அண்ணல் அம்பேத்கரின் தொழிலாளர் சட்டங்களை சிதைத்த பாஜக

“என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டின் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய இரண்டு எதிரிகள் – பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம்” – அண்ணல் அம்பேத்கர் பிப்ரவரி 13, 1938 அன்று மராத்திய மாநிலத்தில் ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையில் கூறிய வார்த்தைகள் இவை.

இந்திய அரசியலமைப்பின் சட்டங்களை உருவாக்கிய தலைமை சிற்பியாக, சட்ட அமைச்சராக, வழக்கறிஞராக என பன்முக துறைகளிலும் மிளிர்ந்த அண்ணல் அம்பேத்கர் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முன்னோடியாய் இருக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதும் அரசியலமைப்பு பணியும் அண்ணலுக்கு முக்கியமானதாக இருந்ததைப் போலவே தொழிலாளர் நலனும் அவருக்கு முக்கியமானதாக இருந்தது.

வரலாற்றில் இரண்டாம் உலகப் போர் இந்திய பொருளாதாரத்தைப் பாதித்துக் கொண்டிருந்த முக்கியமான நேரத்தில், அண்ணல் அம்பேத்கரின் கீழ் தொழிலாளர் அமைச்சகம் வந்தது. தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்த அண்ணல் அம்பேத்கர் 1942 முதல் 1946 வரை வைஸ்ராயின் (ஆங்கிலேய ஆளுநரின்) நிர்வாகக் குழுவில் தொழிலாளர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் தொழிலாளர் கொள்கைகளை வடிவமைப்பதில் அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது.

1942ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டின் 4வது அமர்வில் ‘ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை முறை’யை அறிவித்தார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், மேலும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்கள் முறையை அறிவித்தார். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக 1942இல் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1944இல் ஊதிய வழங்கல் திருத்த மசோதா, விடுப்பு சலுகை, கூடுதல் நேரத்திற்கான கூடுதல் ஊதியம் போன்றவை அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்தவையாகும். தொழிலாளர்களின் உடல் மற்றும் உளவியல் நலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்’ போன்ற சட்டங்களை கொண்டு வந்தார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தொழிலாளர் அமைச்சராகப் பணியாற்றிய போது பெண்களுக்காக மகப்பேறு சலுகை மசோதாவை (1928) அறிமுகப்படுத்தியது பெண் தொழிலாளர்கள் பணித்தரத்தை மட்டுமல்ல, வாழ்க்கைதரத்தையும் உயர்த்தியது.1943ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க மசோதாவை உருவாக்கியது தொழிலாளர் சங்கங்களின் அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது.

இவ்வாறு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக கொண்டு வந்த சட்டங்கள் ஏராளம். ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற நூலில் “சாதி என்பது உழைப்பில் உள்ள பிரிவு அல்ல, மாறாக உழைப்பாளர்களில் உள்ள பிரிவு” என்று கூறி இருக்கின்றார். தொழிலாளர் நலன் போற்றவே ஆகஸ்ட் 1936இல், ‘சுதந்திர தொழிலாளர் கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியை நிறுவினார். நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கும் கட்சியாக அந்தக் கட்சி செயல்பட்டது. (போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, சுதந்திர தொழிலாளர் கட்சியின் பதினேழு வேட்பாளர்களில் பதினைந்து பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது).

தொழிலாளர் வர்க்கத்தில் சாதிப் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர், ஒடுக்கப்பட்ட வர்க்கம் விடுதலை பெறாவிட்டால் தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்த முடியாது என்பதை உணர்த்தினார். 1940களில் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அண்ணல் அம்பேத்கரின் சுதந்திர தொழிலாளர் கட்சி 1942இல் அகில இந்திய பட்டியல் மக்களின் கூட்டமைப்பு உருவாவதற்கு வழிவகுத்தது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போதும் அடிப்படை உரிமைகளை வரையறை செய்யும் போதும் தொழிலாளர் இன்னல்களை நீக்குவதில் முனைப்பாய் இருந்தார். 1937ஆம் ஆண்டு பம்பாயில் காங்கிரஸ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தொழிலாளர்கள் சிவில் உரிமைகள் இடைநீக்கச் சட்டம்’ வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்ததால் அதைக் கடுமையாக எதிர்த்தார். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக தொழிலாளர்களைத் தண்டிப்பது “தொழிலாளியை அடிமையாக்குவதற்கு நிகரானது” என்று அண்ணல் அம்பேத்கர் வாதிட்டார்.

தொழிலாளர்துறை அமைச்சராக அம்பேத்கர் அவர்கள் இருந்தபோது தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பணிசூழல் குறித்து விசாரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத்தில் பல நிலக்கரி சுரங்கங்களுக்கு நேரடியாக சென்று அவர் பார்வையிட்டதும், 400 அடி ஆழமுள்ள சுரங்கத்திற்குள் இறங்கி பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை அவர் உறுதி செய்ததும் வரலாறு.

தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான உரிமையை சட்ட ரீதியாக வழங்கியதோடு தொழிற்சங்கத் தொழிலாளர்கள் அரசியல் ரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். “தொழிற்சங்கங்கள் அரசியலில் நுழைய வேண்டும், ஏனெனில் அரசியல் அதிகாரம் இல்லாமல் அவை தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க முடியாது” என்று கூறினார் அண்ணல்.

‘தொழிற்சங்கங்களின் நோக்கம்: கூலி அடிமைத்தனத்தை ஒழித்து, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காகப் போராடுவதாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டம் சாதியற்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ என்பதே அண்ணல் வகுத்த தொழிற்சங்க சட்டத்தின் நோக்கமாக இருந்தது.

இதுவரை இந்தியாவில் பின்பற்றப்பட்ட பெரும்பாலான தொழிலாளர் திட்டங்கள், அண்ணல் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையில் உதித்தவையே. ஆனால் அண்ணல் கொண்டு வந்த 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகளாக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தியிருக்கின்றது மோடி அரசு. கடந்த 2020இல் இந்த புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பாஜக அரசு, அண்மையில் பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. பாஜக ஒவ்வொரு முறை தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கும் போதெல்லாம் இவ்வாறு புது சட்டங்களை அறிமுகப்படுத்தி தனது வெற்றியைக் கொண்டாடுகிறது. பாஜகவின் பீகார் வெற்றிக்கு இந்தமுறை தொழிலாளர்கள் பலியாகி இருக்கின்றனர்.

மேலும் கடுமையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கின்றது மோடி அரசு.

இந்த புதிய சட்டங்கள் மூலம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது எளிதாகியிருக்கின்றது. மேலும் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக போராடும் உரிமையும் நசுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் இனி நிறுவனங்கள் அரசு அனுமதி இல்லாமல் நினைத்த நேரத்தில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் சூழல் உருவாகும்.

ஏற்கனவே பணிநிரந்தரமின்மை, ஒப்பந்த முறை என துன்பப்படும் தொழிலாளர்கள் நிலை மேலும் சீரழியக்கூடும். 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் நீட்டிப்பது, ஊதியம் தவிர ’மிகுதி நேரப்பணி (ஓவர் டைம்), ஊக்க ஊதியம் (போனஸ்)’ போன்ற உரிமைகளை பெறுவதில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ESI சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது என்று மோடி அரசு கொண்டு வந்திருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவகம் செய்யும் நோக்கத்திலேயே என்பது புலனாகிறது.

மேலும் தொழிற்சங்கப் பதிவில் கடும் நிபந்தனைகளை விதிப்பது, தொழிலாளர் நீதிமன்றங்களை ஒழிப்பது, தொழிற்சங்க அங்கீகாரத்தில் குளறுபடிகள் விளைவிப்பது போன்ற சட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் தொழிற்சங்கங்கள் உருவாவதையே தடுக்கிறது மோடி அரசு. தொழிற்சங்கம் மூலமாக தொழிலாளர் உரிமைகளை வலுப்படுத்துவதற்காக அண்ணல் அம்பேத்கர் செய்த பங்களிப்புகள் அனைத்தையும் அநீதியான சட்டத்தின் மூலம் நீர்த்துப் போகச் செய்திருக்கிறது பாஜக அரசு.

ஏற்கனவே தொழிலாளர் திட்டங்களில் செலவினத்தைக் குறைக்கிறோம் என்ற பெயரில் மானியங்களைக் குறைத்து வந்தது ஒன்றிய பாஜக அரசு. தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் மூலம் அண்ணல் அம்பேத்கர் அமைத்த ‘தொழிலாளர் பாதுகாப்பு’ எனும் அரணை உடைக்க முயல்கிறது.

இந்தியாவில் நவீன தொழிலாளர் உரிமைகளுக்கான அடித்தளத்தை அமைத்தார் அண்ணல் அம்பேத்கர். பாஜக அரசோ அந்த உரிமைகளைப் பறித்துக்கொண்டு ‘மதவெறி’ எனும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கின்றது.

அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை என்றும் தொழிலாளர்கள் உரிமை என்றும் பிரித்துப் பார்க்கவில்லை. இந்தியாவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் தான் இட ஒதுக்கீடை பற்றி கூறும் பொழுது கூட “இட ஒதுக்கீடு தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் பயனளிக்க கூடியது” என்று கூறினார். ஒடுக்கப்படுபவர்கள் அது சாதி ரீதியாக இருந்தாலும் சரி, பொருளாதார ரீதியாக இருந்தாலும் சரி அனைவரும் மேலெழுந்து வர வேண்டும் என்பதற்காகவே வாழ்நாள் முழுவதும் சிந்தித்துப் போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாளில் சாதி வெறியை சாய்த்து, மத வெறியை மாய்த்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பேணுவோம் என உறுதி ஏற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »