்தில் ஒரு மரபு இருக்கிறது. அதில் முருகனுடைய வேல் நட்டு, இருநிறம் கொண்ட உடை அணிந்து, கையிலே சிவப்பு நூலை கட்டி, பொரியை படையலாக தூவி, மலரை வைத்து அழகு செய்து, அதற்குப் பிறகு கிடா ஆட்டினுடைய குருதியில் (இரத்தத்தில்) சோற்றை பிசைந்து வைத்துதான், முருகனுக்கு நீங்கள் வேண்டுதல் நிகழ்வை நடத்த வேண்டும் என்று திருமுருகாற்றுப்படை சொல்லிருக்கிறது.
இதுவெல்லாம் எச்.ராஜாவுக்கு தெரியுமா? அந்த ஆளுக்கு முதலில் தமிழ் படிக்கத் தெரியுமா? ஆனால் தமிழன் இன்றைக்கு நம்முடைய மரபு முறைகளை பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவருக்குமே முருகன் பெயர்தான் வைப்பார்கள். என்னுடைய தாத்தாவிற்கும் தாத்தாவின் அப்பா குடும்பத்திற்கும் முருகன் பெயர்தான் வைத்திருக்கிறார்கள். எச்.ராஜா உடைய குடும்பத்தினருக்கு முருகன் பெயர் வைக்க மாட்டார்கள். அமித்ஷா மற்றும் மோடியினுடைய குடும்பத்தினர் யாருக்கும் முருகன் பெயர் இருக்காது. அவர்களுக்கும் முருக வழிபாட்டுக்கும் தொடர்பு கிடையாது. அவர்கள் வேறு நாம் வேறு. அவர்களுக்கு முருகன் என்றால் யார் என்றே தெரியாது.
இவ்வாறாக முருக வழிபாட்டில் அசைவ உணவு பிரதானமானது, முக்கியமானது. இன்றைக்கு யாராவது செய்கிறீர்களா? உங்கள் உறவு முறைகளில் யாராவது செய்கிறீர்களா? தினமும் சர்க்கரைப் பொங்கலை வைத்தால் முருகனுக்கு சர்க்கரை நோய் வராதா? பிறகு எப்படி உங்களுக்கு அருள் தருவார்? தினமும் முருகன் நான்கு முறை மலை ஏறி இறங்க வேண்டாமா?
முருகனுக்கான உணவு அசைவ உணவு. நம்முடைய மரபு கூட தெரியாத ஒரு இனமாக இருக்கிறோம். நாம் ஏழு நாட்களும் அசைவ உணவு உண்ணக்கூடிய ஒரு இனத்தை சார்ந்தவர்கள். அதனால்தான் போர் புரிந்தவர்கள். அன்றைய காலத்தில் இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பான்? எப்படி கல்லை தூக்கியிருப்பான்? எப்படி அணையை கட்டியிருப்பான்? எப்படி விவசாயம் பார்த்திருப்பான்? அவன் உடல் வலு இருந்தால்தான் இதையெல்லாம் செய்ய முடியும்.
ஐயர் அசைவம் சாப்பிட மாட்டார் என்றால் அவருக்கு அது தேவையில்லை. மணியாட்டுவதற்கு ஒரு கரண்டி (spoon) நெய் இருந்தால் போதும். அந்த ஊட்டச்சத்து போதும்.
ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். தமிழினத்தில் அனைவருமே உடல் உழைப்பால் உழைத்தவர்கள். உடல் உழைப்பிலிருந்து விடுபட்ட ஒற்றை சமூகமாக பார்ப்பன சமூகம் மட்டும்தான் இருக்கிறது. அந்த சமூகம் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது என்பது அவர்கள் சாஸ்திரத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லித்தான், அவர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை.
100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்துக்கு அருகில் இருக்கக்கூடிய இரண்டு பார்ப்பனர்கள் விவசாய வேலை செய்தார்கள் என்ற காரணத்தினால் அந்த சாதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பிராமண சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் அந்த ஊரிலுள்ள சங்கராச்சாரியாரை சென்று சந்தித்து, எங்களை மீண்டும் நீங்கள் சாதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன பொழுது, ’சாஸ்திரங்களில் சம்பிரதாயங்களில் மனுஸ்மிருதிகளிலே பார்ப்பனர்கள் விவசாயம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கின்ற அந்த விதியை மீறிய காரணத்தினால் உங்களை மீண்டும் நான் சாதியில் சேர்த்து கொள்ள முடியாது’ என்று தள்ளி வைத்திருந்தார்கள். இது வரலாறு.
பார்ப்பனருக்கு உடல் உழைப்பு தேவையில்லை. அதனால் அவர்களுக்கு அசைவ உணவு தேவையில்லை. ஆனால் வாரத்தில் ஏழு நாட்களும் அசைவ உணவு உண்ட நம்மை, இப்போது வாரத்தில் ஆறு நாள் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்பதற்காக பல விழாக்களை கொண்டு வந்திருக்கின்றார்கள். இன்றைக்கு வெள்ளிக்கிழமை, இன்றைக்கு சனிக்கிழமை விரதம் என சொல்லி அன்று அசைவ உணவை தவிர்க்கிறார்கள். வியாழக்கிழமை மட்டும்தான் ஃப்ரீயா இருந்தது. அதற்கும் ஒரு சாமி (சாய் பாபாவை) கொண்டு வந்துவிட்டார்கள். சாய் பாபாவே ஒரு இஸ்லாமியர். அவரை இந்துச்சாமியாக மாற்றி, அவருக்கு ஒரு விரதம் வைத்து, அசைவ உணவே இல்லாமல் போனது. ஏன் எல்லா இடத்திலும் அசைவ ஓட்டல் அதிகமானது? வீட்டில் விரதம் விரதம் என சொல்லி வெறும் சாம்பார் சாதமாக போட்டு சாவடிக்கிறார்கள். நம்மவர்கள் ஆறு/ ஏழு நாளும் கறி சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள். அதனால் வெளியில் போய் அசைவ உணவு சாப்பிடுகிறோம். அதனால் தெருவுக்கு தெரு அசைவ ஓட்டல் அதிகமாக இருக்கிறது.
நம்முடைய வழக்கத்தை ஏன் மாற்றுகிறீர்கள்? நீங்கள் சாமி கும்பிடுவதும் கும்பிடாமல் போவதும் உங்கள் நம்பிக்கை சார்ந்த விடயம். பண்பாட்டில் என்ன பிரச்சனை? அவன் (பார்ப்பனன்) பண்பாட்டை எடுத்து நாம் நம்மீது ஏன் திணிக்க வேண்டும்?
மிக நுணுக்கமாக பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில், திருப்பரங்குன்றத்தில் மலை மேலே இருக்கக்கூடிய பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுகிறார்கள். முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை? இதை யாரும் கேட்கவில்லை. ஒருவேளை மசூதியில் ஏற்றினால் கூட இதர வழிப்பாட்டு தளத்தில் ஏற்றுகிறார்கள் என்று பிரச்சனை ஆகியிருக்கலாம். ஆனால் முருகனும் பிள்ளையாரும் இந்து மத கடவுள்கள் தானே, இத்தனைக்கும் அண்ணன்-தம்பி என்று சொல்லி (இந்துத்துவவாதிகள்) ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றியதால் முருகன் வந்து எச்.ராஜாவிடமோ அல்லது அந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடமோ ஏதேனும் புகார் கொடுத்தாரா? அல்லது எனக்கும் அண்ணனுக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை இருக்கிறது, ஞான பழத்தை ஏமாற்றி பிடுங்கிவிட்டு போய்விட்டார். அதனால் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற கூடாது என முருகன் சொன்னாரா? அப்படி எதுவும் சொல்லவில்லையே.
இதில் என்ன சிக்கல் என்பதுதான் முக்கியம். பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் அளவுக்கு முருகனுக்கு யோக்கியதை இல்லை என்று பிஜேபி சொல்கிறது. அதை புரிந்து கொள்ள வேண்டும். அதைத்தான் அந்த நீதிபதி சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிடித்த ஆரிய கடவுள் ’பிள்ளையார்’. ஆனால் நமக்கு ஆரிய கடவுளா, திராவிட கடவுளா, தமிழ் கடவுளா இருந்தால் என்ன? ஒரு பிரச்சனை இல்லை. கடவுள் என வந்துவிட்டால் அங்கே போய் தேங்காய் உடைத்து விட்டு வருவார்கள். நமக்கு எங்கிருந்து ஆசீர்வாதம் கிடைத்தாலும் பிரச்சனை இல்லை.

நாம் கேட்க வேண்டிய விடயம்: ஆரிய கடவுளாகிய பிள்ளையார் கோவிலில் சூத்திர கடவுளாகிய முருகனுக்கு ஏன் தீபம் ஏற்றப்பட்டது என்பதைத்தான் அந்த நீதிபதி சுவாமிநாதன் கேட்டார். அதுதான் அர்த்தம்.
முருக கடவுளுக்கு பிள்ளையார் கடவுள் இருக்கக்கூடிய அந்த கோவிலில் தீபம் ஏற்றுவதில் நீதிபதிக்கு என்ன பிரச்சனை? இந்து முன்னணிக்கு என்ன பிரச்சனை? பிஜேபிக்கு என்ன பிரச்சனை? எச்.ராஜாக்கு என்ன பிரச்சனை? என்பதை தமிழ் சமூகம் கேட்க வேண்டும்.
எதற்கு அருகில் இருக்கும் தர்காவில் தீபம் ஏற்ற சொல்கிறாய்? தர்கா என்பது முழுக்க முழுக்க இஸ்லாமியர் மட்டுமே வழிபடக்கூடிய இடம் என்று நம்மவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். தர்கா என்பது தமிழ் மரபுக்கு சொந்தமானது. இறந்தவர்களை வணங்குகின்ற முறை இஸ்லாமியர்களுக்கு கிடையாது. மூதாதயரை வணங்குகின்ற முறை தமிழர்களுக்கு உண்டு. அதுதான் வழிபாட்டு முறை. குலத்தெய்வம் என்பது மூத்தோர் வழிபாடு. இந்து மதத்தில் சொல்வதை போல முற்பிறவி- அடுத்தபிறவி என்ற கதை, சொர்க்கம்-நரகம் கதை இவையெல்லாம் நமக்கு கிடையவே கிடையாது.
”முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதுதான் தமிழனுடைய வாக்கு. அப்பா நல்லது செய்தால் பையனுக்கு நல்லது நடக்கும். தாத்தா நல்லது செய்தால் பேரனுக்கு நல்லது நடக்கும். இதுதான் நம் மரபு. நமக்கு பிறவி அல்ல, தலைமுறை தான் முக்கியமானது. முற்பிறவியில் என்னவாக இருந்தோம்? அடுத்த பிறவியில் என்னவாக இருப்போம் என்ற கதை எல்லாம் நம் சங்க இலக்கியங்களிலோ அல்லது எந்த இலக்கியத்திலோ கிடையாது. அது தமிழர் நம்பிக்கையில் கிடையாது. தமிழனுக்கு ’அப்பா செடி நட்டால் உன் பிள்ளை பழம் பறிப்பான்’, ’நீ நல்லது செய்தால் உன் சந்ததி நன்றாக இருக்கும்’ என்பதுதான் வழக்கம். அதோடு வாழ்க்கை முடிந்துவிடும்.
இந்த மண்ணுக்கு மக்களுக்கு நல்லது செய்தவரை மக்கள் வணங்குகிறார்கள். நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். அவர்களிடத்தில் வேண்டுதலை வைக்கிறார்கள். நம் முன்னோர்களிடத்தில்தான் வேண்டுதல் வைக்கிறோம். அப்படித்தான் தர்கா வழிபாட்டு முறையும் வருகிறது. நாகூர் தர்காவில் இருக்கும் பெரும்பாலான ஆட்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள். நாகூர் தர்காவுக்கு சந்தன கூடு தருவதை தமிழ் சமூகத்தில் ஒரு சாதி பொறுப்பெடுத்துக் கொள்ளும், ஏர்வாடி தர்காவுக்கு ஒரு சாதி பொறுப்பெடுத்துக் கொள்ளும், இங்கு இருக்கூடிய ஒவ்வொரு தர்காவுக்கும் நடக்கும் விழாவில் சந்தன கூடு தரக்கூடியவர்களாக ஒவ்வொரு சாதிகளும் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள். சந்தன கூடு முடிந்த பிறகு அந்த சந்தனத்தில் ஒரு பகுதியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வணங்குவார்கள். இது தமிழ் பண்பாட்டு முறை.
மருதுபாண்டியர்கள் திருப்பத்தூர் தர்காவுக்கு இடம் கொடுத்து கட்டி கொடுத்தார்கள். மதுரையில் இருக்கக்கூடிய பெரிய பள்ளிவாசல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் நிலம் கொடுத்து கட்டிய பள்ளிவாசல். அது 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல். மிகவும் பழமையான (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட) பள்ளிவாசல் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் இருக்கிறது. தமிழர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்குமான உறவு என்பது இன்று நேற்றல்ல, அது தமிழ் மன்னர்கள் காலத்திலிருந்து பண்பாட்டுடன் பின்னி பிணைந்த உறவு.
எவனோ ஒருவன் நாகப்பூரிலிருந்து, குஜராத்திருந்து, உத்தர பிரதேசத்திலிருந்து, இங்கு வந்து தமிழர்களுக்குள்ளாக மதரீதியாக பிளவு படுத்த வேண்டும் என்றால், அடித்து விரட்டப்பட வேண்டியது வடநாட்டு கும்பலைத்தான். நம் வீட்டுக்குள் கலகம் பண்ணுவதற்கு இவன் யார்? எச்.ராஜா எந்த முருகன் கோவிலுக்காவது வேண்டுதல் போயிருப்பாரா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றாவது வேண்டுதல் போயிருப்பார்களா? மொட்டை அடித்திருப்பார்களா? அலகு குத்தியிருப்பார்களா? காவடி தூக்கியிருப்பானா? என்ன செய்துள்ளான்? இவனுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
முருக வழிபாட்டு முறையை பாதுகாக்க வேண்டும் என்கின்ற ஆதங்கத்தை சொல்கின்றேன். முருக வழிபாடு என்பதை கடவுள் நம்பிக்கையாக மட்டும் நாங்கள் பார்க்க முடியாது. அதை நாம் பண்பாட்டு வடிவமாகப் பார்க்கின்றோம். நம் வாழ்வியல் முறை அதோடு சேர்ந்து இருக்கிறது, அதில் அன்பு இருக்கிறது, அறம் இருக்கிறது, அறிவு இருக்கிறது, ஒரு பண்பாட்டு வரலாறு நமக்கு இருக்கிறது.
நான் திமுக அரசிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்து அறநிலையத் துறையில் இருந்த அறுபடை வீடுகளுக்கு சுப்பிரமணியசாமி திருக்கோவில் எனப் பெயர் இருக்கிறது. தமிழ் சங்க இலக்கியங்களில் முருகன் பெயர் இருக்கிறது. முருகனுக்கு எத்தனையோ அருமையான பெயர்கள் இருக்கின்றன. ஆனால் சுப்பிரமணியன் என்ற பெயர் கிடையாது. அது சமஸ்கிருத சொல்லாக இருக்கிறது. அது பார்ப்பனர் சொல்லாக இருக்கிறது. பார்ப்பனர்கள் யாரும் முருகனோ, வடிவேலோ, பழனியோ, குமரனோ, செந்திலோ, சரவணன் என்ற பெயரோ வைக்க மாட்டார்கள். ஆனால் சுப்பிரமணியன் என்று பெயர் வைப்பார்கள். ஏனென்றால் ”சு-பிராமணன்” அதாவது ”சூத்திர பிராமணன்” தான் முருகன் என பெயர் வைத்துள்ளான். முருகன் கோவில் எப்படி சுப்ரமணிய கோவிலாக மாறியது? திருமுருகாற்றுப்படையில் கூட முருகன் பெயர் தானே இருக்கிறது. தற்போது கூட ‘கந்தன் மலை’ என காமெடி படம் வந்ததே, அதற்குக் கூட முருகன் மலை என்று பெயர் வைக்கவில்லை. தமிழினம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பானவர்களே! இன்றைக்கு நமக்கு நடக்கக்கூடிய நெருக்கடி என்பது பண்பாட்டு நெருக்கடி. நம் சாமி எது? அவன் சாமி எது? இரண்டும் வேறு வேறு. எப்படி இஸ்லாமுக்கும் கிறிஸ்தவருக்கும் வேறுபாடு இருக்கிறதோ, எப்படி இஸ்லாமுக்கும் முருக வழிபாட்டுக்கும் வேறுபாடு இருக்கிறதோ, அதுபோல இந்து மதத்திற்கும் தமிழர் வழிபாட்டு முறைக்கும் வேறுபாடு இருக்கிறது. நீங்கள் கும்பிடக்கூடிய அம்மனோ, குலதெய்வ வழிபாட்டு முறைகளோ, ஐயனார் கோவிலோ, முருகன் கோவிலோ, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. பிறகு எப்படி நாமும் இந்து, அவனும் இந்து? அவன் வழிபாட்டு முறை நமக்கு நேர் எதிரான முறை.
நீங்கள் எல்லாரும் பெரும்பாலும் கடவுளை கும்பிடக்கூடியவர்களாக, கடவுள் நம்பிக்கை கொண்டு கோவிலுக்கு சென்று வரக்கூடியவர்களாக இருக்கிறீர்கள். கோவிலுடைய கட்டுமானத்தை பார்த்தோமென்றால், பெரிய கோபுரம் இருக்கும். கோபுரத்தை தாண்டித்தான் நீங்கள் உள்ளே போவீர்கள். அதன்பின் தேங்காய் உடைக்கும் ஒரு இடம் இருக்கும், அதற்கு பிறகு ஒரு பெரிய கொடிமரம் இருக்கும், எந்த மூலவரோ அந்த மூலவருக்கு ஏற்ற கொடிமரத்தை தாண்டி வாகனத்தை கடந்து போனால், கருவறைக்கு வெளியில் இரண்டு பாதுகாவலரைப் போல இரண்டு துவாரபாலகர் இருப்பார்கள், அதற்குப் பிறகு கருவறை இருக்கும்.
இத்தகைய கட்டுமானத்தில் தேங்காய் உடைக்கிறீங்களே அந்த இடத்துக்கு பெயர் பலிபீடம். நான் கேட்கிறேன் – தேங்காய் உடைப்பதற்கு எதற்கு பலிபீடம் என்று பெயர் வைத்துள்ளான்? அந்த இடம் ஆடு கோழி பலியிடுவதற்காக வைக்கப்பட்ட இடம். அதை பார்ப்பனர்கள் கைப்பற்றிய பிறகு, ஆடு கோழி பலியிடுவதை நீக்கிவிட்டு, அங்கு தேங்காய் உடைக்கும் இடமாக மாற்றிவிட்டான். முன்பு நாம் அங்கு ஆடு கோழி பலியிட்டு சாப்பிடுவோம். இத்தகைய வழிமுறையை நீக்கிவிட்டு நம்முடைய கோவிலை திருடிவிட்டுப் போகிறான்.
இது இன்று நடந்ததல்ல. சுமார் 1300 வருடத்திற்கு முன்பு அப்பருக்கும் ஞான சம்பந்தருக்கும் இடையே ஆரம்பித்த சண்டை. அப்பரும் சைவ மரபை சார்ந்தவர். ஞான சம்பந்தரும் சைவ மரபை சார்ந்தவர். பிறகு எதற்கு இரண்டு பேருக்கும் சண்டை வருகிறது? என்று பார்த்தால் சைவ மதம் என்பது ஒற்றை மதம் அல்ல. சைவ மரபில் தமிழ் மரபு சைவம் என்பது வேறு, வடநாட்டு சைவம் என்பது வேறு. தமிழ் சைவம் என்பதற்கு கபாலிகம் என்று பெயர். கபாலி- ஈஸ்வரர் (கபாலீஸ்வரர்) என்று சொல்லப்படுகின்ற அந்த கபாலிக சைவம்தான் தமிழர்களுடைய சைவ மரபு.
சென்னையில் இருக்கக்கூடிய மைலாப்பூர் கோவிலுக்கு கபாலீஸ்வரர் கோவில் என்று பெயர். அந்த கபாலிக சைவ மரபு அடையாளமாக கபாலிக கோவில் இருக்கிறது. எந்த பார்ப்பனரும் கபாலி பெயர் வைக்கமாட்டான். அந்த கபாலிக சைவம்தான் மூத்த சைவம், முதல் சைவம், தமிழ் சைவம். அங்கு கடவுளுக்கு பூஜை செய்வது என்றால் தமிழ் மொழியில்தான் செய்ய வேண்டும். ஆனால் தமிழை நீக்கிவிட்டு வேதத்தை கொண்டு வருகிறார்கள், சமஸ்கிருத மரபுகளை கொண்டு வருகிறார்கள். அப்பொழுது சைவம் என்பது வேறாக மாறுகிறது. அது காலாமுக சைவம், பாசுபத சைவமாக மாறுகிறது.
சம்பந்தர் காலாமுக சைவத்தை சார்ந்தவர். வேத மரபுகளை ஏற்றுக்கொண்டவர். அப்பர் தமிழ் முறையை ஏற்றுக்கொண்டவர். இரண்டு சைவ மரபுகளும் வேறு. ஞானசம்பந்தர் ஏற்றுக்கொண்ட சைவ மரபு என்பது வேறு. அது தமிழ் மரபுக்கு நேர் எதிரான மரபாக இருக்கிறது. அதனால்தான் இன்று ஞானசம்பந்தரைக் கொண்டாடுபவர்கள் அப்பரை பற்றி அதிகம் பேசமாட்டார்கள். திருநாவுக்கரசர் பற்றி பேசமாட்டார்கள்.
இந்த சண்டை எங்கு நடக்கிறது என்றால், இன்றைக்கு வேதாரண்யம் என்று சொல்கிறோம் அல்லவா அந்த வேதாரண்ய கோவிலில் நடக்கிறது. மூடப்பட்ட அந்த கபாலிக கோவில் கதவுகளைப் பதிகம் பாடி திறக்க வேண்டும் என்கின்ற போட்டி நடக்கிறது. அப்பர் பதிகம் பாடுகிறார்… ஆனால் கதவு திறக்கவில்லை. சம்பந்தர் ஒரு பாடல் பாடியவுடன் கதவு திறந்து மூடுகிறது. ஆகவே இந்த கோவில் என்பது சம்பந்தர் வகைப்பட்ட காலாமுக சைவத்தினை கையில் எடுத்துக்கொண்ட கோவிலாக மாறிவிடுகிறது. அதற்குப் பிறகு வைதீக கோவிலாக மாறுகிறது.
(வேத மரபை நம்பிக்கையாக கொண்டவர்கள் வைதீக மரபினர். வேதத்தை மறுத்த மரபினர் தமிழ் மரபினர்.)
அப்பர் சதியால் தோற்கடிக்கப்படுகிறார். யாரும் பாட்டு பாடி கதவை திறக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் (பார்ப்பனர்கள்) மறைந்து நின்று அந்த வேலையை செய்கிறார்கள். அப்பர் பாடும்போது கதவு திறக்கவில்லை, சம்பந்தர் பாடும்போது கதவு திறக்கிறது. ஒரு சதியை செய்து வேதாரண்யத்தின் கோவிலை கைப்பற்றுகிறார்கள். தமிழ் மரபு கோவிலானது இவ்வாறுதான் வைதீக மரபு கோவிலாக மாறுகிறது. வேதாரண்யத்தின் கோவில் இன்றைக்கும் இதற்கு ஆவணமாக இருக்கிறது, புராணமாக இருக்கிறது.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! வேதாரண்யம் என்பது தமிழ்ப்பெயர் கிடையாது. அந்த ஊரினுடைய உண்மையான பெயர் ‘திருமறைக்காடு’. மானுக்குத்தான் ’மறை’ என்று பெயர். இன்றைக்கும் கோடியக்கரையில் மிகப்பெரிய காடு இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் மான்களை பார்க்கக்கூடிய ஒற்றை இடம் கோடியக்கரை. ஆக ‘மறை காடு’ (திருமறைக்காடு) என்பதைத்தான் வேதாரண்யமாக மாற்றி இருக்கிறார்கள். இவ்வாறு தமிழ்ப்பெயரை அவர்கள் சமஸ்கிருத பெயராக மாற்றி அந்த கோவிலை கைப்பற்றினார்கள். அப்படித்தான் திருவண்ணாமலை கோவிலும் கைப்பற்றப்பட்டது, அப்படித்தான் காஞ்சிபுரத்து கோவிலும் கைப்பற்றப்பட்டது, இப்படித்தான் தமிழ்நாட்டில் கோவில்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
விஜயநகர பேரரசு காலத்தில் (தெலுங்கு அரசர்கள் காலத்தில்) அன்றைக்கு படை தளபதியாக இருந்த ஒரு பார்ப்பனன், பழனி கோவில் பண்டாரத்தை (பண்டாரம் என்று சொல்கிறோமே, அவர்கள்தான் நம் கோவிலில் பூசை செய்வதற்காக இருக்கக்கூடிய மக்கள்) வெளியில் அனுப்பிவிட்டு, இவர்கள் வைதீக அர்ச்சகர்கள் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனர்களை உள்ளே கொண்டுவருகிறார்கள். இதுதான் சிதம்பரத்திலும் நடந்தது.
தஞ்சை பெரிய கோவில் பற்றி தெரிந்திருப்பீர்கள்! சிதம்பரம் கோவிலுக்குள் ராஜராஜ சோழனுக்கு அனுமதி இல்லாமல் போகின்ற காரணத்தினால்தான், தஞ்சையில் பெரிய கோவிலை எழுப்புகிறான் என்கின்ற வாதத்தை நாம் மறந்துவிடக்கூடாது.
சிதம்பரம் கோவிலில் பூசாரிகள் இல்லாமல் போன பிறகு, திருவனந்தபுரத்திலிருந்து கேரள நம்பூதிரிகளை அழைத்து வருகிறார்கள். பழனி கோவில் அப்படித்தான் பார்ப்பனர் கைக்கு சென்றது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லும் பொழுது சட்டையை கழட்டி விட்டுத்தான் செல்ல வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் பார்ப்பனரா இல்லையா? என்று பூநூலை வைத்து முடிவு செய்வார்கள். அதனால்தான் திருச்செந்தூர் கோவிலுக்கு போனால் சட்டையை கழட்டிவிட்டு போக வேண்டும். எதற்கு சட்டையை கழட்ட வேண்டும்? முருகன் கோவனத்தை கட்டி கொண்டிருக்கக்கூடிய பழனி கோவிலில் கூட சட்டையை கழட்டிவிட்டு நாம் போவதில்லை. ஆனால் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்வதற்கு எதற்காக சட்டையை கழட்ட வேண்டும்?
திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் இருந்த பொழுது பார்ப்பனர் யார்? பார்ப்பனர் அல்லாதவர் யார்? என்று தெரிந்து கொள்வதற்காக சட்டையை கழட்ட சொல்லுவான். அந்த மரபு இன்றைக்கு திருச்செந்தூர் கோவிலில் இருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்பது? இந்த சொத்து எல்லாம் நம்முடைய சொத்து. இந்த கோவிலில் எவ்வளவு நகை இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இந்துஅறநிலையத்துறை இல்லை என்றால் அது பார்ப்பனர் கையில் இருக்கும். அவன் அடகு வைத்து விற்றிருப்பான். அல்லது மொத்தமா முடித்திருப்பான். அவ்வளவு பெரிய சொத்து.
பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களை எண்ண ஆரம்பித்தார்கள், பல மாதங்கள் எண்ணினார்கள். மொத்தமாக எண்ணிப் பார்த்த பொழுது, இந்தியாவினுடைய ஒரு ஆண்டு வரி வருவாய்க்கு இணையான சொத்தை, அந்த ஒற்றை கோவில் வைத்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவினுடைய பட்ஜெட் அளவுக்கு பணத்தை ஒரு கோவில் வைத்திருக்கிறதென்றால், இங்கு சிதம்பரம் கோவில், காஞ்சிபுரம் கோவில், திருவண்ணாமலை கோவிலில் எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். நம் தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றுவதற்குரிய மொத்த பணமும் இங்கே இருக்கிறது.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! ”கோவில் என்பது வழிபடும் தளமாக நமக்கு காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவனுக்கு ஒரு வங்கியாக இருக்கிறது” என்பதை மறந்துவிடாதீர்கள்.
கோவில் என்பது அவனுக்கு (பார்ப்பனர்களுக்கு) வங்கி. உங்களுக்கு வழிபடும் இடம். அதனால்தான் தெளிவாக சொல்லி விட்டான்-“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று சொல்லி விட்டான். இதற்கு என்ன அர்த்தம்? ”தூரமாக இருந்து பார் பக்கத்தில் வந்துவிடாதே” என்று அர்த்தம். நாமும் மானமின்றி சுயமரியாதை இல்லாமல் வெளியில் இருந்து கும்பிட்டு வந்த இடமாக அது இருக்கிறது. நாம் உழைத்து சேர்த்த பணம் எங்கே போனது? கோவிலுக்குள் நகையாக மாறிப் போனது. ஏனெனில் கோவில்தான் அவர்களுக்கு வங்கி என்பதை மறந்துவிடாதீர்கள்.
இன்றைக்கும் வணிகம் செய்யக்கூடிய இடத்திலே மார்வாடிகள் கூட்டமாக சேர்ந்துவிட்டால் ’ஜெயின் கோவிலை’ கட்டுவான். ஏனெனில் இன்றைக்கு உலகத்தில் எந்த அரசுகளும் ஒரு கோவிலுக்குள் சென்றோ, கோவில் மடத்திற்குள் சென்றோ சோதனை (Raid) நடத்த முடியாது. ஆனால் கழிவறைக்கு கூட அமலாக்கத்துறையை அனுப்புவான் பிஜேபிக்காரன். மடத்துக்குள் அனுப்ப மாட்டான். கோவில் மடத்துக்குள் போக முடியாது. அதனால்தான் இங்கு சாமியார் அதிகமாக பணம் சேர்த்து வைக்கிறான். சாமியார் சாமியை வளர்க்கவா வருகின்றான்?சாமிக்கு தெரியாதா தன்னை வளர்த்துக்கொள்ள? தன்னை பாதுகாத்து கொள்ள? எதற்கு சாமியார்? சாமிக்கு எதற்கு புரோக்கர்? ஏனென்றால் சாமியாரோ சாமி மடமோ, அந்த மடத்தில் குவிக்கப்பட்ட சொத்தை அரசு கேள்வி கேட்க முடியாது. அது நம்பிக்கை சார்ந்த விடயமாக மாறிவிடும் என்கிற காரணத்தினால் வெள்ளைக்காரர் கூட கை வைக்கவில்லை.
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக உங்கள் முன்னோர்கள் உழைத்து சேர்த்த சொத்து அந்த கோவிலில் இருக்கிறது. அந்த கோவில் சொத்தை பாதுகாப்பதற்காக இந்து அறநிலையத்துறையை 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி உருவாக்கியது. இல்லை என்றால் பார்ப்பனர்கள் நிர்வாகம் பண்ணியிருப்பார்கள். அதைத்தான் திரும்ப கேட்கிறான். இந்து கோவில் இந்துக்களுக்கு கொடு என்று கேட்கின்றான். இந்துக்களுக்கு என்றால் யாருக்கு தருவது? எந்த பார்ப்பனருக்குத் தர வேண்டும் என்பதைத்தான் அவன் முடிவு செய்வான். அவன் பறையருக்கோ, வன்னியருக்கோ, ஆண்ட பரம்பரை என்று பேசுகின்ற யாருக்காவது கொடுப்பானா? யாருக்கும் தரமாட்டான்.
ஆக அந்த கோவிலை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு செய்வதற்கான காரணம்: அந்த ஒட்டுமொத்த சொத்தை கையில் எடுக்க வேண்டும், அந்த கோவிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்தை அவன் (பார்ப்பனன்) கையில் எடுத்து ஆக்கிரமிக்க வேண்டும். இன்றைக்கு நிலம் மிகப்பெரிய சொத்து. அங்கிருக்கும் தங்கம் மிகப்பெரிய சொத்து. இந்த சொத்துக்களின் வழியாக கிடைக்கக்கூடிய அதிகாரம் அதைவிட மிக வலிமையானது.
கோவில் என்பது அதிகாரத்தின் மையம், அதை மறந்துவிடாதீர்கள். உங்கள் மூட நம்பிக்கையும், உங்கள் கடவுள் நம்பிக்கையும் இன்னொருவன் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு பயன்படும் என்றால், அந்த பக்தி உங்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் தந்தை பெரியார் சொன்னார்.
உங்களுடைய பக்தி உங்கள் சுயமரியாதையை இழுக்கு செய்கிறது என்றால், அப்படிப்பட்ட பக்தி தேவையில்லை என்று முடிவு செய்யுங்கள். கடவுள் பக்தி என்பதை நீங்கள் ஒரு அதிகாரத்திடம் மண்டியிட்டுத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. கடவுள் எல்லா இடத்திலும் இருப்பார். உங்கள் வீட்டிலும் இருப்பார்.
அன்பானவர்களே! மதத்தின் பெயரால், கடவுள் நம்பிக்கையின் பெயரால், மூட நம்பிக்கையின் பெயரால், நம்மீது திணிக்கப்படுகின்ற அதிகாரத்தை எதிர்த்து நில்லுங்கள். கோவிலில் யார் எங்கு நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு எவனுக்கும் அதிகாரம் இல்லை என்பதை சொல்லுங்கள். எந்த கோவில் யாருக்கு சொந்தம் என்று முடிவெடுப்பதற்கு எவனுக்கும் அதிகாரம் இல்லை என்று சொல்லுங்கள். எந்த வழிபாட்டு முறையில் நாம் வழிபட வேண்டும் என்றும், எந்த வழிபாட்டு மொழியில் நாம் வழிபட வேண்டும் என்றும் முடிவு செய்வதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது என்று உரக்கச் சொல்லுங்கள்.
உலகத்தில் எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. ஜெர்மன் நாட்டுக்காரன் அவன் மொழியில்தான் அவன் கடவுளை கும்பிடுகிறான். ஜப்பான் நாட்டுக்காரன் அவன் மொழியில் அவன் கடவுளை கும்பிடுகின்றான். ஆப்பிரிக்க நாட்டுக்காரன் அவன் மொழியில் அவன் கடவுளை கும்பிடுகின்றான். ஆனால் தமிழன் மட்டும்தான் அவனுக்கு தெரியாத சமஸ்கிருதத்தில் அவன் கடவுளை கும்பிட்டு கொண்டிருக்கின்றான். இதைவிட இழிவு வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள் ஆப்பிரிக்க மக்களை உங்களை விட பொருளாதாரத்தில் குறைந்தவர்களாக பார்ப்பீர்கள் என்றால், அவன் உங்களைவிட சுயமரியாதை உயர்ந்தவனாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். அவன் முறையில் சாமி கும்பிடுவான், நம்மவர்களைப் போல வாடகை மொழியிலே அவன் சாமியை வணங்க மாட்டான்.
அவன் (பார்ப்பான்) கேட்பான்: நீ ஏன் இஸ்லாத்தை பற்றி விமர்சிப்பதில்லை கிறிஸ்தவத்தை பற்றி விமர்சிப்பதில்லை என்று கேட்பான். ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும்தான் புரோகிதராக முடியும் என்று அந்த மதம் கூறினால் அந்த மதத்தையும் நாங்கள் எதிர்த்து நிற்போம். ஆனால் இதர மதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும்தான் இங்கே சாமியை தொடுவதற்கு அருகதையானவர்கள், மற்றவர்கள் அருகதையற்றவர்கள் என்று அந்த மதம் சொல்லவில்லையே. வேத மதம் அத்தகைய பாகுபாட்டை சொன்னது, ஆனால் தமிழர் மதம் அவ்வாறு சொல்லவில்லை.
நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்! திருமுருகாற்றுப்படையில் முருகனை வழிபடுகின்ற அந்த வெறியாட்டத்தில் பெண்களைத்தான் நிறுத்துகிறார்கள். பெண்ணை தெய்வமாக கொண்டாடியவர்கள், அனைத்து சாதியும் சமம் என்ற முறை நம் வழிபாட்டு முறை. ஆனால் வேத முறை என்ற இந்து முறையில் பெண்ணை தீட்டு என்கிறான். ஆனால் தமிழர் வழிபாட்டில் தீட்டு கிடையாது.
அங்கே எவன் எங்கே நிற்க வேண்டும் என்று அவன் (பார்ப்பனர்) முடிவு செய்வான். எந்த மொழியில் வணங்க வேண்டும் என்று அவன் முடிவு செய்வான். எந்த கடவுளுக்கு எந்த வணங்குகின்ற முறை, எதை பலி கொடுக்க வேண்டும் என்பதை அவன் முடிவு செய்வான். உங்களுடைய வாழ்வியலை இழிவு செய்கிறான்.
தமிழ்நாட்டில் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் மட்டும்தான் சைவம். இதர 97 சதவீதம் உள்ள தமிழர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். ஆனால் ஒருத்தன் எவ்வளவு தைரியம் இருந்தால் திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவை கொண்டு போனதனால் முருகனுக்கு தீட்டு ஆகிவிட்டது என்று சொல்கிறான், தமிழ்நாடு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. அசைவ உணவு சாப்பிட்டால் அசிங்கமா? குற்றமா? தீட்டா? சுயமரியாதை உணர்வை தமிழகம் எப்படி இழந்து போனது? நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவதை இழிவு படுத்துகிறான்.
அசைவ உணவை எடுத்துக்கொள்வதால் என்ன பிரச்சனை சொல்லுங்கள் பார்ப்போம். குலச்சாமிக்கு பலியிட்டு படையல் போடுகிறோமே! (பாஜக-ஆர்.எஸ்.எஸ்.) நம் சாமியையும் சேர்த்து இழிவு செய்கிறான், நம்முடைய வணங்குகின்ற முறையையும் இழிவு செய்கின்றான், நமது உணவு முறையை இழிவு செய்கின்றான், அவனை பார்த்து கைகட்டி வேடிக்கை பார்க்கிறது தமிழினம். இந்த அவமானம் தமிழினத்துக்கு இருக்கக் கூடாது. மற்ற சமூகமாக இருந்தால் சட்டையைப் பிடித்து கேள்விக்கேட்டு வெளியே அனுப்பியிருப்பார்கள்.
எங்கள் முருகனுக்கு எப்படி வழிபடவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கின்றோம். தமிழர்கள் முருகனை எப்படி வணங்கினார்கள் என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்டு இருக்கிறது. நமக்கு ஒரு பெரிய மரபு இருக்கிறது. அதையெல்லாம் விட எவனோ வடநாட்டில் இருக்கக்கூடிய ஒருத்தன் வந்து நம் ஊரில் சாமி வழிபடும் முறையை முடிவு செய்கிறான். நாமும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். இந்த இழிவுதான் மிக மோசமானது, இந்த அமைதிதான் கவலைக்குரியது.

அன்பானவர்களே! நமக்கு இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இரண்டு பிரச்சனை. ஒன்று: அரசியல் அதிகாரத்தை முற்றிலும் பறித்துக் கொண்டு போகிறார்கள். இன்னொன்று: பண்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர் பண்பாடு இழிவு என்று தமிழர்களிடத்திலே பிரச்சாரம் செய்வதற்கு அண்ணாமலை, தமிழிசை போன்ற அடிமைகளை அவர்கள்(ஆர்.எஸ்.எஸ், பாஜக) உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நம்மளுடைய பண்பாட்டு முறை அசிங்கம்/ இழிவு எனச் சொல்லி நம்மவர்களை வைத்தே பேச வைக்கிறான்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றினால் சண்டைக்கு போய் மல்லுக்கட்டிய பிஜேபிக்காரனெல்லாம் யார்? பூநூல் போட்டவனா? பார்ப்பனர்களா? அந்த நீதிபதி சாமிநாதனின் சொந்தக்காரர்களா?அல்லது எச்ராஜா சொந்தக்காரனா? இல்லையே! நம் ஊர்க்காரன். அவன்தான் மல்லு கட்டி நிற்கிறான். அவன்தான் வழக்கு வாங்கப் போகிறான். அவன்தான் சிறைக்குப் போகப் போகிறான்.
பார்ப்பன நலனுக்காக அடிதடி செய்வதற்கும், வழக்கு வாங்குவதற்கும், சிறை செல்வதற்கும், நமது ஆட்கள் தேவை. ஆனால் மணியாட்டுவதற்கும், பூஜை செய்வதற்கும், அதிகாரம் செய்வதற்கும், அவனது ஆட்கள். என்ன அக்கிரமமாக இருக்கிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டே இருக்க முடியும்?
கட்சி அரசியல் என்பது வேறு. ஆனால் அவன் செய்வது பண்பாட்டின் மீதான தாக்குதல். தமிழர்களின் சுயமரியாதை மீதான தாக்குதல். அதை என்றைக்கும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.
இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில்தான் தமிழர்களுடைய பண்பாட்டு நிகழ்வை பெரிய நிகழ்வாக கொண்டாடவேண்டும். நமக்கு பொங்கல் என்பது தலையாய விழாவாக இருக்கிறது. ஏனெனில் அதில் சாதி மத அடையாளம் கிடையாது. ஆண் பெண் அடையாளம் கிடையாது. கடவுளுக்கு மரியாதை கிடையாது. இயற்கைக்குத்தான் மரியாதை கொடுத்திருக்கிறான் தமிழன். அந்த வகையில் பொங்கல் விழாவை லட்சக்கணக்கில் தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாட வேண்டும்.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டினுடைய நகரங்களில் மிக உயரமான அளவிலே திருவள்ளுவர் சிலையை தமிழர் அடையாளமாக வைத்து நாம் கொண்டாட வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கின்றேன். ஏனென்றால் வள்ளுவர் நமது அடையாளம். வள்ளுவர் வேத மரபிற்கும் இந்துத்துவ மரபிற்கும் எதிரானவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அவன் (ஆரியன்) பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன், தோளிலிருந்து பிறந்தவன், தொடையிலிருந்து பிறந்தவன் என அடுக்கடுக்காக பட்டியல் போட்டு, இவன் தாழ்ந்தவன் என்று சொன்ன பொழுது ”அனைவரும் சமம்” என்று சொன்னவர் திருவள்ளுவர். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்ன இனம் தமிழினம்.
2000 வருடத்திற்கு முன்பு கிரேக்கத்திலும் ரோமானிய நாட்டிலும் அடிமைகள் இருந்தார்கள். அரேபியாவில் அடிமை வணிகம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மனிதர்களை இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன், இவன் ஆளப் பிறந்தவன், இவன் உழைக்க தகுதியானவன் என்று பிரித்து வைத்த காலகட்டத்தில், தமிழ் சமூகம் / தமிழினம் மட்டும்தான் அனைத்து உயிர்களும் சமம் என்று சொன்னது. மனிதன் மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் நாம் மரியாதை கொடுக்கக்கூடிய வகையில் சமமாக பாவிக்க வேண்டும் என்று அனைத்து உயிர்களுக்கும் சமத்துவத்தை போதித்த ஒரு இனம் தமிழினம்.
இன்றைக்கு வடநாட்டுக்காரனால், குஜராத்தி கும்பல்களால் தமிழினம் வேட்டையாடப்படுவதை நாம் ஒருபொழுதும் அனுமதிக்கக் கூடாது. ஆகவே இவற்றை எல்லாம் நினைவு கூறுகின்ற வகையில் இந்த 2026ஆண்டிலே பாஜகவின் அரசியலை முடிவு கட்டக்கூடிய வேலையை செய்யுங்கள். நீங்கள் கடவுளை கும்பிடுங்கள், அது உங்கள் விருப்பம். எந்த சாமியையும் கும்பிடுங்கள், அது உங்கள் விருப்பம்.
ஆனால் அது உங்கள் பண்பாட்டு முறையில் இருக்கிறதா? என்பதை நீங்கள் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மரபிலிருந்து மாறாதீர்கள். ”அருள்மிகு” என்று இருந்ததெல்லாம் இன்று ”ஸ்ரீ”யாக மாறிக்கொண்டிருக்கிறது. அருள்மிகு என்கின்ற அந்த வார்த்தைக்கு இணையாக /நிகரான வார்த்தை, வடமொழியிலே சமஸ்கிருதத்திலே ஒரு சொல் கூட கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவிலில் எல்லாம் ஸ்ரீயை சேர்த்து வைத்திருக்கிறார்கள். ‘அருள்மிகு மாரியம்மன்’ எல்லாம் ‘ஸ்ரீ மாரியம்மன்’களாக மாறி இருக்கிறது, ‘ஸ்ரீ கங்கை அம்மனாக’ மாறி இருக்கிறது. இந்த இழிவை தயவுசெய்து நீக்குங்கள் என்று சொல்கின்றேன்.
இந்த மாரியம்மன் கோவிலுக்கும், ஐயனார் கோவிலுக்கும், உங்கள் நாட்டார் கோவிலுக்கும் குடமுழுக்கு செய்வோம் என்றால், நீங்கள் பண்டாரத்தையும், பூசாரியையும், உங்கள் ஊரில் இருக்கக்கூடிய, குடும்பத்தில் இருக்கக்கூடிய மூத்தோரையும் வைத்து செய்யுங்கள். என்றைக்கும் சமஸ்கிருதத்தில் செய்யாதீர்கள், என்றைக்கும் வேள்வியை வைத்து செய்யாதீர்கள், என்றைக்கும் பார்ப்பனரை வைத்து செய்யாதீர்கள், வேதங்களை அனுமதிக்காதீர்கள். ஏனெனில் வேதத்தில் நம்மை இழிவுபடுத்தக்கூடிய முறைதான் இருக்கிறது. வேத மரபில் அவர்கள் நம்மை சூத்திரன் என்று இழிவு செய்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய மரபில் நமக்கு எந்த இடமும் கிடையாது.
உங்களுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. தமிழ் மரபு இருக்கிறது. மே 17 இயக்கத்தில் இருக்கக்கூடிய தோழர்கள் திருமணம் செய்கின்ற பொழுது, திருக்குறளையும் திருவள்ளுவரையும் வைத்துதான் செய்கின்றோம். அவர்தான் நமக்கு வழிகாட்டி, அவர்தான் நமக்கு ‘மூத்தோன்’. அந்த வழியில் தான் நிற்போம். திருவள்ளுவரைவிட பெரிய சிந்தனையாளர் வடநாட்டில் எவரும் கிடையாது. ஆகவே வள்ளுவ முறையை வைத்துதான் தமிழன் வாழவேண்டும். இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்.
“உங்கள் மதம் எது என்று கேட்டால் வள்ளுவ மதம் என்று சொல்லுங்கள்” என்று சொன்னார் தந்தை பெரியார். அவர் திருக்குறளுக்காக மாநாடுகள் நடத்திய பெரும் வரலாறு இருக்கிறது. இன்று பெரியாரை ஏன் அவமதிக்கிறார்கள்? அவர் ஆரிய இழிவை பிட்டு பிட்டு வைத்தார். அவரை நிராகரித்தால் ஆரிய கசடுகள் நம்மை அப்பிக்கொள்ளும் என்கிற காரணத்தினால்தான் பெரியார் அவமதிக்கிறார்கள். பெரியார் நீங்கள் பக்திமானாக இருக்கிறீர்களா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நீங்கள் சுயமரியாதை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினார். ஆகவே சுயமரியாதை மிக்கவர்களாக தலை நிமிர்ந்து நிற்போம் என்பதை இந்த புத்தாண்டிலே உறுதியேற்று, நாம் இந்த புத்தாண்டிலே தமிழை வளர்த்து, தமிழ்நாட்டை செழிக்க செய்து, தமிழர்கள் தலைநிமர செய்வோம்.
நன்றி!வணக்கம்!!