விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை!

விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை!

மக்களின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு!

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என போற்றப்படும் இந்திய ஒன்றிய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மோடியின் பாஜக அரசு தொடர்ந்து தனியாருக்கு விற்பதன் மூலம் அந்நிறுவனங்களை பலவீனம் அடைய செய்கிறது. அதனுடன், அந்நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு கிடைத்து வந்த சேவைகளையும் பறித்து வருகின்றனர்.

தற்போது ஒன்றிய அரசின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாயை திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline) ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் சென்னை, வாரணாசி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்கள், 15 ரயில்வே விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மீது தனியார் நிறுவனங்கள் சில திட்டங்களில் முதலீடு செய்யலாம். கிடங்குகள், விளையாட்டு அரங்குகள் போன்றவற்றை நீண்ட கால குத்தகை அடிப்படையில் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணமாக்கல் திட்டம் 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

குத்தகைக்கு விடப்படும் அல்லது விற்கப்படும் பொது சொத்துக்கள்

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்பானி, அதானி போன்ற குஜராத்தி பனியா கார்ப்பரேட் நிறுவனங்களும், வேதாந்தா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் தான் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஏற்கனவே அரசின் பாதி சொத்துகளை தனியாரிடம் தாரை வார்த்து அவர்களுக்கு சலுகைகளை அளித்து, அவர்கள் மக்களை சுரண்டுவதற்கு வழி வகுத்த மோடி அரசு, தற்போது மீண்டும் இந்த திட்டத்தின் மூலம் சாலை வசதிகள், மின்சார வசதியை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்களை, அதிக கட்டணத்தைச் செலுத்தி பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளி உள்ளது.

பொருளாதார மந்தநிலை

கடந்த சில ஆண்டுகளில் உலகப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானம் ஈட்ட இயலாத நிலையில் 70 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். ஆனால் இவ்வளவையும் மீறி எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிதி நிறுவனங்கள் உலகிலேயே மிகவும் வலிமையாகவும், அதிக லாபம் ஈட்டக் கூடியவையாகவும் திகழ்வது சிறிது ஆறுதல் அளிக்கிறது.

ஆயினும், சுதந்திர இந்தியாவில் இதுவரை பொருளாதாரத்தில் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் ஏதும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக, தனியார் நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை தான் காங்கிரஸ், பாஜக என இரண்டு அரசுகளும் மாற்றி மாற்றி வழங்கி வந்தன.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் 1990-களில் தான் தொடங்கின. அப்போது புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அதன் பிறகு தனியார் துறைகளின் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் புதிய முதலீடுகள் எதுவுமின்றி அரசாலேயே புறக்கணிக்கப்பட்டன.

இதை நிருபிக்கும் வகையில பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 24ம் தேதி ‘தனியார்மயமாக்கல் ஏன் காலத்தின் கட்டாயம்’ என்பதற்கான விளக்கத்தை மிக நீண்ட உரையாக வழங்கினார். அதில் முக்கியமாக அவர் குறிப்பிட்டது ‘தொழில் செய்வது அரசின் வேலை இல்லை’ என்பது. அதாவது தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் அரசு ஈடுபடத் தேவையில்லை என்பதே அது. மோடியின் இந்தப் பேச்சின் பின்னணியை, நிர்மலா சீதாராமன் அறிவிப்பிற்கு பிறகு தற்போது புரிந்துகொள்ள முடியும்!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு இருக்கிறது. அதற்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் போன்ற சூழலை உருவாக்கி உள்ளது மோடி அரசு. இந்த திட்டத்தின் மூலம் லாபம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் இதை சாத்தியப்படுத்த பெரும் முனைப்புடன் செயல்பட்டு, தற்போது அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதை விடுத்து, இந்த கொரோனா பேரிடரிலும் அத்தியாவசிய பணி என்று கோடிகளை கொட்டி சென்ட்ரல் விஸ்டா என்ற புதிய நாடாளுமன்ற கட்டிடங்களை தங்குதடையின்றி கட்டுவது, மக்களின் வரிப் பணத்தை மோடி என்ற பிம்பத்தை கட்டமைக்கவும், தங்கள் கட்சியின் சித்தாந்தங்களை வளர்க்கவும், அதை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை பல கோடிகள் செலவு செய்து பெகாசஸ் போன்ற உளவு மென்பொருளை கொண்டு வேவு பார்த்தது போன்றவை பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு தள்ளி விட்டது.

இதை சரி செய்கிறேன் என்று கூறி குறைந்த அளவு செயல்பாட்டை உடைய பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதை விட்டுவிட்டு, அரசுக்கு அதிக லாபம் தரும் நிறுவனங்களை விற்க முடிவு செய்துள்ளதை பார்க்கும் போது, மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கு அம்பலமாகிறது.

உள்கட்டமைப்பை நிர்ணயிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்

பொதுவாக, ஒரு நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகினால்தான் அந்த நாடு வேகமான வளர்ச்சியை அடையும் என்பது நியதி. அதுவே அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இங்கும் அது போன்ற மிகப் பெரிய வளர்ச்சி காணவேண்டுமெனில், உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும். ஆனால் இங்கோ, ஏற்கனவே சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட, லாபம் தரும் நிறுவனங்களை சில கோடிக்கு தனியாரிடம் விற்பது என்பது மிகவும் ஆபத்தானது.

உள்கட்டமைப்பு வசதி இல்லாத, அதிகம் லாபம் தராத நிறுவங்களில் உள்கட்டமைப்பை உருவாக்குகிறோம் என்று பல கோடிகளை செலவழித்து உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கி தனியாரிடம் கையளிக்கும் செயலையும் மோடி அரசு மேற்கொள்கிறது. அதாவது தனியாரிடம் விற்க முடிவு செய்த பிறகு, அரசு செலவில் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அம்பானி, அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடம் வழங்குகிறது.

மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்த பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தேவைப்படும் என்பதால், இதற்கு தேவையான நிதியைத் திரட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கிறது. இது பொன் முட்டையிடும் வாத்தை பொன்னுக்கு ஆசைப்பட்டு கழுத்தை அறுத்து கொல்வதற்கு சமமாகும்.

2020-21 நிதியாண்டில் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று 2.1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆனால், அவர்களால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம். இந்த இலக்கை அடைய மோடி அரசு ஐ.டி.பி.ஐ வங்கி, பி.பி.சி.எல்., இந்தியன் ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாஞ்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அடைய தீர்மானித்திருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49%ல் இருந்து 74% ஆக உயர்த்த யோசனை கூறப்பட்டிருக்கிறது என்றும், எல்ஐசி பங்குகளையும் பங்குச் சந்தையில் இறக்க போவதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது தேசிய நெடுஞ்சாலை மற்றும் மின் பகிர்மானம் தொடர்பான பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று பணமாக்குவதன் மூலம் 6 லட்சம் கோடிய ரூபாயை மோடி அரசு திரட்டப்போவதாகத் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் பிரச்னை தீருமா?

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது மக்களின் குடும்ப சொத்துகளை விற்பனை செய்வதற்கு நிகரானது. மேலும் அது தேசநலனுக்கு எதிரானது.

தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதில் உள்ள சிக்கலை ஜியோ vs பிஎஸ்என்எல் ஒப்பீட்டின் மூலமே புரிந்து கொள்ளலாம். அரசு நிறுவனத்தை முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக உருவாக்க முயற்சிக்காமல், தனியார் நிறுவனமான ஜியோவுக்கு வாய்ப்பை வழங்கியதால் டெலிகாம் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் நம் எல்லோருக்குமே தெரியும். ஜியோ நிறுவனத்தின் போட்டி போட குறைந்த விலைக்கு டேட்டா வழங்கும் கட்டாயத்திற்கு பிற நிறுவனங்கள் ஆளாயின. ஜியோவின் போட்டியை எதிர்கொள்ளும் திறன் இல்லாமல், மற்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கின. சில நிறுவனங்கள் காணாமலே போயின. இப்போது டெலிகாம் துறையில் அம்பானியின் ஜியோ வைத்ததுதான் சட்டம்.

தனியாருக்குள் ஒற்றை ஆதிக்கம் (monopoly) என்பது இந்தியாவின் புதிய கார்பரேட் கலாச்சாராமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளை அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற மோடிக்கு நெருக்கமான பெருநிறுவனங்கள் பிரித்துக்கொண்டு, அந்தந்த துறைகளில் உள்ள சிறிய நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் வேலையில் ஈடுபடுகின்றன. ஆனால், மேற்சொன்ன பெருநிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொள்வதில்லை. இதற்கு மேலே சொன்ன ஜியோ தொலைத்தொடர்பு துறையில் ஏற்படுத்திய மாற்றங்களே சிறந்த உதாரணம்.

மேலும், தனியார் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களை ஒழித்துக் கட்டும் வேலையிலே தீவிரமாக இறங்கும் போது, பல நிறுவனங்கள் திவால் ஆகும். நிறுவனங்கள் திவால் ஆகும்போது அது நிதித் துறையில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். அதனால் வேலைவாய்ப்பு பாதிக்கும். அதை நம்பியிருந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

நாட்டில் அரசு மருத்துவமனைகள் பெருமளவில் இருக்கின்ற ஒரே காரணத்தினால் மட்டுமே இன்று நாம் இந்த கொரோனா பேரிடரை சிறிதளவேனும் சமாளிக்க முடிந்தது. ஒருவேளை அரசு மருத்துவமனைகள் ஒழிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகள் மட்டுமே வளர்த்தெடுக்கப் பட்டிருந்திருந்தால் எளிய மக்களின் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே நெஞ்சு பதறுகிறது.

தற்போது கொரோனா பேரிடர் தான் பொருளாதாரத்தை மோசமாக மாற்றியது என்று கூறி தப்பிக்க பார்க்கும் பாஜக கும்பலின் ஆட்சியில், அதற்கு முன்பும்கூட நிதிநிலை சரியாக இல்லாமல் பற்றாக்குறையோடு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாத பாசிச அரசு, மாநிலங்களுக்கு தரவேண்டிய வரிப் பணத்தையும் தராமல் வீண் செலவு செய்து பொருளாதாரத்தை சீரழித்து விட்டு, கொரோனா பேரிடர் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை இப்படி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் மட்டுமே திரட்ட முடியும் என்றும், வேறு வகையில் திரட்ட முடியாது என்றும் கூறுவது அவர்களின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைத்தால் தான் அவற்றின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும் என்றும், நிதிப் பற்றாக்குறையால் தடுமாறும் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்படும் தனியார் முதலீடுகள், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உறுதுணையாக இருக்கும் என்பது எல்லாம் அப்பட்டமான பித்தலாட்டம். இதற்கு சிறந்த சான்று லாலு பிரசாத் அவர்கள் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த போது, நட்டத்தில் இருந்த ரயில்வே துறை திறம்பட செயல்பட்டு இலாபத்தை ஈட்டியது.

அதுபோலவே, பாஜக அரசு ஆன்லைனில் ரயில் டிக்கெட் விற்பனை செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தைச் சந்தைப்படுத்தினால் அதிக லாபம் வரும் என்று கூறி சந்தைப்படுத்தியது. ஆனால், அந்த நிறுவனத்தின் பங்கு தற்போது வரை எந்த லாபத்தையும் ஈட்டவில்லை. மேலும் அதன் பங்குகள் மதிப்பு முன்பிருந்ததைவிட தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பொதுத்துறை நிறுவனப் பங்குகளை வாங்க தனியார் நிறுவனங்களுக்கு பல கோடிகளை கடனாக கொடுப்பதும், அதை கட்ட முடியாமல் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதும் அவர்கள் வாங்கிய அத்தனை கடன் தொகையையும் தள்ளுபடி செய்வது தான். பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும் இதே நாட்டில் தான் கல்விக் கடன், விவசாய கடனாக வாங்கிய சில ஆயிரம் ரூபாய்க்கு மக்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த நிலையிலும், கடந்த சுதந்திர தின விழாவில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க 100 லட்சம் கோடிகள் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தனியார்மயமாக்கல் என்று உறுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு, உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தனியாரிடமே செல்லப் போகிறது. அப்படியெனில் இந்த 100 லட்சம் கோடிகள் செலவினம் யாருக்கானது? மக்களின் வரிப்பணத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தனியார்கள் சம்பாதிப்பதற்கா?

GST மூலம் மாநிலங்களிடமிருந்து வரிவிதிப்பு உரிமை பறிக்கப்பட்ட பின்பு, மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் கிட்டதட்ட 20,000 கோடிகள் நிலுவையில் உள்ளதாக தமிழ்நாட்டு நிதியமைச்சர் தனது வெள்ளையறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் உரிமையை பறித்ததோடு, மாநிலங்களு சேர வேண்டிய பங்கையும் வழங்காமல், தனியாருக்காக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டிய அவசியமென்ன? இதனால் மக்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளாத? விலைவாசி குறைக்கப்பட்டுள்ளதா? குறைந்தபட்சம் பெட்ரோல், டீசல் விலையை கூட குறைக்க மோடி அரசு முன்வரவில்லையே.

ஒன்றிய அரசிற்கு என்று தனிப்பட்ட முறையில் நிலப்பரப்பு கிடையாது. மாநிலங்களின் நிலத்தையே தன்னுடைய திட்டங்களுக்கு பெற்றுக்கொள்கிறது. அப்படியென்றால், ஒன்றிய அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக மாநில அரசுகளிடம் தான் நிலத்தை ஒதுக்கீடு செய்ய கோரும். இவை எந்தவிதத்திலாவது அம்மாநில மக்களுக்கு பலனளிக்கப்போகிறதா? தனியாரின் கையாளிக்கப் போகின்ற திட்டங்களுக்கு மாநில அரசுகள் ஏன் நிலம் வழங்க வேண்டும்? இதில் மாநில அரசுகள் பங்கெடுப்பதையும் ஒன்றிய அரசு தடை செய்கிறது. இப்படியாக, இந்த கடுமையான கொரோனா நெருக்கடியில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு ஏற்று நடத்த ஒன்றிய அரசிடம் கோரியும், தனியார் நிறுவனம் எதுவும் முன்வராத நிலையிலும் இன்று வரை வழங்கவில்லை.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின்

மேலும், தனியார்மயம் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்கள் இடஓதுக்கீடு முழுமையாக தடுக்கும் வேலையை மோடி அரசு செய்கிறது. தனியார் நிறுவனங்களில் இடஓதுக்கீடு இல்லாத நிலையில், அரசு நிறுவனங்களை தனியாரமயமாக்கும் திட்டமே இவை அனைத்தும். இதனால் தனது உயர் சாதி பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என்ற தனது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ்-பாஜக நிறுவ முயலுக்கிறது. இத்திட்டங்கள் அனைத்துமே சமூகநீதிக்கு எதிரானது.

அரசின் சொத்துக்கள் என்பது மக்களின் சொத்துக்கள். மக்களின் சொத்தை தனியாருக்கு விற்பதோடு, அதனால் மக்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு மோடி அரசு தள்ளுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை பெருக்கி, தனியார்மயத்தை ஒழிக்கும் அரசே மக்களுக்கான அரசாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »