அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வகித்த மகாயுதி 235 இடங்களையும் காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி 49 இடங்களையும் பெற்றிருக்கிறது. இதில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றி, மாநிலக் கட்சிகளை பிளவுபடுத்தியதோடு அரசு இயந்திரங்களின் ஆதரவோடு பெற்ற வெற்றியாகவே கருதப்படுகிறது.
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இடம்பெற்ற உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி வெற்றிபெற்ற 20 தொகுதிகளைக் காட்டிலும் பாஜக கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கூடுதலான இடங்களைப் பெற்றிருக்கிறது (57 இடங்கள்). மாநிலக் கட்சியான சிவசேனா கட்சியை பாஜக உடைத்த பிறகு நடந்த சில முக்கிய அரசியல் நிகழ்வுகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு காரணிகளாக அமைந்திருக்கின்றன.
2014-இல் ஒன்றிய அரசாக பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே மாநிலக் கட்சிகளை உடைப்பதையும் அந்தக் கட்சிகளில் இருக்கும் எம்.எல்.ஏக்களை பாஜகவில் சேர்ப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்றவற்றில் தொடங்கி உத்தரகாண்ட், கோவா என பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மற்றும் மாநிலக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்குத் தாவி இருக்கின்றனர். இந்த மாநிலங்களைப் போன்றே மகாராஷ்டிராவிலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகளை உடைத்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறது பாஜக.
2022இல் சிவசேனா கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்தது உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் வீழ்வதற்கு காரணமாகியது. இதற்கு அடுத்த ஆண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் 41 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்தார். பாஜக அரசு தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை ஏவி மாநிலக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டில் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றமோ இதற்கு முடிவெடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்தது. ஜனவரி 10, 2024 அன்று மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தான் ‘உண்மையான சிவசேனா’ என்று ‘தீர்ப்பளித்தார்’.
ஒரு வழக்கை ஆராய்ந்து நீதிமன்றத்தில் நீதிபதி வழங்க வேண்டிய தீர்ப்பை மகாராஷ்டிராவில் சபாநாயகர் வழங்கியிருக்கிறார். இது அனைத்தையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்ததும் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
இது மட்டுமல்லாது, தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டின் பூஜை நிகழ்விற்கு மோடி சென்ற நிகழ்வும் நடந்திருக்கிறது. அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களை பாஜக தன் வசம் இழுப்பதை வெளிப்படையாக சுட்டுகிறது இந்நிகழ்வு. இதன்மூலம் இனி எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்றாலும், நீதி கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகி இருக்கிறது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த முறை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. முதலில் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக கூறிய தேர்தல் ஆணையம் பின்னர் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 15க்குப் பிறகு தேர்தல் நடைபெறும்” என்று கூறி தேர்தலைத் தாமதப்படுத்தியது. இந்த ஒரு மாத காலதாமதத்தில் ஷிண்டே அரசு பெண்கள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைத்தது. முன்னர் மானியங்களுக்கு ஒதுக்க நிதி இல்லை என்று கூறி விட்டு தேர்தல் நெருங்கியவுடன் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான முன்பணத்தை வழங்கியிருக்கிறது. இப்படி முன்பணம் வழங்குவதற்காகவே தேர்தல் ஆணையம் தேர்தலைத் தாமப்படுத்தி இருக்கிறது என்றும் விமர்சங்கள் எழுகின்றன.
மேலும் தேர்தல் முடிந்த பிறகு வாக்காளர் எண்ணிக்கை சதவிகிதத்திலும் பெரும் வேறுபாடுகளைக் கூறியது தேர்தல் ஆணையம். நவம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு 55% வாக்காளர் வாக்களித்து இருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் எண்ணிக்கை 67% ஆக இருந்தது. அதாவது வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு கூறிய எண்ணிக்கையைவிட அடுத்த நாள் சுமார் 76 லட்சம் கூடுதலாக எண்ணிக்கையை அறிவித்தது தேர்தல் ஆணையம். (நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது).
எப்பொழுதெல்லாம் இவ்வாறு எண்ணிக்கையை அதிகளவில் அதிகரித்து தேர்தல் ஆணையம் சொல்கிறதோ அப்பொழுதெல்லாம் பாஜக கூட்டணியே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில், தேர்தல் ஆணையம் முன்னால் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையை விட பின்னர், சுமார் 5 கோடி வாக்குகள் அதிகப்படியாக கூறியிருந்தது. மகாராஷ்டிரா தேர்தலில், 76 லட்சம் வாக்குகளை அதிகப்படியாக கூறி இருக்கிறது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் அந்த வழக்கு, அடுத்த தேர்தலே வந்து விடும் அளவுக்கான கால தாமதம் செய்து நிலுவையில் வைக்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போது ஏடிஆர்(Association for Democratic Reforms) அமைப்பு இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. ஆனால், அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவேதான் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அங்கு தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றன.
மகாராஷ்டிராவில் வேண்டுமென்றே தேர்தலைத் தாமப்படுத்தி, எதிர்க்கட்சிகளை உடைத்து ஆட்சியைப் பிடித்த பாஜகவின் வெற்றியால் உண்மையில் லாபம் அடைவது அதானிதான் என்று கூற வேண்டும். ஏனெனில் அதானி அந்த மாநிலத்தில் கொண்டுவரப்போகும் திட்டங்களுக்கு (மக்கள் எதிர்ப்பு இருந்தாலும்) பாஜக மூலம் பல சலுகைகள் கிடைக்கவிருக்கின்றன. குறிப்பாக மும்பையின் தாராவி பகுதியில் 620 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற மைய திட்டம் மோடியின் நண்பர் அதானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்களை (தாராவியில் இருக்கும் பெருன்பான்மை தமிழர்களை) வெளியேற்ற அதானி கொண்டுவரும் திட்டம்தான் இந்த நகர்ப்புற மைய திட்டம். 2022 இல் அதானிக்கு கொடுக்கப்பட்ட இந்த திட்டம் மட்டுமல்லாது இஸ்ரேலின் ‘டவர் செமிகண்டக்டர்‘ நிறுவனமும் அதானி குழுமமும் இணைந்து மகாராஷ்டிராவில் ஒரு செமிகண்டக்டர் திட்டத்திற்காக 839.47 பில்லியன் ரூபாய் ($10 பில்லியன்) முதலீடு செய்யும் முனைப்பில் இருக்கின்றன.
அமெரிக்காவில் மோசடி மற்றும் லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதானி, மகாராஷ்டிராவில் எந்த சிக்கலும் இல்லாமல் தொழில் நடத்த கிடைத்த வாய்ப்பாகவே பாஜகவின் தேர்தல் வெற்றி ‘உண்டாக்கப்பட்டிருக்கிறது’. ஆனால் அதானியின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட தேர்தல் வெற்றி என்பது மறைக்கப்பட்டு பாஜக அறிவித்த நலத்திட்டங்களால் கிடைத்த வெற்றி என்று ஊடகங்கள் வழக்கம்போல் செய்தி வெளியிடுகின்றன.
இந்தியாவில் இனி மாநிலக் கட்சி எதுவும் இல்லாமல் தேசிய கட்சிகள் மட்டுமே வளர்வதற்கான திட்டங்களோடு அதிகாரவர்க்கம் பணிபுரிவதை இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் தன்னிச்சையாக செயல்பட வேண்டிய அமைப்புகள். சனநாயகத்தின் தூண்களான இவை மக்களுக்கு துல்லியமான தகவலையும், நீதியையும் தர வேண்டும். ஆனால் இன்று மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஒன்றியத்தில் மூன்றாம் முறை பதவியேற்ற பின் நடந்த இந்த தேர்தலில், தனது வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக பல அறமற்ற வழிகளைப் பின்பற்றியிருக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டிய, நடுநிலைமை காக்க வேண்டிய அமைப்புகளும் அத்தகைய பதவிகளில் பணிபுரியும் நபர்களும் வலதுசாரி இந்துத்துவத்தின் பிடிக்குள் சென்றால் சனநாயகம் கேள்விக்குறியாகி விடும் என்பதை மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மீண்டும் உணர்த்தி இருக்கின்றன.