மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் ‘இனாம் நிலங்கள்’, கோவில் நிலங்கள் அல்லது வக்பு நிலங்கள் என கையகப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் இந்து அறநிலையத்துறை இவ்வாறு கையகப்படுத்தி மக்கள் சொத்துக்களை சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறது. ‘இனாம்’ நிலங்களில் குடியிருப்பவர்களையும் வேளாண்மை செய்பவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை இந்து சமய அறநிலையத்துறையும் வக்பு வாரியமும் உடனடியாக நிறுத்த வேண்டும்! உழுபவர்களுக்கே நிலம் என்பதனால் ‘இனாம்’ நிலங்களை கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்! என மே பதினேழு இயக்கம் அறிக்கை அக்டோபர் 18, 2024 அன்று வெளியிடப்பட்டது.
மன்னராட்சி காலத்தில் உழவர்களிடம் நிலங்களை அளித்து வேளாண்மையின் விளைச்சலில் ஒரு பங்கை குத்தகையாக பெற்று வந்த நிலங்கள் ‘இனாம்’ நிலங்கள் எனப்படுகின்றன. காலனிய ஆட்சி மற்றும் மக்களாட்சியின் போது ‘உழுபவர்களுக்கே நிலம்’ என்ற அடிப்படையில் நிலங்களின் உரிமை மக்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் கோவில்கள் மற்றும் மசூதிகளுக்கு வழங்கப்பட்ட ‘இனாம்’ நிலங்களை பயன்படுத்தி வந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அந்நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது இந்து சமய அறநிலையத்துறையும் வக்பு வாரியமும். இந்த சட்டவிரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மன்னர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்தவர்கள், புலவர்கள், பார்ப்பனர்கள், தேவதாசிகள், அதிகாரிகள், மராமத்து பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியமாகவும், பரிசாகவும், மானியமாகவும், வேளாண்மை நிலங்களின் விளைச்சலில் பெறும் குத்தகையை உழவர்களிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளும்படி செப்பேடுகள், பட்டயங்கள் எழுதி வைத்தனர். அதாவது, நிலத்தின் உரிமைகள் அரசிடமே இருந்தது. ஆனால், அரசுக்கு சேர வேண்டிய குத்தகையான விளைச்சலின் ஆறில் ஒரு பங்கு மட்டும் பண்டமாற்று முறையின் அடிப்படையில் உழவர்களிடமிருந்து அரசு குறிப்பிடும் பயனாளிகளுக்கு நேரடியாக சென்றது. அரசுகள் இப்படியாக செப்பேடுகள், பட்டயங்கள் எழுதி வைத்த நிலங்களே ‘இனாம்’ நிலங்கள் எனப்படுகின்றன.
ஆங்கிலேயர்களின் கீழ், நிலவரி மட்டுமே ஆங்கிலேயருக்கு ஒரே வருவாயாக இருந்தது. எனவே தங்களது வரிவருவாயை பெருக்குவதற்காக ஆங்கிலேயர்கள் 1802 முதல் நில உரிமையை உழவர்களுக்கு அளித்து பட்டா வழங்கி அரசர்களிடம் குத்தகையாளாக இருந்த உழவர்களை நில உரிமையாளராக மாற்றி மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கினார்கள். அதன் பின்பு பல்வேறு காலகட்டங்களில் ஜமீன்தார்களுடைய நில உரிமையை நேரடியாக ஆங்கிலேய அரசு எடுத்துக் கொண்டு ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் குத்தகையாளர்களாக இருந்த உழவர்களுக்கு பட்டா கொடுத்து நில உரிமை வழங்கினார்கள்.
அதன் பின்பு, 1948ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (ஒழிப்பும் ராயத்துவாரியாக மாற்றலும்) சட்டம், 1963ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் எஸ்டேட் (ஒழிப்பும் ராயத்துவாரியாக மாற்றலும்) சட்டம் ஆகியவற்றின் மூலம், பல்வேறு அரசர்களால் கோவில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் இதர சேவைக்கும் கொடுக்கப்பட்ட பல்வேறு வகையான இனாம் நிலங்களை மீண்டும் திரும்ப எடுத்துக் கொண்டு, உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு சட்டப்படி நில உரிமை பட்டா கொடுக்கப்பட்டது. அதில் பாதிக்கும் மேற்பட்ட உழவர்கள் சட்ட விழிப்புணர்வு இல்லாததால் பட்டா பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உரிமையாய் பெற்ற இந்த இனாம் நிலங்கள் அனைத்திற்கும் மக்கள் முறையாக அரசு நிர்ணயித்த வரியையும் பதிவுத்துறையின் அனைத்து கட்டணங்களையும் காலம் காலமாக செலுத்தியுள்ளனர். மேலும் இந்நிலங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதிகளும் பெற்றுள்ளனர். இவைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு உறுதிப்படுத்திய உரிமைகளின் அடிப்படையில் நிகழ்ந்தவையே. இவ்வாறு மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து விட்ட இந்நிலங்களை தற்போது அறநிலைத்துறை உரிமை கொண்டாடுவதால், விவசாய பெருமக்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் வீடில்லா நிலமில்லா அகதிகளாகும் சூழல் உருவாகியுள்ளது.
கோவில்களின் திருப்பணிகளுக்காக இனாம் நிலங்களின் குத்தகையை இனாமாக கொடுத்திருந்த அரசு, சட்டத்தின் மூலம் இனாம்களை ஒழித்து விட்ட பின்பும், கோவில்கள் அந்த வருமானத்தை இழந்து பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடாக கோவில்களுக்கு ஆண்டுதோறும் இழப்பீடு வழங்கி வருகிறது.
கடவுளின் பெயரால் சுயநல நோக்கம் கொண்ட மதவாத கும்பல்கள் உழவர்களிடமிருந்து நிலத்தை பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இனாம் நிலங்களை கோவில் சொத்துக்கள் என்றும் அதை மீட்க வேண்டும் என்றும் தொடர்ந்து உழவர்களின் நில உரிமைக்கு எதிராக பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் இந்து அறநிலையை துறை உழவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் உடனடியாக நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லது குத்தகை செலுத்த வேண்டும் என்றும் அறிவிப்புகளை அனுப்பியும் ஏலம் விட முயற்சித்தும் உழவர்கள் நில உரிமையாளர்களின் நிம்மதியையும் வாழ்வாதாரத்தையும் பறித்து வருகின்றன. இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் செட்டில்மெண்ட் பட்டா பெற்ற நிலங்களையும் பூஜ்ஜியம் மதிப்பு செய்து சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
பல தலைமுறைகளாக நிலத்தை உழுது, அதன் மூலம் நாட்டிற்கு உணவு தேவையை நிறைவு செய்தும், அரசுக்கு பல வகையான வரிகளை செலுத்தியும், பலமுறை விற்பனை, அடமானம், பாகப்பிரிவினை உள்ளிட்ட வகையில் ஆவணங்களை பதிவு செய்தும், பத்திரப்பதிவு பதிவு துறைக்கு வரி செலுத்தியும், வருவாய் துறைக்கு நிலவரி செலுத்தியும், அனுபவித்து வரும் உழவர்களையும் வீடு மனை உரிமையாளர்களையும் ஆக்கிரமிப்பாளர் என்று சொல்லி ஒரே நாளில் சொந்த மண்ணில் அகதிகளாக்கும் முறையை அறநிலைத்துறை அறம் தவறி சொந்த நாட்டின் மக்கள் மீது கடவுளின் பெயரால் நிலப்பறிப்பு போரை நடத்தி வருகிறார்கள்.
இனாம் ஒழிப்புச் சட்டப்படி, அளிக்கப்பட்ட ரயத்துவாரி பட்டாக்களை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், சட்டத்தின் பின்புலமும் அறியாமல் தன்னிச்சையாக அதிகாரிகள் சட்டவிரோதமான சுற்றறிக்கைகளை பிறப்பித்தும், வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்தும், இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பட்டா பெற்ற நிலங்களையும் பூஜ்ஜியம் மதிப்பு செய்து நில அபகரிப்பு செய்கிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசு எவ்வித சட்டத்தையும் அரசாணையையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை. ஆனால் அரசின் கொள்கை முடிவு என்று இல்லாது ஒன்றை சொல்லி சட்ட விரோதமான பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78, 79 மற்றும் வக்பு வாரிய சட்டத்தில் இனாம் நிலங்களுக்கு தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டுமெனவும், இனாம் சொத்துக்களின் மீது ஆக்கிரமிப்பாளர் என்ற பெயரில் நடைபெற்றுவரும் அனைத்து விசாரணைகளையும் ரத்து செய்ய வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இந்து சமய அறநிலையத்துறை அப்பாவி உழவர்களை புதிய குத்தகையாளர்களாக மாற்றும் முன்னெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், 2015 முதல் கட்டாய குத்தகையாக்கப்பட்ட நிலங்களில் குத்தகையை ரத்து செய்து நில உரிமையை அளிக்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இதற்காக போராடி வரும் ‘இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு-மனை உரிமையாளர்கள் இயக்கம்’ முன்னெடுக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
18/11/2024