தோழர்.விராஜ் மெண்டிஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் அவருடன் பயணித்த அனுபவங்கள் மற்றும் போராட்ட குணங்களை நினைவுக்கூர்ந்து, தனது செவ்வணக்கத்தை தனது முகநூலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி ஆகஸ்டு 17, 2024 அன்று பதிவு செய்தது.
தோழர்.விராஜ் மெண்டிஸ் மறைந்தார் எனும் செய்தி உண்மையாக இருக்கக்கூடாதென நினைத்தேன்.
சிங்கள தேசத்தின் சிவப்பு நட்சத்திரமாக திகழ்ந்தவர். இலங்கையின் கம்யூனிஸ்டு இயக்கங்கள் சிங்கள பேரினவாதத்தால் சிதைவுற்று, தமிழின எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்த நிலையை மாற்றிட முயன்றவர். இங்கிலாந்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக செயல்பட்டவர். ஏதலிகளாக வருகிறவர்களுக்கான குடியேற்ற உரிமை, அடிப்படை மனித உரிமைகளுக்காக போர்க்குணத்தோடு போராடியவர். இங்கிலாந்து அரசு நாடுகடத்த உத்திரவிட்ட போது, இங்கிலாந்தின் தோழர்களால் பாதுகாக்கப்பட்டவர். கிட்டதட்ட 700 நாட்கள் ‘புகலிடம்- Sanctuary’ எனும் பெயரில் அரங்கு அமைத்து அவரை பாதுகாத்தனர். ஒவ்வொரு நாளும் பல தோழர்கள் அவரது அரங்கிற்கு வெளியே காவலிருந்தனர். கிட்டதட்ட அசாஞ்சே போன்று மக்களிடத்தில் அடைக்கலம் அடைந்தார். ஒருநாள் இங்கிலாந்து காவல்படை அவர் தங்கியிருந்த, புகலிடம் அளித்த சர்ச்சின் கதவுகளை உடைத்து அவரை கைது செய்து இலங்கைக்கு அனுப்பினர். உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் இலங்கையில் அவர் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார். தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, தமிழர்கள் தமக்கென தேசம் அமைக்க அயராது குரல் கொடுத்தவர். சிங்கள மக்களிடம் ஈழத்தமிழர்களின் தேசிய உரிமைக்கு ஆதரவு தளத்தை அமைத்த மார்க்சிய போராளி.
இந்திய அமைதிப்படை தமிழர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலத்தில் இலங்கையில் இருந்தார். புலிகள் இந்திய ஆக்கிரமிப்பு படையை எதிர்த்து போர் புரிந்து கொண்டிருந்த போது, தென்னிலங்கையில் சிங்கள பேரினவாத கம்யூனிஸ்டுகளான ஜெ.வி.பியை இலங்கை ராணுவம் வேட்டையாடிக் கொண்டிருந்தது. ஜெவிபிக்கு ஆதரவாக இயங்கிய மனித உரிமையாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். ஜெவிபியின் தோழர்களிடத்தில் ‘தமிழ்-சிங்கள’ போராட்ட இணைப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை நீண்ட நெடிய விவாதமாக நடத்தினார். இதே சமயத்தில் புலிகளை தொடர்பு கொண்டு இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஜெவிபியோடு கைகோர்த்து புலிகள் போரிட வேண்டுமெனும் கோரிக்கையை வைத்தார் விராஜ்மெண்டிஸ். ஜெவிபிக்கு உதவ புலிகள் தயாராக இருப்பதாகவும், அதே சமயத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஜெவிபி ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு ஆதரவாக போர் புரிந்து இலங்கை-இந்திய ஆளும்வர்க்க கட்டமைப்புகளை அகற்றலாம் என புலிகள் தரப்பு விராஜ்மெண்டிஸிடம் தெரிவித்தார்கள். இச்செய்தியை ஜெவிபியின் மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவர் வழியாக ஜெவிபிக்கு தெரிவித்து ஒப்புதலை எதிர்பார்த்தார் மெண்டிஸ். இணைந்து போர் புரிய ஒப்புக்கொண்ட ஜெவிபி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை ஏற்க மறுத்து சிங்களப்பேரினவாத நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. இதை விராஜ் மெண்டிஸின் வழியாக புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
‘இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தை அகற்றிய பின்னர் எங்களது போராட்டம் சிங்கள கம்யூனிஸ்டுகளை நோக்கி திரும்புவதை விரும்பவில்லை‘ என புலிகள் ஆயுதம் அளிக்க மறுத்தனர். விராஜ்மெண்டிஸ் எடுத்த முயற்சி சிங்களபேரினவாத மார்க்சியர்களால் முறிந்து போனது. சிங்கள-தமிழ்ப்பாட்டாளிகளின் இணைப்பிற்கான இறுதி வாய்ப்பையும் முறித்தார்கள் சிங்கள கம்யூனிஸ்டுகள். இதன் வரலாற்று சாட்சியமாக இருந்தவர் விராஜ்மெண்டிஸ். இச்சமயத்தில் விராஜ்மெண்டிஸோடு தொடர்பு கொண்டிருந்த ஜெவிபியினர் ஒவ்வொருவராக சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். இதனால் இலங்கையை விட்டு வெளியேறும் நிலை வந்தது. ஐரோப்பாவில் இருந்தபடியே தமது போராட்ட வாழ்வை தொடர்ந்தார்.
இங்கிலாந்து தொழிலாளர் உரிமைக்காக போராடிய சகதோழரை மணந்து இயக்க வாழ்வை தொடர்ந்தார். சிங்கள பேரினவாதத்தால் சீரழிந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகளை அம்பலப்படுத்துவதும், தமிழர்களுக்கான ஐரோப்பிய குடியேற்ற உரிமைக்காகவுமான போராட்டத்தை தொடர்ந்தார். விராஜ்மெண்டிஸ் போன்ற ஆழமான மார்க்சியர்களோடு இந்திய இடதுசாரிகள் தொடர்பு கொண்டிருந்தால் சிங்கள பேரினவாத நிலைப்பாடுகளை பின்தொடர்ந்திருக்கமாட்டார்கள் அல்லது கற்பனாவாத சிங்கள-தமிழ் பாட்டாளி ஒற்றுமையை புலிகள் உருவாக்கவில்லை எனும் நடைமுறையில் சாத்தியமற்ற கோட்பாடுகளை இன்றளவும் தூக்கி சுமந்திருக்கமாட்டார்கள். சிங்களப்பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை சிங்கள கம்யூனிஸ்டுகளைப்போல பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்ட இந்திய இடதுசாரிகள் ஈழத்தின் சுயநிர்ணய உரிமையை இன்றளவும் மறுப்பதை உணர்ந்தவர் விராஜ்மெண்டிஸ்.
உலகளாவிய அளவில் அறியப்பட்ட மார்க்சிய சிந்தனையாளரும், இராணுவ ஆய்வாளருமான தராகி சிவராம் விராஜ் மெண்டிசின் வீட்டில் தங்கியிருந்த போது புகழ்பெற்ற அவரது பேட்டியை வெளியிட்டார். தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் குறித்த தராகி சிவராமின் ஆய்வு விராஜ்மெண்டிஸின் ஜெர்மனியின் ப்ரேமன் நகர் வீட்டிலிருந்த போது பதிவு செய்யப்பட்டது. தராகியுடனான உரையாடல் குறித்து வாஞ்சையுடன் என்னுடன் பேசிய விராஜ்மெண்டிஸின் குரல் இன்றும் நினைவில் நிற்கிறது. ஜெர்மனியிலிருந்து தராகிசிவராமை இலங்கைக்கு அனுப்பி இருக்கக்கூடாது என அங்கலாய்ப்பார். இலங்கைக்கு வலிந்து திரும்பிய தராகிசிவராம் தனது மரணத்தை எதிர்பார்த்தே இருந்தார். அதேபோல சில காலத்திற்குள்ளாகவே தராகி கடத்தி சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தராகியை ஏதேனும் சொல்லி ஐரோப்பாவில் தங்க வைத்திருந்தால், ஈழப்போராட்டத்திற்கான அரசியல் வெளியை ஐரோப்பாவில் உருவாக்கி இருக்க முடியுமென விராஜ்மெண்டிஸ் சொல்லும் போது கண்கள் கசிவதை நான் பார்த்திருக்கிறேன்.
2018ல் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமை ஆர்வலர்கள், சூழலியல் போராளிகள், தொழிற்சங்கத்தினர் என அனைவரிடத்திலும் என்னை அழைத்துச் சென்றார் விராஜ்மெண்டிஸ். 2018ல் எனது ஸ்டெர்லைட் எதிர்ப்பு பரப்புரையை ஐரோப்பாவில், ஐ.நா அரங்குகளில் செய்த போது, இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் ஜெர்மி கோர்பைனை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நிலையில் அவரை சந்திக்க இயலாது போனது.
ஈழ செயற்பாட்டாளர்கள் மீது இங்கிலாந்தின் உளவுத்துறை போலியாக வழக்கை புணைந்து, பொய் சாட்சியங்களை உருவாக்கி ஸ்விஸ் நாட்டில் நீண்டநாள் சிறைத்தண்டனை வாங்கித்தர முயன்றது. மேலும் சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் புலிகள் நடத்திய போரில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என வழக்கை ’ஸ்விஸ்’ அரசு கட்டமைத்தது. தமிழர் மீதான இனப்படுகொலைக்கு தமிழர்களே காரணமென்று வழக்கை கட்டமைத்தார்கள். இதற்காக பிளவுண்டு கிடந்த தமிழர் அமைப்பில் சிலரை பலிகடவாக்கினர். அவதூறுகள், பொய்செய்திகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட சில செயல்பாட்டாளர்கள் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டனர். புலம்பெயர் தமிழர்கள் இந்த வழக்கின் முக்கியத்துவம் உணராத நிலையிலும், கைவிடப்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவற்ற நிலையில் விராஜ் மெண்டிஸ் தனி நபராக இவ்வழக்கின் அரசியல் முக்கியத்துவம் உணர்ந்து தீவிரமாக செயல்பட்டார். இப்பொய் வழக்கு தொடர்பான சந்திப்பிற்காக ஸ்விஸ் ஜூரிச் நகரில் விராஜ்மெண்டிஸ் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மே17 இயக்கம் சார்பாக நான் பங்கெடுத்தேன். ஐரோப்பாவின் மிகச்சிறந்த வழக்கறிஞரை கொண்டு இந்த பொய் வழக்கு முறியடிக்கப்பட்டது. இதற்கு பெரும் உழைப்பை கொடுத்தவர் விராஜ்மெண்டிஸ்.
இதேபோல 2009க்கு பின்பான முக்கிய அரசியல் நகர்வான ‘ப்ரேமன் தீர்ப்பாயம் 2013’ ஒருங்கிணைப்பில் காத்திரமான பங்கு வகித்தவர் விராஜ். இச்சமயத்தில் தான் நான் அவரை நேரில் சந்தித்தேன். 2018ல் அவருடன் தங்கிதிருந்த நாட்கள் மறக்க இயலாதவை. மார்க்சியம், மேற்குலகின் அரசியல், உலக ஒழுங்கு, பெட்ரோலிய அரசியல், ஈழத்தின் எதிர்காலம் என பேசி நீண்டதூரம் இருவரும் நடந்து செல்வோம். அவர் தனது இணையருடன் இணைந்து அழைத்து சென்ற விருந்துணவு பகிர்வும், அவர் வெளிப்படுத்திய அன்பும் அரவணைப்பும் மறக்க இயலாது. நகைச்சுவை உணர்வு மிக்கவர், அயராத வாசிப்பும், பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தி ஐரோப்பா முழுவதும் பயணித்து செயலாற்றியவர்.
ப்ரேமன் நகரில் தொழிலாளர் குடியிருப்பில் இறுதிநாள் வரை எளிமையாக வாழ்ந்து ஒடுக்கப்படும் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். அவரோடு பேசிய நினைவுகள், சமரசமற்று அவர் நேசித்து வெளிப்படுத்திய ஈழ ஆதரவு உரையாடல்கள், நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் என பல நினைவுக்கு வந்து போகின்றன. ஐரோப்பாவிலிருந்து இந்தியா திரும்பியதும் என்னை கைது செய்த அடக்குமுறைக்கு எதிராக மனித உரிமையாளர்கள் பலரது எதிர்வினைகளை சாத்தியப்படுத்தியிருந்தார். அவரது இழப்பு தமிழர் உரிமை போராட்டத்தில் மிகப்பெரும் பின்னடைவு. இலங்கையின் அரசியலை மார்க்சிய தன்மையுடன் ஆய்ந்து, போராட்டத்தோடு இணைத்துக்கொண்ட மாபெரும் ஆளுமையை இழந்திருக்கிறோம். மிகுந்த மனவலியுடன் எனது வீரவணக்கத்தையும், செவ்வணக்கத்தையும் தோழர் விராஜ் மெண்டிஸுக்கு உரித்தாக்குகிறேன்.