குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்ககோரி மே 17 ஊடக சந்திப்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வரும் “குருமன்ஸ்” சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றர். அரசு அதிகாரிகள், மானுடவியல் வல்லுநர்கள் உள்ளிட்டோர் பல கட்ட கள ஆய்வுகளை நடத்தி பழங்குடி வகுப்பிற்கான அவர்களின் நிலையை உறுதி செய்த பின்னரும் அவர்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் இதுவரை கிடைக்கவே இல்லை.

மேலும் இச்சமூக மக்கள் அவர்கள் குல வழக்கப்படி செய்யப்படும் வழிபாடு முறைகளை, அவர்களது பாரம்பரிய குல தொழிலையும் விளக்கியும், பல கட்டமாக ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியும் எந்தவித பலனுமில்லை. அவர்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர்கள் இன்றுவரை மறுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடக்கின்றபோது, அதிகாரிகள் தற்காலிகமாக சிக்கலைத் தள்ளி வைப்பதற்காக பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளிக்கின்றனர். பின்னர் அதனை கிடப்பில் போட்டு நிராகரித்து வருகின்றனர் அரசு அதிகாரிகள்.

பழங்குடிகளுக்கு சாதி சான்றிதழ் மற்றும் வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக சந்திப்பு செப்டம்பர் 19, 2024 அன்று நடந்தது. அதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேசிய தகவல்கள்:

“திருவண்ணாமலை மாவட்டத்தில் ’குருமன்ஸ்’ பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதை அதிகாரிகள் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறார்கள். இந்த பழங்குடியின மக்கள் இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும் என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். அதிகாரிகள் அரசர்களை போன்ற மனநிலையுடன் நடந்து கொள்வதை பல காலமாக கவனித்து வருகிறோம். அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ, அதை செயல்படுத்துவது தான் அதிகாரிகளின் வேலை. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் சமூகநீதி குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல், ஏழை எளிய மக்களை வஞ்சிப்பது தொடர்ந்து வருகிறது.

இந்த பழங்குடி மக்கள் குறித்த வரலாற்று ஆவணம் இருக்கிறது. எட்கர் தர்ஸ்டன் என்ற மானுடவியல் ஆய்வாளர் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களை பற்றி பதிவு செய்திருக்கிறார். அதையும் சேர்த்துதான் இவர்கள் ஆய்வறிக்கை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்று சமூகநீதி குறித்தோ தந்தை பெரியார் குறித்தோ அண்ணல் அம்பேத்கர் குறித்தோ எந்த அறிவும் இல்லாமல், ஏழை எளிய  மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதை தாமதப் படுத்துவதில் அதிகாரத் திமிர் வெளிப்படுகிறது. இதுபோன்ற அதிகாரிகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. இதற்காகத்தான் நாம் ஓட்டு போட்டு எம்.எல்.ஏக்களையும் (MLA) எம்.பிக்களையும் (MP) அமைச்சர்களையும் தேர்ந்தெடுக்கிறோம். அதிகாரிகள் முறையாக வேலை செய்யாமல் இருந்தாலோ ஊழல் செய்தாலோ அவர்களை பணியிடை நீக்கம் அல்லது பணியிடை மாற்றம் செய்வது ஆட்சியாளர்களின் பொறுப்பு மற்றும் கடமையாகும். 

மக்களுக்கான கொள்கை திட்டங்கள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை சரி பார்க்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது. இந்த பழங்குடியின மக்கள் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக தங்கள் நிலைமையை சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த முதல் பட்டதாரி இங்கே வந்திருக்கிறார். இவருக்கு முறையான சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர் பட்ட மேற்படிப்பு படிக்க இயலாமல் போயிருக்கிறது. இவரால் தொழிற்கல்வி கற்க இயலாமல் இருக்கிறது. இதற்குக் காரணம் அதிகாரிகளின் செயலற்ற தன்மை தான்.

ஆனால் இந்த அதிகாரிகளோ இட ஒதுக்கீட்டின் மூலமாக, அவர்களுக்கு முறையாக சாதி சான்றிதழ் கிடைக்கப்பெற்றதின் மூலமாக பதவிக்கு வந்தவர்கள். அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் அவர்களுக்கான சமூக நீதி உறுதி செய்யப்பட்டது. ஆயினும் இத்தகைய சமூகநீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்றால் திமுக அரசு உடனடியாக அந்த அதிகாரிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் தான் மக்களின் பிரதிநிதிகள். சமூக நீதி குறித்து தொடர்ச்சியாக பேசி வருகின்ற திமுக அரசு இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்ந்த அமைச்சர் பெருமக்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். திருவண்ணாமலை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும்  இவர்களுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக கிடைக்கவில்லை என்றால் தோழர் குடந்தை அரசன் மற்றும் பிற சனநாயக ஆற்றல்களோடு இணைந்து மே 17 இயக்கமும் இந்த பழங்குடியின மக்களுக்காகப் போராட்டக் களத்திற்கு வரும்.

இந்த அநீதியான செயலை செய்கின்ற அதிகாரிகளின் பெயரோடு அவர்கள் செய்கின்ற அதிகாரத்தன்மையையும் அம்பலப்படுத்துகின்ற போராட்டத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

அதேபோல சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள நரிக்குறவ மக்களுக்கு வீடோ தங்குவதற்கு இடமோ கிடையாது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆட்சியாளர் அவர்களுக்கு நிலம் ஒதுக்கியும் இந்த மக்கள் அங்கே குடியேற விடாமல் ஆதிக்க சாதியினர் விரட்டுகிறார்கள். இது மிகவும் அநீதியானது.

இந்த நிலத்தில் அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்குரிய அதிகாரமும் உரிமையும் அரசியல் சாசனம் கொடுத்திருக்கிறது. எனவே இவர்களுக்கும் தமிழ்நாடு அரசு வீடு கட்டி தருவதற்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கும் கோரிக்கை வைக்கின்றோம். ’கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வாழ வழியின்றி வீதியிலே வசித்து வருகிறார்கள். ஒரு தொகுதியிலே ஓட்டு நிர்ணயிக்க கூடிய அளவில் பழங்குடியின சமூக மக்கள் இல்லை என்பதால் அவர்கள் எளிமையாக நிராகரிக்கப் படுகிறார்கள்’.

எனவே சிறுபான்மையாக சமூகத்தில் இருக்கக்கூடிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நாங்கள் எப்பொழுதும் நிற்போம். பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று மாண்புமிகு முதலமைச்சர் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். பழங்குடியினர் வீடுகளுக்கும் சென்று இருக்கின்றார். எனவே அவரின் கவனத்திற்கு நாங்கள் இந்த கோரிக்கையை கொண்டு செல்ல விரும்புகின்றோம். திமுக அரசு இச்சமயத்திலே உடனடியாக இந்த மக்களுக்கான விடிவை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.”-என்று தோழர் திருமுருகன் காந்தி  கூறினார்.

பழங்குடிகளுக்கு சாதி சான்றிதழ் வீட்டுமனைப்பட்டா வழங்க திருமுருகன் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழ்நாட்டின் குருமன்ஸ் பற்றிய ஒரு இனவியல் ஆய்வு அறிக்கை:

Dr. ப. சுப்பிரமணியம் (இயக்குநர், பழங்குடி ஆராய்ச்சி மையம், மு. பாலாடா, உதகமண்டலம்) அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் குருமன்ஸ் பழங்குடியின மக்களை அடையாளம் காண சிறப்பு ஆராய்ச்சி குழு அமைத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு குருமன்ஸ் பற்றிய ஆய்வு அறிக்கையின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குருமன்ஸ் இனத்தை சேர்ந்த மக்களை குரும்பா, குறும்பர்கள், குறுமனாஸ், ஹெக்கிடி மக்கள், கம்பளி நெசவாளர்கள், பள்ளக்காடு குருமான்கள் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.

இந்த சமூகத்திற்கு குரும்பா என்ற பெயர் செம்மறி ஆடுகளின் பெயரிலிருந்து வந்தது. மேலும் இந்த பெயர் கன்னட மூல வார்த்தையான ‘குரி’ அல்லது ‘குரு’ என்பதிலிருந்து பெறப்பட்டது. கன்னட மொழியில் செம்மறி ஆட்டை குறிக்கும் சொல்லே இது.

அவர்கள் செம்மறி ஆடுகளை வளர்ப்பவர்களாகவும், செம்மறி ஆடுகளின் கம்பளியில் போர்வை தயாரிக்கும் நெசவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்த சமூக மக்கள் முக்கியமாக அவர்கள் பாரம்பரிய தறிகளில் கம்பளி போர்வைகளை நெசவு செய்வதில் வல்லுனர்கள். இவர்களில் சிலர் விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களாக உள்ளனர் மற்றும் இவர்களில் பெருன்பான்மை மக்கள் நெசவு தவிர விவசாய வேலைக்கும் செல்கின்றனர். இன்றும் அங்கு ஆடு மேய்ப்பதும் ஆடுகளின் முடிகளை கொண்டு கம்பளி நெய்வதும் முக்கியத் தொழிலாக உள்ளது. இவர்களில் ஒரு சிலர் ஆசிரியர்களாகவும், அலுவலக உதவியாளர்களாகவும், தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் ஒரு சிலர் பீடி மற்றும் ஊதுவத்தி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தர்மபுரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பரவலாக உள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வசிக்கும் இவர்களின் சமூக மக்களுடன் உறவுமுறைகளையும் கொண்டுள்ளனர். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழியாக தமிழ்நாட்டுக்கு குடியேறியதாகக் கூறப்படுகிறது.

அவர்களின் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் மற்றும் பேச்சுவழக்கு ஆகியவற்றின் அடிப்படையிலான இனவியல் கணக்கு, அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி ஆடுகளுடன் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பு புலம்பெயர்ந்திருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. இது அந்த சமூகத்தின் வயதில் மூத்த தகவலறிந்தவர்கள் வழியாக உண்மை என கண்டறியப்பட்டுள்ளது.

இச்சமூக மக்கள் தங்கள் தாய்மொழியான கன்னட மொழியை தங்களுக்குள் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் தமிழ் பேசும் மக்களிடையே நீண்ட காலமாக இருப்பதால் அவர்களுடன் தமிழ் மொழியைப் பேசுகின்றனர். வயதான ஆண்களும் பெண்களும் கன்னடத்தில் பல தமிழ் வார்த்தைகளை கலந்து பேசுகின்றனர். அவர்களின் உறவுமுறைகள் கன்னட சொற்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளன.

இச்சமூகத்தில் ஆண்கள் அவர்களின் சமூக அடையாளமாக தோள்பட்டையில் பச்சை குத்திக் கொள்கின்றனர், அதோடு நெற்றியில் சிவந்த நிற குங்கும பொட்டும் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஆண்களுக்கு சிறப்பு உடையும் உண்டு, பண்டிகைக் காலங்களில் அவர்கள் வெள்ளை பருத்தி துணியால் ஆன குல்லாய், மஞ்சள் நிற இடுப்பு துணி மற்றும் சிவப்பு நிற வேட்டியை அணிகின்றனர்.

அவர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி தவிர்த்து மற்ற அசைவ உணவை உண்பவர்கள், குறிப்பாக பறவைகள், முயல்கள் இறைச்சியை விரும்பி உண்பவர்கள். அங்கு ஆண்கள் தொடர்ந்து மது அருந்துபவராக இருக்கின்றனர். அவர்களின் முக்கிய உணவு ராகி. அது தவிர கம்பு, அரிசி மற்றும் நிலக்கடலை எண்ணையை சமையலுக்காக பயன்படுத்துகின்றனர்.

இக்குரும்பர் சமூகம் பல குலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதை அவர்கள் ’மனேகட்டு’ என்று அழைக்கிறார்கள். இதன் மூலம் குலங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் பெயர்கள், அவர்களின் உடன்பிறப்புகள் மற்றும் துணை குலங்கள், அந்தந்த குலத்தின் தெய்வங்கள் மற்றும் குலத் தெய்வத்தின் வழிபாட்டுத் தலம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் குலப் பெயர்களும், குறிப்பிட்ட பகுதியில் அதற்கேற்ற தெய்வ வழிபாடும் குரும்பர் சமூக அமைப்பை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த குலங்கள் அவர்களிடையே திருமண உறவுகளை ஒழுங்கு படுத்துகின்றன. குரும்பர் சமூகத்தின் சிறப்பியல்பு என்பது அந்தந்த குலத்தின் பெயராகும்.

இங்கு ஒரு நபரின் அடையாளம் பெரும்பாலும் அவரது குலத்தின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. இந்த சமூகம் ஆணாதிக்க சமூகம் என்பதால், ஆண்களின் குலப் பெயர் அவர்களது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும், ஆனால் பெண்கள் திருமணமானவுடன் அவர்களின் கணவனின் குலப்பெயருக்கு மாறிக் கொள்கிறார்கள். இங்கு கண்டிப்பாக ‘ஒரே இனக்குழுவில் திருமணம் செய்யும்’ அக மணமுறையை பின்பற்றுகிறார்கள்.

அவர்கள் ரத்த சொந்தங்களில், அதாவது தந்தையின் சகோதரி (அத்தை) மகள் அல்லது தாயின் சகோதரன் (மாமன்) மகள், அல்லது தங்கையின் மகளை திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களில் மனைவியின் தங்கையை திருமணம் செய்வதும் வழக்கத்தில் உள்ளது. ஆனால் மனைவியின் அக்காவை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல முன்பெல்லாம் குழந்தைத் திருமணங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள், ஆனால் இப்போது குழந்தை திருமணங்கள் நடைபெறுவது இல்லை.

அவர்களின் திருமணத்தின் சின்னங்கள்–கசுவம்மா அல்லது லக்ஷ்மம்மா தாலி, மிஞ்சி (கால் மோதிரம்), முருகு (மூக்குத்தி) மற்றும் குங்குமம் இடுதலாகும். இச்சமூகம் பாரம்பரியமாக இன்றும் பின்பற்றி வரும் வழக்கம் மணமகளுக்கு விலை வழங்குவது. இது ரூ.12.25 பைசா முதல் ரூ.105.25 பைசா வரையிலும் அதனுடன் நெல், தானியங்கள், பயறு வகைகள், சோளம் மற்றும் ஆமணக்கு விதைகளையும் கொடுக்கின்றனர்.

இங்கு வசிப்பிடத்தின் விதி பெரும்பாலும் தந்தைவழியைச் சார்ந்தது. கணவரின் கொடூரமான நடத்தை, ஆண்மைக் குறைவு போன்ற காரணங்கள் இருப்பின் விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் தங்கள் விவாகரத்து விடயத்திற்காக குரும்பர் பாரம்பரிய சபைக்கு சென்று பிரதிநிதித்துவம் செய்ய உரிமை உண்டு. விவாகரத்து பெற்ற பெண்களின் குழந்தைகள் தந்தையின் பொறுப்பில் வளர்வார்கள். விதவை மற்றும் விவாகரத்து ஆனவர்கள் மறுமணம் செய்யவும் இங்கு அனுமதிக்கப்படுகிறது.

பரம்பரை சொத்துக்களான வீடு, விவசாயம் மற்றும் நெசவு கருவிகள், ஆபரணங்கள் போன்றவைகள் ஆண்களுக்கு மட்டுமே. அப்பாவிற்கு அடுத்து அவரின் மூத்த மகன் தான் குடும்பத்தலைவர்.

பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சடங்குகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மாதத்தில், அவர்களின் கணவர் வீட்டில் ‘பெல்லஹக்குடா – வளைகாப்பு’ விழாவை நடத்துகிறார்கள். குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில், அவர்கள் தங்கள் குல தெய்வப் பிரார்த்தனையாக குழந்தையின் தலை முடியை மொட்டையடித்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இந்த சமூகம் தாய் மாமன் எல்லா விழாவிலும் கட்டாயமாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.

பருவமடைந்த பெண்கள் பதினோரு நாட்கள் தனிக் குடிசையில் தங்க வைக்கப்பட்டு, 11ஆம் நாள் அவர்களை சடங்கு முறையில் குளிக்க வைத்து, அவர்கள் பயன்படுத்திய துணிகளை வண்ணான் (சலவை செய்பவர்) சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் துவைப்பது வழக்கமாக உள்ளது.

திருமணம் (கன்னட மொழியில் ‘மதுவே’) மணமகள் வீட்டில், பச்சைப் பந்தலின் கீழ் பாரம்பரிய சமூகக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. திருமண நாளுக்கு ஒரு நாள் முன்பு மணமகன் மற்றும் மணமகளின் தலையில் மஞ்சள், குங்குமம் மற்றும் பால் கலந்த நீரை ஊற்றி நலங்கு விழா நடத்துகின்றனர்.

திருமண நாளில், மணமகள் குங்குமம் தோய்த்த ஆடைகளை அணிந்த பிறகு, அவருக்கு ஆட்டின் கறுப்பு முடியால் தயாரிக்கப்பட்ட கங்கணம் என்ற நூலை கைகளில் கட்டுகின்றனர். மணமகள் காப்பு (கருப்பு) வளையல்கள் மற்றும் பச்சை குத்திக்கொள்வார்கள். திருமணத்தின் போது மணமகன் தனது கையில் இரும்பிலான கூரிய கருவியான ஜஞ்சட்டியை வைத்திருப்பது ஒரு வழக்கமான அடையாளமாகும். அவர்களின் சமூக தலைவர் ஊர் கவுண்டர், தாலியை எடுத்து மணமகனிடம் வழங்க, அவர் நாவிதர் சமூகம் இசைக்கும் திருமண இசைக்கு மத்தியில் அவர்களின் சமூக போர்வை விரிப்பில் அமர்ந்து மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார்.

விதவை அல்லது விவாகரத்து பெற்றவர்களுக்கு நடக்கும் மறுமணம் முண்டகட்டு என்று அழைக்கப்படுகிறது, இதனை அவர்கள் நள்ளிரவில் நடத்துகிறார்கள், அதில் விதவை அல்லது விவாகரத்து ஆனவர் ஆட்டு எருவில் அமர்ந்து தாலி கட்டுவதும், எந்த இசையும் அல்லது விருந்தும் இல்லாமல் நடத்துவதும் அவசியமாகும்.

அவர்கள் இறந்தவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பட்டியல் சாதி இசைக் கலைஞர்களின் இசைக்கு மத்தியில் அடக்கம் செய்கிறார்கள். 9 நாள் மரண சடங்குகள் நடத்தப்படுகின்றன. குரும்பர்களுக்கு ஒரு சில குடியிருப்புகளில் சொந்த மயானம் உள்ளது, ஆனால் மற்ற பகுதிகளில் அவர்கள் இறந்தவர்களை தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தவிர்த்து பிற சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதைகுழியில் அடக்கம் செய்கிறார்கள்.

குரும்பர்கள் இந்துக்கள். குரும்பரின் முதன்மைக் கடவுள் வீரபத்ரசுவாமி. இவர்களின் ஒவ்வொரு குலங்களுக்கு ஒவ்வொரு குல தெய்வங்கள் உள்ளன. அவர்கள் காசுவம்மா, சிட்டப்பா, பீரப்பா, பதியப்பா, பெலடப்பா போன்ற தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். அவர்கள் புனித யாத்திரையாக சபரிமலை, பழனி, தர்மஸ்தலா, திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். குரும்பர் இன திருவிழாக்களில் ‘சேவட்டம்’ என்று அழைக்கப்படும் அவர்களின் நாட்டுப்புற நடனம் மிகவும் பிரபலமானது.

ஆய்வு முடிவு

மேற்கண்ட ஆய்வின் மூலமாக சமூகக் கட்டமைப்பின் குல அமைப்பு மற்றும் வாழ்க்கைச் சுழற்சி சடங்குகளின் அடிப்படையில், குரும்பா, குரும்பர் மற்றும் குருமன்ஸ் போன்ற அனைத்து பெயர்களும் ஒரே சமூகம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. மேலும் குரும்பா, குரும்பர் மற்றும் குருமன்கள் ஆடு மேய்க்கும் குருமனை ஒத்தவர்கள் மற்றும் அவர்களின் தற்போதைய வாழ்விடம் மற்றும் பாரம்பரிய தொழில் அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

தற்போதைய ஆய்வின்படி, மானுடவியல் முடிவுகள் மற்றும் முந்தைய ஆய்வாளர்களான தர்ஸ்டன், ஏ. ஐயப்பன், கே.எஸ்.சிங் போன்ற எழுத்தாளர்கள் கண்டறிந்த கணிப்புகள் வழியாக, குரும்பா, குரும்பர் மற்றும் குருமன்கள் ஒருவரையொருவர் ஒத்தவர்கள் என்றும் அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.

குருமன்ஸ் என்ற பெயரின் கீழ் இந்த சமூக மக்கள் “பட்டியல் பழங்குடி அந்தஸ்துக்கு தகுதியானவர்கள்” என்று ஆய்வு முடிவு திட்டவட்டமாக கூறுகிறது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் 342-ன் படி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்து ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்துடன் தொடர்புடையது.

இந்த ஆய்வின் மூலம் குரும்பா, குரும்பர் மற்றும் குருமன் ஆகியோர் குருமன்ஸ்க்கு இணையானவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியல் வரிசை எண்.18ன் கீழ் “குருமன்ஸ்” என்ற பெயரில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக அடையாளம் காண தகுதியுடையவர்கள் என்று நான் ஆணித்தரமாக பரிந்துரைக்கிறேன் என Dr. ப. சுப்பிரமணியம் தனது ஆய்வு அறிக்கையை 2019 ஆண்டில் சமர்ப்பித்துள்ளார்.

இதேபோல 2014, 2015 ஆம் ஆண்டுகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க தகுதியானவர்கள் என அறிக்கை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இன்றுவரை அம்மக்கள் சாதி சான்றிதழுக்காக நாள்தோறும் அரசு அலுவலக கதவுகளை தட்டி தட்டி ஓய்ந்து விட்டனர். ஆனால் நீதி தான் கிடைத்த பாடில்லை!.

அவர்களுக்கு சாதி சான்றிதழ் பெற அனைத்து உரிமையும், தகுதியும் இருந்தும் அவர்கள் தொடர்ச்சியாக அலைக்கழித்து வஞ்சிக்கப்படுவது என்பது சமூகநீதி பேசும் தமிழ்நாட்டு மண்ணில் பெருத்த அநீதியாகும். அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க ஆவண செய்ய வேண்டும்! தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »