
‘ஆணவப்படுகொலை தடுப்பு சட்டம்’ குறித்து கடந்த ஆகஸ்ட் 24, 2025 அன்று தோழர் கெளசல்யா அவர்கள் ஒருங்கிணைத்த கருத்தரங்கம் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. ஆணவப்படுகொலை தொடர்பான கள ஆய்வுகள், வழக்குகள், சமூகப் பின்னனி, சாதிய அமைப்புகளின் வன்முறை என பல்வேறு தலைப்புகளில் ஆளுமைகள் உரையாற்றினார்கள். இந்த கருத்தரங்கில் பங்கேற்ற மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் “தோழர் திருமுருகன் காந்தி” அவர்கள் ஆணவப்படுகொலை நிகழ்வதற்கான சமூக பொருளாதார காரணிகள் குறித்து விரிவாகப் பேசினார். மேலும் 2012ல் உருவாக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் சிறப்புக் குழு குறித்தும் அந்த ஆணையம் பரிந்துரைத்த சட்டமுன்வரைவு ஒன்றிய-மாநில அரசுகளால் உதாசீனப்படுத்தப்பட்ட விவரங்களையும் பகிர்ந்து கொண்ட அவர், சாதி ஆணவப்படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டத்தின் அவசியத்தை முன்வைத்து ஆற்றிய உரை:
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கின்ற விதமாக ஒரு சிறப்புச் சட்டம் என்பது, இன்றைய உடனடி தேவையாகவும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கை திட்டமாகவும் இருக்கிறது. இதை வலியுறுத்துகின்ற வகையில் அனைத்து தரப்பு தோழமைகளையும் ஒன்றிணைத்து, இந்த நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுக்கும், தோழர் கௌசல்யா அவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்வில் பங்கெடுத்திருக்கக்கூடிய அனைத்து ஆளுமைகளுக்கும் நான் சார்ந்திருக்கக்கூடிய மே 17 இயக்கத்தின் சார்பாக வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆணவப் படுகொலைகள் குறித்து 2009-ல் அன்றைய உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசுகின்ற சமயத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு அவர், ”இது மாநிலத்தினுடைய அதிகாரத்திற்கு கீழாக வருகிறது. ஏனென்றால் இது மாநிலத்தினுடைய காவல் துறையை கொண்டு கையாளக்கூடிய ஒரு சிக்கலாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அது குறித்தான ஒரு விளக்கத்தை அவர் கூறும்பொழுது, இது பெண்களுடைய உரிமைக்கு எதிராக நடக்கக்கூடிய ஒரு வன்முறையாக பார்க்க வேண்டி இருக்கிறது. சர்வதேச அளவில் ஐநாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தான பட்டியலில், இந்தியாவில் ‘honour killing’ என்று சொல்லப்படுகின்ற ‘ஆணவப்படுகொலை’ என்பது பட்டியலில் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
மேலும் “உலக அளவிலான ஆணவப் படுகொலைகள் பல நாடுகளில் நடக்கின்றன, ஆனால் இந்தியாவில் ஆணவப் படுகொலைகள் நடப்பதில்லை அல்லது இந்தியாவில் ஆணவப்படுகொலைகள் நடந்ததாக எந்த குற்றப்பதிவுகளும் இல்லை, ஏனென்றால் நடக்கக்கூடிய குற்றங்களை அவர்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய சட்ட வரையறைக்குள்ளாக, அந்த வரையறையின் கீழாக மட்டுமே பதிவு செய்து கொள்கிறார்கள். ஆணவப் படுகொலை என்கின்ற தனிப் பிரிவாக எதுவும் இல்லாத காரணத்தினால் சர்வதேச அளவிலே கூட இந்தியாவில் நடக்கக்கூடிய ஆணவப் படுகொலைகள் செய்தியாவதில்லை” என்று ப.சிதம்பரம் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுகின்றார்.
அதற்குப்பிறகு ஆவணப்படுகொலைகளை முன்வைத்து சட்ட ஆணையம் இதற்கான ஒரு ஆய்வு குழுவை உருவாக்கி 2012ல் இதற்கான ஒரு வரைவு ஆவணத்தை வெளியிடுகிறார்கள். அந்த வரைவு ஆவணத்தில் விளக்கமாக ‘இதற்கான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்’ என்பதையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு என்ன ஆனது என்று நமக்கு தெரியவில்லை! வழக்கம் போல அது ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலாக நான் (திரு) பார்ப்பது என்னவென்றால், இந்த சாதி ஆணவப் படுகொலைகள் நடப்பதற்கு, அங்கே நடக்கக்கூடிய சட்ட விரோத பஞ்சாயத்துகள் ஒரு அடிப்படை காரணியாக இருக்கின்றன. இந்த கட்டப் பஞ்சாயத்து அல்லது சமூக/ சாதிசமூக கட்டமைப்புதான் இந்த கொலை செய்வதற்கான துணிச்சலையும் பின்னணியும் தருகிறது என்பதை, அந்த ஆய்வில் நாம் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இது குறித்து பேசும் பொழுது, “இந்த சாதிய உணர்வு கொண்ட மனிதன் தனி மனிதனாக மட்டுமல்ல ஒரு சமூகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகின்றார். ஆகவே இதை ஒரு தனி நபர் குற்றமாக பார்த்துவிட முடியாது, இது (ஆணவப்படுகொலை) ஒரு கூட்டு செயல் திட்டமாக நாம் இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த சட்ட வரையறையில் பேசும்பொழுது ’சட்ட விரோத கூடுகை’ என்பதையும் இந்த சட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாக நாம் போராட்டம் நடத்தினால் அது சட்ட விரோதமாக கூடுவது என வழக்கு போடுகிறார்கள். சட்ட விரோதமாக கூடுவது என்பது எதற்காக நடத்தப்படுகிறது என்றால், இந்த கொலையை அல்லது வன்முறையை நிகழ்த்துவதற்குரிய ஒரு பலத்தை கொடுப்பதற்காக அது நிகழ்த்தப்படுகிறது. ஆகவே அதை தடுப்பதற்குரிய சட்டங்களையும் தனியாக வரையறை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

இன்றைக்கு நம் தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த குற்றங்களை பார்க்கும் பொழுது, சட்ட விரோதமாக கூடுவதன் விளைவாக இந்த படுகொலைகள் நடந்ததா என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு கூட்டு உளவியல் இதன் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது சாதிய உளவியலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே இதை பிற குற்றங்களோடு இணைத்து இந்த குற்றத்தை பார்த்து விட முடியாது. இதில் இயங்கக்கூடிய சாதிய மனநிலை கொண்ட ஒரு சமூக கட்டமைப்பை கணக்கில் எடுத்து கொண்டுதான், இந்த குற்றங்களுக்கான விசாரணையையும் அதற்குரிய தண்டனையும் வரையறை செய்துவிட முடியும். ஆகவே அந்த வகையில் ஆணவப் படுகொலைக்கான தனி சட்டம் என்பது தனித்த மிக முக்கியமான இன்றைய காலத்தினுடைய தேவையாக இருக்கிறது. இதை வேறு எந்த காரணத்தைக் கொண்டும் நாம் நிராகரித்து விட முடியாது.
சாதிய மனநிலை/சாதிய கட்டமைப்பு, ஒரு சமூகமாக/வர்க்கமாக இயங்கக்கூடிய அந்த சாதியம் நிகழ்த்துகின்ற வன்முறையை கையாளுவதற்குரிய ஒரு வலிமை என்பது, (அரசு அதிகாரிகள் விரும்புகிறார்களோ இல்லையோ) அந்த அரசு அதிகாரிகளை வேலை செய்ய வைப்பதற்கு நமக்கு தேவைப்படுகிறது. ஆகவே பொதுவாக சட்டம் போட்ட உடனே நம் அரசு அதிகாரிகள்/ காவல்துறை அதிகாரிகள் உடனே நடைமுறைப்படுத்துவதில்லை. அந்த சட்டத்தை எப்படி எல்லாம் தவறாகப் பயன்படுத்துவார்களோ அதற்கு பயன்படுத்துவார்கள். அது எங்கு தேவையோ அங்கு பயன்படுத்துவதில்லை என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சமூகத்தில் சாதி என்பது ஒரு குற்றமாக இன்னும் வரையறை செய்யப்படவில்லை. சாதியை ஒரு குற்றமாக வரையறை செய்யப்படாத பொழுது, சாதிய வன்முறையை தடுப்பதற்காக சட்டங்கள் இருக்கும் பொழுது, அந்த சாதிய வன்கொடுமையின் உச்சபட்சமாக ஒரு படுகொலை நடக்கிறது என்றால், அதை எந்த கணக்கில் சேர்ப்பது என்பது முக்கியமானதாக இருக்கிறது.
தோழர்கள் சுட்டிக் காட்டியது போல, சாதிய வன்கொடுமையாக மட்டுமே வரையறை செய்ய முடியாத படுகொலைகளை, ஆணவப் படுகொலைகளை நாம் எந்த வகையில் என்ன சட்டத்தை கொண்டு தண்டிப்பது என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சாதியரீதியாக கூர்த்தீட்டப்படுகின்ற இந்த படுகொலைகளுக்கு எதிராக இந்திய அளவிலே சட்டமாக கொண்டுவர வேண்டும் என்று நிறைவேற்றிய பிறகும் கூட, இத்தனை ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.
இந்த சாதி ஆணவப் படுகொலையை தடுப்பதற்கான சட்டம் கொண்டு வந்தால், இடைநிலை சாதிகளினுடைய வாக்குகளை இழக்க நேரிடும் என்று அரசியல் கட்சிகள் கவலைப்படும் என்றால், ஒட்டுமொத்த சமூகத்தையே ஒரு சாதிவெறி சமூகமாகத்தான் இந்த கட்சிகள் மதிப்பிட்டுருக்கின்றன என நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இருக்கின்ற அத்தனை பயல்களும் சாதிவெறியனாக சுற்றிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த சட்டம் கொண்டு வந்தால் எல்லா சமூகத்தில் இருக்கக்கூடிய, இடைநிலை சமூகத்தில் இருப்பவர்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்கின்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். களத்தோடு எந்த தொடர்பும் இல்லாமல் வெறும் பணத்தை வைத்துக் கொண்டு வாக்கு வாங்கக்கூடிய கட்சிகளினுடைய யோக்கியதையாகத்தான் இதைப் பார்க்க முடியும். கருத்தை சொல்லி வாக்கு வாங்க வேண்டியதில்லை, பணம் கொடுத்தால் ஓட்டு வந்துவிடும் என்ற நிலைக்கு என்ற நிலைக்கு அவர்கள் வந்த பிறகு, இன்றைய சமூகத்தைப் பற்றி எந்த உளவியல் மதிப்பீடு இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. அப்படி ஒட்டுமொத்த சமூகமே இங்கு சாதிவெறியோடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு சாதிவெறி இயங்கக்கூடிய முறையை குறித்து அரசுக்கு புரியவில்லை என்றால், அதற்கான ஒரு ஆய்வு குழு வைக்கலாம். இது எப்படி இயங்குகிறது? என்னவெல்லாம் செய்கிறது? என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சட்டத்தை கொண்டு வருவதற்கான ஒரு முடிவு எடுக்கலாம். ஆனால் சட்டம் கூடாது என்று சொன்னால், இந்த வன்முறையை ஆதரிக்கின்ற ஒரு கொள்கையைத்தான் அரசும் கொள்கையாக வைத்திருக்கிறதோ என்கின்ற ஐயம் நமக்கு வருகிறது.
இந்த சமயத்தில் இன்னும் நாம் சேர்த்து பார்க்க வேண்டுமானால், கல்வி கற்றால் சாதியத்திலிருந்து வெளி வந்துவிடலாம் என்றால், கவினை நாம் என்னவென்று சொல்லுவது? நகரமயமாக்கலுக்கு உள்ளாக சாதி ஒழிந்து போய்விடும் என்றால் சுர்ஜித்தை என்னவென்று சொல்லுவது? சாதியை ஒழிக்க அரசு அதிகாரிகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள் என்றால், சுர்ஜித்தினுடைய பெற்றோர்களை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட மிக ஆழமான கேள்விகளை கவினுடைய படுகொலை எழுப்புகின்றது.
இந்த சமயத்தில் சாதி என்பது கூர்திட்டப்பட்டு கொண்டே இருக்கிறது. கல்வி இருந்தாலும் சரி, பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் சரி, நகரத்திற்குள் சென்றாலும் சரி, இப்படி எதுவாக இருந்தாலும் சாதி கூர்திட்டப்பட்டுக் கொண்டு வருகிறது.இந்த சாதி ஒரு அதிகார பலத்தை இந்த கொலை செய்யக்கூடியவனுக்கு/வன்முறை செய்யக்கூடியவனுக்கு கொடுக்கிறது என்றால், சாதிக்கு இந்த பலத்தைக் கொடுப்பது எது? சாதிக்கு இந்த பலத்தைக் கொடுப்பது அதனுடைய மூலதனமாக அல்லது பொருளாதாரமாக இருக்கிறது. இன்னொரு புறத்தில் அரசியல் அதிகாரமாகவும் இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் சாதிரீதியான வாக்கு சேகரிப்பு என்பதும், சாதிய ரீதியான பிரதிநிதிகளை தனது கட்சியில் உருவாக்கிக் கொள்வது என்பதும், அந்த சாதிய ரீதியிலான ஒரு அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. அந்த அரசியல் அதிகாரம் சாதிய கட்டமைப்பை பாதுகாக்கிறது. அந்த சாதிய கட்டமைப்பு வன்முறையின் மூலமாக சாதியை பாதுகாத்துக் கொள்கிறது. அந்த சாதியை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த வன்முறையை நியாயப்படுத்துவதற்கு இந்த அரசியல் அதிகாரம் பயன்படுகிறது.
இந்த சமயத்தில் அதிகார வர்க்கம் மற்றும் அதிகாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-ல் பயிற்சி எடுத்து படித்திவிட்டு போனால் போதும். அதில் தந்தை பெரியாரைப் பற்றியோ அண்ணல் அம்பேத்கரைப் பற்றியோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய அவசியம் கிடையாது. சமூகநீதி நிலைநாட்ட வேண்டும் என்பதற்கான எந்த பயிற்சியும் அவர்களுக்கு கிடையாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வேலைகளை திறமையாக செய்யக்கூடியவர்களாக இருந்தால் போதும். இந்த இடத்தில் நாம் கவனமாகப் பேச வேண்டி இருக்கின்றது.
அதிகார வர்க்கத்தினுடைய கட்டமைப்பு என்னவாக இருக்கிறது? அந்த அதிகார வர்க்கத்தினுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? அவர்களுடைய சமூக நீதி குறித்தான புரிதல் என்னவாக இருக்கிறது? இந்த அதிகார வர்க்கத்தை எப்படி கேள்வி எழுப்புவது? சுர்ஜித்தினுடைய பெற்றோரை போன்று அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றால், அந்த பெற்றோர்களிடத்தில் வந்திருக்கக்கூடிய வழக்குகளை எல்லாம் எப்படி கையாண்டிருப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது. அவர்களிடத்தில் வன்கொடுமை சம்பந்தமான வழக்குகள் வந்திருந்தால் அல்லது பட்டியல் சமூகத்தை சார்ந்த இளைஞர்களோ அல்லது அதை சார்ந்தவர்களோ ஏதேனும் ஒரு குற்ற வழக்கில் அவர்களால் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்கள் குற்றப்பத்திரிக்கை எவ்வாறு தயார் செய்திருப்பார்கள்? இப்படிப்பட்ட ஒரு நபர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்றால், அந்த இயங்கிக் கொண்டிருக்க நபரை கண்டுபிடிக்காமலே ஒரு நிர்வாகம் இயங்குகிறது என்றால், அந்த நிர்வாகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்கின்ற கேள்வி நமக்கு வருகிறது.

இந்த நிர்வாகத்துக்குள்ளாக சாதிய உணர்வோடு, வன்முறை செய்யக்கூடிய ஒரு பின்னணியோடு ஒருவர் இயங்கி பணி செய்துவிட முடியும் என்றால், இப்படிப்பட்ட ஒரு அவநம்பிக்கை வருகின்ற பொழுது, எங்களுக்கு குறைந்தபட்சம் போராடுவதற்கு சட்டம் தேவைப்படுகிறது. சட்டத்தின் உதவியோடு நாங்கள் சண்டை போட முடியும் என்கின்ற இடத்தில் தோழர் பா.ப மோகன் அவர்கள் இன்னும் தீவிரமாக வேலை செய்துவிட முடியும். அவரைப் போன்று எண்ணற்ற களத் தோழர்கள் இந்த போராட்டத்தை முன்னகர்த்தி விட முடியும் என்கின்ற ஒரு நம்பிக்கை எங்களுக்கு சட்டத்தின் மூலமாகத்தான் கிடைக்கும். ஏனெனில் உங்கள் அதிகார வர்க்கத்தில் இருந்தோ உங்கள் கட்சிகளில் இருந்தோ எங்களுக்கு அந்த நம்பிக்கை கிடைப்பதில்லை. இந்த சாதியவாதிகளை களையெடுப்பது என்பது இயலாத விடயம் அல்ல, ஒட்டுமொத்த ஊரோ சமூகமோ சாதிவெறியோடு இல்லை. இந்த சாதிவெறியவர்கள் ஒரு சமூக விரோத கும்பலாக, பொருளாதார லாபத்துக்காக செயல்படுவதை ஏன் அதிகார வர்க்கத்தால் களைய முடியவில்லை?
ஒரு குற்றமும் அரசியல் அதிகாரமும் பொருளாதார நலனும் இதையெல்லாம் பாதுகாக்கின்ற வகையிலான சாதிய உணர்வு நிலையும் இருக்கக்கூடிய இந்த சமூகத்திற்கு உள்ளாக, இன்றைக்கு ஆர்எஸ்எஸ் அனைத்து சாதிய அமைப்பிற்குள்ளும் ஊடுருவி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் இந்த சாதிய உணர்வை கூர்மைப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ்காரர்கள் சமூக முரண்பாடுகளை கூர்தீட்டுகிறார்கள். இதை அனைத்தையுமே கையாள வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருப்பதாகப் பார்க்கின்றேன்.
இந்த இடத்தில்தான், இதற்கான ஒரு கூட்டு வேலைத் திட்டம் தேவைப்படுகின்ற சமயத்தில்தான், நமக்கு பிடித்த ஒரு அரசு அல்லது நமக்கான கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அரசு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றால், அவர்கள் இந்த சமூகத்தில் நமக்கு தேவைப்படுகின்ற சட்டங்களை எல்லாம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கிறார்களே ஒழிய, அவர்களை (திமுக அரசை) சங்கடப்படுத்தி விடக்கூடாது என்று நாம் அமைதி காத்துவிட முடியாது. அதற்காக அவர்கள் இல்லை. அவர்கள் சங்கடப்படுவார்கள் என்பதற்காக வேலை செய்யாமல் இருந்துவிட முடியாது. அவர்கள்(திமுக அரசு) சங்கடப்பட்டால் தவறாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் இதுபோன்ற சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அதற்கான நியாயங்களை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அரங்கு உருவாக்கப்பட்டிருக்கிறதாக நான் பார்க்கின்றேன்.
ஆளுங்கட்சியை ஆதரிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள். அதை கேள்வி கேட்க கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கொள்கை ரீதியாக மாறுபட்டவர்கள் இங்கு இல்லை. அனைவரும் ஒற்றை கொள்கையில், சாதிய வன்முறை என்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஒன்றுபட்டவர்களாக இங்கே நாம் மேடையில் நிற்கின்றோம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான், சாதி ஆணவ கொலைகளை தடுப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டம் என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். ஏனென்றால் இளம் தலைமுறையை பாதுகாப்பதற்குரிய பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது.
இந்துத்துவ வன்முறை பரவுவதை தடுப்பதற்கான தேவை இருக்கிறது. அண்மையில் முகநூலில் ஒரு வீடியோ பார்த்தேன். என்னவெனில் அண்மையில் தவெக விஜயினுடைய மாநாடு நடந்தது. அதில் எத்தனை நாற்காலி உடைந்தது என ஒரு காணொளி வந்திருந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பாஜககாரன் எங்களுடைய மாநாட்டில் நாங்களெல்லாம் நாற்காலியை எடுத்து பத்திரமாக அடுக்குகிறோம். இந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் ஆர்எஸ்எஸ்-ல் பயிற்சி அளிக்கப்பட்ட எங்களுக்குத்தான் இருக்கிறது என சொல்றான். இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருத்தர் ஆட்டோவில் போகும் பொழுது அவர் கேட்டதை சொன்னார், ”சார் நான் தப்பா லைன்ல வந்து விட்டேன், 5000 ரூபாய் பைன் கட்டினேன், இந்த ஆட்சியே இப்படித்தான் சார் இருக்கு. இந்த ஆட்சியில எங்கள மாதிரி ஏழைகள் எல்லாம் எப்படி காசு கட்ட முடியும்? இந்த பைனுக்கு இவ்ளோ காசு கொடுக்க நாங்க என்ன பண்ண முடியும்? ஆனா இதை சொன்னா, எங்கள வந்து ஆர்எஸ்எஸ்ன்னு சொல்லுவாங்க சார்” என்று கூறினார். அப்படியென்றால் ஆர்எஸ்எஸ் என்பது நியாயத்தை கேட்கக்கூடிய அமைப்பு, ஒழுங்கான அமைப்பு என்று பரவலான பரப்புரை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அப்படி அவன் (ஆர்எஸ்எஸ்) கிடையாது. அவன் பொறுக்கி பசங்கதான்.
ஆனால் அவன் (ஆர்எஸ்எஸ்) இந்த மாதிரியான பரப்புரை யுக்தியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் இல்லாத நாற்காலியை அடுக்குவதில் என்னடா பெருமை? உன்(ஆர்.எஸ்.எஸ்) கூட்டத்துக்கு எவனும் வருவதில்லை. அதனால் நாற்காலி உடைவது இல்லை. அதனால் நாற்காலியை அடுக்கி வைக்கிறான். ஆனால் அது ஒரு பரப்புரையாக மேற்கொள்கிறார்கள். இன்றைக்கு அது நியாயப்படுத்தப்படுகின்ற ஒரு அமைப்பாக விரிவுப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கிறது.
நாம் பல அமைப்புகளாக இருக்கிறோம். பல அமைப்புகள் திரண்டு நாம் பேரணி நடத்துகிறோம். ஆனால் கடந்த முறை ஆர்எஸ்எஸ் 50 ஊர்களில் ஒரே நாளில் பேரணி நடத்தி இருக்கிறது. ஒவ்வொரு ஊரிடத்திலும் குறைந்தபட்சமாக 1000 பேரை நிறுத்தி இருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டிற்குள் 50,000 பேரை அவர்களால் திரட்ட முடியும். இங்கு இருக்கக்கூடிய அனைத்து அமைப்புகளை விட, வலிமையான அமைப்பாக ஆர்எஸ்எஸ் வளர்ந்திருக்கிறது. அவர்கள் நம்மைப் போல கருத்தரங்கம் நடத்துவதில்லை, பேரணி நடத்துவதில்லை, பொதுக்கூட்டம் நடத்துவதில்லை, கண்டன ஆர்ப்பாட்டங்களோ, மறியல் போராட்டங்களோ நடத்துவதில்லை. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் எதற்குள்ளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் எனில், சாதி அமைப்புகளுக்குள்ளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக நாம் அனைவரும் ஏதே ஒரு அமைப்பாக மாற வேண்டிய தேவை இருக்கிறது. தனித்தனியாக உதிரியாக இருந்து கொண்டால் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்பை எல்லாம் எதிர்த்து விட முடியாது. உங்களுக்கு எந்த நேரம் பிடிக்குதோ-அது கருப்போ, சிவப்போ, நீலமோ அல்லது பச்சையோ பல அமைப்பு இருக்கிறது. இந்த அனைத்து அமைப்புகளும் ஆர்எஸ்ஸிற்கு எதிரான அமைப்புகள்தான். காவி நிறத்தை தவிர அனைத்து அமைப்புகளிலும் நீங்கள் இணைந்து கொண்டு இதை எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு இந்துத்துவ அமைப்புகள் சாதி அமைப்புகளாக கூர்தீட்டப்பட்டு கொண்டிருக்கின்றன.
பொன்பரப்பியிலே கடந்த தேர்தலின் பொழுது, தோழர். திருமா அவர்கள் போட்டியிட்ட அந்த தொகுதியில் கலவரத்தை (கள ஆய்வுக்காக போன பொழுது) அங்கே வன்னியர் சங்கம் இந்த வன்முறையை செய்ததாக என்று அவர்கள் சொன்னார்கள். விசாரித்துப் பார்த்ததில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்டு அமைப்புகளும் வித்தியாசம் இல்லாத அளவிலே பின்னிப்பிணைந்து இந்த சாதிய சங்கங்களோடு இணைந்து கொண்டு வன்முறையை நடத்திக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட வன்முறை இப்பொழுது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டிய தேவையும் பெரும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
ஆக தோழர்களே, இந்த சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான ஒரு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. நாம் அனைவரும் இந்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அனைத்து கட்சிகளையும் அழைத்து, இதற்குரிய கவனத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கிறது.
அதே சமயத்தில் குற்றப்பரம்பரை சட்டம் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் குற்றப்பரம்பரை சட்டத்தினுடைய தேவையும் பின்னணியும் ஏகாதிபத்தியத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்த சமூகத்தின் குற்றமாக வரையறை செய்துவிட்டு போனோம் என்றால், யாரோடு மல்லு கட்டுவது? யாரை மாற்றுவது? குற்றப்பரம்பரை சட்டத்தினுடைய வரலாறைப் பார்ப்போம். அதற்கு எதிரான போராட்டத்தைப் பார்ப்போம். ஏனென்றால் நாம் சட்டரீதியாக பின்னோக்கி போய்விட முடியாது. ஒரு சமூகத்தை சீர்திருத்துவதற்காக சட்டத்தைப் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
அன்றைக்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்று போராடியவர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களையோ அல்லது காலனி கால சட்டங்களுக்குள்ளாக தீர்வையோ தேடிவிட முடியாது. இந்த நவீன காலத்திற்குள்ளாக இதை எதிர்ப்பதற்காக நாம் என்ன கேட்கிறோம் என்றால், அரசியல் கட்சியானது அந்த மாவட்டத்துக்குள் எந்த சாதி அதிகமாக இருக்கிறதோ அந்த சாதிக்காரர்தான் மாவட்ட செயலாளராக போடுவதை கேள்வி எழுப்ப வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. அந்த மாவட்ட செயலாளர் மற்றும் அந்த சாதியை சார்ந்த அமைச்சர்தான் காவல் நிலையத்திற்கு அழுத்தம் கொடுத்து சாதிய வன்கொடுமை வழக்குகளை தடுத்து நிறுத்துகிறார்கள். இது வெளிப்படையாகத் தெரிந்த விசியம். அப்படி இல்லை என்றால் வேங்கைவயலில் தீர்வு கண்டுவிட முடியாதா என்ன? நடுக்காவரியில் நடந்த கொலை, வடகாட்டில் நடந்த கலவரங்கள் இப்படி பெரிய பட்டியலே இருக்கிறது.
இதில் அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கோ அமைச்சர்களுக்கோ இருக்கும் தொடர்பையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அதிகார பின்புலம் இல்லாமல் சாதிய வன்முறை கும்பல்கள் இயங்கி விட முடியாது. இவர்களுக்கான பொருளாதாரம் இல்லாமல் இந்த கும்பல்கள் இயங்கி விட முடியாது. அந்த வகையிலே அனைத்து கட்சிகளும் இது குறித்தான கேள்விகளை எழுப்ப வேண்டும். இவை அனைத்தையும் குறித்தான விவாதத்தைக் கொண்டு வருகின்ற இந்த அரங்கு நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!”
முழு காணொளி: