உழவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உழவர்களை படுகொலை செய்த பாஜக
ஜனநாயகத்தின் அறவழி எதிர்ப்புப் போராட்டத்தின் சிறந்த வகைகளில் கருப்புக்கொடி காட்டுவதும் ஒன்று. ஆனால் கருப்புக் கொடி காட்டினால் காரை ஏற்றிக் கொல்வோம் என்று கொலைவெறியுடன் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றிருக்கின்றனர் பாஜக வெறியர்கள். மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக நீளும் ஜனநாயகப் படுகொலைகளின் பட்டியலில் இந்த கொலை நிகழ்வும் சேர்ந்திருக்கிறது.
ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனான ஆசிஸ் மிஸ்ராவின் கார் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பாஜகவினரின் கார் என 3 கார்கள் வேகமாக வந்து நடந்து சென்று கொண்டிருந்த விவசாயிகளின் மீது பின்புறத்தில் மோதியதாக நேரில் பார்த்த விவசாயிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறியது உண்மையென நிரூபிக்கும் வகையில் விவசாயிகள் மீது கார்கள் உள்ளம் பதறும் வகையில் கொடூரமாக மோதும் காணொளி காட்சியும் சமூக வலைதளங்களில் வெளிவந்து பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் 4 விவசாயிகள் துடிதுடிக்க இறந்திருக்கின்றனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். விவசாயிகளின் மேல் மிருகத்தனமாக மோதி விட்டு சிறிது தூரம் சென்றதும் காரிலிருந்து காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இறங்கியதாகவும், போராட்டக்காரர்கள் கோவத்துடன் அவர்களைத் துரத்தியதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மேலும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 8 நபர்கள் வரை இறந்திருக்கிறார்கள். இந்த சூழலில் கொலை நடந்த அன்று தனது மகன் அந்த இடத்திலேயே இல்லை என்றும் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அது வடிகட்டிய பொய் என்பது காணொளி காட்சி மூலமாகவே நிரூபணமாகிறது.
பெரு நிறுவனங்களான பனியா முதலாளிகளின் நன்மைக்காகவே கண்ணும் கருத்துமாக திட்டங்கள் தீட்டும் மோடி அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் கடந்த 300 நாட்களாக தலைநகர் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளை இழந்தும் அறவழியுடன் தொடர்ந்து விவசாயிகள் போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உத்திரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் திரண்டு இந்த கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இதனை சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு ( ஐக்கிய விவசாயிகள் முன்னணி) முன்னெடுத்திருக்கிறது. இந்த கருப்புக் கொடி எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாக நெல் கொள்முதலை ஒன்றிய அரசு தாமதப்படுத்தும் ஆணையை வெளியிட்டதே காரணம் எனக் கூறுகின்றனர் விவசாயிகள். எப்பொழுதும் அக்டோபர் 1-ந் தேதியே துவங்கி விடும் நெல் கொள்முதலை, ஒன்றிய அரசு அக்டோபர் 10-ந் தேதி வரை நிறுத்தி வைத்திருக்க ஆணையிட்டிருக்கிறது. கடந்த 6 நாட்களாக மழை பெய்யும் சூழல் நிலவுவதால் நெல் கொள்முதல் நாளைத் தள்ளி வைத்தால் நெற்பயிர்கள் நாசமாகும் நிலையேற்படும் என்று விவசாயிகள் கவலைக்கு ஆளாகியிருக்கின்றனர். இதன் காரணமாகவே ஒன்றிய உள்துறை இணை அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
ஒன்றிய அரசு நாட்கள் தள்ளித் தாமதமாக வாங்கும் ஆணையிட்டதால் பஞ்சாப், ஹரியானா பகுதிகளிலும் மண்டிக்கு வந்து விட்ட தானியங்களை வாங்காத சூழலும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச விலையை விட குறைவாகப் பேரம் பேசும் தனிப்பட்ட வியாபாரிகளிடம் விவசாயிகள் தானியங்களை கொடுத்து நட்டப்படும் நிலையும் உருவாகிறது. இந்தக் காரணங்களையெல்லாம் முன்வைத்தே போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
அதானியின் சேமிப்புக் கிடங்குகளை நிறைப்பதற்காக விவசாயிகளை 300 நாட்களாக சாலையில் நிறுத்தியிருக்கிறார் மோடி. பல இன்னல்களையும், மோடி அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு இனம், மதம், மொழி என்று எந்த வேறுபாடும் பார்க்காமல், அறவழி மீறாமல் விவசாயிகள் ஒற்றுமையாக போராடிக் கொண்டிருப்பது பாஜக கும்பலுக்கு எரிச்சலைத் தருவதன் வெளிப்பாடு தான் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.
விவசாயிகளின் போராட்டம் துவங்கிய நாட்களிலிருந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதனைக் கொச்சைப்படுத்தும் பரப்புரைகளை பல விதங்களில் மேற்கொண்டனர். மோடி அரசுக்கு தோள் கொடுப்பதற்காகவே ஜனநாயகத் தூண்களாக நிற்கும் பல வட இந்திய ஊடகங்களும் இதற்கு துணை போயிருக்கின்றனர். விவசாயிகள் வாகனங்கள் மீது கல்லெறிந்ததாகவும் அதனால் வண்டி தடுமாறி அவர்கள் மீது மோதியதாகவும் பொய்யாக செய்திகளை ஒளிபரப்பினர். ஆனால் விவசாயிகள் நடந்து சென்று கொண்டிருக்க அவர்களே அறியாத வண்ணம் பின்பக்கமாக வந்த கார்கள் வேகத்துடன் மோதும் காணொளிக் காட்சிகள் வெளிவந்திருப்பது இவர்களின் மோசடியான செய்திப் பரப்பல் விதத்திற்கு ஒரு சான்று.
இந்த வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு தடை விதித்த பின்னும் எதற்கு இந்தப் போராட்டங்கள் என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கிறது. இந்தக் கவலை நியாயமானதாகவே பெரும்பான்மையினருக்குத் தோன்றும். ஆனால் விவசாயிகளுக்கான போராடும் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பினர், இது உச்ச நீதிமன்றத்தினாலும், ஒன்றிய அரசாலும் நடத்தப்படும் நாடகம் எனக் கூறுகின்றனர். பல மாநிலங்களில் அரசின் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு (APMC) மண்டிகளை பெருமளவில் மூடி விட்டதாகவும், மேலும் 5 மாநிலங்களில் மண்டிகளுக்கான மானியங்களை குறைத்து மண்டிகள் மூடும் நிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். சட்ட அளவில் தடை என்றாலும் நடைமுறையில் வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டே தானிருக்கின்றன எனக் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மேலும் தங்கள் அமைப்பு சார்பாக நீதிமன்றம் செல்லவில்லை எனவும் நீதிமன்றம் சென்றது வேறு அமைப்பெனவும் அது நம்பிக்கைத் தன்மையற்றதென்றும் கூறுகின்றனர்.
விவசாயிகள் நீக்கக் கோரும் வேளாண்மை சட்டங்களும், காரணங்களும்:
1. விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் – பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்வது. பண்ணை அடிமைகள் முறையின் நவீன வடிவமே இந்த சட்டம் என எதிர்க்கின்றனர் விவசாயிகள். மேலும் இனி முதலாளிகள் தீர்மானிக்கும் விலையில் விவசாயிகள் விளை பொருட்களை விற்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள்.
2. வேளாண் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் – விவசாயிகளுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் சந்தைகளைத் திறந்து விடுவது. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறு குறு விவசாயிகளே. அவர்களால் வெளியூர்களுக்கு செல்லும் செலவைத் தாக்குப் பிடிக்க இயலாது. ஆனால் பெரு நிறுவனங்கள் சுலபமாக எங்கும் சென்று விலை குறைவாக பேரம் பேசும் வாய்ப்பு அதிகமாகும். மேலும் விரைவில் இந்திய உணவுக் கழகம் இழுத்து மூடப்படும் அபாயமும் ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.
3. அத்தியாவசியப் பொருட்கள் தடைச் சட்டம் – அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து முக்கியமான சமையல் பொருட்களை எடுத்து விட்டு இச்சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது வெங்காயம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் போன்ற முக்கிய உணவுப் பொருட்கள் பெரிய வணிகர்கள் பதுக்குவதற்கு கதவைத் திறந்து விடுகிறது இச்சட்டம். இதனால் இந்தப் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு வாங்க இயலாத நிலை உருவாகும் என்பதும் விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்தச் சட்டங்களை மேம்போக்காக அரசு கூறும் காரணங்களை வைத்துப் பார்த்தால் நல்ல சட்டங்கள் போலவே தோன்றும். ஆனால் இதன் உண்மையான நோக்கம் சிறு குறு விவசாயிகளை விவசாயத்தை விட்டு விலகச் செய்து பெரு நிறுவனங்களிடம் நிலங்களை ஒப்படைப்பதே ஆகும். இதனை உணர்ந்த விவசாயிகள் தான் போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.
இந்தப் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வருவதற்கென எந்தக் கோரிக்கையும் விவசாயிகளிடமிருந்து எழவில்லை எனும் போது இவ்வளவு அவசரமாக இவற்றைக் கொண்டு வந்து இத்தனை விவசாயிகளின் உயிரை ஒன்றிய அரசு காவு வாங்கியிருக்கிறது என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. நிலம் நமது உரிமை என்னும் முழக்கத்தின் அடிப்படையாக வைத்தே விவசாயிகளின் போராட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.
போராடும் விவசாயிகளைக் கட்டையால் அடியுங்கள். அதற்கு 700-1000 நபர்கள் கொண்ட தன்னார்வக் குழுக்களை அமையுங்கள் என ஆர்.எஸ்.எஸ் குண்டர்களைத் தூண்டி விடும் ஹரியானாவின் பாஜக முதல்வர் முதற்கொண்டு போராடும் மக்களை காரை ஏற்றிக் கொல்லும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் வரை விவசாயிகள் மீது கொலை வெறியுடன் அலைகிறார்கள். பாஜகவின் தலைமைகளே இப்படியென்றால் தொண்டர்களின் யோக்கியதையை சொல்லவா வேண்டும். ஜனநாயகமே இவர்களுக்கு அருவருப்பானது எனும் போது ஜனநாயகப் போராட்டங்களை மட்டும் எப்படி ஜனநாயக வழியில் அணுகுவார்கள். இந்தக் கொலை வெறியர்களிடமிருந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளைக் காக்க வேண்டியது நமது பொறுப்பு. அவர்களுக்கு ஆதரவானக் குரல்கள் ஜனநாயகம் நேசிப்பவர்களிடமிருந்தே எழும்ப முடியும். நமக்காகப் போராடும் அவர்களுக்குத் துணையாக நாம் நிற்போம்.