பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்!
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு கம்யூனிச புரட்சியாளர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் – 23-03-1931
இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர்களை எதிர்த்து போராடிய தலைவர்களில் புரட்சிகர சோசலிச வழிமுறையின் மூலமாக இந்திய மக்களை ஆங்கில ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை செய்ய போராடியவர் பகத்சிங் அவர்கள். சிறுவயது முதலே மார்க்சிய சிந்தனை கொண்டவரானதால் ஆங்கிலேயர்களின் பொருளாதார சுரண்டல்களையும், காலனியாதிக்கத்தையும் எதிர்த்து வந்தவர் பகத்சிங் அவர்கள். அவரது அர்ப்பணிப்பின் காரணமாக ‘சாஹீது’ பகத்சிங் என்று அழைக்கப்பட்டார். ‘சாஹீது’ என்பதற்கு மாவீரர் என்று பொருளாகும்.
அப்பொழுது அன்றைய காங்கிரசில் இருந்து வெளியேறி புரட்சி வழியில் ஆங்கிலேயர்களை வீழ்த்த திட்டமிட்ட கர்த்தார்சிங் என்பவர் லாகூர் சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். வெறும் 18 வயது மட்டுமே நிரம்பிய அவரது இந்த படுகொலை பகத்சிங் அவர்களை போராடிய தூண்டியது. அதன் விளைவாக இளைஞர்கள் படை என்று பொருள்படும் விதமாக ‘நவஜவான் பாரத சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் வழியே பொதுவுடைமை அரசியலையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தார். அதில் இறுதி கட்டமாக ‘இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி’ என்ற சிறு ஆயுதப் படையையும் உருவாக்கினார்.
1930-ம் ஆண்டு சைமன் குழுவை எதிர்த்து லாலாலஜபதிராய் தலைமையில் கறுப்புக் கொடியுடன் அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவிக்கபட்ட போது ஆங்கிலேய அரசு காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். இரு வாரங்களில் இறந்தும் போனார்.
இதனால் பெரும் சினத்திற்கு உள்ளான பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் தடியடிக்கு தலைமையேற்ற சூப்பிரடெண்ட் ஆஃப் போலீஸ் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர். எனினும் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் இன்னும் வீரியமாக தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்பையும், கோரிக்கைகளையும் பதிவிட வேண்டும் என்று எண்ணினர்.
அதற்காக 1929-ம் ஆண்டு சட்டமன்றத்தில் வெடிகுண்டுகள் வீசி கைதானார்கள். கைதாக்கும் போது புரட்சி முழக்கங்களுடன் “கேட்காத காதுகளுக்கு கேட்கச் செய்ய, பலத்த சத்தம் தேவைப்படுகிறது” என்ற வரிகள் அடங்கிய துண்டறிக்கைகளை வீசிச்சென்றனர். ஆங்கிலேய நீதிமன்றம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்தது. தோழர்களும் நீதிமன்றத்தை முழக்க மேடைகளாக பயன்படுத்தினரே ஒழிய, முறையிடவோ, கருணை கேட்கவோ பயன்படுத்தவில்லை. தனது இறுதி நாட்களில் அவரது தந்தை நீதிமன்றத்தில் முறையிட முயற்சித்த போது அதை கடுமையாக எதிர்த்து ‘தந்தைக்கு ஒரு கடிதம் (Letter to Father)’ என்ற ஒரு கடிதத்தை எழுதி தடுத்தார்.
இறுதியாக பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு முடிவெடுத்த போது தங்களை போர்க்கைதிகளாக கருத வேண்டும் என்றும், தூக்கிலிடுவதை தவிர்த்து துப்பாக்கியால் சுட்டு பெருமைபடுத்த வேண்டும் என்றும் பகத்சிங் கேட்டார்.
ஆனாலும் பகத்சிங் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 1931 மார்ச் 23-ம் நாள் அவசர அவசரமாக முன்னறிவிப்புகள் ஏதும் இன்றி தோழர்கள் மூவரையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். தூக்குமேடைக்கு அழைத்து செல்லும் முன் கூட பகத்சிங் புரட்சியாளர் லெனின் அவர்களின் ‘அரசும், புரட்சியும்’ என்ற நூலை சிறையில் படித்துக் கொண்டிருந்தார்.
சாஹீது பகத்சிங் அவர்களின் ஈகம் வியப்புக்குறியது. ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தை உலகிற்கு உணர்த்த உயிர் ஈகம் செய்யத் துணிந்த மாவீரராக வரலாற்றில் திகழ்கிறார். இன்றளவும் அவர் எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற நூல் மிக முகாமையான நூலாக விளங்குகிறது. இந்நூலை தமிழில் பொதுவுடைமைவாதி ஜீவா அவர்கள் மொழி பெயர்க்க, தந்தை பெரியார் அவர்கள் அதை வெளியிட்டார்.
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும், பொதுவுடைமைவாதிகளுமான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாளான இன்று அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீர வணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010