
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் திட்டத்தை உருவாக்கிய பாஜக, தற்போது தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பீகாரில் பல கோடி பேரின் வாக்குரிமையைப் பறித்திருக்கிறது. குறிப்பாக ஏழை எளிய மக்களை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை, இடைநிலை சமூக மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, பாஜவிற்கு ஆதரவான உயர் சாதியினரின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது ஒன்றிய பாஜக அரசு.
பீகாரில் தற்போது சுமார் 7.9 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜூன் 24ஆம் தேதிக்கு முன்வரை வாக்காளர் பட்டியலில் சேர ஆதார் போன்ற ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறைதான் அங்கு கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் திடீரென எந்த முன்னறிவுறுத்தலும் இல்லாமல், ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் Special Intensive Revision (SIR) எனப்படும் ‘சிறப்பு தீவிர மறுசீரமைப்பு’ முறையை அமல்படுத்தியது.
இந்த ‘மறுசீரமைப்பின்’ கீழ், தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது:
- 2003 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தாங்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட சான்றிதழை வழங்க வேண்டும்
- 2003 தேர்தலின் பட்டியலில் இல்லாத நாற்பது வயதைத் தாண்டிய வாக்காளர்கள் தங்கள் அடையாளம் மற்றும் வசிப்பிடத்தின் ஆவணங்களை வழங்க வேண்டும்,
- இப்போது 21ல் இருந்து 40 வயதுக்குள் உள்ள வாக்காளர்கள், 2003 தேர்தல் அட்டையில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட அவரது பெற்றோர்களின் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் அல்லது அவர்களின் பெற்றோர்களின் (தாய்+தந்தை இருவரின்) குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று பல்வேறு சிக்கலான நடைமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
குறிப்பாக வாக்காளர்களின் அடையாளத்திற்காக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் அட்டை போன்றவற்றை அடையாள பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலென அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. (உச்ச நீதிமன்றம் அறிவுறித்தியப்பின் ஆதார் அட்டையை பீகாரின் சில இடங்களில் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார்கள். ஆனால் இன்னும் பல இடங்களில் இது தொடர்பான குழப்பம் நீடிக்கிறது.)
ஆதார் அட்டையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியபோது இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி இருந்தது. அனைத்து மானியங்களுக்கும் அரசு உதவிகளுக்கும் ஆதார் தேவை என்ற நிலையையும் கொண்டு வந்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று இ-சேவை மையங்களில் தங்கள் கருவிழி, கைரேகை விவரங்களைப் பதிந்து ஆதாரைப் பெற்றுக் கொண்டனர். செல்லும் இடமெங்கிலும் அடையாளத்திற்காக ஆதார் அட்டையை கையில் வைத்து கொண்டு அலைந்தனர். வாக்கு செலுத்துவதற்கு, வங்கி கணக்கு தொடங்குவதற்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற எந்த வகையான அரசு சேவைகளாக இருந்தாலும் அவற்றை பெற ஆதார் அவசியமாக்கப்பட்டது. ஆனால் அதே ஆதார் அட்டையை பீகாரில் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

பீகாரில் கடந்த ஆண்டின் ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, ‘Special Summary Revision 2025’ என்று அழைக்கப்படும் தேர்தல் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் அங்கு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஏன் வாக்காளர் பட்டியல் மறுசீரமைக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு, பாஜகவின் கைப்பாவையாக மொத்த தேர்தல் அமைப்பும் மாறியதுதான் பதிலாக கிடைக்கிறது.
2002-2003இல் இதே போன்றதொரு ‘வாக்காளர் மறுசீரமைப்பை’ செய்யும்போது பனிரெண்டு மாதங்கள் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம் இந்த முறை ஒருமாதத்திலேயே பட்டியலைத் திருத்துவதாகத் தெரிவித்திருக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், ஆணையம் கேட்கும் ஆவணங்களைக் கொடுப்பதென்பது வாக்காளர்களுக்கு இயலாத காரியம். குறிப்பாக ஏழை எளிய மக்கள் 22 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களைத் தேடி எடுத்து சமர்ப்பிப்பது அவர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். மேலும் 2011ஆம் சமூக-பொருளியல் ஆய்வுகளின்படி, பீகாரின் 65.58% குடும்பங்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவை. இங்கு வசிப்பவர்கள் ஆதார் தவிர நிலம் சார்ந்த ஆவணங்களையே தங்கள் குடியுரிமை ஆவணங்களாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஒரு மாதத்திற்குள் அந்த ஆவணங்களை சமர்பிப்பதும் இயலாதென்பதால் தங்கள் வாக்குரிமையை இழக்கக் கூடும். இதே நிலைதான் வாடகை வீட்டில் வசிப்போருக்கும்.

இவ்வாறு கிராமப்புறங்களில் வாழும் மக்களை, பாஜகவிற்கு ஆதரவளிக்காமல் மாநில கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவளிக்கும் எளிய மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் திட்டமே தற்போது ‘வாக்காளர் மறுசீரமைப்பு’ மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இதனால் 2003 வாக்காளர் பட்டியலில் இல்லாத 3 கோடி பேருக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. (தற்போதுவரை 35.5 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்திருக்கிறது.)
இப்படி ஒரு மாநிலத்தில் பல கோடி பேரின் வாக்குரிமையைப் பறிப்பதனால் பலனடையக்கூடிய கட்சி பாஜக மட்டுமே. ஒரு மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வென்ற பின், அந்த கட்சியையே உடைக்கும் வேலையைத்தான் பாஜக செய்து வருகிறது. மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தவர் நிதிஷ் குமார். பீகாரில் நிதிஷ் குமாரின் ஜனதா தளமும் ஆந்திராவில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியும் மத்தியில் ஆட்சியமைக்க பாஜகவிற்கு ஆதரவளித்தனர். ஆனால் இனி மாநிலக் கட்சிகளின் தயவை எதிர்பார்க்கும் நிலை பாஜகவிற்கு வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது பாஜக. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பீகாரைக் கைப்பற்றத் துடிக்கும் பாஜக, தனக்கான வாக்கு வங்கியை மட்டும் பாதுகாத்து, மாநிலக் கட்சிகளின் வாக்கு வங்கியை குறைப்பதற்கே இந்த ‘வாக்காளர் மறுசீரமைப்பை’ கையில் எடுத்திருக்கிறது.
இதே போன்றதொரு வழிமுறையைத்தான் மஹாராஷ்டிரா மாநிலத்திலும் பின்பற்றியது பாஜக. கடந்த தேர்தலில் அங்கு ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 10,000 வாக்காளர்கள் பெயர் தன்னிச்சையாக நீக்கப்பட்டதும், சந்தேகத்திற்கிடமான 47 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இப்போது பீகாரிலும் இதே வழியைப் பின்பற்றுகிறது பாஜக.
ஒன்றியத்தில் பாஜக முதல்முறை பதவியேற்றத்தில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
(விரிவாக வாசிக்க:https://may17kural.com/wp/did-modi-win-because-the-mistakes-made-by-election-commission/ )
அடுத்த ஆண்டிற்குள் மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆசாம், கேரளா எனப் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மாநிலக் கட்சிகளை சிதைப்பது, அவர்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவது என பல முறையற்ற வழிகளைக் கையாண்டு வருகிறது பாஜக. இதே வழியை தமிழ்நாட்டிலும் பாஜக கையாள்வதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் பரப்புரை உணர்த்துகிறது. அடுத்த ஆண்டு தேர்தலுக்குப்பின் அதிமுக எனும் மாநிலக் கட்சி காணாமல் போவதற்கான அனைத்து வேலைகளையும் தற்போதிருந்தே செய்கிறது பாஜக.
பீகாரின் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் ரீதியாக அம்மாநிலத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தேர்தல் ஆணையத்தை கருதுகோளாகப் பயன்படுத்தி, மக்கள் கடுமையாக எதிர்த்த NRC-ஐ (National Register of Citizens) பின்வழியாக கொண்டுவர முயற்சிக்கிறது பாஜக. குறிப்பாக சிறுபான்மையினர் வசிக்கும் கிராமங்களில் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. (இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு தேர்தலில் வாக்களித்தவர்கள்) சான்றாக புர்னியா மாவட்டத்தில் 400 இசுலாமியர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த NRC பட்டியல் அசாம் மாநிலத்தில் செயல்பாட்டிலிருந்தபோது, சுமார் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. அவ்வாறு விடுபட்ட பெயர்களில் மூன்றில் ஒருவர் பெண்கள். மேலும் சிறுபான்மையினர், ஏழைகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுப்பாலின மக்களின் குடியுரிமையைப் பறிக்க NRC கொண்டு வந்த பாஜகதான், பீகாரில் வேறு பெயரில் இதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பீகாரில் சர்ச்சைக்குரிய வகையில் வாக்காளர் பட்டியலைத் திருத்திக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போதும் அதை கண்டுகொள்ளாமல் அனைத்து மாநிலங்களிலும் இதே நடைமுறையை செயல்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. பீகாரின் வாக்காளர் திருத்த நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் உச்ச நீதிமன்றம் (கடந்த ஜூலை 10 அன்று) இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டது. ஆனால் ஆதார் போன்ற முக்கியமான அடையாள அட்டைகளை ஒப்புக்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறது. இவ்வாறு முக்கிய ஆவணங்களை மறுத்தால், பெரும்பாலான marginalised (சாதாரண எளிய மக்கள்) உரிமைகளை இழக்கும் ஆபத்தில் உள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைவதற்கு முன்னர் அனைவருக்கும் வாக்குரிமை இருந்ததில்லை. உயர்சாதியினர், நிலம்/சொத்து வைத்திருப்போர் என மிகச் சிலருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. பல போராட்டங்களுக்குப் பின் படிப்படியாகத்தான் பிற சாதியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது. ஆனால் இன்று பாஜகவோ கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் வாக்குரிமையைப் பறித்து மீண்டும் 1947க்கு முந்தைய காலகட்டத்திற்கு நம்மைத் தள்ளிக்கொண்டிருக்கிறது.