கொரானா தடுப்பூசி தொழில்நுட்பத்தை ஏழை நாடுகளுடன் பகிர்வதை எதிர்க்கும் பில் கேட்ஸ்!
உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான நோய்த்தொற்றை தற்போது சந்தித்து வருகிறது. கொரானா பாதிப்பின் உச்சத்தை மேற்குலக நாடுகள் எதிர்கொண்டு மீண்டெழும் வேளையில் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்றிற்கான மருந்துகள், தடுப்பூசிகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்யும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் காப்புரிமைகளை நீக்குவதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றை முடிவுக்கு கொண்டுவர முடியுமென சர்வதேச மட்டத்தில் குரல் எழுகிறது. ஆனால், தடுப்பூசி காப்புரிமைகளை நீக்குவது மற்றும் தடுப்பூசி தொழில்நுட்பங்களை பகிர்வதை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடுமையாக எதிர்க்கிறார். உலகம் முழுவதும் பெருந்தொற்றால் மக்கள் மாண்டு விழும் சூழலிலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ் மனம் இறங்கவில்லை. இந்த பிடிவாதத்தின் பின்னணியை ஆராய்ந்தால், தடுப்பூசிக்கு பின்னால் இருக்கும் வணிக நோக்கத்தையும், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் மனநிலையையும் நம்மால் உணர முடியும்.
கணினி மென்பொருள் துறையில் புரட்சி செய்த மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவன தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி. பணி ஓய்விற்கு பிறகு தன் மனைவியுடன் இணைந்து “பில் & மெலின்டா கேட்ஸ் பவுண்டேசன்” (Bill & Melinda Gates Foundation) என்ற சமூக தொண்டு நிறுவனத்தை அமைத்தார். உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனமான இது, தெற்காசியா, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா போன்ற பிராந்தியங்களில் உள்ள பின்தங்கிய, வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பதையும், மக்களின் உடல்நலன் பேணலை ஊக்குவிப்பதையும் முதன்மைப்பணியாக செய்து வருகிறது. அந்த வகையில் கொடும் நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதிலும், அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதிலும் பல லட்சம் கோடிகளை நிதியுதவி செய்து வருகிறது. இன்று, கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு நிதி வழங்குவதில் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது.
இப்படியான ஒரு நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் ஏறக்குறைய அனைத்து தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிலும் பங்குதாரராக உள்ளார். நோய் தடுப்பூசி ஆராய்ச்சி முதல் உற்பத்தி வரை பெரும் முதலீட்டை குவிதுள்ள கேட்ஸ் தடுப்பூசி குறித்து பேசும் வார்த்தைகள் மிக முக்கியமானதாக கருதப்படும். இந்தியா போன்ற வளரும் நாடுகள் சந்தித்து வரும் கடுமையான நெருக்கடியை சமாளிக்க தடுப்பூசிகள் மீதான காப்புரிமை விலக்களிக்க வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள் உலக வர்த்தகக் கழகத்தை மன்றாடி வந்தனர். ஆனால், தடுப்பூசி மீதான காப்புரிமையை விலக்குவதற்கும், தடுப்பூசி தொழில்நுட்ப அறிவை பகிர்ந்துகொள்வதற்கும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் (Oxford-AstraZeneca) கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசி, இந்தியாவின் பூனாவை சேர்ந்த சீரம் (Serum Institute of India) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்கு சீரம் நிறுவனத்திற்கு 10 கோடி தடுப்பூசிகள் தயாரித்து கொடுக்க பில் கேட்ஸ் நிறுவனம் $150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்து, மேலும் 10 கோடி தடுப்பூசிகள் கொடுக்க இரண்டாம் முறையாக $150 மில்லியன் டாலர்கள் என மொத்தமாக $300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஒரு வேளை இந்திய அரசு அனுமதி அளிக்காவிட்டால் ஏற்படும் நட்டத்தையும் பகிர்ந்துகொள்வதாக உறுதியளித்தது. போதாதற்கு, மோடி அரசு ரூ.3000 கோடி நிதியுதவி அளித்து தடுப்பூசி தயாரிக்க அனுமதியளித்தது. கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியினை பயன்படுத்தி மீண்டெழுந்துவிட்டன. ஆனால், கொரோனா இரண்டாம் அலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் பரவத்துவங்கியுள்ளது.
உருமாறிய கொரோனா இரண்டாம் அலையை பெருத்த உயிர் சேதமில்லாமல் கடந்து வருவதற்கு கட்டுபாடுகளை விலக்கி தடுப்பூசி தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளிலும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் காப்புரிமையை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் பல அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. உலக வர்த்தக கழகத்தின் (WTO) கோவிட்-19 தொடர்பான அறிவுசார் சொத்து பாதுகாப்பு விதிகளில் வலுவான உடனடி மாற்றங்களை உருவாக்க வேண்டும் என செயற்பட்டார்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். WTO-வின் வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகளை (Trade Related Intellectual Property Rights (TRIPS)) அதன் உறுப்பு நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்த “TRIPS” விதிகள், தடுப்பூசி மற்றும் மருந்துகளின் காப்புரிமையை பாதுகாக்கின்றன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த TRIPS விதிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க கோரியிருந்தன. நான்கில் முக்கால்வாசி உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே TRIPS விதிகளை நிறுத்தி வைக்க முடியும். இதையே, உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom), TRIPS விதிகளை நிறுத்தி வைப்பது நோய்த்தொற்றுக்கு எதிராக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்ல வாய்ப்பை உருவாக்கும் என்று கூறி இருந்தார்.
இந்த சூழலில் தான், இங்கிலாந்தின் ஸ்கை நியூஸ் எனும் ஊடகத்திற்கு அவர் பேட்டி அளிக்கும் போது, “…[கொரொனோ தொற்றினை தடுக்கும்] தடுப்பூசி தயாரிக்கும் விவரங்களை பகிர்வது பயனுடையதாக அமையுமா?…” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ” … [அவ்வாறு பகிர்வது] உதவாது..” என்கிறார். தடுப்பூசி தகவல்களை பகிர்வது, “ஏன் பயன்படாது என நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது அவரளித்த பதில் அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது. அதில் அவர், ‘… ஏனெனில், உலகில் குறிப்பிட்ட அளவான [தரமான] தடுப்பூசி தயாரிப்பு ஆலைகள் மட்டுமே உள்ளன. தரத்தை குறித்து அனைவரும் மிகக்கவனமாக இருக்கிறார்கள். எனவே இதுவரை தயாரிக்கப்படாத ஒன்றை இந்தியாவில் இருக்கும் ஆலைகளுக்கு [மேற்கில் உள்ள] ஜான்சன் நிறுவனத்திலிருந்து மாற்றுவது புதுமையான யோசனையாகத்தான் இருக்கும். ஆனால் இதை சாத்தியப்படுத்தியது நமது நிதி உதவியும், துறை சார்ந்த அறிவும் மட்டுமே.’ என பதிலளிக்கிறார்.
உலக அளவில் தடுப்பூசியை கொண்டு செல்வது பற்றி அவர் மேலும் பேசுகையில், “… [தடுப்பூசியை உலகெங்கும் கொண்டு செல்வதில்] தயக்கம் இருப்பதற்கு காரணம் காப்புரிமையல்ல. மாறாக, [வளரும் நாடுகளில்] அங்குள்ள ஆலைகள் இந்த மருந்தை தயாரிப்பதற்கான போதுமான தரத்தை கொண்டிருக்கவில்லை.” என்பதைத் தான் குறிபிடுவதாக தெரிவித்தார். அவர் இவ்வாறான தரமற்ற தயாரிப்பு ஆலை எனச் சொல்வது இந்தியாவிலேயே மிகப்பெரிய தடுப்பூசி ஆலையான சீரம் தடுப்பூசி ஆலையை தான்.
இந்த விவாதத்தில் அவர் வைத்த வாதத்தின் சாரம்சமானது என்னவெனில், இரண்டாம்-மூன்றாம் உலக நாடுகளோடு தடுப்பூசி தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது அர்த்தமற்றது. ஏனெனில் அவர்களால் தரமான தடுப்பூசிகளை மேற்குலகம் போல உற்பத்தி செய்ய இயலாது. எனவே தடுப்பூசி சூத்திரங்களை பகிராமல், மேற்கிலிருந்து தடுப்பூசி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிறார். அதாவது இந்த வளரும், ஏழை நாடுகள் தடுப்பூசியை மேற்குலக நாடுகளிடமிருந்து தான் பெற்றுக்கொள்ள வேண்டுமே ஒழிய தாமாக சூத்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யக்கூடாது என்று கூறுகிறார். அதாவது மறைமுகமாக தடுப்பூசிக்கான காப்புரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. அதை இலவசமாகவோ, மலிவான விலைக்கோ வழங்கிடக்கூடாது. ஆகையால், தடுப்பூசி உற்பத்தியை மேற்குலகமே செய்ய வேண்டும் என்கிற அவரின் எண்ணம் அம்பலமானது.
மேற்குலகில் தயாரித்தால் காப்புரிமைக்கான தொகையை எளிதில் வசூல் செய்துவிடமுடியும் என்பதால் இவ்வாறான பிரச்சாரம் செய்கிறார். உலகில் அறிவுசார் சொத்துக்கான காப்புரிமை வைத்து மட்டுமே அதிக பணம் சேர்த்த உலகின் மிகப்பெரும் பணக்காரர் பில் கேட்ஸ். அவர் மென்பொருட்களுக்கான (சாப்ட்வேர்) காப்புரிமைகளை மட்டுமே பெறவில்லை, நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு துறையிலும் அதிக காப்புரிமைகளை பெற்றவர் ஆவார். ஆகவே, இந்த கொரொனோ பேரிடரையும் பயன்படுத்தி தனது தடுப்பூசி காப்புரிமைகள் மூலம் பெரும் லாபம் ஈட்ட துடிக்கிறார்.
தடுப்பூசி காப்புரிமைகளை நீக்குவது குறித்து WTO-வின் முக்கியமான கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் பில் கேட்ஸ் கூறிய கருத்துக்கள் மலிவான தடுப்பூசி கேட்டு போராடி வருபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்வதேச கூட்டமைப்பின் “Global Justice Now” குழு இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிதுள்ளது. அதேபோல், கார்டியன் பத்திரிக்கையில் மிக விரிவான கட்டுரையை ஸ்டீபன் புர்யானி (Stephen Buryani) எழுதியுள்ளார். அவர், அந்த கட்டுரையில் பில் கேட்சின் நோக்கத்தை விளக்கி அவரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசிகளை அதிகளவில் பெற்றதற்கும், அங்குள்ள பெரும்பான்மை மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கும் காரணம் அந்த நாடுகள் தான் முதலில் தீவிரமாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்பதால் தான், என்று பில் கேட்ஸ் அந்த நேர்காணலில் விளக்கம் கொடுத்திருந்தார். அதாவது, தற்போது மூன்றாம் உலக நாடுகள் தடுப்பூசி பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், மேற்குலக நாடுகளில் ஏன் எழவில்லை என்பதை சமாளிக்கும் விதமாக அவ்வாறு கூறுகிறார். அதேவேளை, தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தடுப்பூசியை பெரும் என்று கூறுவதன் மூலம், தடுப்பூசியின் முதன்மை பயனாளிகளாக மேற்குலக நாடுகள் இருக்கும் என்பதையே உணர்த்துகிறார். இது, ஒருவேளை இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேற்குலகை போன்ற நோய்தொற்று தீவிரமாக பரவ கேட்ஸ் காத்திருக்கிறாரோ என்ற ஐயத்தையே நமக்கு எழுப்புகிறது.
மேற்குலக நாடுகள் உதவி செய்யும் என்று பில் கேட்ஸ் கூறினாலும், TRIPS விதிகளில் இருந்து விலக்களிப்பதற்கு அந்த நாடுகளே தடையாக நிற்கின்றன. இப்படியாக கொரானா நோய்த்தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தடுப்பூசி தொழில்நுட்பத்தை அடைவதற்கு தடையாக பில் கேட்ஸ் உள்ளார். இதற்கு பின்னணியில் பில் கேட்ஸ் நிறுவனத்தின் லாப சுயநலமும், அதிகாரமிக்க சுரண்டல் மனநிலையுமே அமைந்துள்ளன. பில் கேட்ஸ் நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொண்டால் இது புரியும்.
செபி (CEPI – Coalition for Epidemic Preparedness Innovations) எனப்படும் தடுப்பூசி தயாரிப்பு கூட்டமைப்பு குவி (GuVi) என்னும் நிறுவனத்தின் தலைமையில் இயங்குகிறது. இந்த குவி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பில் கேட்ஸ் உள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி திட்டத்திற்கு செபி $384 மில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளது. பில் கேட்ஸ் பல நூறு மில்லியன் டாலர்களை நேரடியாகவும் அளித்து வந்தார், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசியை கண்டுபிடித்ததும், அதனை அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைத்தது பில் கேட்ஸ் ஆவார். ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்று லாபம் இல்லாமல் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் தனிப்பட்ட உரிமங்கள் கொடுக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை. மேலும், காலங்காலமாக லாபம் கொழுக்கும் காப்புரிமை கட்டணத்தை விட்டுக்கொடுத்தால் தடுப்பூசி நிறுவனங்களின் வணிகத்தில் பாதிப்பை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், பில் கேட்ஸ் நிறுவனத்தின் முதலீடுகளும் தடைபடக்கூடும் என்று கருதின.
கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி பில் கேட்ஸ் மேற்கொள்ளும் சில அபாயகரமான தடுப்பூசி தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் குறித்து ஏற்கனவே மே பதினேழு இயக்கக் குரலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் mRNA உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரபணு சார்ந்த புதிய தடுப்பூசியை கண்டுபிடிக்கும் திட்டத்தில் பில் கேட்ஸ் $100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளார். தனது $250 பில்லியன் டாலர் முதலீட்டு நிதியில் இருந்து $2.5 பில்லியன் டாலர் நிதியினை பில் கேட்ஸ் நிறுவனம் ரெமிடிசிவர் (Remdesivir) மற்றும் கோவிட்-19 தொற்றுக்கான மருத்துவ ஆராய்ச்சி திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாக, இந்த கொரோனா காலத்திலும் பில் கேட்சின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் $10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை கணித்துள்ளது.
மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் மூலம் பல லட்சம் கோடிகளை சம்பாதித்து நெடுங்காலமாக உலகின் முதன்மை பணக்காரராக இருந்த பில் கேட்ஸ் ஓய்வு பெற்று சென்றார். ஆனால், இன்று தடுப்பூசி தொழில்நுட்ப ஆராய்ச்சி மூலம் மேலும் பல லட்சம் கோடிகளை குவித்து வருகிறார்.
தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் உலகிற்கு உதவுவதாக தொடங்கிய பில் கேட்ஸ் தற்போது தடுப்பூசி தொழில்நுட்பங்களை மேற்குலக நாடுகள் கட்டுபடுத்துவதையும், மூன்றாம் உலக நாடுகள் மேற்குலக நாடுகளின் தயவில் வாழ வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறார். அமெரிக்க அதிகார மையத்தில் பலம்பொருந்திய நபராக தான் வலம் வருவதை கொண்டு இதை நிறுவுகிறார். நோய்த்தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் வேளையில், உலகமே அதனை தடுக்க மன்றாடி வரும் நிலையில், தங்களது ஏகாதிபத்திய அதிகாரம் மற்றும் பொருளாதார நலனை பாதுகாக்க பில் கேட்ஸ் உதவ மறுப்பது என்பது ஒரு இனப்படுகொலையில் ஈடுபடுவதற்கு ஒப்பாகும்.