வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் – மே 17 அறிக்கை

கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா! மாநிலங்களின் உரிமையை பறிக்க, இஸ்லாமிய சொத்துக்களை இந்துத்துவ பாஜக அரசு அபகரிக்க கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

இஸ்லாமியர்களுக்கான பொது சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் மற்றும் அதிகாரம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது ஒன்றிய பாஜக அரசு. எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பிற்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நள்ளிரவில் ஓட்டெடுப்பு நடத்தி அந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்த போது கடும் எதிர்ப்பை சந்ததித்தனால் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அக்கூட்டத்தில் நிலைக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. நிலைக்குழு பரிந்துரைகளின்படி ஒரு சில திருத்தங்களை மேற்கொண்டு எதேச்சதிகாரத்தோடு தற்போது அந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. ஏப்ரல் 3 அன்று நள்ளிரவில் மக்களவையில் 288 ஆதரவு 232 எதிர்ப்பு என்றும், ஏப்ரல் 4 அன்று நள்ளிரவில் மாநிலங்களையில் 128 ஆதரவு 95 எதிர்ப்பு என்றும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று மசோதா நிறைவேறியது. தமிழ்நாட்டிலிருந்து திமுக கூட்டணியை சேர்ந்த அனைத்து மக்களவை உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். மாநிலங்களவையில், திமுக கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பாஜகவுடன் கூட்டணியிலுள்ள அதிமுகவின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். பாஜகவுடன் கூட்டணியிலுள்ள பாமகவின் அன்புமணி வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ய, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் மட்டும் ஆதரவாக வாக்களித்தார்.

வக்ஃப் வாரியம் என்பது இஸ்லாமியர்கள் நலனுக்காக அல்லாவின் பெயரில் முன்னோர்கள் கொடையாக வழங்கிய சொத்துக்களை நிர்வகிக்க அரசு உருவாக்கிய சுதந்திரமாக செயல்படும் ஓர் அரசு உறுப்பு. இந்து சமய அறநிலையத் துறை போன்று வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க செயல்படுகிறது. இந்து அறநிலையத்துறையில் இந்துக்களைத் தவிர யாரும் பணிபுரியக்கூடாது என்று கூறும் இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக தான், தேர்தல் முறையில் இஸ்லாமியர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் வக்ஃப் வாரியத்தில், தேர்தல் முறையை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமியர் அல்லாதவர்களும் நிர்வாகத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

வக்ஃப் சட்டம் 1995-ல், வாய்மொழியாக உறுதியளிக்கப்பட்ட சொத்து வக்ஃப் சொத்தாக அங்கீகரிக்கப்படுகிறது. தற்போதைய திருத்தத்தில் அது நீக்கப்படுவதால் உரிய ஆவணங்கள் இல்லாத அனைத்தும் சர்ச்சைக்குரிய சொத்தாக கருதி மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கும் வரை முடக்கப்படக்கூடும். அரசுக்கு பாத்தியப்பட்ட வக்ஃப் சொத்துக்கள் குறித்த சிக்கல் ஏற்படுமெனில் முன்பு வக்ஃப் தீர்ப்பாயம் மூலம் தீர்க்கப்பட்டு வந்தது. இனி, மாவட்ட ஆட்சியருக்கு மேலான அதிகாரத்தை கொண்ட ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்கிறது. இதன்மூலம், பாஜக அரசு தனக்கு சாதகமான நபர்களை நியமித்து சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துக்களை அரசு சொத்தாக மாற்றிக்கொள்ளும்.

மேலும், வக்ஃப் வாரிய அதிகாரம் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறை போன்றே வக்ஃப் வாரியம் மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் நிர்வாகிக்கப்பட்டு வந்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின்படி, வக்ஃப் வாரியத்திற்கான விதிமுறைகளை நெறிப்படுத்துதல், அதனுடைய சொத்து விவரப் பட்டியல், பதிவு ஆவணங்கள், தரவுகள் போன்றவற்றை ஒன்றிய அரசே நிர்வகிக்கும் என்றும், புதிய பதிவுகள் செய்வது, அறிக்கைகள் வழங்குவது, சாதாரண படிவங்கள் வழங்குவது முதற்கொண்டு அனைத்தையும் ஒன்றிய அரசே மேற்கொள்ளும். இது வக்ஃப் வாரியம் மீதான மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தையும் நீக்குகிறது. ஏனைய மாநில உரிமைகளை அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் பறித்து ஒன்றிய அரசிடம் அதிகாரங்களை குவித்துக்கொள்வதைப் போல, வக்ஃப் மீதான மாநிலங்களின் உரிமையையும் தற்போது திருத்தச் சட்டத்தின் மூலம் பறித்துக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு.

ஒன்றிய பாஜக அரசு இஸ்லாமிய விரோத அரசு என்பது வெளிப்படையானது. அரசியலமைப்பு சட்ட விரோதமாக இந்தியாவை இந்துராஷ்டிரம் என்ற இந்துக்களுக்கான நாடாக மாற்ற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கொள்கை. அதன் தலைவர்கள் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்றும், நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றும் பொதுவெளியில் அறைகூவல் விடுக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கான சலுகைகள், மானியங்கள் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகளை மறுக்கும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்பு முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியது, தற்போது வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

தற்போது வக்ஃப் வாரியத்திடம் மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் நிலமும் 8.7 லட்சம் சொத்துகளும் உள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் மிக அதிகமான சொத்துகள் கொண்ட அமைப்புகளில் ஒன்றாகும். இஸ்லாமியர்களின் இந்த பொது சொத்துக்களை அபகரிக்கவே ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் எதிர்த்த போதும் இஸ்லாமியரின் நலனுக்காக என்று கூறி இந்துத்துவ பாஜக அரசு இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இதனடிப்படையில் வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக நியமிக்கப்படும் போது, வக்ஃப் சொத்துக்கள் வாரியத்திடமிருந்து பறிபோகும் சூழல் உருவாகும். ஆர்எஸ்எஸ்-பாஜக அப்படியான சூழலை உருவாக்கி வக்ஃப் சொத்துக்களை அபரிக்கவே இச்சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. பசுத்தோல் போர்த்திய புலி போன்றது இந்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம்.

இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்கள் மத்தியில் மாபெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இஸ்லாமியர்கள் தொடர்பான சட்டத்தை இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், இஸ்லாமிய உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. வரப்போகும் அச்சத்தை உணர்ந்த தமிழ்நாடு திமுக அரசு இச்சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து கடந்த மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய ஒருமனதாக நிறைவேறியது. தற்போது திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு ஒட்டுமொத்த எதிர்ப்பினை உணர்ந்து வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஒன்றிய பாஜக அரசின் இம்முயற்சி இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று மட்டும் கருதிவிட முடியாது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழர்களின் சொத்துக்களை பறித்து உயர்சாதி கூட்டத்திடம் வழங்கிடும் நிலையை உருவாக்கும். மேலும், மாநிலங்களை உரிமைகளை பறித்து ஒற்றை இந்துத்துவ பாசிச ஆட்சியை நிறுவ மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்றே. இது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு விடுக்கப்பட்ட சவால். சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு வழிகோலும். ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் இதனை புரிந்துகொண்டு, ஒன்றிய பாஜக அரசிற்கு எதிரான அணிதிரள வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்

9884864010

04/04/2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »