பீமா கோரேகான் வழக்கும் உபா சட்டமும்
உபா என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA – Unlawful Activities Prevention Act) என்பது ஒரு கருப்புச் சட்டம். 1967 இல் உருவாக்கப்பட்ட இந்த சட்டம், தேசத்தின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அமைப்புகளை தடை செய்வதற்கும், அமைப்பைச் சார்ந்த நபர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்கும் என்பதாகத்தான் வியாக்கியானம் கூறப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடைசியாக 2019-ஆம் ஆண்டு தனி நபர்களையும் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்து அடைத்து வைக்கலாம் என்கிற மிக முக்கியமான திருத்தத்தை மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசு மேற்கொண்டது.
வழக்கமான குற்ற நடைமுறைச் சட்டங்களுக்கு மாறாக, இச்சட்டமானது அரசு நிறுவனங்களால் குற்றம் சாட்டப்படும் நபர்கள் தாங்களே, தங்களை குற்றமற்றவர்களாக நிரூபித்து வெளிவர வேண்டும் என்கிற அடிப்படை மனித உரிமை விரோத தன்மையை கொண்டது. மற்ற குற்ற நடைமுறைச் சட்டங்களில் அரசு ஒரு நபரை குற்றவாளி என உறுதிப்படுத்துவதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆதாரங்களின் உண்மைத்தன்மையை வாத பிரதிவாதங்களில் அடிப்படையில் நீதிமன்றங்கள் சீர்தூக்கிப் பார்த்து நீதி வழங்கும்.
இந்த கருப்பு சட்டத்தில் அத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக, போகிறபோக்கில் அரசும், அரசு நிறுவனங்களும் சுமத்தும் குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட தனிநபர்கள் உண்மையில்லை என ஆதாரங்களை முன்வைத்து வழக்கு நடத்தி தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இது, 1966ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் குடிமக்களுக்கான அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச கூட்டு ஒப்பந்தத்திற்கு (International Covenant on Civil and Political Rights) எதிரானதாகும்.
தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு (National Crime Records Bureau – NCRB) வெளியிட்டிருக்கும் தரவுகள் 2014-லிருந்து 2018 வரையான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட UAPA வழக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்கின்றன. மோடி அரசு பொறுப்பேற்கும் வரை பெரும்பாலும் மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த UAPA வழக்குகள், 2014க்கு பிறகு பாஜக ஆளும் மாநிலங்களில் உயர்ந்து வருவதாக NCRB தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் UAPA வழக்குகளின் எண்ணிக்கை 2014-ல் 976-லிருந்து 2018-ல் 1,182 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 2018-ல் 5,107 வழக்குகள் விசாரணை துவங்கபடாமலேயே கிடப்பில் கிடந்திருக்கின்றன. அதாவது 2018 தரவுகளின்படி, 2014-இல் பதியப்பட்ட வழக்குகள் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரணைக் கைதிகளாகவே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். 2018-க்கு பிறகான தரவுகள் நமக்கு கிடைக்கப் பெறவில்லை.
இதிலிருந்து இந்த வழக்கின் நோக்கம் என்பது அரசாங்கத்தின் திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக இருப்பவர்களை தடுத்து வைப்பதும், நீதிமன்ற விசாரணையை நீட்டித்து செல்வதுமாகவே இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது. இந்த வழக்குகளில் பிணையும் கிடைப்பதில்லை.
குறிப்பாக, பீமா கோரேகான் கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் பல்வேறு முறை பிணை வேண்டி நீதிமன்றங்களை நாடியும் அலைக்கழிக்கப்பட்டார்கள். கொரானா பரவல் மிகத்தீவிரமாக இருந்த காலத்திலும் இவர்களின் பிணை மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டன. கவிஞர் வரவர ராவ் மீதான பிணை மனு பலமுறை நிராகரிக்கப்பட்டு இறுதியாக கொரானா தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமான பின்னர் தான் கிடைத்தது.
இதே வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற அனைவருக்குமே பிணை மறுக்கப்பட்டது. 84 வயதாகி பார்கின்சன் நோயில் அவதிப்பட்டுவந்த பாதர் ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு கொரானா தொற்றுக்கு ஆளாகி, உடல்நிலை மோசமடைந்து அவர் இறக்கும் வரை பிணை மறுக்கப்பட்டது. குளிரில் அவதியுற்ற 84 வயது அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமி அவர்களுக்கு போர்வை கொடுப்பதற்கும், செருப்பு கொடுப்பதற்கும், உறிஞ்சி குடிக்கும் டம்ளர் கொடுப்பதற்கும் கூட வாரங்கள் எடுத்துக்கொண்டது நீதித்துறை.
இந்த சட்டத்தை பயன்படுத்துவதற்கான காரணம், தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவோரை தடுப்பது என்பதாகும். முதலில் எது தேசத்தின் இறையாண்மை என்பது நீண்ட விவாதத்திற்கு உரியது. இறையாண்மை என்பது மக்களை சார்ந்தது. எனினும், தேச இறையாண்மை பழங்குடியின மக்களின் இறையாண்மையை உள்ளடக்கியது தானா? பட்டியலின மக்களின் இறையாண்மையை உள்ளடக்கியது தானா? பல்வேறு தேசிய இன மக்களின் இறையாண்மையை உள்ளடக்கியது தானா? என்கிற பல கேள்விகள் நமக்கு இயல்பாகவே எழுகின்றன.
ஆனால், நடைமுறையில் பனியா முதலாளிகளின் இறையாண்மையை மட்டுமே உள்ளடக்கமாக கொண்டு செயல்படுகிறது இந்திய அரசு. வளர்ச்சி என்கிற பெயரில் பழங்குடியின மக்களை அவர்களின் மரபு வழி தாயகத்தில் இருந்து வெளியேற்றி, அவர்களின் நிலங்களில் வளங்களை சுரண்டல் செய்கிறது இந்திய பார்ப்பனிய அரசு. இந்த வளர்ச்சியை மையப்படுத்தி தான் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. கட்சி பேதமின்றி இந்தியாவின் ஆளும் வர்க்கம் நிறுவனங்களின் சுரண்டலுக்காக பூர்வகுடி மக்களை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றுவதும், அதை எதிர்த்து பூர்வகுடி மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை இத்தகைய கருப்பு சட்டங்கள் கொண்டு அடைப்பதுமாக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
விளிம்புநிலை மக்களை உள்ளடக்காத பார்ப்பனிய பனியா நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே மையப்படுத்தியதாக வளர்ச்சி எனும் பதம் இந்தியாவில் தொடர்ந்து திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு எதிரானவர்களாக பழங்குடியின மக்களும் பட்டியலின மக்களும் சித்தரிக்க படுகிறார்கள். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்தும் போராட்டம் வன்முறையாக சித்தரிக்கப்படுகிறது. இந்த மக்களின் உரிமைக்காக அரசை எதிர்த்து நிற்பவர்கள், எழுதுபவர்கள், வழக்காடுபவர்கள், குரல் கொடுப்பவர்கள் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்கிற பிம்பம் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களும் இத்தகைய உரிமை சார்ந்த போராட்டத்தில் தொடர்ந்து களமாடி வந்தவர்கள் விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடி வருபவர்கள். இவர்களின் மீது தான் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் UAPA எனும் வழக்கை பதிந்து அடைத்து வைத்து கொடுமை படுத்துகிறது இந்திய ஆளும் வர்க்கம்.
1818-ல் பீமா கோரேகான் எனும் பகுதியில் நடந்த கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் பேஷ்வா பார்ப்பன அரசனின் படைக்கும் நடந்த போரில், பேஷ்வா பார்ப்பன அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்த பட்டியலின சமூக மக்கள், கிழக்கிந்திய கம்பெனியின் படையில் இணைந்து பேஷ்வா படையை வீழ்த்தினர். இந்த நினைவைப் போற்றும் வகையில் போர் நடைபெற்ற பீமா கோரேகான் பகுதில் ஆங்கிலேயே அரசு நினைவுத்தூண் ஒன்றை நிறுவியது.
1928-இல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் முதன்முதலாக இந்த மஹர் சமூக (மராட்டிய பட்டியலின சமூகம்) மக்களின் வெற்றியின் நினைவை விழாவாக கொண்டாடினார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி பீமா கோரேகான் போரின் வெற்றிநாளை பட்டியலின சமூக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன் 200-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக பல்வேறு பட்டியலின சமூக அமைப்புகளும் இயக்கங்களும் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ‘எல்கர் பரிஷாத் (Elghar Parishad)’ எனும் பெயரில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் 250-க்கும் மேற்பட்ட தலித்திய பழங்குடியின அமைப்புகள் பங்குபெற்றன. இந்த விழாவை சீர்குலைக்க இந்துத்துவா அமைப்புகள் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கினர். கலவரத்திற்கு காரணமாக இருந்தவர்கள் என்கிற அடிப்படையில் RSS-ஐ சார்ந்த சம்பாஜி பீடே, மிலிந்த் எக்போட்டே என்ற இரு முக்கிய நபர்களின் மீது அனிதா சவாலே எனும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பதியப்பட்டது.
இதில் மிலிந்த் எக்போட்டே என்பவர் 2018 மார்ச் 14-ஆம் தேதி வரை கைது செய்யப்படவில்லை. மார்ச் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாரதிய ஜனதா மஹாராஷ்டிரா மாநில அரசால் எடுக்கப்படவில்லை.
ஆனால் துஷார் தாம்குடே எனும் தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை 2018 ஜனவரி 8-ம் தேதி பதியப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையில் சுதீர் தவாலே, ஹர்ஷாலி போட்தார், தீபக் டெங்க்லே, கபீர் கலா மன்ச்சை சேர்ந்த ஜோதி ஜக்தாப், ரமேஷ் கைச்சோர் மற்றும் சாகர் கோர்க்கே ஆகியோர் மீது மாவோயிட்டுகளுக்கு ஆதரவாக பேசினார்கள், பட்டியலின பழங்குடியின மக்களை மாவோயிட்டுகளாக மாற்ற பிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
போலீசார் தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டு முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு முன்பாக புனைவை சேர்ந்த ஒரு பாதுகாப்பு சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனம் (Forum for Integrated Security) இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியது. இந்நிறுவனத்தின் இரண்டு செயலாளர்களில் ஒருவர் சேஷாத்திரி சாரி என்பவர் மூத்த ஆர்எஸ்எஸ்-காரர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவிலும் உறுப்பினராக உள்ளார். இந்த சேஷாத்திரி சாரி என்பவர்தான் முதன்முதலாக 2009 ஈழ இனப்படுகொலை முடிவுற்ற பிறகு இலங்கைக்கு சென்று ராஜபக்சேவை சந்தித்து வந்தவர்.
இந்த நிறுவனம் தனது அறிக்கையை மார்ச் மாதம் வெளியிடுகிறது. அதை தொடர்ந்து விவேக் விச்சார் மன்ச் எனும் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பின் சார்பாக உண்மை கண்டறியும் குழு என்கிற பெயரில் ஒரு விசாரணை குழு உருவாக்கப்பட்டு விசாரணையை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரதீப் ரவாத் என்கிற ஆர்எஸ்எஸ்-காரர், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
இதனை தொடர்ந்து 2018 ஏப்ரல் 17-ஆம் தேதி கபிர் கலா மன்ச் உறுப்பினர்களான சாகர் கோர்க்கே, ஜோதி ஜக்தாத், ரமேஷ் கைச்சொர், தீபக் டெங்க்லே ஆகியோரின் வீடுகள் புனேவிலும், சுதிர் தவாலே, ஹர்ஷாலி போட்தார் போன்றோரின் வீடுகள் மும்பையிலும், ரோனா வில்சனின் வீடு டெல்லியிலும், சுரேந்திர கட்லிங்கின் வீடு நாக்பூரிலும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
2018 ஜூன் 6-ஆம் தேதி அதிகாலையில் சிறைவாசிகளின் விடுதலைக்காக போராடி வரும் ரோனா வில்சன், பத்திரிக்கையாளர் சுதிர் தவாலே, மனித உரிமை செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகா, பத்திரிகையாளரும், பேராசிரியர் சோமா சென், கட்சிரோலி பகுதியில் Surjagarh சுரங்க திட்டத்திற்கெதிராக பழங்குடியின மக்களுக்காக போராடிய மகேஷ் ராவத், பல்வேறு பட்டியல் இன பழங்குடி மக்களுக்கெதிரான வழக்குகளை நடத்திக்கொண்டிருந்த வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங் ஆகியோர் UAPA வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
2018 ஜூன் 8ஆம் தேதி ரிபப்ளிக் டிவியில், கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் அவர்களின் மடிக்கணினியில் இருந்து கைப்பற்ற மின்னஞ்சல் என்று ஒரு மின்னஞ்சல் செய்தியாக்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி அவர்களை கொலை செய்வதற்காக மாவோயிஸ்டுகளுடன் இணைந்து திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாகவும், ராஜீவ்காந்தி கொலை போல் அந்த கொலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த மின்னஞ்சலானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து பிணை வேண்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த கடிதத்தை நீதிமன்றத்தில் படித்துக் காட்டி பிணை வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
ரிபப்ளிக் டிவி இந்த கடிதத்தை பிரபல வழக்கறிஞரும் தொழிற்சங்கவாதியுமான சுதா பரத்வாஜ் அவர்கள் ரோனா வில்சன் அவர்களுக்கு எழுதியதாக குறிப்பிட்டது. அருண் பெரேரா, வெர்னன் கொன்சால்வஸ் போன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் கௌதம் நவ்லகா உள்ளிட்டவர்களையும் தொடர்புபடுத்தியது.
வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் அவர்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக ரிபப்ளிக் டிவி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
டெல்லி, பரிதாபாத், ராஞ்சி, ஹைதராபாத், மும்பை மற்றும் கோவா ஆகிய நகரங்களில் 2018 ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிகாலை மகாராஷ்டிர போலீஸ் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டன. விசாரணைக்குப் பிறகு சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, அருண் பெரேரா, வெர்னன் கொன்சால்வஸ், மற்றும் எழுத்தாளரும் கவிஞருமான வரவர ராவ் ஆகிய 5 பேரும் UAPA வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கொடுக்கப்பட்ட கோப்புகள் மராத்தி மொழியில் இருந்ததாகவும் தங்களுக்கு அது புரியவில்லை என்றும் சுதா பரத்வாஜ், நவ்லகா, வரவர ராவ் மொழிபெயர்ப்புப் பிரதி தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதன் காரணமாக புனே போலீசாரால் இவர்களை மகாராஷ்டிராவிற்கு கொண்டு வரமுடியாமல் வீட்டுக்காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வழக்குகளை வாதாடும் போது அரசு தரப்பு வழக்கறிஞரான உஜ்வாலா பிரகாஷ் அவர்கள் இவர்கள் பாசிச அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் “anti-fascist front” அமைப்பின் அங்கத்தினர் என்று வாதிட்டார்.
இதைப்பற்றி யக் சவுத்ரி எனும் மும்பை வழக்கறிஞர் கூறும்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சரியான வழிகாட்டுதலின் பேரில்தான் இவ்வாறு பேசுகிறாரா என்று தெரியவில்லை. பாசிசத்திற்கு எதிராக இருப்பவர்கள் எவ்வாறு சட்டத்துக்குப் புறம்பானவர்களாக இருக்க முடியும்? இவர்கள் பாசிசத்திற்கு எதிரான அமைப்பை சார்ந்தவர்கள் என்றால் அரசாங்கம் தன்னை பாசிச அரசாங்கம் என்பதை ஒத்துக் கொள்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
புனே நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட இந்த ஐந்து பேரும் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். அந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் இவர்கள் ஐந்து பேரையும் 2018 செப்டம்பர் 6-ஆம் தேதி வரையிலும் வீட்டு காவலில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பின்னர் வீட்டுக்காவல் 2018 செப்டம்பர் 17-ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றவுடன், சிறப்பு விசாரணை அமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, தேசிய புலனாய்வு முகமைக்கு (National Investigation Agency) இந்த வழக்கு மாற்றப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை கையில் எடுத்ததும் ராஞ்சியிலிருந்து ஸ்டேன் சுவாமி, கோவா IIM பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட இந்த விழாவில் கலந்துகொள்ளாத பலர் உட்பட மொத்தமாக 16 பேரை UAPA வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
ரோனா வில்சன் அவர்களின் மடிக்கணினி அமெரிக்காவில் இருக்கும் ஆர்சனல் கன்சல்டிங் (Arsenal Consulting) எனும் தடயவியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் அவரின் மடிக்கணினி நெட்ஒயர் (NetWire) எனும் மால்வேர் (Malware) மூலம் ஹேக் (Hack) செய்யப்பட்டது என்றும், இதனை ஹேக் செய்து கட்டுப்படுத்தியவர்கள் 10 கடிதங்களை ஒளித்து வைத்து இருந்தார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ரோனா வில்சன் அவர்கள் தேசிய புலனாய்வு முகமையில் இந்த ஆதாரங்களை கொண்டு இந்தியாவிலேயே தடயவியல் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இஸ்ரேலின் NSO எனும் நிறுவனத்தின் பிகாசஸ் (Pegasus) எனும் மால்வேர் (Malware) மற்றுமோரு ஈமெயில் மூலம் பரவிய மால்வேர் ரோனா வில்சன் உள்ளிட்ட பல மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிக்கையாளர்கள் செல்போன்களிலும் கணினிகளிலும் உளவு வேலை செய்தது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு அம்னேஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) 2020-ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து மோடி அரசால் அம்னஸ்டி இன்டர்நேஷனலின் நிதி கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில்தான் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் கொரானா தொற்றுக்கு ஆளாகி பலமுறை பிணை மறுக்கப்பட்டு சிறையிலேயே மரணம் அடைந்தார். தோழர் ஸ்டேன் சுவாமி உட்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எவர் மீதும் இதுவரை அவர்கள் குற்றங்களுக்கான ஆதாரங்கள் குற்ற பத்திரிகைகளில் இடம்பெறவில்லை.
அரசுக்கு எதிராக மக்களுக்காக போராடும் சமரசமற்ற போராளிகளை சிறையில் அடைப்பதற்கு UAPA வழக்குகள் மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் அரசால் திட்டமிட்டு ஏவப்படுகின்றன. இந்துத்துவா பாசிச அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள், அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கேள்வி எழுப்புபவர்கள், விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், விளிம்புநிலை மக்களின் மீது ஏவப்படும் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்பவர்கள், பார்ப்பனிய-பனியா தனியார் நிறுவனங்கள் சுரண்டலுக்கு எதிராக போராடுபவர்கள் என மக்கள் நல விரும்பிகள் மீது இந்த UAPA எனும் கருப்பு சட்டம் பாய்ச்சப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு மாதம், தூத்துக்குடியின் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணி சென்ற போது, காவல்துறையினாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் அரச அராஜகத்தை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தார். இதற்காக தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு, அவர் நாடு திரும்பும் போது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தோழர் திருமுருகன் காந்தி மீது UAPA வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சமீபத்திய பெகாசஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் தோழர் திருமுருகன் காந்தி தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்று தி வயர் ஊடகம் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த UAPA சட்டம் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத பொழுது பொய் காரணங்களைச் சொல்லி தடுத்து வைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே அரசினால் பயன்படுத்தப்படுகிறது. அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் போராளிகளை வலதுசாரி அமைப்புகள் மூலமாகவும் செய்தி ஊடகங்கள் மூலமாகவும் அவதூறுகள் பரப்பி மக்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி இத்தகைய சட்டங்களை பயன்படுத்தியவர்கள் குரல்வளையை நெறித்து விடலாம் என்று அரசு நினைக்கிறது.
பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே அவர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்படும் பொழுது ஒரு திறந்த மடலை இந்திய மக்களுக்காக எழுதியிருந்தார். ” நான் எப்பொழுது இந்த வழக்கிலிருந்து விடுபட்டு உங்களையெல்லாம் சந்தித்துப் பேசப் போகிறேன் என்று தெரியவில்லை, ஒன்றை மட்டும் கூறிக் கொள்வேன் உங்கள் மீது இந்த சட்டம் ஏவப்படுவதற்கு முன்பு பேசத் தொடங்குங்கள்” என்றார்.
இந்த சட்டம் கருப்பு சட்டம் என்று மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஜனநாயக விரோத இத்தகைய சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஸ்டேன் சாமியை போன்றே முடிவுகளுக்கு காத்திருக்கும் மக்களுக்கான போராளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம்முடையது.
ஆம், ஆனந்த் டெல்டும்டே எச்சரித்ததை கருத்தில் கொண்டு நம் மீது UAPA பாய்ச்சப்படுவதற்கு முன்பாக பேசத் தொடங்குவோம். பாசிசத்தை விரட்டி, ஜனநாயகம் காப்போம்.