
போக்சோ சட்டம், பதினெட்டு வயதிற்கு குறைவான பிள்ளைகளின் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் சட்டம். பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது பாயும் அந்த சட்டம் சில சமயங்களில் சாதிய பழிவாங்கலுக்காக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதைப் பதின் பருவ காதலர்கள் ஊடாக எடுத்துக்காட்டும் திரைப்படமாக வெளிவந்திருப்பதே “கோர்ட்” எனும் திரைப்படம்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தோன்றும் இயல்பான காதலை, ஆதிக்க சாதிகள் ஒடுக்குவதும் தங்கள் கவுரவத்தை நிலை நாட்டிக் கொள்ள ஆணவக் கொலை செய்வதும், கொலைவெறி தாக்குதலுக்கு உட்படுத்துவதும் என பல சம்பவங்கள் சமூகத்தில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே தானிருக்கின்றன. இப்படத்தில் தங்கள் வீட்டுப் பெண்ணிடம் பேசிப் பழகிய காரணத்திற்காக, படத்தின் நாயகனான 19 வயது இளைஞனான சந்திரசேகரன் போக்சோ வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறான் நாயகியின் மாமாவான மங்கபதி. நாயகன் சந்துவுக்கு வாதாட இளம் வழக்குரைஞராக வருகிறார் சூர்யதேஜா. இறுதியில் இந்த கதாநாயன் போக்சோ வழக்கில் இருந்து விடுதலை பெறுகிறாரா இல்லையா? என்பது தான் கதை.
கதாநாயகன் 12ஆம் வகுப்பு முடிக்காமல் பகுதி நேர வேலை செய்கிறான். மேலும் நற்பண்புகள் கொண்டவனாக, நண்பர்களுக்கு அறிவுரை கூறுபவனாக, இயல்பான நடிப்புடன் வலம் வருகிறான் நாயகன் ’சந்து’(சந்திரசேகரன்). இவன் வயது 19. கதாநாயகி 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு நுழைவுத் தேர்விக்கு தயாராகும் மாணவியாக ’ஜாப்லி’. இவள் வயது 17. இதில் சாதி வெறியனாக, குடும்ப மரியாதை பெண்களின் உடையிலும், நடத்தையிலும் தான் இருக்கிறது எனப் பேசும் கதாபாத்திரம் ’மங்கபதி’. நாயகியின் மாமா. சாதிய ஆதிக்கமும், பணபலமும், ஆணாதிக்க சிந்தனையும் சேரும் சாதிவெறியர்களின் நடத்தைகளை கண் முன் நிறுத்துகிறது மங்கபதியின் நடிப்பு.
தனது உறவுக்காரப் பிள்ளை (9 வயது) அணிந்திருக்கும் நாகரிக ஆடையைப் (frock) பார்த்து ஆவேசத்துடன், இப்படி ஒரு உடையை நீ உன் பிள்ளைக்கு வாங்கி கொடுத்தால், நாளை என் பிள்ளைகளும் இது போன்று கேட்காதா என அப்பிள்ளையின் அப்பாவிடம் கடுமையாகப் பேசும் காட்சியில் ஆணாக்கவாதிகளின் மனநிலையும், அதேப்போல தன் மகளுடன் பயிலும் பட்டியலின மாணவன் பாடத் தொகுப்பைக் கொடுக்க, அது மற்றவர்களின் பார்வையில் வேறு மாதிரி தெரியுமென கோபப்பட்டு, அந்த மாணவனின் தந்தையை கஞ்சா வழக்கில் சிக்க வைக்கும் காட்சி கதாபாத்திரத்தின் சாதிய தன்மையையும் பிரதிபலிக்கிறது.

இந்நிலையில் தன் குடும்பத்து பெண்ணான ஜாப்லி, சந்துவை காதலிப்பதை அறிந்து, சந்து மீது வழக்குகள் பதிந்து சிறைக்கு அனுப்புகிறான் மங்கபதி. எவ்வித தவறும் செய்யாத மகனை காப்பாற்ற எளிய குடும்ப பின்னணியும், பட்டியலின சாதியை சேர்ந்தவர்களுமான அவர்களின் பெற்றோர் வழக்கறிஞர்கள் கிடைக்காமல் துன்பப்படுகின்றனர். இறுதியில் இளம் வழக்கறிஞரான ’தேஜா’ வாதாடுகிறார். அவர் வாதாடும் காட்சிகளே இப்படத்தின் உயிரோட்டமானதாக போக்சோவில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை உணர்த்தும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படம் 2013 ஆண்டு நடந்த கதைபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு தான் நவம்பர் 2012-ல் போக்சோ சட்டம் அமுலானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் கதாநாயகன் மீது எப்படி போலியான வழக்கு சுமத்தப்பட்டது? அதன் நீதிமன்ற விவாதம், சாட்சிகளின் குறுக்கு விசாரணை, சந்து வெளியில் வந்தானா, என எதிர்பார்க்க வைக்கும் படமாக கோர்ட் நகர்கிறது.
நீதிமன்ற காட்சிகளில் “இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ளது 5 கோடி வழக்குகள் அல்ல; 5 கோடி அநீதிகள்’, ‘கருப்புக் கோட் கேள்வி கேட்பதற்கானது’. ‘சட்டம் யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த சட்டம் அவர்களுக்கே தெரியவில்லை, இங்கு யாரும் சொல்லுவதில்லை, யாரும் கற்பிக்கப்படுவதுமில்லை’, ‘நம் நாட்டில் படிப்போடு சேர்த்து சட்டத்தையும் சொல்லித் தர வேண்டும்’, ‘18 வருடத்திற்கு முந்தைய நாள் வராத மனப்பக்குவம், அதற்கு அடுத்த நாள் வந்து விடும் என்று சொல்ல முடியுமா’ போன்ற வசனங்களால் நீதிமுறைகள் குறித்தும், இச்சட்டத்தின் குறைபாடு குறித்தும் கேள்விகளை அடுக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராம் ஜெகதீஷ்.

போக்சோ சட்டம் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசப் படங்களுக்கு குழந்தையைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் இது தவறாகவும் பயன்படுத்தும் வாய்ப்பைப் பற்றி ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது இப்படம். இச்சட்டம் ஏவப்பட்டுள்ள நபர் தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு பதியப்பட்ட பின்னர் சமரசமாக செல்வதோ அல்லது வழக்கைத் திரும்ப பெறுவதோ இயலாது. தனது சாதி ஆணவத்தினாலும், பணத் திமிரினாலும் குழந்தைகளுக்கு அரணாக அமைந்த சட்டத்தை அவர்களுக்கு எதிராகவும் உபயோகிக்க முடியும் என்பதற்கு இப்படம் ஒரு சான்றாக இருக்கிறது.
இப்படத்தின் கதைக்கரு பல்வேறு நிஜ வாழ்க்கை சம்பவங்களிலிருந்து வரும் கூறுகளை உள்ளடக்கி உருவாக்கிய ஒரு கற்பனைக் கதை என இப்படத்தின் இயக்குனர் கூறியிருப்பது, நிஜ வாழ்க்கையில் எவ்வளவு சந்துக்கள் இது போல் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று வருத்தமடைய வைக்கிறது. கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இது போன்று நிறைய வழக்குகள் உள்ளதாகவும் கூறுகிறார்.

பதின் பருவ வயதில் ஹார்மோன் செய்யும் தாக்கங்களின் ஒன்றாக ஏற்படும் இந்த இனக்கவர்ச்சியை, அந்த வயதை தாண்டி வந்தவர்களே பெரிய குற்றம் போல எப்படி சித்தரிக்க முடியும்? இந்தப் பருவத்தினருக்கு இந்த சட்டம் குறித்து புரியாத நிலை தான் இங்குள்ளது. இது ஆந்திராவில் நடக்கும் செய்தி மட்டுமல்ல. சில தினங்களுக்கு முன் சென்னையில் 19 வயது பெண் 17 வயது ஆணை காதலித்ததால் பையனின் பெற்றோர் அந்த பெண் மீது POSCO வழக்கு பதிந்துள்ளனர். இதனால் அந்த பெண்ணின் வாழ்க்கை என்னாகும் என்பதைக் குறித்து அவர்கள் சிந்திக்காத நிலையும் கவலைக்குரியது.
POCSO சட்டத்தின் கடுமையான விதிகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்கு சாதகமாக பங்களித்திருந்தாலும், அவை பழிவாங்கும் வழக்குகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்திருக்கின்றன. சட்டத்தின் கீழ் தனிநபர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன,” என்று நீதிபதி மிஸ்ரா குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாது காதலில் இருக்கும் ஆணோ, பெண்ணோ. பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும் பயந்து இது போல் பொய் வழக்குகளை பதிவிடுவதாக நீதிபதி மிஸ்ரா கூறுகிறார்.
NCRB தரவுகளின்படி, போக்சோ சட்டத்தில் 2014ல் இருந்து 2022 வரை 77% வழக்குகள் அதிகமாகியுள்ளது. இவ்வாறிருக்க கடந்த வருடம் தமிழ்நாட்டில் மட்டும் 6975 வழக்குகளும், கர்நாடகாவில் 4019 வழக்குகளும், கேரளாவில் 4500 வழக்குகள் பதிவாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் (NCRB) வழங்கிய குற்றங்கள் குறித்த தரவுகளின்படி, பட்டியல் சாதியினர் (SC) சம்பந்தப்பட்ட 5,347 வழக்குகளும், பட்டியல் பழங்குடியினர் (ST) தொடர்பான 912 வழக்குகளும் மோசடியானவை என்று சுட்டிக்காட்டுகிறது. குழந்தைகளை காக்கும் வண்ணம் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்கள் எவ்வாறு இந்த சாதிய வெறியர்களுக்கும் சாதகமாக உள்ளதை ஆராய வேண்டும்.
இந்த படம் பார்க்கும் போது, 2015-ல் தமிழ்நாட்டில் நடந்த பட்டியல் சமூக இளைஞர் கோகுல்ராஜ், தன்னுடன் படிக்கும் சுவாதி எனும் பெண்ணுடன் கோவிலில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, தன்னுடைய சாதிய அரசியலுக்காக யுவராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் கோகுல்ராஜை கொன்று தண்டவாளத்தில் வீசி படுகொலை செய்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியாக மாறிய போதும், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் துணிச்சலுடன் இந்த வழக்கை நடத்தி, குற்றவாளிகளுக்கு 2022 ஆம் ஆண்டு தண்டனை பெற்று தந்தார்.

இந்த படத்தில் தேஜா, ஆயுள் முழுதும் சிறையில் இருக்க வைக்க வேண்டும் என்னும் ஆதிக்க சாதிவெறி கதாபாத்திரத்தின் நோக்கத்தை தகர்த்து, சந்துவை வழக்கிலிருந்து விடுதலை வாங்கி தந்திருப்பார். இப்படம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கடுமையான இன்னல்களை சுமந்து வாதாடும் சமூகநீதி வழக்கறிஞர்களை நினைவுபடுத்துகிறது என்றே சொல்லலாம்.
ஒரு புறம் போக்சோ சட்டத்தை பயன்படுத்தி இப்படியான சாதியப் பழிவாங்கல் என்றால், மறுபுறம் ஆணவப் படுகொலை செய்வதும் தொடர்கிறது. திவ்யா – இளவரசன், கோகுல்ராச் – சுவாதி, கெளசல்யா – சங்கர் என சாதி மாறி காதலித்தவர்கள் யாவரும் தங்கள் வயதுக்கு உரிய இயல்பான உணர்ச்சியின்படியே காதலித்து வாழ்ந்தார்கள். ஆனால் தங்கள் சாதிக் கௌரவத்திற்காக இந்த இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மகளைக் காதலித்தவனைக் கொன்று தனது மகளை நடைபிணமாக மாற்றும் வக்கிரத்தை சாதியப் பெருமையாகப் பார்க்கும் பெற்றோர்களும், அவர்களைத் தூண்டி விடும் சாதிய வட்டாரங்களும் சமூகத்தின் பாரங்கள்.
ஆந்திரா மாநிலத்தில் காதலித்து மணமுடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர்களில், அப்பெண்ணை நயமாக பேசி வீட்டிற்கு வர வைத்து கொன்ற அவலம், பட்டியலின ஆணை தன் சகோதரி காதலிக்கிறாள் என்பதற்காக அவளை பீரோவைத் தள்ளி கொலை செய்த அண்ணன் போன்றவை கடந்த மாதத்தில் நடந்த செய்திகள். இவ்வாறு எண்ணற்ற ஆணவக் கொலை செய்திகள் நாகரிக சமூகத்தில் தான் வாழ்கிறோமே என்பதனை சந்தேகம் அடையச் செய்கிறது.

இந்தியாவில் கடந்த 2017 முதல் 2021 (5) ஆண்டுகளில் 203 ஆவணக் கொலைகள் நடந்துள்ளதாக தேசியக்குற்றவியல் ஆவணக் காப்பகம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2003 முதல் 2019 (16) ஆண்டுகளில் 23 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இவை பதிவான குற்ற வழக்குகள் மட்டுமே. பதிவாகாதவை இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்பதே சமூக செயல்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆணவப் படுகொலைக்குரிய சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தால் ஒழிய இதை தடுக்க இயலாது.
தங்கள் வீட்டுப் பிள்ளைகளையே ஆணவப் படுகொலை செய்யும் சாதிய சிந்தனையை அல்லது தங்கள் குடும்பத்து பெண்ணை காதலித்து விட்டான் என்பதற்காக அந்த இளைஞனை, சட்டத்தில் இருக்கும் குளறுபடியை பயன்படுத்தி ஆயுள் முழுதும் சிறையில் அடைக்க வேண்டும் எனும் பழிவாங்கல் சிந்தனையை வேரறுக்க வேண்டும்.
போக்சோ எனும் ஒரு நல்ல சட்டத்தை சாதியவாதிகளோ, மற்றவர்களோ பழிவாங்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தும் படியாக இருக்கும் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்பதே இப்படத்தின் கதையோட்டமாக இருக்கிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் ”கோர்ட் – தி ஸ்டேட் Vs நோபடி” படம் Netflix OTT தளத்தில் இருக்கிறது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய பாடம் இப்படம்.