‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ (நறுந்தொகை); ‘கல்வியே கற்புடைய பெண்டிற்கு’ (நீதி நெறி விளக்கம்); ‘கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு’ (குறள்);
‘மலை வாழை அல்லவோ கல்வி அதை வாயார உண்ணுவாய் வா என் புதல்வி’ (பாரதிதாசன்) என்று கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்துவது தமிழ் மரபின் ஒரு அங்கமாகவே இருந்துவந்துள்ளது.
2600 ஆண்டுகள் பழமையான கீழடி நாகரிகத்தின் அகழாய்வில் குவிரன், ஆதன் போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன என்பதே தமிழர்களின் கல்வி மீதான ஈடுபாட்டை பறைசாற்றும். பின்னர் சமூகத்தில் பரவிய ஆரிய பார்ப்பன மேலாதிக்கம் நம்மிடம் இருந்து கல்வியை பிடிங்கி நம்மையெல்லாம் கண்ணிருந்தும் குருடர்களாக மாற்றியது. தமிழ் சமூகம் திட்டமிட்டு கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்டது. ஆங்கிலேயர் வருகைக்கு பின்னரே இந்த அவலத்தில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
2600 ஆண்டுகளுக்கு முன்னர் பானை செய்த ஒரு தமிழன், அதில் எழுதும் கல்வியறிவு பெற்றிருந்ததும்; மிட்டா மிராசாக இருந்தாலும், பண்ணையாராக இருந்தாலும் கைநாட்டு வைக்கும் பிந்தைய நிலையும்தான் மனுதர்மம் தமிழ் சமூகத்தில் நிகழ்த்திய பேரழிவு. இதை மாற்றவே சமூக நீதி சிந்தனை நம் மண்ணில் உருவானது. அயோத்தி தாசர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தொடங்கிய சிந்தனை இயக்கத்திற்கு மிகப் பெரிய அரசியல் வடிவம் கொடுத்து மக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார். அவருடைய உழைப்பின் பயனாக திராவிட இயக்க அரசியலின் பிரிக்க முடியாத அடிப்படை அலகாக சமூக நீதி அரசியல் கரு கொண்டுள்ளது.
இந்த பாரம்பரியத்தில் தான் நீதிக்கட்சி தொடங்கி திமுக, அதிமுக என அனைத்து அரசியல் கட்சிகளும் கல்வியை சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் பரப்புவதில் தீவிரமான பங்களிப்புகளை செய்துவந்துள்ளன. இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல் சமூக நீதி சிந்தனையின் அடிப்படையிலேயே மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கம் என்பது தமிழ் நாட்டில் தான் அதிக அளவில் முன்வைத்து நடைமுறைபடுத்தப்படுகிறது.
இந்த சிந்தனை பின்புலத்தில்தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்களிடம் கல்வி பரவலாக்கத்தை உறுதி செய்ய பள்ளியிலேயே உணவளிக்கும் திட்டங்கள் நீதிக்கட்சி காலத்தில் தொடங்கி தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் செய்தனர், செய்துவருகின்றனர்.
பள்ளியில் மாணவர்களுக்கு உணவு அளிப்பதென்பது பல அரசியல் தலைவர்களால் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களை அடைந்து மதிய வேளை சத்துணவு திட்டமாக (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்) தற்போதும் தொடர்ந்து வருகிறது. இந்த திட்டத்தில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் முட்டையை உணவோடு சேர்த்து கொடுப்பது, முட்டையின் எண்ணிக்கையை உயர்த்துவது, முட்டை விரும்பாதவர்களுக்கு வாழைப்பழம் கொடுப்பது என்று மாற்றி மாற்றி பல முன்னேற்றங்களை செய்தனர். இந்நிலையில் தான் தற்போதைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி என்று காலை வேளையிலும் பள்ளியில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்று திமுக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரை இந்த திட்டங்களின் அடிப்படை நோக்கம் என்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மாணவர்களை பள்ளிக்கு வரவைப்பதுதான்.
அதனையொட்டி, தினமலர் பத்திரிக்கையில் “மாணவர்களுக்கு டபுல் சாப்பாடு. ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று முதல் பக்க செய்தி வெளியிடப்பட்டது. சமூக நீதி அடிப்படையிலான இந்த செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாத பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிகளின் உள்ளக்குமுறலே தினமலரின் அச்செய்தியாக வெளிப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பற்றி கேவலமான செய்தி வெளியிட்ட அந்த பார்ப்பன திமிரை ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்து நின்று வினையாற்றியது தான் பெரியார் இந்த மண்ணில் விதைத்த அரசியல்.
தற்போது இந்த காலை உணவு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பைத் தான் நேரடியாக தனியாரிடம் ஒப்படைக்க துணிந்துள்ளது சென்னை மாநகராட்சி!.. கடந்த 29-11-2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் தலைமையில் மாமன்ற பேரவை நடைப்பெற்றது. இதில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 358 பள்ளிகளில் ஓராண்டுக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 65,030 மாணவ மாணவிகள் பயன்பெற்றுவரும் காலை உணவுத் திட்டத்தை `வெளிமுகமை (Outsourcing) மூலம் செயல்படுத்த ஒப்பந்தம் கோருவதற்கு அனுமதியளிக்கும் மூன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சி வார்டு உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையே அவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் ‘தமிழ்நாடு வேலை நேர சட்ட திருத்த மசோதா- 2023’ ஐ அறிமுகப்படுத்தியதி. பின்னர் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக அதை திரும்ப பெற்றது. அதுபோலவே சென்னை மாநகராட்சி இதில் பின்வாங்கி உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் 30-11-23 அன்று சென்னை மாநகராட்சி அளித்த விளக்கத்தில் (செ.வெ.எண் 447) தனியாரிடம் கொடுத்தால் எவ்வளவு செலவாகும் என்று அறியவே இந்த முயற்சி என்கிற வகையில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என்ற எந்த உறுதியும் அளிக்காதது மூலம் சென்னை மாநகராட்சி இதில் பின்வாங்கவில்லை என்பதே வெளிப்படுகிறது.
காலை உணவுத் திட்டத்தைத் தனியார் மூலம் செயல்படுத்த விரும்பும் இந்த தீர்மானத்தில் தனியாருக்கு வழங்க இருக்கும் சலுகைகள் இதுவரை யாருமே கேள்வி படாத ரகம்!. அதாவது சென்னையில் தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் மையங்களில் (Kitchen Centres) 13 மையங்களை தனியார் பயன்படுத்திக் கொள்ளலாம்; இந்த கட்டிடத்தின் பராமரிப்பு செலவு, குடிநீர், இது இல்லாமல் சமையல் பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு, மின்சாரம் போன்ற அனைத்தையும் மானியமாக சென்னை மாநகராட்சியே ஒப்பந்ததாருக்கு கொடுக்கும். இப்படி அனைத்தையும் அரசு கொடுத்த பிறகு தனியாருக்கு அதில் செய்ய என்ன வேலை இருக்கிறது?. ஏன் இப்படி ஒரு ஒப்பந்தம்?, யாருக்காக இந்த ஒப்பந்தம்?.
தற்போது நடைமுறையில், அம்மா உணவகங்களில் உள்ள சுய உதவிக் குழு பெண்களை பயன்படுத்தியே தமிழ் நாடு முழுவதும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையிலும் அவ்வாறே நடைமுறை படுத்தப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு ரூபாய் 4000/- ஊதியம் வழங்கப்படுகிறது.
காலை உணவு திட்டத்திற்கு முன்னோடியான திட்டமாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மதிய சத்துணவு திட்டம் தமிழ்நாடு அரசின் சத்துணவு ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. திட்டம் தொடர்பான இத்தனை ஆண்டுகால துறை சார்ந்த அறிவும், அனுபவமும் தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது. அதேபோல் களத்தில் திட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்தும் பணி அனுபவம் சத்துணவு ஊழியர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில் ஏன்? மகளிர் சுய உதவிக் குழு பெண்களை பயன்படுத்தி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது.
ஒருவேளை திட்டத்தை எப்பொழுதும் வேண்டுமானாலும் தனியாரிடம் ஒப்படைக்கத்தான் தமிழ்நாடு அரசு, மகளிர் சுய உதவி குழுக்களின் பின் ஒளிந்து கொண்டுள்ளதோ என்பதை தான் சென்னை மாநகராட்சியின் செயல் அம்பலப்படுத்தியுள்ளது!.
மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது தான் நோக்கம் என்றால் ஏன் அவர்களுக்கு சத்துணவு ஊழியர்கான பணியாணை கொடுத்து, சத்துணவு ஊழியர்களைக் கொண்டே இந்த திட்டத்தையும் நடத்தியிருக்கலாமே?.
அரசு பள்ளிகளில் படித்து சத்துணவு திட்டத்தில் உணவு உண்ட பல தமிழர்கள் இன்று அரசு ஊழியர்களாக, ஐஏஎஸ், ஐபிஎஸ், இன்ஜினியர், மருத்துவர் என உலகின் பல்வேறு இடங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். இன்று சிறிதளவேனும் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பரிவு மாணவர்கள் பலர் சத்துணவை கடக்காமல் வந்திருக்க மாட்டார்கள்.
2020-2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் இந்திய சராசரி(Gross Enrolment Ratio-GER) 27.3% யை விட தமிழ் நாட்டின் சராசரி (49.3%) அதிகம். அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. அதுமட்டுமல்ல உயர் கல்வி கற்கும் எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்களில் முதன்மை வகிக்கின்றது. அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளாவின் சராசரி கூட 39.8% தான். பள்ளி கல்வி முடித்த 18 முதல் 23 வயது உடைய மாணவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் எவ்வளவு பேர் உயர் கல்வி கற்கின்றனர் என்பது தான் இந்த GER.
இந்த தரவுகளில் இருந்து தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளி கல்வி இடை நிற்றல் மற்ற மாநிலங்களை விட குறைவு என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி என்றால் இந்த சமூக முன்னேற்றத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சத்துணவு திட்டத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் இருக்கும் பங்களிப்பு கவனத்திற்கு உரியது. அதுவும் தமிழ் நாடு சத்துணவு ஊழியர்கள் முழுமையான அரசு ஊழியர்கள் கிடையாது. சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale) இருக்கும் பகுதி நேர நிரந்தர ஊழியர்கள். தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர் காலி பணியிடங்கள் நிரப்பாமல் உள்ள நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடைமுறைப்படுத்துவது எப்படி சமூக நீதியாகும். மாறாக மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சத்துணவு ஊழியர் வேலைவாய்ப்பு கொடுப்பது தான் சமூக நீதி சிந்தனையின் அடிப்படையாக இருக்க முடியும். சத்துணவு ஊழியர்களாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்களில் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போன்ற சங்கங்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களே ஏற்று நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். காலை உணவுத் திட்டத்தையும் சத்துணவு திட்டத்தோடு இணைப்பதன் மூலம் சத்துணவு ஊழியர்கள் முழு நேர அரசு ஊழியர்களாக மாறும் வாய்ப்பும் உருவாகும்.
சென்னை மாநகராட்சி, கடந்த அதிமுக ஆட்சியில் (முன்னாள் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்) மாநகராட்சிப் பூங்களின் பராமரிப்புப் பணிகள் மற்றும் மாநகராட்சித் துப்புரவு பணிகளையும் தனியாரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாநகராட்சிகளை விட சென்னை மாநகராட்சி தனித்துவமானது. இங்கு தொடர்ந்து அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தனியார் வசம் ஒப்படைப்பது மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துவது போன்ற செயல்பாடுகள் மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஒருபோதும் தனியார் சிறப்பாக நடத்திவிட முடியாது. தனியாருக்கு லாபம் ஒன்றே நோக்கம். அரசு கட்டமைப்பு ஒன்றே மக்கள் நலன் சார்ந்து இயங்க முடியும். அதை தமிழ் நாடு கொரோனா பேரிடர் காலங்களில் பட்டவர்த்தனமாக நிரூபித்துள்ளது. இந்த கட்டமைப்பு திராவிட அரசுகளின், குறிப்பாக திமுகவின் சாதனையாக திமுக பெருமை கொண்டது. அந்த வகையில் தற்போது நடைபெறுவது சமூக நீதி சிந்தனையின் அடிப்படையிலான ‘திராவிட மாடல் அரசு’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.
நிர்வாக ரீதியாக சென்னை மாநகராட்சி தனி அதிகார மையமாக இருப்பது என்பது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இடையூறு இல்லாமல் இருப்பதற்கான ஏற்பாடுதான். ஆனால் இதனை சென்னை மாநகராட்சியின் அதிகார வர்க்கமும், ஆட்சி மன்றமும் அப்படி பார்ப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக சென்னை மாநகராட்சி செயல்படுகிறதா. இல்லை தமிழ்நாடு அரசின் கொள்கையே தனியார்மயம் தானா என்ற கேள்வியே எழுகிறது!. சனாதன சங்பரிவார் கும்பல்கள் தமிழ்நாட்டை குறிவைத்துள்ள நிலையில் தனியாருக்கு எந்த காலத்திலும் இது போன்ற திட்டங்களை கொடுக்க மாட்டோம் என்பதை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.