Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

தமிழ்தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா

தமிழர் அரசியலை தெளிவுபடுத்திய விழாவாக தமிழ்த் தேசிய முன்னணியின் முப்பெரும் விழா எழுச்சியுடன் திருச்சியில் நடந்தது. தந்தை பெரியார், தலைவர் பிரபாகரன், அண்ணல் அம்பேத்கரை ஓரணியாக இணைக்கும் கருத்தியலை நிகழ்வில் கலந்து கொண்ட தலைமைகள் பேசினர். மூன்று தலைமைகளை இணைக்கும் இந்த முப்பெரும் விழாவை நடத்திய தலைமைகளின் சிறப்புரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.  

உலகத் தமிழினத்தின் அடையாளமான தேசியத் தலைவரை, போலி தமிழ் தேசியவாதிகளான நாம் தமிழர் கட்சியினர் தங்களை வளர்த்துக் கொள்ளும் கருவியாகவே உயர்த்திப் பிடிக்கின்றனர். தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழ்நாட்டின் உரிமைக்குப் போராடிய பெரியாரை வந்தேறி, தெலுங்கன் என கொச்சைப்படுத்தும் அரசியலை செய்கின்றனர். மனிதர்களை சாதியால் பிரித்த ஆரியத்தின் மனுதர்ம சட்டத்தை உடைத்து ஒவ்வொரு தனி மனிதருக்கும் சனநாயக உரிமையை உறுதி செய்த அம்பேத்கரை அன்னியர் என்கின்றனர். இவர்களின் போலித்தனத்தை வெகுமக்களிடையே அம்பலப்படுத்தி, இம்மூன்று தலைமைகளையும் ஓரணியாக இணைத்து, உண்மையான தமிழ்தேசியத்தின் கூறுகளை எடுத்துரைக்கும் அரசியல் களம் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது. இந்த நிலையை உணர்ந்து, இந்த வெற்றிடத்தை நிரப்பும் வண்ணமாக மே 17 இயக்கம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று ஜனநாயக சக்திகளும் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். மூன்று தலைவர்களை முன்னிறுத்தி இந்த முப்பெரும் விழாவை திருச்சியில் நடத்தினார்கள். 

தமிழ் தேசியத்தின் விடிவெள்ளியாம் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள், இந்திய ஒன்றிய அரசியல் சாசனத்தில் சாதியை நிலைநிறுத்திய பிரிவுகளை தந்தை பெரியார் பெரும் தொண்டர் படையுடன் எரித்த நாள், இந்திய ஒன்றியத்தில் ஜனநாயக உரிமையை நிலைநாட்டிய அரசியல் சாசனத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்த நாள் என இம்மூன்று சிறப்பான நாளுக்கும் உரியது நவம்பர் 26-ம் நாள். இதனை வெகு சிறப்பாக கொண்டாடும் நோக்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டணியும், உண்மையான தமிழ்த் தேசியம் மலர்வதை நோக்கமாகக் கொண்ட முற்போக்கு அமைப்புகளும் கைக்கோர்க்க இம்மாநாடு ஆரம்பமானது.  

இவ்விழாவை  மே 17 இயக்கம், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக மக்கள் கட்சிகளின் தோழர்கள் ஒருங்கிணைத்தனர். எழுச்சிப்பாடகர் புதுவை சித்தன் இசைக் குழுவினரின் அதிரடியான பாடல்களுடன் நிகழ்வு துவங்கியது. மாநாட்டு மேடையில் இருந்த தலைவர்களுடன் அன்னை அற்புதம் அம்மா, தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளுக்கான கேக்கினை வெட்டினார்.

கூடியிருந்த மக்கள தேசியத் தலைவரின் உருவப்படத்தை ஏந்திப் பிடித்து உணர்ச்சி முழக்கத்தில் வாழ்த்தினர். தலைவர் பிரபாகரன், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் முழு உருவப் பதாகைகளை மக்கள் பார்த்து களித்தனர். அந்த வீதியையே மூவரின் முழு உருவ அட்டைப் படங்கள் அலங்கரித்தன. 

இந்நிகழ்வின் இடையே, மே 17 இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் விக்னேசு – ஜீவஜோதி ஆகியோரின் சாதி மறுப்பு இணையேற்பு விழாவும் அற்புதம் அம்மா தலைமையில் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் எளிமையாக மணமக்கள் உறுதியேற்புடன் இணையேற்பு நடந்தது. திரண்டிருந்த மக்கள் மணமக்களை வாழ்த்தினர்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் ஒவ்வொருக்கும் சிறப்பு செய்யப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மே 17 இயக்கத் தோழர் கொண்டல் சாமி தொகுத்து வழங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராயல் ராஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரேடியோ வெங்கடேசன் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார். பெரியார் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தோழர் செல்வன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா ஆகியோர், இந்த தமிழ் தேசியக் கூட்டணி எதிர்கால தமிழகத்திற்கு விடியலாக அமையும் என வாழ்த்தினர்.

அடுத்தபடியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் பசும்பொன் பாண்டியன் அவர்களாற்றிய உரையில், போலி தமிழ்த்தேசியம் பேசுகிற சீமான், புலிகளின் கொடியையும், பிரபாகரன் படத்தையும் பயன்படுத்தக் கூடாது, அதைத் தடுக்க சூளுரை எடுப்போம் என்றார். விடுதலை சிறுத்தைகளின் மூத்த தமிழ்த் தேசிய செயல்பாட்டாளரான ஐயா சே. தமிழ் வேந்தன் அவர்கள், வெளிநாட்டுக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட தமிழர்களுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும் என தோன்றியவரே பிரபாகரன் எனவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயக்கமாக செயல்பட்டு மூன்று தலைவர்களையும் கொச்சைப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம் எனவும் உரையாற்றினார்.

தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளின் தலைவர் மங்கையர் செல்வன் அவர்கள் பேசுகையில், 1955-ம் வருடமே இந்த அரசியல் சட்டத்தை கொளுத்தும் முதல் ஆளாக நானிருப்பேன் என்று பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சொல்லியதும், 1957-ல் பெரியார் சாதியத்தை இந்த அரசியல் சட்டம் பாதுகாக்கிறது எனக் கொளுத்தியதும் முரண்பாடல்ல, பிரபாகரனின் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்தில் சாதிய முரண்பாட்டை கலை, பண்பாட்டு பிரிவின் மூலம் நாடகங்களை நடத்தி களைந்தார்கள் எனவும், தமிழ் தேசியக் கூட்டணி இவர்களின் இலட்சியத்தை நோக்கி வெற்றிநடை போடும் எனவும் வாழ்த்தினார்.

மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையா பேசுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களின் நலனுக்காகவும், இயற்கை வளங்களை காப்பாற்றவும் அன்றாடம் களத்தில் போராடும் திருமுருகன் காந்தி போன்ற தோழர்கள் தமிழக அரசியலுக்குத் தேவை என்று எங்கள் தலைவர் வைகோ அவர்கள் பலமுறை கூறியதையும், உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் அடையாளமான பிரபாகரனை, மலினப்படுத்துவதால்தான் நாம் தமிழர் கட்சி விடுதலைப் புலிகளின் கொடியை பயன்படுத்த தகுதியற்றது என திருமுருகன் காந்தி கூறியதாகவும் பேசினார். தமிழ் தேசியக் கூட்டணியின் நோக்கத்திற்கு உறுதுணையாக என்றும் இருப்போம் என சிறப்புரை ஆற்றினார்.

தேவேந்திர குல மக்கள் முன்னேற்றப் பேரவையின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் பேசும் போது, மேடையில் உள்ள தலைவர்கள் நட்பு கிடைத்த பிறகுதான் புத்தகம் படிக்கிற பழக்கமே வந்தது, அனைத்து சமூகத்துக்காகவும் போராடும் எண்ணமும் ஏற்பட்டது எனவும் இயற்கை வளத்தையும், மக்களையும் பாதுகாக்கும் இந்தத் தலைவர்களை பாதுகாப்போம் என தமிழ் தேசியக் கூட்டணித் தலைவர்களை பாராட்டிப் பேசினார்.

தமிழர் விடியல் கட்சியின் இளமாறன் அவர்கள் பேசுகையில், சீமானுக்கு முன்பு வரை வேறுபாடுகள் இன்றி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்களை தெலுங்கன், கன்னடன், மலையாளி என்று சீமான் பிரித்ததாகப் பேசினார். ஆதித்தனார் குழுமத்தில் இருந்த நாம் தமிழர் என்கிற கட்சியின் பெயரை பேசி வாங்கி தந்தவர் துக்ளக் குருமூர்த்தியே எனவும், வந்தேறி அரசியலுக்குப் பிறகு தலித்தியத்திற்கு எதிராகவும், அதன் பிறகு இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகவும் சீமான் பேசுவதை அம்பலப்படுத்தினார்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர், நாகை திருவள்ளுவன் பேசிய உரையில், பெரியாரை கோட்பாட்டு அரசியலை சொல்லி வீழ்த்த முடியாது என்று தெலுங்கன் வந்தேறி என்று கொச்சைப்படுத்தி வீழ்த்த நினைக்கிறார்கள் எனவும், இந்த மூவர் கூட்டணியில் தாங்கள் இல்லை என்றாலும், தனித்தனியாக கூட்டணியில் இருப்பது போலவே, பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணியில் இல்லை என்றாலும் மறைமுகமாக இருவரும் கூட்டணியில் இருப்பதாக சீமான் அரசியலை தோலுரித்தார். பக்தியை வைத்து தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாத பாஜக, அதற்கு காரணமான பெரியாரியத்தை அழிக்க சீமானை முன்னிறுத்துகிறது. இதனை அடையாளம் காண்போம். தமிழர் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணியுடன் தமிழ் புலிகள் கட்சியும் உறுதுணையாக நிற்கும் என்று ஆதரவாகப் பேசினார்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு அவர்களாற்றிய உரையில், சாதி, மத சமத்துவத்தை, தனி மனித உரிமையை உறுதி செய்த அம்பேத்கருக்கு நேர்மாறான அரசே இன்றிருப்பதாகவும், பகுத்தறிவு ஊட்டிய பெரியாரால் உரிமை பெற்ற நவீன சமூகம் 99.99% மூடத்தனத்திற்கு இரையாகி இந்த மண்ணை சேராதவர்களின் கோட்பாட்டுக்கு இரையாகி வருவதாகவும் பேசினார். உலகில் எந்த இனமும் செய்திராத தியாகத்தை செய்த விடுதலைப் புலிகளின் கனவு நிறைவேற்ற, பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கைகளை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபட உறுதியேற்போம் என்றார்.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சிகளின் தலைவர் குடந்தை அரசன் ஆற்றிய உரையில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெரியார் போராடிய பிற்படுத்தப்பட்டோர் வகுப்புரிமை, பெண்கள் உரிமை, பார்ப்பனிய, சாதிய எதிர்ப்பு போன்ற கோரிக்கைகளுக்காகவே தன் அமைச்சர் பதவியை உதறினார். இருவரும் ஒரே புள்ளியில் இணைந்து போராடினார்கள். ஆனால் இன்று குடி தேசியம் பேசி தமிழ் தேசியத்தின் அரசியல் வரலாற்றை பின்னுக்கு கொண்டு செல்கிறார்கள். இலங்கை சட்டம் தமிழர் உரிமைகளை மறுத்தது. அதனால் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். இங்கு அனைவருக்கும் உரிமை தந்த அம்பேத்கரின் சட்டத்தினால் நாட்டில் 22.5 % உள்ள பட்டியலினத்தவர் ஆயுதம் ஏந்தாமல் இருக்கிறார்கள். இங்கும் அம்பேத்கரின் சட்டம் இல்லாமல் போயிருந்தால் பிரபாகரன் வழியில் 22.5 % மக்களும் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள். இந்து தேசமாக இதனை ஆக்க முயற்சிப்பதை எதிர்க்க பெரியார், அண்ணல், பிரபாகரன் தேவைப்படுகிறார்கள் என சிறப்புரை ஆற்றினார். 

அடுத்ததாக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். செரீப் அவர்கள் ஆற்றிய உரையில்,  எதிர்காலத்தில் யார் முதல்வர் என்று முடிவு செய்யும் நிலையில் நாங்கள் இருப்போம். எனது தோட்டத்தின் அருகில் 30 க்கும் மேற்பட்ட ஏகே 47 எடுக்குமளவு விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக இருந்தேன். அதற்காக தொடர்ச்சியாக அதிகாரிகள் அளித்த சித்திரவதைகளை அனுபவித்தேன். இதையெல்லாம் சொல்லி முதல்வர் பதவிக்காக ஆசைப்படவில்லை. இங்கு யாரும் புலிகள் பேரை சொல்லி வசூல் செய்தவர்கள் இல்லை. புலிகளுக்கு நிதி கொடுத்தவர்கள். விடுதலைப் புலிகளின் கொடியைப் பயன்படுத்த ஒழுக்கம், நேர்மை, நாணயம் வேண்டும். இவையெதுவும் இல்லாத சீமானுக்கு அதைப் பயன்படுத்த தகுதியில்லை. சீமான் போன்றவர்களை அம்பலப்படுத்த தமிழ் தேசியத்தை தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் தமிழ் தேசியக் கூட்டணியை துவக்கியிருப்பதாக விளக்கவுரை ஆற்றினார்.

முப்பெரும் விழாவின் இறுதியுரையாக சிறப்புரை ஆற்றிய மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தமிழ் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

வெள்ளையர்கள் தமிழர்களை கூலியாக பல தேசங்களுக்கு கொண்டு சென்றாலும் தமிழர்கள் சாதியை தூக்கிக் கொண்டு போனதால் தான் தமிழர்களிடம் பேரெழுச்சி சாத்தியமில்லாமல் போனதை தெளிவுபடுத்தினார். சாதிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இந்து மதக் கோட்பாட்டின் அடிப்படையில் கடவுள் சொன்னதாக நம்ப வைக்கப்பட்டு சாதியாக பிரிந்து போனார்கள், பார்ப்பான் ஒழிய வேதமும், கடவுளும் ஒழிய வேண்டும் என பாடுபட்டவரே பெரியார்.  தமிழன் என்கின்ற உணர்வு வருகின்றவர்களுக்கு தான் தமிழ் தேசிய சிந்தனை வரும், அவன்தான் விடுதலையை வென்றெடுப்பான் என்றும் விளக்கினார்.

இந்த மண்ணில் மீண்டும் சாதி மத மோதலை ஏற்படுத்தும் வேலையை ஆர்.எஸ்.எஸ், பிஜேபி செய்கிறது. அதைப் போலவே நம்மை பின்னுக்கு இழுக்கும் வேலையை நாம் தமிழர் கட்சியும் செய்கிறது. தமிழர் நலனுக்கு போராட வேண்டுமென்றே அந்த கட்சியில் இளைஞர்கள் சேர்கிறார்கள். ஆனால் அவர்களிடம் திராவிடத்தை தீயதாக சித்தரிக்கும் வேலையை சீமான் திட்டமிட்டு செய்கிறார். திராவிடம் போராடி வாங்கிக் கொடுத்த இடஒதுக்கீடு, சாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என இவற்றில் எதை ஒழிக்க வேண்டுமென சொல்கிறார் சீமான்? திராவிட எதிர்ப்பு என்றால், ஆரிய ஆதரவாளராக இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதனால்தான் சீமானை இந்துத்துவத்தின் கைக்கூலி என்கிறோம். திராவிடம் முதல்படி என்றால் தமிழ் தேசியம் இரண்டாம் படி. முதல் படி ஏறாமல் இரண்டாம் படி போக முடியாது.

ஆரிய நீக்கம் செய்யப்பட்ட தமிழினம் இந்திய தேசிய மறுப்புடன், ஏகாதிபத்திய எதிர்ப்புடன், சுயநிர்ணய உரிமையுடன், தற்சார்பு பொருளாதாரத்துடன், வர்க்க பேதம் ஒழிக்கும் நோக்கத்துடன் எழும். அதுதான் தமிழ் தேசியம். ஆரியம் ஒழிக்க திராவிடம் தேவை. ஆரியம் ஒழிந்த இனத்தை உயர்த்திப் பிடிக்க தமிழ் தேசியம் தேவை.

திராவிடனா தமிழனா என்று கேட்பது ஒருவரைப் பார்த்து ஆணா, மனிதனா என்று கேட்பதைப் போன்றது. திராவிடம் ஒரு அறிவியல் சொல். ஆரிய வருகைக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்தவர்களை திராவிடர்கள் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இங்கு வாழ்ந்த பூர்வகுடிகளுக்கு திராவிடர்கள் என்று பெயர். அவர்கள் பேசிய மொழி தமிழ். இதில் சமஸ்கிருதம் கலந்ததனால் பிற மொழி மக்களாக மாறிப் போனார்களே ஒழிய, அவர்களும் நம் சகோதர்களே. அந்த மொழிகளும் திராவிட மொழிகளே. ஆரிய எதிர்ப்புக்கு நம் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு சொல்லே திராவிடம் என திராவிடம் மற்றும் தமிழ் தேசியத்தின் ஒப்புமைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

விடுதலைப் புலிகளை அபகரித்து, அவர்களின் கோட்பாடுகளை அப்புறப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் அரசியலை தோலுரித்தார். சீமானால் ஆமைக்கறி, அரிசிக்கப்பல் கதைகளை கேட்டு வளர்பவர்களுக்கு மொசாத், சிஏஏ, ரா போன்ற உளவுப் படைகளையே புலிகள் அச்சப்படுத்திய கதை எப்படி தெரியும்? புலிகளின் பிரதேசத்திற்குள் அனுப்பப்பட்ட சிஏஏ உளவாளியை புலிகள் சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட துணிச்சலை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டதை மே 17 இயக்கம் கண்டறிந்தது. உலகத்தின் அரிய தாதுவான இலுமினைட்டை 30 ஆயிரம் டன் அளவிற்கு அமெரிக்காவின் இரு கப்பல்கள் கொண்டு சென்றதை தடுத்து நிறுத்தினார்கள் புலிகள். 1997-ல் நடந்த இதையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இதற்கு பிறகு 98-ல்தான் அமெரிக்கா விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்தது. தாய் மண்ணில் ஒரு பிடி மண்ணையும் விட்டுக் கொடுக்காத அவர்கள் எங்கே? தமிழ்நாட்டின் தூத்துக்குடி மணலைக் கொள்ளையடிக்கும் வைகுண்டராசனுடன் கைக்கோர்த்துக் கொண்டிருக்கும் சீமான் எங்கே? என சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலைப் புலிகளின் கோட்பாட்டிற்கும் இடையேயான மலையளவு வித்தியாசத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

இம்மூன்று தலைவர்களை ஏதோ ஒரு தலைவரைப் பிரித்துப் பார்த்தாலும் அவர்களிடத்தில் நேர்மையற்ற தன்மை இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இம்மூன்று தலைவர்களையும் கையிலெடுத்து நமக்கான அரசியலை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும், போலித் தமிழ் தேசியத்திற்கு இரையாகும் இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கான கடமை என்று நிறைவுறை ஆற்றினார் திருமுருகன் காந்தி.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் டேவிட் ஆரோக்கிய ராச் அவர்கள் நன்றியுரையாற்ற, முப்பெரும் விழா முடிவு பெற்றது. தமிழ் தேசியக் கூட்டணியின் பயணமும் போலித் தமிழ்த் தேசியத்தை உடைத்து உண்மையான தமிழ் தேசியம் படைக்கும் பயணத்தை இனிதே துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!