மோடி வருகையைக் கண்டித்து மே17 இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

‘எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது’

தமிழர் பெருமையை சொல்லும் கீழடி அறிக்கையைத் தொடர்ந்து நிராகரிப்பது, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை நிறுத்துவது, தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்யும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்காதது, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க தொகுதி மறுவரையறை கொண்டு வருவது, இசுலாமியருக்கு எதிராக வக்ஃபு திருத்தச் சட்டம் கொண்டு வருவது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி கடந்த ஜூலை 26,27 என இரு நாட்களுக்கு வருவதை எதிர்த்து ’மே பதினேழு இயக்கம்’ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு 27-07-2025 அன்று காலை தி.நகர் பெரியார் சிலைக்கு எதிரே கருப்புக்கொடியுடன் மே பதினேழு இயக்கத் தோழர்கள் அணிதிரண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகங்களிடம் கூறிய கருத்துக்கள் கீழே:

“தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கக்கூடிய மோடியைக் கண்டித்து இன்றைக்கு கருப்புக்கொடி ஆர்பாட்டத்தை மே பதினேழு  இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள்தான் இந்தியாவினுடைய பூர்வகுடி. தமிழர் நாகரிகம்தான் இந்தியாவினுடைய பூர்வ நாகரிகமாக இருந்திருக்கிறது. 2800 வருடங்களுக்கு முன்பாகவே தமிழ் மொழி தழைத்தோங்கி இருக்கிறது. சிந்து சமவெளியைப் போல ஒரு நகர நாகரிகத்தை தமிழினம் படைத்திருக்கிறது என்பதை கீழடி அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக உலகத்திற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறது. அப்பேர்ப்பட்ட வரலாற்று உண்மையை மோடி அரசு தடுத்து வைத்திருக்கிறது. இதுவரை இதற்கான விளக்கத்தை மோடி அரசு சொல்லவில்லை, தமிழ்நாடு பாஜகவும் சொல்லவில்லை.

’தமிழனுடைய தொன்மை’ என்பது இந்தியாவினுடைய பெருமை என்று அவர்களால் பேச முடியவில்லை. தமிழர்களுடைய தொன்மையை ஏற்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆரிய நாகரிகம் மட்டும்தான் முதன்மையான நாகரிகம் என்று சொல்ல வருகிறார்கள், ஆனால் அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. சரஸ்வதி நதி ஓடுகிறது என்று சொல்றார்கள், அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ராமன் பிறந்ததாக சொல்லகிறார்கள், அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. பாரதம் என்ற ஒரு தேசம் இருந்ததாக சொல்லகிறார்கள், அதற்கான ஆதாரத்தை அவர்களால் தர முடியவில்லை. வேதத்திற்கான நிலத்தையும் காட்ட முடியவில்லை. இவர்கள் சொல்லுகின்ற பாரதம் என்ற தேசம் எல்லாம் பாகிஸ்தானிற்குள்ளாக அடக்கமாகி இருக்கிறது. இதுதான் வரலாற்று உண்மையாக இருக்கிறது. இதுதான் தொல்லியல் உண்மையாக இருக்கிறது.

‘கீழடிதான் தமிழர்கள் இந்த மண்ணினுடைய பூர்வகுடிகள், தமிழ் மொழிதான் இந்த மண்ணினுடைய மூத்த மொழி’ என்பதை எழுத்துப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக, அடையாளங்களை கொண்டு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்த உண்மையை சொல்வதற்கு மோடியினால் முடியவில்லை என்றால் தமிழர்களை இந்தியன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதானே மோடி அரசு சொல்லுகிறது. தமிழனுடைய பெருமை இந்தியனுடைய பெருமை என்று நாங்கள் ஏற்க முடியாது என்றுதானே மோடி அரசு சொல்லுகிறது. தமிழர்களுடைய வரலாறை நாங்கள் உலகளவிற்கு கொண்டு செல்ல மாட்டோம் என்று தமிழனை வஞ்சிக்கின்ற அரசியலைத் தானே மோடி அரசு செய்கிறது. அப்படி தமிழன் மேல் வஞ்சகம் வைப்பதற்கான காரணம் என்ன?

எல்லாமே ஒரே நாடு, எல்லாமே ஒரே மக்கள், எல்லாருமே இந்தியர்கள் என்று சொல்லுகிறோம். எல்லாருக்குமான வரி என்பது ஒரே விகிதமாக இருக்கிறது, எல்லாருக்கும் ஓட்டு உரிமை இருக்கிறது, அதிகாரத்தில் பங்கு இருக்கிறது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஆனால் எங்கள் வரலாறை சொல்வதற்கு உங்களால் முடியவில்லை. எங்களுடைய தொல்லியல் சிறப்பை உலகத்துக்கு கொண்டு போக முடியாமல் உங்களை (மோடியை) எது தடுக்கிறது? பிஜேபி, ஆர்எஸ்எஸ்-சை எது தடுக்கிறது என்று கேட்க விரும்புறோம்.

தமிழனுடைய தொன்மையை சொல்வதற்கு உனக்கு நாக்கு கூசுக்கிறது, வாய் கோணலாகிறது. ஆனால் நாலு அடி தோண்டி சாக்கடையைப் பார்த்த உடனே இல்லாத சரஸ்வதி நதி ஓடுகிறது என்று சொல்கிறீர்கள். இல்லாத ராமன் பிறந்த இடத்தை சொல்லி அங்கே கோயில் கட்டுகிறீர்கள். இதற்கெல்லாம் பணம் செலவு செய்து, உலகம் முழுக்க பிரச்சாரம் செய்கிறார்கள், ஆனால் தமிழனுடைய பெருமையை சொல்வதற்கு அவர்களுக்கு கசக்குகிறது என்றால், ‘நீயும் நானும் யார்?’ என்கின்ற கேள்வியை மோடியே எழுப்பி இருக்கிறார். ‘நீங்க வேற நாங்க வேற’ என்பதை மோடியே சொல்லிருக்கிறார்.

அப்படிப்பட்ட மோடி தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழனுடைய பெருமையை, தமிழனுடைய அரசியல் வலிமையை, படை வலிமையை, ஆட்சி வலிமையை உலகத்திற்கு நிறுவிய ராஜேந்திர சோழனுடைய நாளிலே, சோழ மண்டலத்திற்கு, தமிழனுடைய இந்த நிலத்திற்கு வந்து இங்கு கால் பதிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தமிழர்கள் தங்களது கண்டனத்தை சனநாயக பூர்வமாக வெளிப்படுத்துவார்கள் என்பதைதான் நாங்கள் இன்று கருப்புக்கோடி ஆர்பாட்டம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அது மட்டுமல்ல, இன்றைக்கு பட்டியல்/ பழங்குடி சமூகத்தை சார்ந்த மாணவர்கள் கல்விப் படிப்பை கைவிட வேண்டிய நிலைமை இருக்கிறது. ஏனென்றால் பட்டியல் சமூக, பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மோடி சர்க்கார் நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் பல பழங்குடி பட்டியலின மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கிறது. அதே வேளையில் தமிழ்நாட்டினுடைய கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். காரணம் என்ன? உங்களுடைய (ஒன்றிய அரசின்) கல்வித் திட்டம் தான் சிறந்தது என்று எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு கல்வித்திட்டம் சிறந்தது என்று ஆதாரம் இருக்கிறது. அதற்கான வரலாறு இருக்கிறது. ஒன்றிய அரசின் கல்வித்திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காக எங்களுக்கான வரிப்பங்கீட்டை மோடி அரசு தரவில்லையென்றால், மோடி அரசுக்கு நாங்கள் எதற்கு ஜிஎஸ்டி வரி தர வேண்டும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டி இருக்கிறது. இந்தியாவுக்கு எதற்கு நாங்கள் வரி தர வேண்டும்?

ஒட்டுமொத்த இந்தியாவின் கொள்கையாக அனைத்து கட்சியும் சேர்ந்து ஒரு கொள்கையை முன்வைக்க வேண்டும். அதை தமிழ்நாடு சனநாயகப் பூர்வமாக விவாதிக்கும். பின் அதை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுக்கும். அதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. உத்திர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடத்தை மூடக்கூடிய பாஜக திணிக்கும் கல்விக்கொள்கையை நாங்கள் ஏற்க வேண்டுமா? கல்வியை பற்றி பேசுவதற்கான யோக்யதையோ வரலாறோ பாஜகவிற்கு கிடையாது.

எல்லாமே முட்டாள்தனமாக பேசுகின்ற பாஜகவின் கல்விக்கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டிற்கான கல்வித்தொகைத் தடுத்து வைத்திருக்கிறது மோடி அரசு. இதனால் இங்கு பள்ளிக்கூடத்தை மூடுவதா? ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்துவதா? மாணவர்கள் கல்வியை மறுப்பதா? என்ன செய்ய நினைக்கிறது பாஜக?

தமிழ்நாட்டுக்கு இவ்வளவு வஞ்சகம் இழைத்துவிட்டு இங்கு வேட்டி, சட்டை அணிந்து வந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோமா? உங்களை தமிழனாக பார்த்துவிடுவோமா? இன்னும் எத்தனை நாடகத்தை நடத்தப் போகின்றீர்கள்.

‘பாரத பிரதமராக நான் இங்கே வருகிறேன்’ என்று பேசுகிறார் மோடி. பாரதம் என்கின்ற நிலம் எங்கே இருக்கிறது? சிந்து சம வெளியில இருந்து யமுனை ஆறு வரைக்கும் இருக்கக்கூடிய நிலப்பரப்புதான் பாரதம் என்று உன் (ஆரிய) புராணத்தில் எழுதி இருக்கிறதே, அதை வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் ஓடும் வைகையும் காவிரியும் பாலாறும் எப்படி பாரதத்தில் வரும்? உன் புராணத்தில் இந்த ஆறுகள் குறித்து இருக்கிறதா? இல்லையே! உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 உன் பாரதப் பெருமையை யமுனை ஆற்றங்கரையிலோ சிந்து சமவெளியிலோ போய் பேசு. இது தமிழ்நாடு. எங்களுக்கு தனி வரலாறு இருக்கிறது. எங்களுக்கு தனி சிறப்புமிக்க மொழி இருக்கிறது. உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பழைய நாகரிகங்களோடு ”தமிழ் நாகரிகம்” ஒன்று என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். இனி இதை நாங்கள் இந்தியாவுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 தமிழன் உலகம் முழுவதும் இருக்கிறான். இந்தியனை விட தமிழன் உலகம் முழுவதும் பரவி இருக்கிறான். அவனுக்கான வரலாறு இருக்கிறது. தமிழர் வரலாறை உலகம் முழுக்க நாங்கள் கொண்டு போவோம். இப்பேர்ப்பட்ட சமயத்தில் தமிழ்நாட்டிற்குள் மோடியினுடைய வருகை என்பது கண்டனத்துக்குரியது.

மேலும் காலங்காலமாக இசுலாமிய மக்கள் வைத்திருக்கக்கூடிய வழிபாட்டு தலங்களுக்கும் அவர்களுடைய கல்வி பயன்பாட்டு தளங்களுக்கும் இருக்கக்கூடிய வக்ஃபு சொத்துக்களை எல்லாம் அபகரிப்பதற்கான சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்திருக்கின்றது. இசுலாமிய மக்களினுடைய ஒத்துழைப்பு இல்லாமல் கொண்டு வந்திருக்கிறது. முசுலிம்களுக்கு எதிராக இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதலையும் அவர்களுக்கு எதிரான அரசியலும் செய்து கொண்டிருக்கக்கூடிய பாஜக, வக்ஃபு திருத்த சட்டத்தை முசுலிம்களுக்கு எதிராக கொண்டு வந்திருக்கின்றது. இசுலாமிய மக்களை படுகொலை செய்து அந்த இரத்தத்திலே ஆட்சி செய்த மோடி அரசு, வக்ஃபு கொண்டு வந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை நாங்கள் வெளிப்படையாகவே முன் வைக்கின்றோம்.

மேலும் தமிழ்நாட்டு மீனவரை இலங்கை கொலை செய்து கொண்டே இருக்கின்றது. அதைத் தட்டி கேட்க மோடி அரசிற்கு துப்பு இல்லை. ‘இவ்வளவு பெரிய கடற்படையை வைத்திருக்கிறேன், கப்பல் படை வைத்திருக்கிறேன், 56 இஞ்ச் நெஞ்சு இருக்குது’ என்று சொல்லிவிட்டு இலங்கைக்காரன் தமிழ்நாட்டு மீனவனை கொலை செய்யும்போது அதை எதிர்ப்பதற்கு மோடி அரசிற்கு தைரியம் இல்லை, இலங்கை மேல் வழக்கு போடுவதற்கும் மோடி அரசிற்கு தைரியம் இல்லை.

இலங்கை அரசின் மீது தடை கொண்டு வரவோ, கச்சத்தீவை மீட்பதற்கான ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்திலும் மேலவையிலும் கொண்டு வருவதற்கான துணிச்சலோ மோடி அரசிற்கு இல்லை. இப்படி தமிழனுக்கு எதிரான இத்தனை விடயங்களை செய்துவிட்டு, தமிழ்நாட்டுக்குள் சமூக விரோதிகளை பாஜகவில் இணைத்துவிட்டு, இங்குள்ள மாநில கட்சிகளை எல்லாம் மிரட்டும் பாஜகவின் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்பொழுதெல்லாம் நாங்கள் கருப்புக்கொடி காட்டி இருக்கிறோம்.

மோடி பிரதமர் வேட்பாளர் என்று 2014ல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் நுழைந்த பொழுதே பல்லாவரத்திலே கருப்புக்கொடியை காட்ட ஆரம்பித்தோம். அன்றிலிருந்து மோடி தமிழ்நாட்டிற்கு வரும் பொழுதெல்லாம் நாங்கள் கருப்பு கொடி காட்டி இருக்கிறோம். இனிவரும் காலத்திலும் எங்கள் எதிர்ப்பை காட்டுவோம்.

தமிழ்நாட்டில் எதிர்ப்பே இல்லாமல் மோடி வந்து சென்றார் என்ற வரலாறு இருக்கக்கூடாது. ஆக கடைசி மே 17 தோழன் இருக்கின்ற வரை எங்கள் தோழன் கருப்பு கொடியை உயர்த்திப் பிடிப்பான்.

திருச்சியில் எங்கள் தோழர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. நாங்கள் காவல்துறைக்கும் தமிழ்நாடு திமுக அரசுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் அறிவிக்காமல் எந்த போராட்டத்தையும் செய்ய மாட்டோம். போராட்டம் நடத்தும் இடம், தேதி, நேரம் என அனைத்தையும் அறிவித்துதான் எங்கள் போராட்டத்தை தெரிவிப்போம். அப்படியாக நாங்கள் சென்னையில் அறிவித்திருக்கிறோம். திருச்சியில் கைது பண்ண வேண்டிய அவசியம் இல்லை. கோழைத்தனமாக அறிவிக்காமல் கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சென்னையில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றோம்.

இந்த எதிர்ப்பு தமிழ்நாட்டின் தமிழ் இனத்தின் கருத்தாக இங்கு வெளிப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்பாட்டம் இங்கு எழுச்சியோடு நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் தமிழின விரோதமாக மோடி அரசு வருங்காலத்தில் நடக்கும் என்றால், இன்னும் அதிகமான எழுச்சியோடு கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடக்கும். எப்படி ஐஐடிக்குள் சாலை இல்லாமல் சாலையை போட்டு சென்றாரோ, அது போன்ற ஒரு எதிர்ப்பு அரசியல் வருங்காலத்தில் கட்டி எழுப்பப்படும்.

நாங்கள் திமுக அரசா ஆதிமுக அரசா என்றெல்லாம் பார்க்க மாட்டோம். எங்களுக்கு ஆரிய இந்துத்துவ பாஜக அரசு என்பது தமிழர் எதிரி. மோடி என்பவர் தமிழர் எதிரி, தமிழர் விரோதி. அவருக்கு எதிரான போராட்டத்தை, பாஜக ஆர்எஸ்எஸ்க்கு எதிரான போராட்டத்தை சமரசம் இல்லாமல் நாங்கள் நடத்துவோம். எத்தனை அடக்குமுறை வந்தாலும் எதிர்த்து எங்கள் தோழர்கள் களத்தில் நிற்பார்கள் என்பதை இச்சமயத்தில் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் கருப்புக்கொடி காட்டுவது என்பது சனநாயக உரிமை. தூத்துக்குடியில் மோடி வந்து இறங்கியவுடன் கருப்புக்கொடி காட்டுவதாக தமிழர் ஆட்சி கழகத்தினுடைய தலைவர் எஸ்.ஆர் பாண்டியன் அவர்கள் அறிவித்திருந்தார். அவரை நேற்று காலையிலேயே வீட்டு காவலில் வைத்தார்கள். அதேபோல கங்கைகொண்டசோழபுரத்தில் கருப்பு கொடி காட்டுவதற்காக விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் அறிவித்திருந்தார். அவரையும் நேற்று வீட்டு காவலில் வைத்தார்கள். இவ்வாறெல்லாம் கட்டுப்பாடு போடும் அவசியம் என்ன இருக்கிறது? இத்தகைய கட்டுப்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்நாடு திமுக அரசிற்கும் காவல்துறைக்கும் எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது தோழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். திருச்சியிலும், கும்பகோணத்திலும், தூத்துக்குடியிலும் இருக்கக்கூடிய தோழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை இச்சமயத்தில் தெரிவித்து கொள்கின்றோம்” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

பிறகு எதிரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கத்தை தெரிவித்தும், பாஜக மோடி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். பெண்கள், குழந்தைகள் பங்கேற்க எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »