இந்திய ஊடகங்கள் 90% அளவிற்கு பார்ப்பன, பனியா, மார்வாடி போன்ற உயர்சாதியினரின் பிடியில் தான் சிக்கியிருக்கிறது என்பதை செய்தி சேகரிப்பு நிறுவனங்களான நியூஸ் லாண்டரி (News Laundery) மற்றும் ஆக்ஸ்ஃபம் (Oxfam) ஆய்வுகளின் முடிவுகள் உறுதி செய்துள்ளன. உயர்சாதியினரின் அதிகமான ஊடகப் பங்களிப்பினால் வெகுமக்களின் செய்திகள் பொதுத்தளத்தில் பேசப்படாமல், உயர்சாதியினரின் செய்திகள் மட்டுமே பொதுக்கருத்தாக அனைத்து மக்களிடமும் விதைக்கப்படுவதை இந்த ஆய்வு முடிவுகள் அப்பட்டமாக எடுத்துரைக்கின்றன.
இந்த ஆய்வு முடிவுகளின் படி, இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட முக்கிய ஆங்கில செய்தி ஊடகங்களான – CNN-News 18, India Today, Mirror Now, NDTV 24×7, Rajya Sabha TV, Republic TV, மற்றும் Times Now போன்றவைகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் 89% உயர்சாதி ஊடகவியலாளர்கள். இந்த ஊடகங்கள் இந்தியாவின் செய்தி முகங்களாக வெளியுலகிற்கு தெரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊடகங்களில் சிறப்பு நேரங்களாக மாலை 6 லிருந்து 9 வரை விவாதம் நடத்துபவர்களில் நான்கு பேரில் மூவர் உயர்சாதியினரான பார்ப்பன, பனியா வகுப்பினர்.
இதில் ரஜத் சர்மா, சுதிர் சவுத்ரி, அமிஷ் தேவ்கன், அர்னாப் கோஸ்வாமி, அஞ்சனா ஓம் காஷ்யப், ரோஹித் சர்தானா போன்ற உயர்சாதி நெறியாளர்கள் மோடியின் சார்பாகவே விவாதங்களை கட்டமைப்பதில் முக்கியமானவர்கள். இதனால் இந்த செய்தி தொலைக்காட்சிகள் “கோடி மீடியா (Godi media)” என்றே அழைக்கப்படுகின்றன. ரமோன் மகசேசே விருது பெற்ற என்டிடிவியின் பத்திரிக்கையாளர் ரவீசு குமார் என்பவரால் இந்த ஊடகங்களுக்காக “கோடி மீடியா” என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.
இந்தி மற்றும் ஆங்கில ஊடக நிறுவனங்கள் பலவும் வணிக நலன் கொண்ட வலதுசாரி பெரு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மட்டுமே IBN, CNBC, News 18 போன்ற 15-க்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. மோடியின் நண்பரான இவரின் நிறுவனங்களில் எந்த வகையான செய்திகள் ஒளிபரப்பப்படும் என்பது கண்கூடு.
இதில் தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருவர் கூட இல்லை. செய்திக் குழுவில் கூட இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ இல்லை. இந்த “கோடி மீடியா” எப்போதும் மோடியை புகழ்ந்து பேசுவதும், மதத்தின் அடிப்படையில் வெறுப்பை விதைப்பதும், அரசுக்கு எதிரான போராட்டங்களை தேசத்திற்கு எதிரானதாக கட்டமைப்பதையும் திறம்பட செய்தார்கள்.
இந்தியாவின் இயற்கை வளத்தை, மக்கள் உழைப்பைச் சுரண்டும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளில் சாதகமான சட்டத் திருத்தங்களை உருவாக்க வலதுசாரி சார்புடைய மோடியை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அன்னா அசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு நாடகத்தை மிகைப்படுத்தி விவாதங்களை கட்டமைத்தார்கள் இந்த பெரு நிறுவனங்களின் ஊடகங்கள்.
குஜராத் மாடல் என்று பொய் செய்திகளைப் பரப்பினார்கள். தேநீர் விற்றவர் மோடி என்கிற கரிசனத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கினார்கள். சுவிசு வங்கியில் இருந்த கருப்புப் பணம் மீட்டு ஒவ்வொருக்கும் 15 லட்சம் தருவதாகக் கூறியதை எந்தக் கேள்வியுமற்று அப்படியே பரப்பினார்கள். இந்துத்துவ சிந்தனைகளைப் பரப்ப காவி பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகளைகளையெல்லாம் இஸ்லாமியர்கள் செய்ததாக விசாரணைகள் முடியும் முன்பே பரப்பினார்கள். இவையெல்லாம் மோடியை ஆட்சிக்கு கொண்டு வரும் யுக்தி என்பதை இப்போது ஆர்.எஸ்.எஸ். நபரான யசுவந்த் சிண்டே என்பவர் நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவே அளித்திருக்கிறார். இப்படி மோடியின் பரப்புரையாளர்களாகவே மாறினர் “கோடி மீடியா” என்று அழைக்கப்பட்ட ஊடகங்கள்.
மோடியை 2014-ல் ஆட்சியில் அமர வைத்த பின்பும், முற்றும் முழுவதுமாக உயர்சாதியினரின் கூடாரமான இந்த ஊடகங்கள் மக்கள் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தவில்லை. மோடி அரசு பனியா, மார்வாடி நிறுவனங்களான அதானி, அம்பானிக்கு ஆதரவாகக் கொண்டு வந்த வேளாண்மைத் திருத்த சட்டங்கள், தொழிலாளர் உரிமைத் திருத்த சட்டங்கள், சுற்றுச்சூழல் திருத்த சட்டங்கள் எனப் பல்வேறு மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வரும் பொழுதெல்லாம் அவற்றை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை, தொழிலாளர்களை, சுற்றுச்சூழல் போராளிகளை அவதூறு செய்யும் வகையில் விவாதங்கள் நடத்தினர். எடுத்துக்காட்டாக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை இடைத்தரகர்கள் போராட்டம் என விவாதங்களால் கட்டமைத்தனர்.
கருப்புப் பண ஒழிப்பு என்று கூறி ஒரே நாளில் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையினை வலதுசாரிப் பொருளாதார நிபுணர்களை வைத்து விவாதங்கள் நடத்தி சிறப்பான நடவடிக்கை எனப் பேச வைத்தனர். பழங்குடி மக்களின் நிலத்தினை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்துப் பேசிய ஸ்டேன் சுவாமி, சாய்பாபா, சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நல்லாகா போன்ற மக்கள் போராளிகளை ‘அர்பன் நக்சல்கள்’ என மோடி கூறியபடியே இவர்களும் அழைத்தனர். தேச விரோதச் சட்டத்தில் கைது செய்த போதும் அவர்களின் மக்களுக்கான செயல்பாடுகளைப் பற்றி எந்த வித ஆய்வுமின்றி மோடியின் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை இதுவெனப் புகழ்ந்து செய்திகளை ஒளிபரப்பினர்.
இந்துத்துவ சிந்தனை கொண்ட உயர்சாதி ஊடகவியலாளர்கள் மதவாத சிந்தனைகளும், மத வெறுப்புணர்வும் வளரும் வகையில் செய்திகளைப் பரப்பியதற்கு சிறந்த உதாரணம் டெல்லியில் நடந்த தப்லீக் சமாத் மாநாடு. முஸ்லிம்கள் நடத்திய மாநாட்டின் ஊடாகத் தான் கொரோனா வைரஸ் பரவியது என்று சிறப்புச் செய்திகளாக அனைத்து மக்களிடமும் ஒரு அச்சத்தை பரப்பிக் கொண்டே இருந்தனர் இந்த ஊடகங்கள். கொரோனா பரவலுடன் தப்லீக் சமாத் மாநாடு இணைப்பு, ஞானவாபி மசூதியில் லிங்கம் இருந்தது என்று புரளி, டெல்லி கலவரம், ஹிஜாப், ஹலால், முகம்மது நபி பற்றிய அவதூறு எனத் தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு இந்த வெகுசன ஊடகங்களான இந்த செய்தி நிறுவனங்கள் கட்டமைத்த செய்திகளே முக்கியக் காரணமானது.
இவ்வாறு உயர்சாதியினர் பிடியில் இருந்த இந்த ஊடகங்களால் பரப்பப்பட்ட போலி செய்திகளும், அவதூறு செய்திகளும் அள்ள அள்ளக் குறையாதவை. இந்துத்துவ சிந்தனையுடன் பார்ப்பன மேலாதிக்கம் கொண்ட பனியா பொருளாதார சார்புடைய அரசை உருவாக்குவதையே கடமையாகக் கொண்டு செயல்படுகின்றனர் இந்த உயர்சாதி ஊடகவியலாளர்கள்.
செய்தி தொலைக்காட்சிகள் மட்டுமல்ல, பத்திரிக்கைத் துறைகளிலும் செய்திகளை உறுதிப்படுத்தும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் 121 பேருக்கு 101 பேர் உயர்சாதியினராகவே இருக்கின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக் குழுவினர் 6 ஆங்கிலம் மற்றும் 7 இந்தி செய்தித்தாள்களை தர மதிப்பின் அடிப்படையில் இந்திய வாசக மதிப்பாய்வு (Indian Readership Survey) 2018-ன்படி எடுத்துக் கொண்டனர். அதன்படி, ஆங்கில பத்திரிக்கைகளில் 5%-க்கும் குறைவாகவும், இந்தி பத்திரிக்கைகளில் 10%-க்கும் குறைவாகவும் தான் தலித்கள் உள்ளனர்.
இணையத்தில் கூட கட்டுரைகள் எழுதுபவர்களில் 72%-க்கும் மேல் உயர்சாதியினர். சாதிய பிரச்சனைகள் சார்பான கட்டுரைகளை எழுதுவதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உயர்சாதியினர். 10% மட்டுமே சாதி பிரச்சனைகள் தொடர்பாக எழுதப்பட்டிருக்கிறைன. இப்படியான நிலை இருக்கும் பொழுது இந்தியாவில் அதிக அளவில் பழங்குடியினர் சந்திக்கும் நிலம் சார்ந்த பிரச்சனைகள், தலித் மக்கள் சந்திக்கும் உரிமை, சாதிய ஒடுக்கு முறை சார்ந்த பிரச்சனைகள் எப்படி கட்டுரைகளாக்கப்படும்? எப்படி விரிவான தளத்தில் விவாதிக்கப்படும்?
இந்த ஆய்வுகள் 2018 அக்டோபரிலிருந்து 2019 மார்ச் வரையில் எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வெளிவந்த செய்திகள் அடிப்படையிலும், சிறப்பு விவாதங்கள் நடத்தும் செய்தியாளர்கள் குறித்த விவரங்களை அந்த ஊடகத்தின் இணையப் பக்கத்தில் கிடைத்த விவரங்கள் ஊடாகவும் சேகரித்திருக்கின்றனர். எந்த வகையான தலைப்புகளில் ஊடக விவாதங்கள் மற்றும் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன என்பதைப் பிரித்து அவற்றின் ஊடாக அவர்களின் சாதியைக் கண்டறியும் வழியையும் மேற்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஊடகவியலாளர்களிடம் சுய விவரங்கள் கேட்பது மூலமாகவும் அறிந்தனர். சிலர் கூற மறுத்ததால் அவர்களின் சாதி பெயர் தெரியாமல் போனதாகவும், தரவுகள் கிடைத்த வரை தொகுத்ததில், உயர்சாதியினர் ஆதிக்கம் உலவும் இடமாக அனைத்து ஊடகங்களும் இருப்பதாக கண்டறிந்திருக்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
தென்னாடுகளில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் அளவிற்கு இந்தப் பார்ப்பனக் கூட்டம் செய்திகள் கட்டமைப்பு தளத்தில் மேலோங்கி இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு அவலங்களை நமது உறவுகளான தமிழீழ மக்கள் சந்திக்க நேர்ந்தது. இன உரிமைக்காக போராடிய போராளிகளை தீவிரவாதிகள் எனக் கட்டமைத்தன தி இந்து, தினமலர், தினமணி போன்ற பார்ப்பனிய ஊடகங்கள். இலங்கை இனவெறி அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவும் அளவுக்கு வெளியுறவுக் கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த பார்ப்பனிய செய்தி கட்டமைப்புகளால் இன்று தமிழின அழிப்பு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஒரு சமூகத்தின் இயங்குதளத்தில் செய்திகள் கட்டமைப்பு என்பது முக்கியமானது. செய்திகளைக் கடத்தும் தளங்களில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் உயர்சாதியினரின் சுயநல எண்ணங்கள், பொதுக்கருத்தாக உருவாக்கப்பட்டு சமூகத்தில் நிலைநாட்டப்படுவது என்பது காலங்காலமாக நடைபெறுகிறது.
இந்த வலைப்பின்னலைப் புரிந்து கொண்டு கொள்கை தளத்தில் நிற்பவர்கள் இன்னும் வீரியத்துடன், முனைப்புடனும் செயல்பட வேண்டும். பன்மைத்துவம் நிரம்பிய இந்தியாவில் ஓர்மையை நிறுவ முயலும் மோடி அரசின் பின்னாலிருந்து ஆதரவுத் தளமாக இந்தியாவின் ஜனநாயகத் தூணான ஊடகங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. பொதுத் துறைகளை தனியார் மயத்திற்கு அளிக்கும் துரோகத்தை வளர்ச்சி என்ற வகையில் கட்டமைக்கிறது இந்தக் கூட்டம்.
ஆர்.எஸ்.எஸ் மற்றறும் இந்துத்துவ சித்தாந்தத்தை பின்பற்றும் உயர்சாதி பார்ப்பனீயக் கூட்டத்தின் கைகளில் கோலோச்சியிருக்கும் ஊடகங்களைக் கைப்பற்ற வேண்டும். மக்களிடம் சென்று சேரும் செய்திகள் சனாதன குப்பைகளுக்குள் இருந்து பொறுக்கி எடுத்ததாக இருக்கக் கூடாது. மக்கள் நலன் பேசுபவர்கள் உருவாக்கும் செய்திக் கட்டமைப்புகளே நாட்டையும் மக்களையும் நல்வழிக்கு கொண்டு சொல்லும்.